Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன் விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன் விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

'மரம் வைத்தோம்’ என்பதுதான் பெருமைக்குரியது. 'மரத்தை வெட்டினோம்’ என்பதையும் பெருமையாகச் சொல்லத்தக்கதாய் மாற்றிவிட்டது 'தானே’!

 புயல் காற்றின் கோர தாண்டவத்தில் கடலூர் மாவட்டத்து நிலப்பரப்பில் வாழும் மக்களைவிட, மரங்களுக்கு நேரிட்ட பாதிப்புகள் மிக மிக அதிகம். ஆனால், அந்தச் சோகம் வெளிச்சத்துக்கு வராமலும் மற்றவர்களால் அதிகம் உணரப்படாமலுமே போனது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எங்க முப்பாட்டன் வெச்ச பலா மரம் இது!'' என்று வேரோடு சாய்ந்த பலா மரத்தைக் காட்டி ஒருவர் அழுவதும், ''எங்க தாத்தா வெச்ச முந்திரி மரம் இது!'' என்று முந்திரியைக் காட்டி ஒருவர் மூச்சடைக்க நிற்பதுமான காட்சிகள் கடலூர் மாவட்டம் எங்கும் காணக்கிடைக்கின்றன.  ''மரங்கள் இல்லாத சோகம்,  வருஷம் ஆக ஆக இன்னும் அதிகமாகவே செய்யும்'' என்கிறார் ஒரு விவசாயி. இப்படிப்பட்ட நிலையில், பல ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தில் கண்ணீரோடு உட்கார்ந்து இருக்கிறார்கள்.

'தானே' துயர் துடைத்தோம்!

இவர்கள் ஒரு பலாவையோ... முந்திரியையோ வளர்த்து, அவை வருவாய் கொடுக்க, குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகும். அது வரை காத்திருந்துதான் ஆக வேண்டும். ஆனால், புயலால் காலி செய்யப்பட்ட மரங்களை அப்புறப்படுத்தக்கூட முடியாத நிலையில் ஆயிரமாயிரம் குடும்பங்கள் இருப்பதுதான் சோகம். ''ஒரு ஏக்கர்ல இருக்கிற மரத்தைச் சுத்தப்படுத்தித் தர 10 ஆயிரம் செலவாகும்னு சொன்னாங்க. அதுக்கே வழி இல்லாததால சும்மாவே போட்டுவெச்சிருக்கேன்'' என்ற குரல்களை அதிகம் கேட்க முடிந்தது. வேரோடு சாய்ந்தும்... கொப்புகள் முறிந்ததுமாக... முடிவை எய்திவிட்ட மரங்களை அப்புறப்படுத்திக்கொடுத்தால்தானே புதிய மரம் வைத்து... தன் காலத்தில் இல்லை என்றாலும், தனது மகனுக்கோ அல்லது பேரனுக்கோ பயன்படும் பலாவை, முந்திரியை உருவாக்க முடியும். இதை உணர்ந்துதான் 'மரம் வெட்டத் தொடங்கினோம்!’

கடலூர் நெடுஞ்சாலையில் நொச்சிக்காடு வளைவில் உள் நுழைந்து பயணித்தால், கடலோரப் பகுதிக்கு நெருக்கமாகப் பல கிராமங்கள் இருக்கின்றன. சுனாமி நேரத்தில் பலமாகப் பாதிக்கப்பட்ட மீனவக் கிராமங்களும் இவற்றில் அடக்கம். இவர்களுக்காக சுனாமிக் குடியிருப்புகள் அதிகமாகக் கட்டித் தரப்பட்டு உள்ளதையும் பார்க்க முடிகிறது. இந்தப் பாதையில் பயணித்தால் வருகிறது நடுத்திட்டு. கடலோரப் பகுதி என்பதால், இதன் மண் வளம் என்பது ஆற்று மணலைப் போலவும்... பத்துப் பதினைந்து அடி தோண்டினாலே தண்ணீர் வரக்கூடிய தன்மை மிக்கதாகவும் இருக்கிறது. இந்த ஊர் மக்கள் வைத்திருந்த அத்தனை முந்திரி மரங்களும் மொத்தமாகச் சாய்ந்துவிட்ட தால் நடுத்திட்டே உருகுலைந்து கிடக் கிறது.

'தானே' துயர் துடைத்தோம்!

''எங்களுக்கு வேறு எந்த உதவியும் வேண்டாங்க. விழுந்த மரங்களை அப்புறப் படுத்திக் கொடுத்தாப் போதும். அதுக் காகத்தான் காத்துட்டு இருக்கோம்!'' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி. அவரே அனை வருடைய நிலங்களுக்கும் அழைத்துச் சென்றார்.

நடுத்திட்டு கிராமத்தில் மொத்தம் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. இவர்கள் அனைவருமே நான்கு, ஐந்து தலைமுறைகளாக இந்தக் கிராமத்தில் வாழ்பவர்கள். ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் என அனைவருக்கும் நிலம் இருக்கிறது. அதில் ஆரம்ப காலத்தில் மூங்கில், கரும்பு பயிரிட்டு வந்துள்ளார்கள். மழை வரத்து குறைந்ததும் முந்திரி வைத்துள்ளார்கள். ஊரைச் சுற்றி இருக்கும் முந்திரி மரங்கள்தான் அந்த ஊர் மக்களைக் காப்பாற்றும் கடவுளாக இருந்தன இது வரை. இந்த மக்களுக்கு என்ன செய்யலாம் என்ற கள ஆய்வில் விகடன் நிருபர்கள் இறக்கிவிடப்பட்டார்கள். இதை அறிந்து, அந்த ஊர் மக்களே நமக்கு ஒரு கடிதம் அனுப்பினார்கள். 'எங்கள் ஊரில் சாய்ந்துள்ள முந்திரி மரங் களை வெட்டி அப்புறப்படுத்திக் கொடுத்தால், அனைத்துக் குடும்பங்களும் நன்றி மறக்க மாட்டோம். நீங்கள் எங்கள் ஊரில் நிவாரணப் பணிகள் செய்ய வேண்டும் என்று மிகவும் பணிவுடன் வேண்டுகிறோம்’ என்று

'தானே' துயர் துடைத்தோம்!

கோரிக்கை வைத்து, அதில் நடுத்திட்டு மக்கள் அனைவரும் கையெழுத்திட்டு இருந்தார்கள். விகடன் கோரிக்கையை ஏற்று 'தானே’ துயர் துடைக்க ஆயிரக்கணக்கான வாசகர்கள் அள்ளிக் கொடுத்த நிதியில் இருந்து 'மரம் வெட்டி, நிலத்தைச் சுத்தப்படுத்திக்கொடுக்கும் திட்டம்’ தொடங்கப்பட்டது.

கடந்த 17-ம் தேதி காலையில் மரம் வெட்டும் இயந்திரங்களுடன் நடுத்திட்டு கிராமத்தில் இறங்கியது நமது அணி. துளசிராஜன் என்பவரது மகன் தாயுமான வனின் நிலத்தில் இருந்து ஆரம்பிக்கப் பட்டது. ''நாலஞ்சு தலை முறையா நாங்க இந்த ஊருதாங்க. முந்திரி மரத்தை வெச்சுத் தான் பொழைக்கிறோம். நான் ஐ.டி.ஐ. படிச்சிருந்தாலும், இந்த மரத்தை வெச்சுத் தான் வாழ்க்கையை ஓட்டினேன். என் பிள்ளைகளாவது படிக்கணும்கிறதுக்காகப் பக்கத்துல உள்ள கடலூர்ல ஸ்கூல்ல சேர்த்திருக்கேன். இந்த வருமானத்துலதான் அவங்களும் படிக்கிறாங்க. எனக்கு 33 வயசு. 35 வருஷத்து மரம்... 25 வருஷத்து மரம்லாம் என் நிலத்துல இருந்துச்சு. எல்லாம் என் தாத்தா, அப்பா வெச்ச மரங்கள். எல்லாம் அழிஞ்சதால அடுத்து என்ன பண்றதுன்னே தெரியல. ஒரு ஏக்கர் முந்திரி இருந்தா, வருஷத்துக்கு 20 ஆயிரம் வரைக்கும் கிடைக்கும். அதனால, ரெண்டு மூணு ஏக்கர் இருந்தாலே கௌரவமா வாழ முடியும். அப்படித்தான் நாங்களும் வாழ்ந் தோம். ஆனா, இப்ப எங்கயாவது வேலைக் குப் போனாதான் சோறுங்கிற நிலைமைக்கு வந்துட்டோம். என் பிள்ளைகளாவது படிச்சுப் பெரிய ஆளா வரணும்னு நினைச்சேன். அதுவும் முடியுமானு சந்தேகமா இருக்கு!'' என்று கலங்குகிறார் தாயுமானவன்.

தோப்புக்குள் யாராவது நுழைந்து மரத்தின் சிறு கொப்பை உடைத்தாலும் துடித்தெழும் மனிதர்களான இவர்கள், இப்போது மெஷின்களால் துண்டிக்கப் பட்டு விழுந்த மரத்தை தூக்கிச் சுமந்து அப்புறப்படுத்தியது புயலின் கோரத்தைவிட அதீத சோகம்!

ஏப்ரல், மே மாதங்கள்தான் முந்திரி மரங்கள் பூ பூத்துக் காய்வைக்கும் காலம். ஆனால், இந்த ஆண்டு அவர்களுக்கு சோகம் கப்பிய ஆண்டாக மாறிவிட்டது. ஒவ்வொ ருவர் நிலத்திலும் மரங்களை அப்புறப்படுத்த, தினமும் சுமார் 30 பேர் வரை இந்தப் பணியில் தொடர்ச்சியாக இன்னும் பல மாதங்களுக்குச் செயல்படுவார்கள். அப்படிச் செய்தால் மட்டுமே, நடுத்திட்டு மரங்களை முழுமையாக அப்புறப்படுத்திக் கொடுக்க முடியும்.

முந்திரி விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளை நமது 'பசுமை விகடன்’ குழு அறிவுறுத்திச் சொல்லிவருகிறது. சில மரங்களில் பெரிய கொப்புகள் மட்டுமே முறிந்துள்ளன. அந்தக் கொப்புகளை மட்டும் எடுத்தால் போதும். அப்படி வெட்டப்பட்ட கொப்புகளில் சாணத்தைத் தடவி... சாக்கு வைத்து மூடிவைக்க வேண்டும். இந்த விஷயங்கள்கூட அந்த மக்களுக்குப் புதிதாக இருந்தன. ரசாயன உரங்கள் இல்லாமல், இயற்கை உரங்கள் மூலமாக மரங்களை வளர்ப்பது குறித்த ஆலோசனைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. நிலங்கள் சுத்தப்படுத்தப்பட்டு புதிய கன்றுகள் நடப்படும்போது, முழுமையான பயிற்சியை 'பசுமை விகடன்’ சார்பில் வழங்க இருக்கிறோம்.

நடுத்திட்டுப் பகுதியைச் சேர்ந்த 70 குடும்பங்களுக்குச் சொந்தமான சுமார் 170 ஏக்கர் நிலத்தைச் செம்மைப்படுத்துவதைத் திட்ட இலக்காக வைத்துள்ளோம். இது ஓர் அசாதாரணமான இலக்குதான். ஆனாலும், அந்த மக்கள் அனுபவித்த துன்பத்தின் துயர் துடைக்க விகடன் தனது லட்சக்கணக்கான வாசகர்கள் துணையுடன் களம் இறங்கி உள்ளது. வாருங்கள் வாசகர்களே, இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். நாமும் கை கொடுப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!