Published:Updated:

குறைந்தது 100 கிராம்... குவிந்தது 100 ரன்கள்

சச்சனின் சாதனை ரகசியம்சார்லஸ், இரா.வினோத்

பிரீமியம் ஸ்டோரி
##~##
''2003
-ம் வருஷம் ராகுல் டிராவிட்டைச் சந்திச்சபோது, ஒரு கிரிக்கெட் பேட் அவருக்குப் பரிசாகக் கொடுத்தேன். அந்த பேட்டால் அவர் டெஸ்ட் போட்டிகளில் செஞ்சுரிகளைக் குவிச்சார். எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட் ஆகிட்டார். ஒரு தடவை சச்சினிடம் என்னை அறிமுகப்படுத்தினார். டென்னிஸ் எல்போ பிரச்னை, முதுகு வலி, அவுட் - ஆஃப் ஃபார்ம், 'சச்சின் இனிமே காலி’ன்னு பல விமர்சனங்கள் அவரைக் காயப்படுத்திட்டு இருந்த சமயம் அது!
குறைந்தது 100 கிராம்... குவிந்தது 100 ரன்கள்

அப்போ சச்சின் பயன்படுத்திய பேட்டின் எடை 1,350 கிராம். அந்த எடைதான் பிரச்னைன்னு புரிஞ்சது. அவர் பேட்டை வாங்கி ஹாண்டிலைக் கொஞ்சம் குறைச்சு, பேட்டின் அடிப்பாகத்தைக் கொஞ்சம் பெரிதாக்கினேன். அவரோட பேட்டிங் ஸ்டைல் எந்த விதத்திலும் பாதிக்காத வகையில் பேட்டில் மாற்றங்கள் செய்ததில், 100 கிராம் எடை குறைந்தது. அந்த பேட்டுடன் சச்சின் ஆடிய முதல் ஆட்டத்திலேயே 157 ரன்கள் விளாசினார். போட்டி முடிஞ்சதும், 'என்ன பண்ணீங்க பண்டாரி?’ன்னு ஆச்சர்யமாக் கேட்டார் சச்சின். நான் பண்ண மாற்றங்களைச் சொன்னேன். 'யூ ஆர் எ மாஸ்டர்’னு பாராட்டித் தள்ளிட்டார் மாஸ்டர் பிளாஸ்டர். அதன் பிறகு, சச்சினுக்கு இதுவரை 20 பேட்டுகள் செய்து கொடுத்திருக்கிறேன்!'' - பாட்டி கதை சொல்லும் தொனியில் அழகாகப் பேசுகிறார் ராம் பண்டாரி.  

சச்சின், ராகுல் டிராவிட், சேவாக், கௌதம் காம்பீர், யுவராஜ், ஜெயசூர்யா, சந்தர்பால் என ரன் ஃபேக்டரி பேட்ஸ்மேன்களின் மட்டைகளுக்கு சார்ஜ் ஏற்றும் ராம் பண்டாரியின் பேட் ஃபேக்டரி 100 சதுர அடிப் பரப்புக்குள் அடங்கி இருக்கிறது. பெங்களூரின் காந்தி நகர் பகுதியில் ஒரு மூலையில் அடங்கியிருக்கும் ராம் பண்டாரியின் கடைக்குள் நுழைந்தால், ''இது டிராவிட் டபுள் செஞ்சுரி அடிச்ச பேட்... இது சந்தர்பால் ஐ.பி.எல்ல சிக்ஸர் அடிச்ச பேட், இதுதான் ஜெயசூர்யாவின் ஃபேவரைட் பேட்!'' என பெருமை பொங்க ஆர்வமாக விவரிக்கிறார் ராம் பண்டாரி.

குறைந்தது 100 கிராம்... குவிந்தது 100 ரன்கள்

''என் தாத்தா, பீகாரில் பிரபல கார்பென்டர். ஆனா, நான் கார்பென்டர் வேலை செய்யாமல், சென்னைக்கு வந்து ஏகப்பட்ட வேலை பார்த்தேன். எதுவும் பிடிக்கலை. திரும்பப் புறப்பட்டு பெங்க ளூருக்குப் போனேன். அங்கே பெயின்டர், மெக்கானிக்னு பல வேலைகள். அப்புறம்தான் இந்த பில்டிங் கட்டும்போது வாட்ச்மேன் வேலைக்குச் சேர்ந்தேன். அப்படியே சின்னச் சின்னதா கார்பென்டர் வேலையும் பார்த்தேன். கிரிக்கெட்னா எனக்கு உயிர். பெங்களூரில் மேட்ச் நடந்தால், முதல் ஆளா டிக்கெட் வாங்கிருவேன். சும்மா பொழுதுபோக்காக கிரிக்கெட் பேட் செஞ்சேன். இந்த பில்டிங் முதலாளிதான் அதைப் பார்த்துட்டு, 'இங்கேயே நீயும் ஒரு கடை வெச்சுக்கோ’னு இந்த இடத்தைக் கொடுத்தார். அதிகக் கனம் இல்லாம, அதே சமயம் பந்து எட்ஜ் வாங்காம இருக்கும் பேட்கள் செய்வதுதான் என் ஸ்பெஷல். ஹேண்டிலின் மேல் பாகத்தை அழுத்தமாகப் பிடித்து விளையாடும் பேட்ஸ் மேன்களுக்கு அதிக எடைகொண்ட பேட் சரியா இருக்கும். ஹேண்டிலின் கீழ் பாகத்தைப் பிடித்து விளையாடுபவர்களுக்கு எடை கம்மியா இருக்கணும். யுவராஜ் சிங், சேவாக், யூசுப்பதான்லாம் 1,350 கிராம் எடை கொண்ட பேட் பயன்படுத்து றாங்க. டிராவிட்டும் காம்பீரும் 1,150 கிராம் எடை கொண்ட பேட் பயன்படுத்துவாங்க!'' என்பவ ரிடம் சச்சின் ஆங்காங்கே ஒட்டுப் போட்ட பழைய மட்டைகளை வைத்துக்கொண்டே ஆடுகிறாரே என்று கேட்டேன்.

குறைந்தது 100 கிராம்... குவிந்தது 100 ரன்கள்

சிரித்துக்கொண்டே தொடர்ந்தார் ராம் பண்டாரி. ''சச்சின்கிட்ட எப்பவும் ஒரு பழக்கம். தன்னோட பழைய பேட்டுகள் உடைஞ்சு, சில்லுச் சில்லாத் தெறிச்சாக்கூட, அதைத் தூக்கிப் போட மாட்டார். அதையும் வீட்ல பத்திரமா வெச்சுப்பார். ஒவ்வொரு டூருக்கும் பிராக்டிஸ் பேட், மேட்ச் பேட்னு எட்டு பேட் கொண்டுபோவார். மத்த ப்ளேயர்ஸ்லாம் பேட்டுக்குனு 'கிட் பேக்’ வெச்சிருப்பாங்க. ஆனா, சச்சின் எப்பவும் ஒரு பழைய மரப் பெட்டியில்தான் எல்லாத்தையும் வெச்சிருப்பார். அவர் முதல் போட்டி விளையாடினப்ப இருந்து அதே மரப் பெட்டிதான். அந்தப் பெட்டிக்குள் சாய் பாபா, திருப்பதி வெங்கடாசலபதி போட்டோ ஒட்டிவெச்சிருப்பார். ஒரு பேட் எவ்வளவு பழசானாலும், அதை ஆல்டர் பண்ணி விளையாடவே விரும்புவார். அதனால் தான் சச்சினின் பேட்டுகளில் ஆங்காங்கே பேன்டேஜ் இருக்கும்!''

''சச்சின் உங்கிட்ட எப்படிப் பழகுவார்?''

''பெங்களூரில் மேட்ச் என்றால், போட்டி முடிந்ததும் பார்ட்டிக்கு என்னை மனைவியோடு வரும்படி அழைப்பார். பார்ட்டியில் அவர்கூட பேசப் பலர் காத்திருப்பாங்க. ஆனா, முதல்ல என்கிட்ட நலம் விசாரிப்பார். 'இந்த ஸ்வீட் ரொம்ப நல்லா இருக்கும். இதை சாப்பிடுங்க’ன்னு பாசமாக் கவனிச்சுப்பார். கடைசி கடைசியாகத் தான் பேட்ல என்னென்ன மாற்றங்கள் வேண்டும்னு சொல்வார். அப்பவும் 'ப்ளீஸ்... மறந்துடாதீங்க’ன்னு ரொம்பத் தன்மையா வேண்டுகோள் மாதிரிதான் கேட்பார்.

நான் வசதியானவன்னு நினைச்சுட்டு ஒரு தடவை, 'பண்டாரி, உங்க கார் எங்கே?’னு கேட்டார். நான் எதுவும் சொல்லாமச் சிரிச்சுக்கிட்டேன். அவர்கிட்ட என் உண்மை நிலையைச் சொல்லியிருந்தா, நான் இந்நேரம் இந்த 100 சதுர அடி கடைக்குள் முடங்கியிருக்க மாட்டேன்'' என்று அப்பாவியாகச் சிரிக்கிறார் ராம் பண்டாரி!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு