Published:Updated:

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

ந.வினோத்குமார்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன், ஜெ.தான்யராஜு

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

ந.வினோத்குமார்படங்கள் : சொ.பாலசுப்பிரமணியன், ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

மார்ச் மேனியா - பரீட்சைக் காய்ச்சல் வீட்டுக்கு வீடு தகிக்கத் தொடங்கிவிட்டது. தேர்வுகள் நெருங்கி வர, அதற்கான தயாரிப்புகளில் மும்முரமாக இருக்கிறார்கள் மாணவர்கள். அவர்களைக் காட்டிலும் பதற்றமாக இருக்கிறார்கள் பெற்றோர்களும் ஆசிரியர்களும்!

 'தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி?’ என்று இன்றைய மாணவர்களுக்குப் புதிதாக சொல்லித்தர எதுவும் இல்லை. என்றாலும், படபடப்பு இன்றி நிதானமாகத் தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டுகிறார் கல்வித் துறையில் பல ஆண்டுகள்அனுபவம் பெற்ற 'ஆயிஷா’ நடராசன்.

''தயாராவதும், வெளிப்படுத்துவதும்தான் தேர்வுகளை எதிர்கொள்வதில் மிக முக்கியமானவை.

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

தயாராவது என்றால், படிப்பதும் மனப்பாடம் செய்வதும் மட்டும் அல்ல. படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும். நீண்ட கட்டுரைகளை எழுதாவிட்டாலும், கணிதச் சூத்திரங்கள், வேதியியல் வினைகள், ஒரு வரிப் பதில்கள் ஆகியவற்றை எழுதிப்பார்ப்பது அவசியம். தானே படித்து, தானே எழுதிப்பார்த்து, தானே திருத்திப்பார்க்கும் சுய தேர்வு முறை மூலம் தனது குறைகள் என்னவென்று ஒரு மாணவன் எளிதில் அறிந்துகொள்ளலாம். இதனால், தான் என்ன படிக்கிறோம், எந்தப் பகுதி தடுமாற்றம் தருகிறது, படித்ததை எழுதும்போது என்ன தவறு செய்கிறோம் போன்றவற்றை அறிந்துகொள்ளலாம். இது தவறுகளைத் திருத்திக்கொள்ள உதவும்.

  குறைவாகப் படித்தாலும் கவனமாகப் படிக்க வேண்டியது முக்கியம். பல மாணவர்கள், 'நான் தூக்கம் இல்லாமல் படித்தேன்... ஆனால், மதிப்பெண் கள் வரவில்லை’ என்று வருத்தப்படலாம். படிப்பதை எப்படி

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

வெளிப்படுத்தினோம் என்பதில்தான் மதிப்பெண்கள் வருவது இருக்கிறது. அதற்கு, நீங்கள் நன்றாகத் தூங்க வேண்டியதும் அவசியம். களைப்பின்றிப் படித்து, களைப்பின்றித் தேர்வில் பங்கேற்றால்தான் மதிப்பெண்களை அள்ள முடியும். மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!'' என்றார் 'ஆயிஷா’ நடராஜன்.  

கைக்கெட்டும் தொலைவில் இருக்கும் தேர்வுகளுக்கான கடைசி நேரத் தயாரிப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை சொன்னார் 'போதி’ - நிர்வாகம் மற்றும் மக்கள் மேம்பாட்டு ஆலோசனை மையத்தைச் சேர்ந்த பாரதி ராஜ்மோகன்.  

''இதுவரை பாடத்திட்டத்தில் உள்ள அத்தனை பாடங்களையும் படிக்காமல் இருந்திருந்தால்கூட, தேர்வுகளுக்கு இடையில் இருக்கும் சில நாட்களில் மனதை ஒருமுகப்படுத்திப் படித்தால், நிச்சயம் தேர்வுகளில் மதிப்பெண்களைக் குவிக்கலாம். 'அது எப்படி முடியும்?’ என்று கேட்பவர்களுக்கு என் பதில்... ‘SQ3R’

மாணவர்கள் பயன்படுத்திப் பலன் கண்ட ஒரு உத்தி இது. ‘SQ3R’ என்பது  S -  Survey, Q - Question, R - Read, R - Recite, R - Recall  என்பதன் சுருக்கம்.  முதலில் நீங்கள் ஒரு சர்வே செய்ய வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும் நீங்கள் எவற்றை எல்லாம் படித்திருக்கிறீர்கள், எவற்றை எல்லாம் படிக்கவில்லை, எது நன்றாக நினைவில் நிற்கிறது, எது தடுமாற்றம் தருகிறது என்றெல்லாம் ஒரு பட்டியல் தயாரியுங்கள். ஒவ்வொரு பாடத்தின் முந்தைய சில வருடப் பொதுத் தேர்வு வினாத்தாள்களை வைத்துக்கொண்டு நீங்கள் இது வரை படிக்காத பாடப் பகுதிகளில் இருந்து கேட்கப்பட்டுள்ள முக்கியமான கேள்விகளைத் தேர்ந்தெடுங்கள். அந்தக் கேள்விகளுக்கான பதில்களைப் படித்து நினைவில் நிறுத்தப் பாருங்கள். தொடர்ந்து நீங்கள் படித்து மனனம் செய்திருக்கிற பாடங்களை எழுதிப் பாருங்கள். இந்தப் பயிற்சியில் அனைத்தை யும் செய்துவிட்டு, எழுதிப் பார்ப்பதைத் தவிர்த்தால், முழுப் பலனும் கிட்டாது. இந்தப் பயிற்சிகள்தான் தேர்வறைப் பதற்றத்தில் எந்தவொரு முக்கியக் குறிப்பையும் மறக்காமல் நினைவில் நிறுத்தும்!  

சாத்தியமாகக் கூடிய இலக்கு (Realistic Target) எது என்பதில் உங்களுக்குள் ஒரு தெளிவு இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு மாணவருக்கும் தான் பெறவிருக்கும் மதிப்பெண் அளவுகோல் பற்றிய ஒரு கணிப்பு இருக்கும். உதாரணமாக, அறிவியல் பாடத்தில் 50 மதிப்பெண்கள் எடுக்கக்கூடிய மாணவன், 70 அல்லது 80 மதிப்பெண்கள் பெறத் தாராளமாக முயற்சிக்க லாம். ஆனால், 100-க்கு 100 வாங்க வேண்டும் என்று முயற்சித்தால், அது வரை படிக்காத பாடங்கள் மிரட்சியை உண்டாக்கும். படிக்கவும் நேரம் இருக்காது. அப்போது உண்டாகும் பதற்றத்தில் ஏற்கெனவே படித்திருந்த பாடங்களும் மறந்துபோக வாய்ப்பு இருக்கிறது. ஆகவே, உங்களுக்கான இயல்பான இலக்கை நிர்ணயிப்பதும் முக்கியப் பங்கு வகிக்கும். திட்ட மிட்டுச் செயல்படுங்கள். வெற்றி நிச்சயம்!'' என்று வாழ்த்துகிறார் பாரதி ராஜ்மோகன்.

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவனின் மன நிலையைப் பராமரிப்பது குறித்த விளக்கங்களைப் பகிர்ந்துகொள்கிறார் மன நல நிபுணர் சி.ராமசுப்பிரமணியன்.

''குடும்பத்தின் எதிர்பார்ப்பும் பள்ளிகளின் அழுத்தமும்தான் ஒரு மாணவனின் மன நிலையைச் சீர்குலைக்கும். இதுபோன்ற எந்த அழுத்தத்தையும் மனதில் ஏற்றிக்கொள்ளாதீர்கள் மாணவர்களே!

பெற்றோர்களுக்கு நான் சொல்ல விரும்பு வது... உங்கள் குழந்தைகளின் ஆர்வம் எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதற்கேற்றபடி உங்களின் எதிர்பார்ப்பை நிறுத்திக்கொள் ளுங்கள். அவர்களால் சாதிக்க முடியாத ஒன்றை, அல்லது அவர்கள் செய்ய விரும் பாத ஒன்றை, உங்கள் ஆர்வம் காரணமாக மட்டுமே செய்யச் சொல்லிக் கட்டாயப்படுத்தாதீர்கள்.  

தேர்வு நடக்கும் சமயம் உங்கள் பிள்ளையைத் தனி அறையில் போட்டுக் கதவைச் சாத்திவிட்டு, நீங்கள் மட்டும் தனி அறையில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டு இருந்தால், அது எந்தவிதத்திலும் உங்கள் பிள்ளைகளுக்கு உதவி செய்யாது. அதற்காக கேபிள் இணைப்புகளைத் துண்டித்துவிட்டு, 'பார், உனக்காக நான் தியாகம் செய்திருக்கிறேன். அதற்காகவேனும் நீ ஒழுங்காகப் படிக்க வேண்டும்’ என்று அர்ச்சித்துக்கொண்டும் இருக்கக் கூடாது. தேர்வுகள் முடியும் வரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதை நீங்கள் குறைத்துக்கொள்ளுங்கள்.

தேர்வு சமயத்தில் எந்த மாணவருக்கும் தேவை பெற்றோரின் நெருக்கமும் பரிவும்தான். அதை வழங்குவதுதான் ஒரு பெற்றோ ரின் கடமை. உங்கள் கடமையை நிறைவேற்றத் தவறாதீர்கள்!''

தேர்வில் ஜெயித்தவர்கள் சொல்லும் பாடம் என்ன?  

கடந்த வருட ப்ளஸ் டூ வகுப்பு பொதுத் தேர்வில் 1,190 மதிப்பெண்களுடன் மாநில முதல் இட அந்தஸ்தைப் பெற்ற ரேகா, தற்போது சென்னை மருத்துவக் கல்லூரி மாணவி. ப்ளஸ் டூ ஜூனியர்களுக்குத் தனது சக்சஸ் டிப்ஸ் சொல்கிறார் ரேகா.  

''தேர்வுகளுக்கு இன்னும் முழுசாக 15 நாட்கள்கூட இல்லை. இத்தனை மாசங்களில் நாம படிக்காத புது விஷயங்களை ஒண்ணும் இந்த ரெண்டு வாரத்துல தெரிஞ்சுக்கப்போறது இல்லை. அதனால, நீங்க படிக்கிறீங்களோ, படிக்கலையோ எக்ஸாம் டென்ஷனை மட்டும் மனசுல ஏத்திக்காதீங்க. மொழிப் பாடங்கள்தான் முதலில் இருக்கும். அதனால், மார்ச் 5-ம் தேதியில் இருந்தே மொழிப் பாடங்களில் கவனம் செலுத்துங்க. ஏன்னா, முதல் தேர்வை நல்லா எழுதின திருப்திதான் அடுத்தடுத்த தேர்வுகளை நல்லா எழுதத் தேவையான நம்பிக்கையைக் கொடுக்கும்.  

கணிதம், அறிவியல் போன்ற தேர்வுகளுக்கு இடையில் ஒன்றரை நாட்கள் இடைவெளி இருக்கும். அப்போது ஒரு நாள் முழுக்கக் கட்டுரை வடிவப் பதில் களைப் படிக்கச் செலவிட்டுவிட்டு, அரை நாள் முழுக்க ஒரு மதிப்பெண் பதில்களுக்குச் செலவிடுங்கள்.

பாடப் புத்தகங்களுக்குப் பின் இருக்கும் ஒரு மதிப்பெண் பகுதி வினாக்கள் மற்றும் முந்தைய ஆண்டுத் தேர்வுத் தாள்களின் ஒரு மதிப்பெண் வினாக்கள் ஆகியவற்றைக் கட்டாயமாகப் படிக்க வேண்டும். இவற்றில் இருந்துதான் பெரும்பாலான கேள்விகள் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகின்றன. தேர்வில் கேள்வித் தாளைக் கையில் பெற்றதும் முதலில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு  சரியான பதில்களை எழுதிவிட்டு, அதை அப்போது 'ரிவைஸ்’ செய்துவிடுங்கள். மீண்டும் ஒரு மதிப்பெண் பகுதிக்கு உங்கள் கவனம் போகக் கூடாது. உங்கள் விடைத் தாளின் ஆரம்பத்தில் இடம்பெறும் ஒரு மதிப்பெண் பதில்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உண்டாகும் நல் அபிப்ராயம், உங்கள் விரிவான பதில்களுக்கு நிச்சயம் கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுத் தரும் என்பதாலேயே அந்தப் பகுதிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கச் சொல்கிறேன்!

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

அழகான கையெழுத்து, விதவிதமான நிறங்களில் தலைப்புகளை எழுதுதல், முக்கியமான வாக்கியங்களுக்கு அடிக்கோடு இடுதல் எல்லாம் மொழிப் பாடங்களில் செய்யலாம். மற்ற பாடங்களில் அவ்வளவு 'பிரசன்டேஷன்’ தேவை இல்லை. தேர்வுக் காலத்தில் குறைந்தபட்சம் ஆறு மணி நேரத் தூக்கம் அவசியம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!'' என்று உற்சாகப்படுத்து கிறார் ரேகா.

கடந்த வருட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 496 மதிப்பெண்களுடன் மாநிலத்தின் முதல் இட அந்தஸ்து பெற்ற ஹரிணி, இப்போது சென்னை 'அவர் லேடி மேல்நிலைப் பள்ளி’யின் ப்ளஸ் ஒன் வகுப்பு மாணவி.  

''என்ன பாடம் படிச்சாலும் பக்கத்துல ஒரு சின்ன நோட், பேனா வெச்சுக்குங்க. முக்கியமான

எக்ஸாம் கவனம் இங்கே மாணவர்கள் படிக்கிறார்கள்!

பாயின்ட்களைக் கையோடு குறிப்பு எடுத்துக்கிட்டா, ரிவைஸ் பண்றப்போ அந்த நோட்டை மட்டும் புரட்டிப் பார்த்தால் போதும். புரியாத பகுதிகளை உங்களுக்குப் புரியும் மாதிரி ஏதாவது சங்கேதக் குறிப்புகளை வெச்சுக்கிட்டுப் படிங்க. அது சுலபமா மனதில் பதியும்.  

மறக்காம எக்ஸாம் ஹாலுக்கு கையில் வாட்ச் கட்டிட்டுப் போங்க.   ஒரு கேள்விக்குப் பதில் அளிக்க இவ்வளவு நிமிஷம்தான்னு முடிவு பண்ணிட்டு எழுதுங்க. தெரிஞ்ச கேள்விக்கு ரொம்ப நேரம் எடுத்துட்டு எழுதினா, மத்த கேள்விகளை அட்டெண்ட் பண்ணக்கூட முடியாமப் போயிரும். 'நைட் ஸ்டடி’ பண்றவங்க  தயவுசெஞ்சு சாப்பிட்டுட்டுப் படிங்க. இல்லைன்னா, காலையில எழுந்திரிக்கும்போது உடம்புல எனர்ஜியே இல்லாம இருக்கும்!'' என்று தான் ஜெயித்த மந்திரம் சொல்கிறார் ஹரிணி.

இத்தனை நாள் நீங்கள் எதிர்பார்த்திருந்த சவால்... இப்போது உங்களை எதிர்பார்த்திருக்கிறது.

வாழ்த்துக்கள் மாணவர்களே!