Published:Updated:

இந்தியா Vs இந்தியா!

சமஸ்

இந்தியா Vs இந்தியா!

சமஸ்

Published:Updated:
##~##

வ்வளவு பெரிய செய்தியும் ஒருநாள் பரபரப்போடு மறக்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான் சாத்தியம். சீன அரசு தன்னுடைய ராணுவத்துக்கு இந்த ஆண்டு

இந்தியா Vs இந்தியா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

5.55 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்த அடுத்த சில மணி நேரங்களில் வெளியான செய்தி இது: ''இந்திய ராணுவத்திடம் போதிய அளவு வெடிபொருட்கள் இல்லை. பாகிஸ்தானுடன் இப்போது ஒரு போர் வெடித்தால், இரு நாட்களுக்குள் எல்லா வெடிபொருட்களும் தீர்ந்துவிடும்!''

 ஊடகங்கள் யூகங்களின் அடிப்படையில் கிளப்பிவிட்ட செய்தி அல்ல இது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்குத் தரைப்படைத் தளபதி வி.கே.சிங் எழுதியதாகச் சொல்லப்படும் கடிதத்தின் அடிப்படையில் வெளியான செய்தி!

''இந்திய ராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் தொடர்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன. ஆயுதங்கள் இல்லை; உபகரணங்கள் இல்லை; ராணுவத்தில் 'சைபர் பட்டாலியன்’ என்ற அதிநவீனத் தகவல் தொழில்நுட்பப் படைப் பிரிவை உருவாக்க அனுமதி கேட்டு அனுப்பப்பட்ட கோப்புகளுக்குக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதில் இல்லை; பயங்கரவாதிகள் தாக்குதல்களை எதிர்கொள்ளவதற்குச் சிறப்புப் பயிற்சி அளிக்க தேசிய அதிரடிப் பயிற்சிப் பள்ளியை உருவாக்குவதற் கான ஒப்புதலுக்காக வருடக் கணக்காகக் காத்திருந்தும் பயன் இல்லை...'' இப்படி இந்திய ராணுவம் எதிர்கொள்ளும் பல பிரச்னைகளைத் தன்னுடைய கடிதத்தில் வி.கே.சிங் குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கிறது அந்தச் செய்தி.

இந்தியா Vs இந்தியா!

அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புதான் ராணுவம் - பாதுகாப்புத் துறை அமைச்சகம் தொடர்பாக இன்னொரு பெரிய செய்தி வெளியாகி இருந்தது. டெல்லியில் முக்கியப் பிரமுகர்களின் உரையாடல்கள் ராணுவத்தால் ஒட்டுக்கேட்கப்பட்டதாக கண்டறியப்பட்ட செய்திதான் அது. ராணுவத் தலைமையகத்தில் தன்னுடைய இனத்தைச் சேர்ந்த ராஜ்புத் வீரர்களைக்கொண்டு வி.கே.சிங் புதிதாக ஒரு ரகசியப் பிரிவை உருவாக்கி இருப்பதாகவும் ஒட்டுக்கேட்பின் பின்னணியில் உள்ளது இந்தப் பிரிவுதான் என்றும் சொன்னது அந்தச் செய்தி. எல்லை தாண்டி உள்ள எதிரிகள் இடையே நடக்கும் தொலைத்தொடர்பு உரையாடல்களை இடைமறித்துக் கேட்கவும் சிதைக்கவும் வாங்கப்பட்ட அதிநவீனக் கருவிகள் அவை. தேசத்தின் எல்லையில் பயன்படுத்தப்படுவதற்குப் பதிலாக தேசத் தலைநகரில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. உளவுத் துறை, காவல் துறையைப் போல் உள்நாட்டுக்குள் ஒட்டுக்கேட்கும் அதிகாரம் ராணுவத்துக்குக் கிடையாது. ஆனால், ஒட்டுக்கேட்கப்பட்டதாகச் சொன்னது செய்தி.

சரியாக ஒரு மாதத்துக்கு முன் பிப். 16-ம் தேதி இன்னொரு பெரிய செய்தி வெளியானது. பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகத்தில் பொருத்தப்பட்டு இருந்த ஒட்டுக்கேட்புக் கருவி கண்டறியப்பட்ட செய்தி அது!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் என்பது ஓர் அமைச்சரின் அலுவலகம் மட்டும் அல்ல. இந்த நாட்டின் பாதுகாப்பை நிர்மாணிக்கும் தலைமை இடம். உலக நாடுகளுடனான ராணுவ வியூகங்களை வகுக்கும் இடம். ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான ராணுவத் தளவாட ஒப்பந்தங்களை முடிவெடுக்கும் இடம். இந்தச் செய்திகள் எல்லாம் உண்மை எனில்,

இந்தியா Vs இந்தியா!

54 ஆயிரம் கோடி மதிப்புள்ள - உலகின் மிகப் பெரிய, கடுமையான போட்டி நிலவிய - விமானக் கொள்முதலுக்கு பிரான்ஸின் 'தஸால்ட் ரஃபேல்’ நிறுவனத்துடன் ஒப்பந்தமிடுவது என்று கடந்த மாதம் பாதுகாப்பு அமைச்சகம் முடிவெடுத்தது உட்பட சகலமும் ஒட்டுக்கேட்டவர்களுக்கு முன்பே தெரியும். பிரதமரும் அமைச்சர்களும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் பேசிக்கொண்ட விஷயங்கள் எல்லாம் அவர்களுக்குத் தெரியும். அரசின் ஒவ்வொரு நகர்வும் முடிவுகளும் முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியும். அவர்கள் ராணுவத்தில் ஓர் இனவாத அடிப்படையில் சேர்ந்து பணியாற்றுகிறார்கள். அப்படித்தானே?

எவ்வளவு அபாயகரமான செய்திகள் இவை? பிரதமரும் பாதுகாப்பு அமைச்சரும் எப்படி வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள்? நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை வெளியில் விவாதிக்க வேண்டிய தேவை இல்லை என்று சொல்லலாம். ஆனால், இந்திய அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையேயான உரசல்கள் பாகிஸ்தானின் ராணுவ இணையதளம் வரை ஊர் சிரிக்கின்றன. அரசுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கும் பனிப் போர் யாரும் அறியாதது அல்ல. வி.கே.சிங் தன்னுடைய பிறந்த தேதி சர்ச்சை தொடர்பாக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தபோது அது உலகத்துக்கே தெரிந்தது. வழக்கில் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வந்ததும் சிங் மீது மறைமுகத் தாக்குதல்களைத் தொடங்கியது அரசு. வழக்கத்தைவிட, ஒரு மாதம் முன்கூட்டியே அடுத்த தரைப்படைத் தளபதியின் பெயர் அறிவிக்கப்பட்டது. பிப். 28-ம் தேதி நடந்த பாதுகாப்புக் கூட்டத்துக்கு தளபதிக்குப் பதில் துணைத் தளபதி அழைக்கப்பட்டார். ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சிங்கின் மார்ச் 16 இஸ்ரேல் பயணம் அரசால் ரத்துசெய்யப்பட்டது. ராணுவம் தவறு இழைக்கவில்லை என்றால், தளபதி மீதான அரசின் காட்டத்துக்குக் காரணம் என்ன? வி.கே.சிங்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. ''எனக்கு எதிரான சதிகளின் ஒரு பகுதி இது. என்னைப் பிடிக்காதவர்கள் செய்த வேலை!'' என்ற ரீதியில் எழுதப்பட்ட ஒரே அறிக்கையோடு முடித்துக்கொண்டிருக்கிறார். அவர் குறிப்பிடு வதுபோலவே ''இந்தச் செய்திகள் பொய்; சதி'' என்று வைத்துக்கொண்டாலும், தேசப் பாதுகாப்புக்கே ஊறு விளைவிக்கும் பொய், சதி அல்லவா அவை? அதுவும் சீன அரசு இந்தியாவைப் போல மூன்று மடங்கு நிதியைக் கூடுதலாக தன்னுடைய ராணுவத் துக்காக ஒதுக்கீடு செய்த அறிவிப்பு வெளியாகும் அன்று இந்தியாவிடம் இரு நாட்களுக்கான ஆயுதங் கள்கூட இல்லை என்ற செய்தி பொய்யாக வெளியா கிறது என்றால், இது எவ்வளவு திட்டமிட்ட உளவியல் போர்? இதன் பின்னணியில் உள்ளவர்களைப் பற்றி அரசோ, ராணுவமோ எப்படி அலட்டிக்கொள்ளாமல் இருக்க முடியும்?

இந்தியா Vs இந்தியா!

கடந்த ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான உயர்நிலைக் கூட்டத்திலேயே பெருமளவு ஆயுதங்கள், உபகரணங்கள் - குறிப்பாக

இந்தியா Vs இந்தியா!

60 ஆயிரம் கோடி மதிப்பிலானவை - கைவிடப்படும் நிலையில் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 2007-12 இடையிலான காலகட்டத்தில் வாங்கத் திட்டமிடப்பட்ட ஆயுதங்களில் பாதிகூட வாங்கப்படாதது குறித்தும் 2015-க்குள் 30 ஆயிரம் ஜவான்களை  ஆள் எடுப்பது குறித்தும் பேசப்பட்டது. ஆனால், ஓராண்டு கழித்தும் அந்த நிலையில் மாற்றம் இல்லை என்றால், பாதுகாப்பு அமைச்சகம் என்னதான் செய்துகொண்டு இருக்கிறது?

ஒவ்வொரு நாள் இரவும் 30 கோடிப் பேர் பசித்த வயிறோடு படுக்கச் செல்லும் இந்த நாட்டில், ஆண்டுதோறும் ஒரு லட்சம் கோடி ரூபாயைப் பாதுகாப்பின் பெயரால் ஒதுக்குகிறோம். அந்த ஒதுக்கீடு எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள கடைசிக் குடிமகனுக்கும் உரிமை உண்டு. இந்திய அரசு ராணுவத்தின் மீது போர்வையைப் போர்த்தி மறைக்கவில்லை; ஜனநாயகத்தின் கண்களின் மீது போர்வையைப் போர்த்திக்கொண்டு இருக்கிறது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism