Published:Updated:

தமிழகம்... இருளகம்!

சமஸ்

தமிழகம்... இருளகம்!

சமஸ்

Published:Updated:
##~##

''இந்தியாவின் மின் தேவை 2017-ல் மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். நிலக்கரியைப் பயன்படுத்தி, மேற்கொள்ளப்படும் அனல் மின் திட்டங்களே இந்தத் தேவையில் 60 சதவிகிதத்தைப் பூர்த்திசெய்யும். அந்த முக்கியமான தருணத்துக்கேற்ப நாங்கள் இப்போதே திட்டமிடுகிறோம்!''

 - இந்தியப் பிரதமரோ, மாநில முதல்வர்களோ, அமைச்சர்களோ பேசியது அல்ல இது. சென்னை அருகே உள்ள மணலியில் அண்மையில் தொடங்கப்பட்ட 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் இட்டாரு இஷிபாஷி பேசியது.  ஜப்பானிய நிறுவனமான இது, அனல் மின் நிலையங் களுக்குத் தேவையான மின் சாதனங்களைத் தயாரிக் கும் நிறுவனம். இந்தியாவின் மின் தேவைக்கான திட்டங்களை நம்முடைய அரசியல்வாதிகள் திட்டமிடாமல் இருக்கலாம். ஆனால், பன்னாட்டு நிறுவனங்கள் தெளிவாகத் திட்டமிடுகின்றன!

'தோஷிபா - ஜே.எஸ்.டபிள்யூ.’ நிறுவனத் தொடக்க விழாவில் நம்முடைய முதல்வரும் பங்கேற்றிருக்கிறார். நாட்டிலேயே பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்யும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியில் இருப்பதைப் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருக்கும் அவர்,

தமிழகம்... இருளகம்!

தமிழகத்தில் மட்டும் 282 ஜப்பானிய நிறுவனங்கள் செயல்படுவதைச் சுட்டிக்காட்டி, பன்னாட்டு முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்துக் கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்து தரும் என்று உறுதி அளித்திருக்கிறார்.

ஒருகாலத்தில் மூன்று ஷிஃப்ட்களை இயக்கி, கடந்த சில ஆண்டுகளாக இரண்டு ஷிஃப்ட்களாக இயக்கத்தைக் குறைத்து, இப்போது ஒரு ஷிஃப்ட் இயக்கத்துக்கே அல்லாடும் ஆயிரக்கணக்கான உள்ளூர் சிறு, குறுந்தொழிற்சாலை நிறுவனங்களுக்கு மின்வெட்டுப் பிரச்னை தொடர்பாகப் பதில் சொல்ல முடியாத தமிழக முதல்வர்தான், பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க இப்படிக் கூவி அழைத்திருக்கிறார்!

தமிழகம் இன்றைக்கு எதிர்கொள்ளும் 3,000 மெகா வாட் மின் தட்டுப்பாடு திடீரென ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. பன்னாட்டு நிறுவனங் களின் படையெடுப்புகளுக்குப் பின்... குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளாகவே சராசரியாக ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 400 மெகா வாட் மின் தேவை அதிகரித்துக்கொண்டேவந்தது. பன்னாட்டு நிறுவனங்களை ஓடியோடி அழைத்தவர்கள் அவற்றுக்குத் தேவையான மின் கட்டமைப்பை உருவாக்கி இருக்க வேண்டுமா, இல்லையா?

கடந்த 2005-ல் தமிழகத்தின் மின் தேவை 7,662 மெகா வாட்; உற்பத்தி 9,600 மெகா வாட். இப்போது தேவை 12,000 மெகா வாட்டாக அதிகரித்திருக்கும் நிலையில், உற்பத்தி 7,500 மெகா வாட்டாகக் குறைந்திருக்கிறது. காரணம் என்ன?

ஆசியாவிலேயே அதிவேகமாகக் காற்று வீசும் பகுதி கன்னியாகுமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழியும் முப்பந்தலும். தமிழக அரசு திட்டமிட்டு இருந்தால், தென் மாவட்டங்களில் மட்டும் 5,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் மிக்க காற்றாலைகளை இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் நிறுவி இருக்கலாம். ஆனால், தனியார் நிறுவனங்களைக் கோலோச்ச விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தது அரசாங்கம்.

மின் உற்பத்தியில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் காட்டிய அலட்சியத்துக்கு, எண்ணூர் அனல் மின் நிலையம் ஒரு நல்ல உதாரணம். தன் ஆயுட்காலத்தைத் தாண்டியே 40 ஆண்டுகளாகிவிட்ட இந்த மின் நிலையத்தை இன்னமும்கூட 450 மெகா வாட்டுகளுக்கு நம்பி இருக்கிறது தமிழகம்!

பராமரிப்பிலும் இதே கதிதான். தமிழகத்தில் மின் உற்பத்திக்காகக் கட்டப்பட்ட அணைகளில் பெரும்பாலானவற்றை சகதி சூழ்ந்திருக்கிறது. புனல் மின்சார உற்பத்தி சரி பாதியாகக் குறைந்ததில் நீர்நிலைகள், அணைகள் முறையாகப் பராமரிக்கப்படா ததற்குப் பெரும் பங்கு உண்டு.

சரி, ஒரு மாநிலமே இருண்டுகிடக்கிறது. மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையே மாறி இருக்கிறது. ஆனால், அதே மாநிலத்தின் 30 சதவிகித மின்சாரம் 24 மணி நேரமும் எந்தத் தடங்கலும் இன்றி பெருநிறுவனங்களுக் குப் போவது ஆட்சியாளர்களுக்கு எப்படி உறுத்தாமல் இருக்கிறது? பெருநிறுவனங்களை ஊக்குவிக்கும் மத்திய அரசுக்கும் இதில் பங்கு உண்டு அல்லவா?

தமிழகம்... இருளகம்!

நெய்வேலியில் கடந்த ஆண்டு மட்டும் 21.586 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு இருக்கிறது; 17,455.90 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு இருக்கிறது. ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன வரலாற்றிலேயே அதிகபட்ச உற்பத்தி இது!'' என்கிறார் அந்த நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான எஸ்.ஜெயராமன். ஆனால், தமிழகமோ இருளில் தத்தளிக்கிறது. (தமிழகத்தின் மின் தேவைக்கு நெய்வேலி அனல் மின் நிலையத்தின் பங்களிப்பு வெறும் 15 சதவிகிதம்தான்!) மத்திய மின்சாரத் தொகுப்பில் இருந்து தமிழகத் துக்கு குறிப்பிடத்தக்க உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. தேசிய நலன் பேசுபவர் கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?

கூடங்குளத்தில் தங்கள் சரக்கை விற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ரஷ்ய நாட்டின் தூதர் அலெக்ஸாண்டர் கடாக்டின், ''தமிழகத்தின் மின் தேவைக்கு கூடங்குளம் அணு உலையைச் செயல்பட அனுமதிப்பதுதான் தீர்வு!'' என்கிறார். பிரதமர் மன் மோகன் சிங்கும் காங்கிரஸ்காரர்களும் அதையே சொல்கிறார்கள் என்றால், இவர்கள் யாருடைய தூதர்கள்?