Published:Updated:

என்கவுன்டர் எது நிஜம்?

சமஸ்படம் : ச.இரா.ஸ்ரீதர்

என்கவுன்டர் எது நிஜம்?

சமஸ்படம் : ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
##~##

காவல் துறையினரால் 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என்று கொண்டா டப்பட்ட அதிகாரி அவர். ஒருநாள் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது கேட்டேன்... ''என்கவுன்டர்களை முடித்துவிட்டு வரும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?'' கண்களில் குதூகலம் பொங்க அந்த அதிகாரி சொன்னார்... ''ரொம்ப சந்தோஷமாக  இருக்கும். ஒரு பெரிய காரியத்தை முடிச்சுட்ட திருப்தி இருக்கும். அப்படியே ஒரு நல்ல குளியல்  போட்டுட்டு வண்டியில் ஜாலியாகச் சுத்தலாம்போல் இருக்கும்!''

 இந்தியாவில் மட்டும் இல்லை; உலகம் முழுக்க ஆயுதந்தாங்கிகளின் மனோபாவம் இதுதான். ஆனால், இங்கு ஆட்சியாளர்களும் அதே மனநிலையில் இருப்பதுதான் நம் துயரம். கடந்த தி.மு.க. ஆட்சியில் முதல் எட்டு மாதங்களுக்குள் என்கவுன்டர்களில் எட்டு உயிர்கள் பறிபோயின. இந்த முறை அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த ஒன்பது மாதங்களுக்குள் என்கவுன்டரில் ஐந்து உயிர்கள், லாக்- அப்பில் 11 உயிர்கள், பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஆறு உயிர்கள் பறிபோய் இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர் என்று வினோத்குமார் என்கிற அபய் குமாரின் படம் காவல் துறையால் வெளியிடப்பட்டபோதே 'போலீஸ் பீட்’ பார்க்கும் நண்பர் ஒருவர் சொன்னார்... ''சரிதான், இன்னைக்கு ராத்தூக்கம் காலி!''

என்கவுன்டர் எது நிஜம்?

பொதுமக்களுக்கு வேண்டுமானால், என்கவுன்டர்கள் உண்மையா, பொய்யா என்ற கேள்விகள் இருக்கலாம். காவல் துறையை நன்றாகத் தெரிந்துவைத்து இருப்பவர்களிடத்தில் இப்போது எல்லாம் இத்தகைய கேள்விகளுக்கு இடமே இருப்பது இல்லை. எதை மறைக்க இந்த என்கவுன்டர் என்பதுதான் அவர்கள் விடை தேட விரும் பும் கேள்வி. வேளச்சேரி என்கவுன்டர் அந்தக் கேள்விக்கும் இடம் அளிக்கவில்லை. எதை மறைக்க இது நடத்தப்பட்டது என்பது தெளிவானது. புலம்பெயர்த் தொழி லாளர்கள் விஷயத்தில் இதுவரை எந்தக் கவனமும் செலுத்தாத அரசும் காவல் துறை யும் தங்களுடைய கையாலாகாத்தனத்தை மறைக்க நடத்திய என்கவுன்டர் இது!

ஒவ்வொரு நாளும் வேலைவாய்ப்புக்காக தமிழகத்தை நோக்கி ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் வந்து கொண்டு இருக்கின்றனர். சென்னை சுற்று வட்டாரங்களில் மட்டும் சுமார் 10 லட்சம் பேர் வெளிமாநிலத்தவர்கள் இருக்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பழங்குடிகள்.

வடகிழக்கு மாநிலங்களில் பயங்கரவாதம் ஏன் தலையெடுத்தது என்றும்; ஒரு நிலத்தின்பூர்வ குடிகள் இப்படி அகதி களைப் போலப் பிழைப்புக்காகக் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்களே என்றும் மத்திய அரசு யோசிக்கவில்லை. தமிழகத் தொழில் துறையில் அடித்தட்டுக் கூலி வேலைகளில் இருப்பவர்களில் இன்றைக்குக் கணிசமானவர்கள் இவர்கள்தான். ஒரு தொழிலாளிக்கான எந்த அடிப்படைவசதிகளும் உரிமைகளும் கொடுக்கப்படாமல் தமிழ் முதலாளிகளால் அவர்கள் கசக்கிப் பிழியப்படுகிறார்கள் என்பது பற்றியோ, இத்தகைய உழைப்புச் சுரண்டல் வெறுப்பு மிக்க ஒரு சமூகமாக அவர்களை மாற்றிவிடும் என்பது பற்றியோ தமிழக அரசு யோசிக்கவில்லை. இப்படி வேலைக்கு வருபவர்கள் தொடர்பாக இந்தச் சம்பவம் நடக்கும்வரை எந்தக் கணக்கெடுப்பும் நடத்தப்படவில்லை. யாரிடமும் எந்த விவரமும் இல்லையே... யாரேனும் ஒரு பெரிய குற்றத்தைச் செய்துவிட்டு, தன்னுடைய மாநிலத்தின் ஒரு மலையோரக் குக்கிராமத்துக்குச் சென்றுவிட்டால் அவர்களை என்ன செய்வது என்று காவல் துறையும் யோசிக்கவில்லை. இப்போது அடுத்தடுத்து நடந்த வங்கிக் கொள்ளைகள், நகைக் கடைத் திருட்டுச் சம்பவங்களில் வெளி மாநிலத்தவர்களின் கைவரிசை இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததும் ஐந்து பேரைக் கொன்று தன்னுடைய இயலாமையை வெளிப்படுத்தி இருக்கின்றன அரசும் காவல் துறையும். கொல்லப்பட்டவர்களின் சொந்த ஊர் முகவரி என்று தமிழகக் காவல் துறை வெளியிட்ட முகவரியில், குறிப்பிட்ட பெயர்களில் வேறு மனிதர்கள் உயிரோடு வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள் என்பது நம்முடைய விசாரணை அமைப்புகள் எவ்வளவு நேர்மையாக இந்தப் பிரச்னையை அணுகுகின்றன என்பதற்கு ஓர் உதாரணம்!  

கடந்த சில நாட்களாக வெளிமாநிலத்தவர்களைக் கொத்துக்கொத்தாக அள்ளிவந்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தத் தொடங்கியிருக்கிறார்கள் நம்முடைய காவல் துறையினர். வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை அளித்தவர்களும் அவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுத்தவர்களும் எச்சரிக்கப்பட்டு இருக்கின்றனர். போலீஸாரின் அணுகுமுறை உடனடியாக வேலை செய்யத் தொடங்கியிருப்பது தெரிகிறது. பள்ளிக்கரணைப் பகுதியில் வெளிமாநிலத்தவர் ஒருவரை 'கொள்ளையன்’ என்று சந்தேகித்து கட்டிவைத்து உரித்திருக்கிறார்கள் பொதுஜனங்கள்.

காவல் துறையைச் சேர்ந்த சில அதிகாரிகளோடு பேசிக்கொண்டு இருந்தபோது ஓர் அதிகாரி சொன்னார், ''போலீஸ்னா என்னமோன்னு நெனைச்சுக்கிட்டு இருக் கானுவோ... போடுவோம்ல. எல்லாப் பயலையும் தூக்கியாந்துட்டுருக்கோம். எல்லாம் கிரிமினல் பேக்ரவுண்டு. மாவோயிஸ்ட்டுங்களுக்குப் பணம் அனுப்புறானுவோ. எல்லாத்தையும் அவனுங்க வாயாலேயே கொண்டுவருவோம் பாருங்க!''

எனக்கு இந்த நாட்டில் 'இஸ்லாமிய பயங்கரவாதிகள்’ எப்படி உருவாக்கப்பட்டார்கள் என்பது நினைவுக்கு வர ஆரம்பித்தது!

"தவறென்றால் தண்டியுங்கள்!"

ந்தியாவிலேயே முதன்முதலில் சர்வதேச காவல் சமூக விருதும் சிறந்த காவல் நிர்வாகத்துக்கான தங்கப் பதக்கமும் பெற்ற அதிகாரி என்ற பெருமை சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஜே.கே.திரிபாதிக்கு உண்டு. இளம் வயதிலேயே குடியரசுத் தலைவர் விருது பெற்றவர் இவர். நேர்மையானவர், கண்டிப்பானவர் என்றெல்லாம் கூறப்பட்டாலும் மனித உரிமைகளுக்குத் துளியும் மதிப்பு அளிக்காதவர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்தஎன்கவுன்டர் களில் இவருடைய பங்கு கணிசமானது. சென்னையில் வங்கிக் கொள்ளையில்

என்கவுன்டர் எது நிஜம்?

ஈடுபட்ட வட மாநிலத்தவர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் கொல்லப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விவாதங்களைக் கிளப்பியிருக்கும் நிலையில், திரிபாதி விகடனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் இருந்து...  

''வேளச்சேரி என்கவுன்டருக்கு என்ன தேவை இருந்தது?''

''எல்லா என்கவுன்டர்களுக்கும் என்ன தேவையோ அதே தேவைதான்!''

''உங்கள் முதல் என்கவுன்டர் எது? இதுவரை எத்தனை என்கவுன்டர்கள் உங்கள் தலைமையில் நடந்திருக்கின்றன?''

''ஒரு விஷயத்தைப் புரிந்துகொள்ளுங்கள். யாரைக் கொல்வதும் எங்கள் நோக்கம் இல்லை. அதற்கு எங்களுக்கு அதிகாரமும் இல்லை. நீங்கள் கேட்பதைப் பார்த்தால், இதையே நான் வேலையாக வைத்துக்கொண்டு அலைவதுபோல் அல்லவா இருக்கிறது? ஆபத்தான சூழலில், தவிர்க்கவே முடியாத சூழலில்தான் துப்பாக்கியை எடுக்கிறோம். ப்ளீஸ்... நம்புங்கள்!''

''என்கவுன்டர்களுக்குச் செல்லும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?''

(சிரிக்கிறார்... பின் ஆழமான பார்வையோடு...) ''போகும்போது என்கவுன்டருக்காகச் செல் கிறோம் என்றே தெரியாதே?''

''சரி, என்கவுன்டர் முடிந்து வரும்போது..?''

''ரொம்ப வருத்தமாகத்தான் இருக்கும். ஏனென்றால், செத்தவர்களுக்கும் - அவர்கள் எவ்வளவு பெரிய கொடியவர்களாக இருந்தாலும் - ஒரு குடும்பம், உறவினர்கள் எல்லோரும் இருப்பார்கள் இல்லையா?''

''உங்களுக்குக் குடும்பம் இருக்கிறதா?''

''ம்... ஆனால், இந்தப் பேட்டி என் வேலை சார்ந்தது மட்டும்தான் இல்லையா? நான் இங்கு குடும்பத்தைப் பற்றிப் பேச விரும்பவில்லை!''

''உங்களுக்குப் பாவ - புண்ணியங்களில் நம்பிக்கை உண்டா?''

''நான் ஒரு போலீஸ். வேலை என்று வந்துவிட்டால் சாதி, மதம், கடவுள்... இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் எனக்குக் கிடையாது!''

''சரி, வேலைக்கு அப்பாற்பட்டு... ஒரு தனிப்பட்ட மனிதனாக?''

''அப்படிப் பார்த்தாலும், என் கையில் எதுவும் இல்லை. (மேலே கையைக் காட்டி) அவனுக்கு முன் நாமெல்லாம் யார்? அவன்தான் எல்லா வற்றையும் செய்கிறான் என்று நினைத்துக்கொள்வேன்!''

''போலி என்கவுன்டர்களை நடத்தும் போலீஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருப்பதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''யார் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். எங்கள் கடமையை நாங்கள் செய்கிறோம். அவ்வளவுதான். ஒரு என்கவுன்டர் நடந்தால் யாரையும் யாரும் சும்மா விட்டுவிடுவது இல்லையே? மனித உரிமை ஆணையம், விசாரணை எல்லாம் இருக்கிறது. தவறு செய்துஇருந்தால் தண்டனை கொடுங்கள். அவ்வளவு தான். நாம் பேட்டியை முடித்துக்கொள்ளலாம்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism