Published:Updated:

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சாதிக்கத் துடிக்கும் இளமை இதயங்களுக்கு,

 நீங்கள் சாதிப்பதற்கும் உங்கள் கனவுகள் கைகூடுவதற்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறது விகடன். இதுவரை 850 மாணவச் செல்வங்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்து, பயிற்சியும் அனுபவமும் தந்து பக்குவப்படுத்தி, பரிமளிக்கச்செய்த விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் அடுத்த அத்தியாயம்... இதோ ஆரம்பம்!

கடந்த வருடங்களில் நடந்த பயிற்சித் திட்டங்களில் பங்குகொண்டு பயிற்சி பெற்றவர்கள்... இன்று பல துறைகளிலும் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார்கள். பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா, சட்டம், இலக்கியம், தொழில் துறை எனப் பரந்துபட்ட பல தளங்களில்  உயிர்ப்போடு இயங்கிக்கொண்டு இருக்கிறார்கள் விகடனின் முன்னாள் மாணவப் பத்திரிகையாளர்கள். எந்தத் துறையாக இருந்தாலும், எவ்வளவு உயரம் சென்றாலும், 'நாங்கள் விகடனின் மாணவர்கள்’ என்று தங்களுக்கே உரிய தனி முத்திரையைத் தொடர்ந்து பதித்துக்கொண்டே இருக்கிறார்கள்!

புதுமைக்கு 'ஆ.வி.’, நேர்மைக்கு 'ஜூ.வி.’, பெண்மைக்கு 'அவள்’, அறிவுக்கு 'சுட்டி’, அருளுக்கு 'சக்தி’, செல்வத்துக்கு 'நாணயம்’, பயணத்துக்கு 'மோட்டார்’, வளத்துக்கு 'பசுமை’, நலத்துக்கு 'டாக்டர்’ என ஒன்பது பத்திரிகைகள் மூலம் பரந்து விரிந்திருக்கும் விகடன் சாம்ராஜ்யம் இப்போது டிஜிட்டல் அவதாரத்திலும் மிளிர்கிறது! 'ஸ்மார்ட் தமிழன்’ அந்தஸ்து அளிக்கும் விகடன் சாம்ராஜ்யத்துக்குள் நுழையும் வாய்ப்புக்காக ஏங்குபவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். இதோ... உங்களைத் தேடி வருகிறது இந்தப் பொன்னான வாய்ப்பு!

தபால் மூலம் கல்வி பயில்பவர்கள் இந்தத் திட்டத்தில் கலந்துகொள்ள இயலாது. மற்றபடி 1.7.94-க்கு முன் பிறந்த அனைத்துக் கல்லூரி மாணவ-மாணவிகளும் பங்கேற்கலாம். இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவியர், தற்போது (2011-2012) கல்லூரியில் படிப்பவராகவும் அடுத்த ஆண்டு (2012-2013) கல்லூரிப் படிப்பைத் தொடர்பவராகவும் இருக்க வேண்டும். அதாவது, 2011-2012-ம் ஆண்டில் பள்ளி இறுதி ஆண்டு படிப்பவர்களோ அல்லது கல்லூரியில் எந்தப் பிரிவிலும் இறுதி ஆண்டு படிப்பவர்களோ விண்ணப்பிக்க வேண்டாம்.

இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், இத்துடன் கொடுக்கப்பட்டு இருக்கும் விண்ணப்பத் தாளைத் தமிழில் பூர்த்திசெய்து, கோரப்பட்டிருக்கும் இணைப்புகளோடு 15.3.12-ம் தேதிக்குள் எங்களுடைய பரிசீலனைக்கு அனுப்ப வேண்டியது அவசியம் (இந்த விண்ணப்பத்தை ஜெராக்ஸ் காப்பி எடுத்தும் பயன்படுத்தலாம்). தகவல் தொடர்புக்காக உங்களுடைய தொலைபேசி அல்லது செல்பேசி எண் அவசியம் தேவை. உங்களிடம் தொலைபேசியோ, செல்பேசியோ இல்லையெனில், நண்பர்கள் அல்லது உறவினர்களின் எண்களைக் கொடுக்கலாம். விண்ணப்பம் குறித்த முழு விவரங்களை அடுத்து வரும் பக்கங்களில் காணலாம்.

ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் புகுந்து விளையாடும் த்ரில்லான களம் இது. உற்சாகமாக உங்களையும் அழைக்கிறோம்.

வாழ்த்துக்களுடன்...
- ஆசிரியர்

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம் 2012-13
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு