Published:Updated:

’தானே’ துயர் துடைத்தோம்!

விகடன் ‘தானே’ துயர் துடைப்பு அணிகளத்தில் விகடன்

’தானே’ துயர் துடைத்தோம்!

விகடன் ‘தானே’ துயர் துடைப்பு அணிகளத்தில் விகடன்

Published:Updated:
’தானே’ துயர் துடைத்தோம்!

'...அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!’

- மகாகவி பாரதியார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்தக் கவி வார்த்தையை நிறைவேற்றும் பணியும் 'தானே’ துயர் துடைப்பில் ஓர் அங்கமாக அமைந்தது!  

##~##

கடலூர் மாவட்டம், அம்பலவாணன்பேட்டை அகதிகள் முகாமில் வசிக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பிப்ரவரி 10-ம் தேதி வழங்கிய தகவல் அனைவரும் அறிந்த செய்திதான். அப்போது அவர்கள் கவலையோடு கைகாட் டிய இடம் முகாமுக்குள் அமைந்து இருந்த மாலை நேரப் பள்ளிக்கூடம். இதை பாலர் பள்ளி என்று அழகிய தமிழில் அவர்கள் அழைக்கிறார்கள். முகாமுக்குள் வசிக்கும் 182 குடும்பங்களைச் சேர்ந்த 25 குழந்தைகளின் கல்விச் சாலை அதுதான். ஒன்றாம் வகுப்புக்காக அங்கீகரிக்கப்பட்ட பள்ளிக்குச் செல்வதற்கு முன்னதாக 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் படிக்கும் பள்ளி இது. இந்த இடம் இரவுப் பாடசாலையாகவும் இருக்கிறது.

''முகாம்ல இருக்கிற எங்க வீடு அமைதியாகப் படிக்கிற சூழ்நிலையில இல்லை. அதனால, தினமும் ராத்திரி இந்தப் பாலர் பள்ளியில உட்கார்ந்துதான் நாங்க பாடம் படிப்போம்'' என்று சொல்கிறார்கள் பொதுத்தேர்வுக்கான முன் தயாரிப்பில் இருக்கும் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பிள்ளைகள். அந்த அளவுக்கு அம்பலவாணன்பேட்டையின் 'திறந்த வெளிப் பல்கலைக்கழக’மாகவே அந்த இடம் செயல்பட்டது. இது புயலுக்கு முன்னே!

பின்னே?

தானே புயலின் கோரதாண்டவத்தில் பள்ளிக் கூரை மொத்தமாகத் தூக்கி வீசப்பட்டது. ''மறுநாள் காலையில வந்து பார்த்தப்ப எங்களுக்கு அழுகையே வந்திருச்சு. எங்க வீட்டுக் கூரை பறந்து போனதைவிட இந்தக் கட்டடம் சிதைஞ்சுபோனதுதான் எங்களுக்கு சோகம்'' என்று ஓர் இளம் பெண் நம்மிடம் சொன்னார். ''இந்த இடத்தை நீங்க கட்டிக்கொடுத்தா எங்களோட எதிர்காலத்துக்குச் செய்ற உதவியா இருக்கும்'' என்றும் அங்கு உள்ளவர்கள் சொன்னார்கள். இந்த பாலர் பள்ளிக் குழந்தைகளுக்கு அதையும் சொல்லத் தெரியவில்லை! பள்ளிக்கூடத்தைப் புனரமைக்க முடிவு எடுத்தோம்.

தானே துயர் துடைக்க 'விகடன் டிரஸ்ட்டு’க்கு உதவ முன்வந்தார்கள் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பத்து இளைஞர்கள்.  'நாங்கள் ஒரு லட்சம் ரூபாய் வரை உதவத் தயாராக இருக்கிறோம். அந்த நிதி கல்வி தொடர்பான பணிகளுக் குச் செலவானால் மிகவும் சந்தோஷம் அடைவோம்!’ என்று வேண்டுகோள் வைத்திருந்தார்கள். ஐ.டி. துறையில் பணி புரியும் அவர்களிடம் பள்ளியைச் சீரமைப் பது தொடர்பாகப் பேசியபோது, மறுநாளே கட்டுமானப் பொறியாளர்களை அம்பலவாணன்பேட்டைக்கு அனுப்பிவைத்தார் கள். அவர்களின் கணக்கீடுகளுக்கு ஏற்ப கட்டுமானப் பொருட்கள் குவிக்கப்பட்டு பள்ளியைப் புனரமைக்கும் பணி துரித மாகத் தொடங்கியது.

கூரை சீரமைப்புப் பணிகளைத் தொடங்கிய போது, அங்கு இருந்த குழந்தைகளின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. இரும்புக் கம்பிகளைக் குவித்து வெல்டிங் வேலை நடந்துகொண்டு இருந்தபோது, ''எப்ப சார் ஸ்கூல் திறப்பீங்க?'' என்று கண்களில் ஆர்வம் மின்னக் கேட்டுச் சென்றாள் ஒரு சிறுமி. மேற் கூரை வேய்ந்ததும் புதுச்சேரி கவின் கலைக் கல்லூரி ஆசிரியர் மார்கண்டேயன் தலைமையில் ஓவியர்களை அழைத்து வந்து உள் சுவர் முழுக்க வண்ண ஓவியங்களைத் தீட்டவைத்தோம். குழந்தைகளின் சோர்ந்த மனநிலையை உற்சாகமாக்க ஓவியங்கள் கைகொடுக்கும் என்பதாலேயே இந்த ஏற்பாடு.

மார்ச் 2-ம் தேதி பள்ளியைக் குழந்தை களிடம் ஒப்படைத்தோம். பதிலுக்குப் பேரன் போடு சிறு சிறு பூங்கொத்துகளைப் பரிசாகக் கொடுத்தார்கள் குழந்தைகள். தங்களுக்கு வழங்கப்பட்ட புத்தம்புதிய ஸ்கூல் பேக்கை ஆவலோடு திறந்து பார்த்தார்கள் குழந்தைகள். அதனுள்ளே சிலேட்டு, தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள், ஓவியப் புத்தகம், க்ரையான்ஸ், ரப்பர் இவற்றோடு சாக்லேட்டுகளும் இருந்ததைப் பார்த்ததும் குழந்தைகள் முகத்தில் சந்தோஷ மின்னல்.

அந்தப் பள்ளியின் ஆசிரியை சொன்னார்: ''இது முகாமில் இருக்கிற ஓரளவு உருப்படியான கட்டடமாக இருந்ததால் இவர்கள் எல்லாக் காரியத்தையும் இங்கே வைத்துத்தான் பார்ப்பார் கள். சடங்கு, கல்யாணம் முதல் எல்லா வி«சஷங் களும் இங்குதான் நடக்கும். இறந்தவர்களைப் பார்வைக்கு வைப்பதுகூட இங்கு நடந்துள்ளது. அந்த மாதிரி நேரங்களில் குழந்தைகள் ஒழுங்கா கப் பள்ளிக்கு வருவது இல்லை. படிக்கிற சூழ்நிலையும் இதனால் இல்லாமல் போனது. தரமான கட்டடம், லைட், ஃபேன், சுவர் முழுக்க ஓவியங்கள், குழந்தைகள் வரைந்து பார்க்க பிளாக் போர்டு என இப்போது இது முறையான பள்ளிக்கூடமாக அமைக்கப்பட்டு உள்ளதால், இனி வரும் நாட்களில் இந்தப் பிள்ளைகள் ஒழுங்காக வருவார்

கள். அக்கறையுடனும் படிப்பார்கள். இதைச் சொல்லத் தெரியாத குழந்தை கள் சார்பாக நான் சொல்கிறேன்'' என்றார் அந்த ஆசிரியை.

''எந்தக் காரணத்துக்காகவும் குழந் தைகளின் படிப்பு தடைபடக் கூடாது. உங்கள் குழந்தைகளை எவ்வளவு கஷ்டப்பட்டாவது படிக்கவையுங்கள்!'' என்று அந்த மக்களுக்குச் சொல்லி விடைபெற்றோம். பதிலுக்கு கை பிடித்தபடி, ''விகடன் வாசகர்களுக்கு ஆயிரம் முறை நன்றிகள் சொன்னா லும் தீராது!'' என்று நெகிழ்ந்தார்கள் குழந்தைகளின் பெற்றோர்கள்.

வாருங்கள் வாசகர்களே... இன்னும் செய்ய வேண்டிய பணிகள் எவ்வளவோ இருக்கின்றன.

கரம் கோர்ப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism