Published:Updated:

துயர் துடைக்கும் தூரிகைகள்!

விகடன் ‘தானே’ துயர் துடைப்பு அணி

துயர் துடைக்கும் தூரிகைகள்!

விகடன் ‘தானே’ துயர் துடைப்பு அணி

Published:Updated:

ல்ல நோக்கத்துடன் நீங்கள் ஒரு செயலை முன்னெடுக்கும்போது, உலகமே உங்களுக்கு உதவக் காத்திருக்கும் என்பது இன்னும் ஒரு முறை நிரூபணமான தருணம் அது!

துயர் துடைக்கும் தூரிகைகள்!

லலித் கலா அகாடமிக்கு ஓவியக் கண்காட்சிகள் புதிது அல்ல. ஆனால், இப்படி ஒரு நெகிழ்ச்சியான ஓவியக் கண்காட்சி... தமிழக ஓவியர்கள், ஓவிய ரசிகர்கள், பொதுமக்கள்... அனைவருக்குமே புதிது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##

ஒரு புயல், நம் சொந்த உறவுகளை நம் கண் முன்னாலேயே அகதிகளைப் போல் ஆக்கிவிட்டது. 'தானே’ புயலின் கொடுமை யான தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு உதவ நிதி திரட்டும் ஒரு பகுதியாக 'விகடன் குழுமம்’ ஓவியக் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு ஏற்பாடு செய்யத் தொடங்கியபோது, அது தமிழகத்தின் மிகப் பிரமாண்டமான ஓர் கண்காட்சியாகும் என்று எதிர்பார்க்கவில்லை. எளியோருக்கு உதவும் மகத்தான நோக்கம் அதைச் சாத்தியமாக்கியது!

' 'தானே’ துயர் துடைக்கும் பணியை விகடன் முன்னெடுக்கிறது. அதன் ஒரு பகுதியாக ஓவியக் கண்காட்சியை விகடன் நடத்துகிறது. உங்களால் இயன்றது... குறைந்தது ஓர் ஓவியத்தைப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கொடையாகக் கொடுங்கள்!’ - விகடன் இப்படிக் கேட்டதும், சர்வதேசப் புகழ் பெற்ற முன்னணி ஓவியர்களில் தொடங்கி ஓவியக் கல்லூரி மாணவர்கள் வரை, தங்கள் ஓவியங்களை மனமுவந்து உற்சாகமாக வழங்கினார்கள். கண் காட்சியை நடத்துவதற்கு அனுமதி கேட்டு, லலித் கலா அகாடமியின் மண்டல இயக்குநர் ஆர்.எம்.பழனியப்பனைச் சந்தித்தபோது, தன்னுடைய இரண்டு ஓவியங்களையும் நன்கொடையாகத் தந்து சம்ம தித்தார். மொத்தம் 275 ஓவியர் கள், 357 ஓவியங்கள்!

துயர் துடைக்கும் தூரிகைகள்!

விவசாயக் குடும்பப் பின்னணியில் இருந்து வருபவர்களைவிடவும் புயல் தரும் வலியை யாரால் உடனே புரிந்துகொள்ள முடியும்? கண்காட்சியைத் திறந்துவைக்க ஆளுநர் ரோசய்யாவை அணுகியபோது, அவர் உடனே சம்மதித்தார். கண்காட்சி யைத் திறந்துவைத்த ஆளுநர், தன்னுடைய பங்காக அவருடைய தனிச் செயலர் சீராளன் வரைந்த ஓவியம் ஒன்றை நன்கொடையாகத் தந்தார்.

''தமிழ்ச் சமூகம் எப்போதெல்லாம் பெரும் இடர்களை எதிர்கொள்கிறதோ, அப்போதெல்லாம் மக்களோடு கைகோத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் உறுதியாக இருக்கிறது விகடன் குழுமம். 2003-ல் வானம் பொய்த்து, தமிழகம் பெரும் வறட்சியைச் சந்தித்த நேரத்தில், விவசாயிகளின் துயர் துடைக்கும் நோக்கத்தில் 'தத்தெடுப்போம் கிராமத்தை’ என்ற திட்டத்தை முன்னெடுத்தோம். வாசகர்களுடன் கைகோத்து வறட்சியால் பாதிக்கப்பட்ட தஞ்சைப் பகுதிக் கிராமங்களில் ஆறு மாத காலம் அரிசி வழங்கி, ஆயிரக்கணக்கானோர் பசி துடைத்தோம். 2004-ல் சுனாமிப் பேரழிவின்போது நிதி திரட்டி முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதை அளித்தோம். இப்போது 'தானே’ புயல் ஏற்படுத்தி இருக்கும் இழப்பில் இருந்து பாதிக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என்ற சூழலில், எங்களுடைய பொறுப்பு இன்னும் பெரிதாகிறது'' என்று விழாவில் விகடன் குழும நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் பேசியதைக் கூர்ந்து கவனித்தார் ஆளுநர் ரோசய்யா.

துயர் துடைக்கும் தூரிகைகள்!

விகடன் வாசகர்கள் 'தானே துயர் துடைப்போம்’ திட்டத்துக்கு அளிக்கும் நன்கொடை அன்றைய தினம் ஒரு கோடி ரூபாயைத் தாண்டிய செய்தியை ஆளுநரிடம் பகிர்ந்துகொண்டதும், ''இத்தகைய பேரிடர் களை எதிர்கொள்ளும் பெரும் பணியில் அரசோடு, இப்படி ஒவ்வொருவரும் கை கோப்பது முக்கியம்!'' என்று குறிப்பிட்ட ஆளுநர் ரோசய்யா, இந்த ஓவியக் கண் காட்சிக்குப் பங்களித்த ஓவியர்களுக்கும் விகடன் வாசகர்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

''எவ்வளவோ ஓவியக் கண்காட்சி களுக்குப் போய் இருக்கிறேன். ஆனால், இதுதான் சாதனை!'' என்று தொடங்கினார் ஓவியர் வீரசந்தானம். இப்படி ஒரு கண் காட்சியை விகடன் நடத்தலாமே... ஓவியர் கள் நாங்கள் ஒரே குடையின் கீழ் நின்று உதவுகிறோமே என்று இந்த எண்ணத்தை விதைத்தவரே வீரசந்தானம்தான். ''தேசிய அளவிலான கண்காட்சிகளில்கூட இவ்வ ளவு ஓவியங்கள் வைக்கப்பட்டது இல்லை. ஒரு சமூகத்தில் மக்கள் வளமாக இருக்கும்போது, கலைஞர்களை அவர்கள் பாதுகாக்க வேண்டும்; அதேபோல, மக்கள் சோதனையை எதிர்கொள்ளும்போது அவர்களை அரவணைக்க கலைஞர்கள் முன்நிற்க வேண்டும். அந்த வகையில் தமிழக ஓவியர்கள் எங்கள் கடமையைச் செய்திருக்கிறோம். கலைத் துறையைச் சேர்ந்த ஏனையோரும் இதை முன்மாதிரியாகக்கொண்டு 'தானே’ துயர் துடைக்க முன்வர வேண்டும்!'' என்றார் வீரசந்தானம்.

துயர் துடைக்கும் தூரிகைகள்!

''எந்தப் பேதமும் இல்லாத இதுபோன்ற ஓர் ஓவியக் கண்காட்சியைப் பார்க்கும்போது எல்லையற்ற ஆனந்தம் ஏற்படுகிறது. பாருங்கள்... ஒரு புகழ் பெற்ற மூத்த ஓவியனின் ஓவியம்... அதற்குப் பக்கத்தி லேயே யாருமே அறிந்திராத ஓர் இளைஞ னின் ஓவியம்... ஒரு நல்ல கண்காட்சி இப்படித்தானே இருக்க வேண்டும்? அதிலும்  சாதாரணர்களும் வாங்கும் வகையில் சிற்சில ஆயிரங்களிலும் ஓவியங்கள் இடம்பெற்றுஇருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி!'' என்று மகிழ்ந்தார் ஓவியர் ஆர்.பி.பாஸ்கரன்.

துயர் துடைக்கும் தூரிகைகள்!

''என்னுடைய சக மனுஷன் பாதிக்கப் பட்டு இருக்கிறான். அவனுக்கு நான் உதவுவது என்பது என்னுடைய பெருமை அல்ல; என்னுடைய கடமை. ஒரு படைப் பாளியாக அந்தக் கடமையை எல்லோ ருக்கும் முன்னோடியாக இருந்து செய்ய வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை நான் சரியாக நிறை வேற்றி இருக்கும் திருப்தியை இந்தக் கண் காட்சி எனக்குத் தந்திருக்கிறது!'' என்றார் ஓவியர் மணியம் செல்வன்.

''பொதுவாக, உயிர்ப் பலிகளின் எண்ணிக்கையை வைத்து ஓர் இழப்பைக் கணக்கிட்டே நாம் பழகிவிட்டதால் 'தானே’ தந்த இழப்பு நிறைய பேருக்கு இன்னமும் புரியவில்லை. அந்த கோரக் காட்சிகளை நான் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சி யில் இருந்து, அவ்வளவு சீக்கிரம் என்னால் மீள முடியவில்லை. இந்தக் கண்காட்சி இன்றைக்குக் கொஞ்சம் எனக்கு நிம்மதியைத் தரும் என்று நினைக்கிறேன்!'' என்று நெகிழ்ந்தார் ஓவியர் கே.ஆர்.சந்தான கிருஷ்ணன்.

''நான் என்னுடைய ஓவியத்தை இந்தக் காட்சிக்குக் கொடுத்தது எளிய மக்களுக்கு உதவுவதற்காக. ஆனால், அதையும் தாண்டி ஒரு கலைஞனாக இந்தக் கண்காட்சியில் பங்கேற்றதற்காகப் பெருமைப்படுகிறேன். இப்படிப்பட்ட பாகுபாடு இல்லாத - எல்லோருக்கும் இடம் அளிக்கும் - ஒரு கண்காட்சி சென்னையில் வருடந்தோறும் நடக்க வேண்டும். அதற்கான முயற்சி

களை விகடன் குழுமமே முன்னெடுக்க வேண்டும்!'' என்று கோரினார் ஓவியர் ஏ.வி.இளங்கோ.

''மக்களுக்கு உதவும் நோக்கத்துடன் விகடன் நிறுவனம் ஓவியம் கேட்டபோது, உண்மையில் என்னுடைய எல்லா ஓவியங்களையுமே தந்துவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், அது ஏதோ என்னுடைய தனிப்பட்ட கண்காட்சிபோல ஆகிவிடக் கூடாது என்ற நோக்கத்திலேயே தேர்ந்தெடுத்து சில ஓவியங்களை மட்டும் கொடுத்தேன்!'' என்றார் ஓவியரும் கும்பகோணம் அரசுக் கவின் கலைக் கல்லூரியின் முதல்வருமான என்.எஸ்.மனோகர். இந்தக் கண் காட்சிக்கு 17 ஓவியங்களைத் தந்தவர் இவர்.

துயர் துடைக்கும் தூரிகைகள்!
துயர் துடைக்கும் தூரிகைகள்!

ஓவிய விமர்சகர் இந்திரன், பூரிப்பு நிரம்பிய குரலில் ''இது ஒரு வரலாற்று நிகழ்வு. தமிழக ஓவியக் கலையின் பல பரிமாணப் பாய்ச்சலை நான் இந்தக் கண்காட்சியில் பார்க்கிறேன். பெரிய சாதனை இது. அற்புதம்... அற்புதம்... அற்புதம்!'' என்றார்.

கண்காட்சியில் எல்லோரையும் நாம் எதிர்பார்த்தோம் என்றாலும் நாம் எதிர் பாராத ஆச்சர்ய வருகை ஒன்றும் நிகழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களின் வருகை அது!

''எங்க ஜனத்துக்காக, எங்களுக்காக இவ்வளவு பெரிய காரியம் செய்றீங்க, நாங்க யாராவது வர வேணாமா?'' என்று உரிமையோடு வந்து நின்றார்கள் கடலூர் மாவட்ட தியாகவல்லி கிராம மக்கள். எவ்வளவோ இழப்புகளுக் கும் துயரங்களுக்கும் இடையிலும்  முந்திரிக்கொட்டை உடைக்கும் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் வந்திருந்தனர். கண்காட்சிக்கு வந்திருந்த பலரும் அவர் களிடம் 'தானே’ பாதிப்புகளை விசாரிக்க, துக்கம் தொண்டையை அடைக்க துயரங்களைக் கொட்டினார்கள். கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த ஓவியங்களை அவர்கள் பார்த்துக்கொண்டே வந்தபோது திடீர் என ஓர் இடத்தில் உறைந்துபோனார்கள்.

ஓவியர் ராமச்சந்திரனின் ஓவியம் அது. கடலில் பெரும் சூறைக் காற்றில் பிரமாண்ட அலைகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும் கட்டுமர மீனவர்கள் படம் அது. விஜயலட்சுமி என்ற பெண் உடைந்த குரலில் கதறினார்... ''ஐயா... இதே காத்துதான், பேய்க் காத்து... எங்க ஊரையே சாய்ச்சுடுச்சுங்கய்யா. இங்கேயாவது கட்டுமரம் கவுரலை. அங்க எங்க குடியே கவுந்துடுச்சுங்கய்யா!'' என்ற வரை யாராலும் தேற்ற முடியவில்லை.

நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன் சொன்ன வார்த்தைகள்தான் நினைவுக்கு வந்தன. '' 'தானே’ ஏற்படுத்தி இருக்கும் இழப்பு பாதிக்கப்பட்ட மக்கள் தலையெடுக்க இன்னும் பல தலைமுறைகள் ஆகும் என்ற சூழலில், எங்களுடைய பொறுப்பு இன்னும் பெரிதாகிறது!''

ஆம், வாசகர்களே நம்முடைய பொறுப்பு இன்னும் பெரிதாகிறது. வாருங்கள் கை கொடுப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism