Published:Updated:

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

ஆர்.சரண்

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

ஆர்.சரண்

Published:Updated:
##~##

''இந்தியாவின் எந்தப் பகுதியிலும், எந்தச் சூழலிலும் பணியின் நிமித்தமாகச் செல்லும் நான் மனம் கோணாது என் பணியை நேசித்து உண்மையாகப் பணியாற்றுவேன்!'' - இது மசூரியில் அமைந்திருக்கும் லால்பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி ஆஃப் அட்மினிஸ்ட்ரேஷன் எனப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் எடுத்துக்கொள்ளப்படும் முதல் உறுதிமொழி!

 கேடர் ஒதுக்கீட்டின்படி எங்கோ வட கிழக்கு மாநிலத்தில் பிறந்தவர், தன் வாழ்நாள் முழுதும் தென்னிந்தியாவிலும்... வெயில் பிரதேசத்தில் பிறந்த ஒருவர் காஷ்மீரிலும் பணிபுரிந்து ஓய்வுபெறுவது இப் பணிகளில் இயல்பு. தற்போது பெரும்பாலான சென்சிட்டிவ் மாநிலங்களில் சின்சியராகப் பணியாற்று பவர்கள் தமிழர்கள்தான்.

வருடம் முழுக்கவே கொதிகலனாக இருப்பது சத்தீஸ்கர் மாநிலம். கேரளாவைவிடப் பரப்பளவில் அதிகம் உள்ள ஒரு பகுதி இங்கு 'மாவோயிஸ்ட் ஏரியா’ என முத்திரை குத்தப்பட்டு உள்ளது. அங்கே மாவட்ட ஆட்சியரை 'டிஸ்ட்ரிக்ட் மாஜிஸ்திரேட்’ (டி.எம்.) என்கிறார்கள்.

கோயம்புத்தூர்க்காரரான பிரசன்னா சத்தீஸ்கர் மாநிலத்தின் அம்பிகாபூர் மாவட்ட ஆட்சியர். கடந்த ஆண்டில் தேசிய அளவில் சிறந்த ஆட்சியருக்கான பிரதமரின் விருதை வென்றவர் இவர்.  

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''இந்தியாவிலேயே 40 வருடங்கள் பின் தங்கிய ஒரு மாவட்டம் இது. சாலை, மின்சாரம், தொலைத் தொடர்பு என எந்த வசதிகளும் கிடையாது. பீஜப்பூர் மாவட்ட ஆட்சியராக இருந்தபோது, அலுவலகத்தைவிட்டு இரண்டு கி.மீ. சுற்றளவுக்கு மேல் எங்கேயும் செல்ல முடியாது. செல்லவும் கூடாது. ஆறு மணிக்கு மேல் வெளியே சென்றால், உயிருக்கு உத்தரவாதம் கிடை யாது. விடாது போராடி பொதுமக்க ளின் நன்மதிப்பைப் பெற்ற பிறகு, இப்போது நக்சல் பகுதிகளுக்குள் சென்று வரும் அளவுக்கு என்னோடு சகஜமாகிவிட்டனர். நிறைய அங்கன்வாடிகள், பள்ளிக்கூடங்கள், ரேஷன் கடைகள், சாலைகள் அமைத்ததால், என்னைத் தங்களில் ஒருவனாகச் சேர்த்துக்கொண்டனர். தண்டேவாடா - பாஸ்தர் பகுதியில் மட்டும் 32,000 சதுர கி.மீ. மாவோயிஸ்ட்டுகள் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதால், இப்போது அங்கே ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது. பீஜப்பூரில் இருந்து எனக்கு இடமாறுதல் கிடைத்தபோது, ஆதிவாசிகளான கிராம மக்கள் என்னை மாற்றக் கூடாது எனப் போராட்டம் நடத்திய ஆச்சர்யமும் நடந்தது. மூன்று முறை கண்ணிவெடிகளில் கால் வைக்காமல் நூலிழையில் தப்பிப் பிழைத்த அனுபவங்களும் உண்டு. நிச்சயம் ஒருநாள் இந்த மண்ணில் அமைதி திரும்பும்!'' எனும் பிரசன்னா, தற்போது அரசு ஹெலிகாப்டர்கள் மூலம் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் உள்ள மலைக் கிராமங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்துவருகிறார்.

சத்தீஸ்கர் மாநில சூரஜ்பூரின் ஆட்சியரான பாரதிதாசன், புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்.

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''சத்தீஸ்கரை சர்குஜா, பாஸ்தர், ராய்பூர் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். இதில் சர்குஜா, பாஸ்தர் ஆகியவைதான் மிகவும் சென்சிட்டிவ் பகுதிகள். மாவோயிஸ்ட் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் கிராம சபா கூட்டங்கள் நடத்துவோம். அங்கெல்லாம் கிராம மக்களிடையே 'சங்கம்’, 'தளம்’ என இரண்டு பிரிவு மக்கள் இருப்பார்கள். வெளிப் பார்வைக்கு அவர்களிடையே எந்த வித்தியாசமும் தெரியாது. ஆனால், இரு பிரிவினரும் முற்றிலும் வெவ்வேறு குணாதிசயங்கள்கொண்டவர்கள். 'சங்கம்’ பிரிவினர் மிகவும் சாது. 'தளம்’ பிரிவினர் ஆயுதப் போராளிகள். நம்மைச் சிக்கவைப்பதுபோல கூர்மையாகப் பல கேள்விகளைக் கூட்டத்தில் கேட்பார் கள். அதன் மூலமே சம்பந்தப்பட்டவர்கள் 'தளம்’ பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று கணித்துவிடலாம். அரசாங்கத்தின் அத்தனை திட்டங்கள், சட்டங்கள்பற்றியும் அவர்களிடம் தெளிவான பார்வை இருக் கும். அவர்களின் சாமான்ய தோற்றத்துக்கும் பேச்சுக்கும் சம்பந்தமே இருக்காது. நான் 'தளம்’ பிரிவினர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்பேன். ஓர் ஆட்சியராக அரசாங்கத்தின் கவனத்துக்கு அந்தக் கோரிக்கைகளை உடனடியாகக் கொண்டுசேர்ப்பேன். கிராம சபாக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பத்துப் பேரில் ஐவர் நக்சல்களாகத்தான் இருப்பார்கள். பகலில் சராசரி சம்சாரியாக உலா வருபவர்கள், இரவுகளில் ஆயுதந்தாங்கிகளாக மாறிவிடுவார்கள்!''  

அன்பழகன் மற்றும் அவர் மனைவி அலர்மேல்மங்கை இருவருமே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள். தற்போது சத்தீஸ்கரில் ஆட்சியராகப் பணிபுரிந்துவருகிறார்கள். ஒரே கேடர் அதிகாரிகளான இருவரும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.  

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''ஆரம்ப நாட்களில் இந்தி தெரியாமல் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். பிறகு, சமாளித்துவிட்டோம். ஆனால், இப்போது வரை இங்குள்ள மக்கள் எங்கள் இருவரின் பெயர்களை உச்சரிக்க முடியாமல் சிரமப்படுகிறார்கள். இங்கே ஒவ்வொரு நாளும் எதுவும் நடக்கலாம். மின்சாரக் கோபுரங்களை வெடிவைத்துத் தகர்த்து மின்சார வசதி இல்லாமல் செய்வார்கள். ஒரு முறை என்னைக் கடத்திச் சென்று வைத்திருந்து, பிறகு விடுவித்தார்கள். என் மனைவி மிகவும் தைரியசாலி. ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் களத்தில் பரபரப்பாகப் பணி யாற்றுபவர். நாங்கள் இரவு பகலாக மக்கள் நலத் திட்டங்களில் ஈடுபடுவதைப் பார்த்து, நக்சல்களுக்கே எங்கள் மேல் மரியாதை உண்டானது. 'தமிழ் அதிகாரிகள் நல்லவர்கள்’ என்று மரியாதையாகப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இப்போது மங்கை மஹாசாமுந்த் மாவட்ட ஆட்சி யராக இருக்கிறார். என் பணியிடத்தில் இருந்து அந்த இடம் 325 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 15 நாட்களுக்கு ஒரு முறை சந்திப்போம். அகிலன் நிலவரசு, அமுதினி என இரண்டு குழந்தைகள். அவர்களுக்கும் இந்த லைஃப் ஸ்டைல் பழகிவிட்டது. வருடத்துக்கு ஒரு முறை தமிழக வருகை. வாழ்க்கை சந்தோஷமாகவேஇருக்கிறது!''

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்தவரான அருண்பிரசாத், சத்தீஸ்கர் மாநில வட்டார வன அதிகாரியாக இருக்கிறார். மனைவி ஸ்ரீசக்தி. குழந்தைகள் கவின், காவ்யா ஆகியோருடன் 'வனவாசத்தில்’ இருக்கிறார்!

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''மூன்றில் ஒரு பங்கு மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருக்கும் வனப் பகுதி என் கட்டுப் பாட்டில் உள்ளது. எந்த நேரம், என்ன குண்டு வெடிக்கும் என்று அந்த ஆண்ட வனுக்கேகூடத் தெரியாது.  

மாநிலத்தின் காட்டுப் பகுதி வழியாகச் செல்லும் அனைத்துச் சாலைகளிலும் கண்ணிவெடிகள்தான் உங்களை வரவேற்கும். சமயங்களில் 50 கி.மீ.கூட நடந்தே செல்ல வேண்டியிருக்கும். தண்டேவாடாவில் இருந்து மஹாராஷ்டிரா 50 கி.மீ. தூரம். ஆந்திராவின் வாரங்கல் வெறும் 100 கி.மீ. தூரம்தான். ஆனால், எங்களுக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் ராய்பூரில் அமைந்திருக்கிறது. அது எங்கள் இடத்தில் இருந்து 470 கி.மீ. தூரம். கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகள் 175 கி.மீ. தூரத்தில் இருந்து வர வேண்டும். மாநிலத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் இருக்காது. பல இடங்களில் சாலையின் அகலம் வெறும் மூன்று அடிதான். எனக்குப் பெண் பார்க்கச் சென்றபோதே சத்தீஸ்கரைப் பற்றி தெளிவாகச் சொல்லிவிட்டேன். அவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு என்னை மணமுடித்த ஸ்ரீசக்தி 'உலகத்திலேயே மாசுபடாத ஆக்சிஜன் இங்கேதான் இருக்கு!’ என்று சொல்லிச் சொல்லிப் பூரிக்கிறார். இப்போது அவர்தான் எனக்கு ஆக்சிஜன்!''  

ஆசியாவின் மிகப் பெரிய நிலக்கரிச் சுரங்கம் அமைந்திருக்கும் கோர்பா மாவட்ட எஸ்.பி. சுந்தர்ராஜ் ஐ.பி.எஸ்., கோவை மாவட்டம் சரவணம்பட்டியைச் சேர்ந்தவர்.

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''நாராயண்பூர், கபிர்தாம், பாஸ்தார் மாவட்டங்களில் எஸ்.பி-யாகப் பணிபுரிந்தால், உலகின் எந்த ஆபத்தான சூழலையும் நம்மால் சமாளித்துப் பணிபுரிந்துவிட முடியும். இங்கு ஒவ்வொரு நாளும் யுத்த களம்தான். சக அதிகாரியை நட்பு நிமித்தமாகப் பார்க்கச் செல்வது என்றால்கூட, யாரிடமும் தகவல் சொல்லாமல்தான் செல்ல வேண்டும். மாவோயிஸ்ட்டுகளின் இலக்கு எங்களைப் போன்ற சர்வீஸ் ஆட்கள் கிடையாது. போலீஸ் மற்றும் சி.ஆர்.பி.எஃப். ஜவான் கள்தான் அவர்களுடைய தாக்குதல் இலக்கு. இப்போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு வந்தால் சொர்க்கத்தில் உலவுவதுபோல இருக்கிறது!'' என்று சிரிக்கும் சுந்தர்ராஜ், கடந்த ஆண்டு ஜனாதிபதியின் சிறப்புப் பதக்கம் பெற்றவர்.

காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் அமைந்திருக்கிறது. தினமும் துப்பாக்கிச்சூடு நடக்கும் யுத்த பூமி. இங்கு ஏ.எஸ்.பி-யாகப் பணிபுரியும் அஜிதா பேகம், கோவையைச் சேர்ந்தவர். மத்தியப்பிரதேசத்தில் ஐ.பி.எஸ். அதிகாரி யாக இருக்கும் சதீஷ் பினோவைச் சமீபத்தில் மணந்திருக்கிறார்.

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

''காஷ்மீர் கேடரில் பணிபுரிவது ராணுவத்தில் வேலை பார்ப்பதற்குச் சமம். இங்கே ராணுவமும் காவல் துறையும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் மூலமா கத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கிறோம். அதனால் நாளரு சவால், பொழுதொரு தேடல் என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. விடுமுறை சமயங்களில்கூட தமிழ்நாட் டுக்கு வர முடியாது. அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் தோழிகளிடம் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போக முடியுமா என்பதே நிச்சயம் இல்லாத நிலைதான் இங்கு. ஏனெனில், எப்போது குண்டு வெடிக்கும், துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கணிக்கவே முடியாது. அதனால், வீட்டையே கிட்டத்தட்ட அலுவலகம் போலத்தான் வைத்திருப்போம். பிரச்னை என்றால், வீட்டில் இருந்தே அலுவல்களைத் தொடர்வோம். எனது பெயரும் எனக்குப் பெரிய ப்ளஸ். 'இந்த ஊருப் பொண்ணு’ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உடனே நெருக்கமாகிவிடுவார்கள் இந்த ஊர் மக்கள்!''  - சந்தோஷமாகச் சிரிக்கிறார் அஜீதா பேகம்.

இந்தியாவை ஒளிரவைக்கும் தமிழர்களுக்கு வந்தனம்!