Published:Updated:

ஷிழ்சிங் தொகை!

ந.வினோத்குமார்

ஷிழ்சிங் தொகை!

ந.வினோத்குமார்

Published:Updated:
##~##

''சென்றான் தலைவன் பணி நிமித்தம்
நாட்கள் இல்லை; மாதங்கள் இல்லை
மீண்டும் அவனைச் சந்திப்பதென்றோ?
கோழிகள் கூடடைந்துவிட்டன
பொழுது சாய்ந்துவிட்டது
ஆடு மாடுகள் தொழுவம் அடைந்தன
சென்றான் தலைவன் பணி நிமித்தம்
பசியும் தாகமும் வாட்டாதிருக்கட்டுமே!''

கணீர்க் குரலில் வாசிக்கிறார் ஸ்ரீதரன் மதுசூதனன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

   ''ஏதோ சங்கத் தமிழ்ப் பாடல் போல இருக்கிறதா? ஆனால், இது ஒரிஜினல் சீன மொழியின் செய்யுள்! இதுபோன்று சுமார் 305 கவிதைகளைக்கொண்ட 'ஷிழ் சிங்’ என்பதுதான் சீன மொழியின் 'கவித்தொகை’. தத்துவ ஞானி கன்ஃபூஷியஸ் தொகுத்ததாக நம்பப்படும் இந்தத் தொகுப்புதான் சீனாவின் சங்க இலக்கியமாகக் கொண்டாடப்படு கிறது!'' என்று வரலாறு சொல்லி ஆரம்பிக்கும் ஸ்ரீதரன், இந்தத் தொகுப்பை 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் நேரடியாகத் தமிழுக்கு மொழிபெயர்த்து, 'காலச்சுவடு’ பதிப்பகம் மூலம் கொண்டு வந்து இருக்கிறார். இவர் வெளியுறவுத் துறை அமைச் சகத்தின் வட்டாரக் கூட்டுற வுக்கான தெற்காசிய நாடு களின் குழுமத் துறையின் இயக்குநராக டெல்லியில் பணிபுரிகிறார்.

ஷிழ்சிங் தொகை!

''என்னைப் பற்றிய சுய அறிமுகத்தில் பெருமிதமாக நான் குறிப்பிடுவது விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் முதல் பேட்ச்சில் நானும் ஒருவன் என்பதைத்தான்! சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி, ஐ.எஃப்.எஸ். ஆகப்  பொறுப்பேற்றுக்கொண்டேன். எங்களின் பணி நிமித்தம் ஏதேனும் ஓர் அயல் மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி நான் தேர்ந்தெடுத்தது சீன மொழி. அதைக் கற்றுக்கொள்வது மிகவும் கடினம்.

'காண்’ என்ற தமிழ் வார்த்தை அதே பொருளில், அதே உச்சரிப்பில் சீன மொழியிலும் பயன்படுகிறது. இதுபோன்று இன்னும் சில வார்த்தைகள் இரு மொழியிலும் நெருங்கி வருவதைக் கண்டேன். அந்த ஆராய்ச்சி தந்த ஆர்வத்தில்  'சீன மொழி - ஓர் அறிமுகம்’ என்ற என் முதல் புத்தகத்தைக் கொண்டுவந்தேன். தொடர்ந்து சீனமொழி யின் சங்க இலக்கியத்தோடும் பரிச்சயம் ஏற்படுத்திக்கொண்டேன்.

அந்தப் பாடல்களில் ஆழ்ந்த புரிதல் ஏற்பட, இரண்டு சீன மொழி ஆசிரியர்களிடம் பாடம் கற்று 'ஷிழ் சிங்’ கவிதைத் தொகுப்பில் இருந்து சுமார் 35 கவிதை களைத் தேர்வு செய்து, தமிழில் மொழிபெயர்த்தேன்.

சீனாவில் இந்தத் தொகுப்பு முற்றிலும் தடை செய்யப்பட்டு இருந்த காலமும் உண்டு. பிறகு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்தபோது பல அறிஞர்களை வரவழைத்து அவர்கள் நினைவில் இருக்கும் கவிதைகளை எழுதித் தரச் சொல்லி 305 தலைப்புகளின் கீழ் கவிதை களைத் தொகுத்திருக்கிறார்கள். இது தொடர் பான வரலாற்று நிகழ்வுகள், ஆய்வுக் கட்டுரை கள், இவற்றை மொழிபெயர்ப்பதில் நான் சந்தித்த இடறல்கள் ஆகியவற்றையும் தொகுப் பில் இணைத்து இருக்கிறேன்.

என் மனைவி வைதேகியும் விகடனில் நிருபராகப் பணிபுரிந்தவர். ஒரு வெளியுறவுத் துறை அதிகாரியின் மனைவி பத்திரிகையாள ராக இருப்பது ஏற்புடையது அல்ல என்பதால், பத்திரிகைப் பணியில் இருந்து விலகி, ஆசிரியர் பணியில் இயங்கிக்கொண்டு இருக்கிறார்.  

சீன-தமிழ் மொழி அகராதி, தமிழ் இலக்கியங்கள், அவை தொடர்பாக ஆங்கிலத்தில் வெளிவந்த மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை இணையதளத்தில் ஒன்றிணைக்க இருக்கிறேன். சீன மொழியின் ஒலிக் குறிப்புகளைத் தமிழ் உட்பட பல இந்திய மொழிகளிலும் கொண்டுவருவதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறேன். பயணிக்க வேண்டிய தூரம் அதிகமாக இருக்கிறது. அந்தப் பயணங்களின் வழியே மீண்டும் சந்திக்கலாம்!'' என்று விடை கொடுக்கிறார் இந்தப் 'பயணி’. இந்தப் புனைபெயரில்தான் 'வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை’ தொகுப்பைக் கொண்டுவந்துஇருக்கிறார் ஸ்ரீதரன்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism