Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன் விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன் விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே...
இன்றிருந்தால் என்னாவோம்!’ என்று பாரதி கலங்கி எழுதிய பாட்டுக்குக் காரணம், புயல்தான். அவர் புதுவையில் வாழ்ந்த வீடு புயலால் நொறுங்கி விழுந்தபோது, எதிர் வீட்டுக்குக் குடி மாறி இருந்தார். தான் தப்பிப் பிழைத்த சோகத்தைச் சொல்ல இப்படி ஒரு கவிதையைப் படைத்தார். ஆனால், தியாகவல்லி கிராமத்து மக்கள் கண்ணீரைத் தவிர வேறு மொழி தெரியாதவர்கள். 'தானே’ புயல் இவர்கள் தங்கி இருந்த வீடுகளில்... அதாவது இவர்கள் தலையிலேயே இறங்கியது. அவற்றை வீடு என்று அடையாளத்துக்குத் தான் சொல்லலாமே தவிர, ஒதுங்கிக்கொள்ளும் ஓலைக் குடிசைகளாகவே பெரும்பாலானவர்கள் வாழும் இடங்கள் இருக்கின்றன. இரவுக் காற்றில் பலவும்... மிச்சம் இருந்தவை காலைக் காற்றில் பலவுமாக... திசைக்கு ஒன்றாகப் பறந்து போக... வாழும் திசை அறியாமல் நிற்கிறார்கள் தியாகவல்லி மக்கள்.

'தானே’ புயல் கடலைவிட்டுக் கரை ஏறிய வழி தியாகவல்லி. அதனால்தான், வானிலை ஆராய்ச்சி மைய இயக்குநர் ரமணன், இந்த ஊருக்கே நேரில் வந்து ஆய்வுசெய்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

''கடலூருக்கு மேற்குக் கரையில் 3 கி.மீ. தொலைவிலும் உப்பனாற்றுக்குக் கிழக்கிலும் அமைந்துள்ள இந்த ஊர், தீபகற்பப் பகுதி. இந்த ஊரின் தொன்மையான பெயர் திருச்சோபுரம். கிரேக்கப் பயணிகளின் குறிப்பில் இது 'சோ பட்டினம்’ என்று குறிக்கப்பட்டு இருக்கிறது’ என்கி றார் கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன். சமூக ஆர்வலர் சாமிக் கச்சிரா யர், இந்தப் பகுதியில் இருந்து ஏராளமான பழங்காலப் பொருட்களைக் கண்டறிந்து உள்ளார். இத்தகைய வரலாற்று முக்கியத்துவம்கொண்ட தியாகவல்லிக்கு, புயல் கடந்த வரலாறும் இப்போது. இதற்காக அந்த ஊர் மக்கள் இழந்தது அதிகம்.

புயலுக்குத் தங்கள் ஓலைக் குடிசைகளைத் தின்னக் கொடுத்துவிட்டு, வறுமைச் சூழலால் வாழ்க்கைப் பசியை அடக்க முடியாமல் துடித்த குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தருவது நம்முடைய கடமைகளில் முக்கியமானதாக மாறியது. காற்றில் மேற்கூரை பறந்து, மரம் விழுந்ததால் மண் சுவர் இடிந்து காட்சியளித்த 20 வீடுகளை முதல் கட்டமாகத் தேர்ந்துஎடுத்து கட்டித்தரும் வேலை மார்ச் 16-ம் தேதி தொடங்கியது.

டி.ராமச்சந்திரன் - உதயசந்திரா வீட்டில்தான் முதல் பூமி பூஜை. ராமச்சந்திரன் கூலி வேலைக்குச் சென்றுவருபவர். டி.வி. ரிப்பேர் வேலையும் தெரியும். ராஜதுரை, ராஜேஷ் என்ற இரு பிள்ளைகள் இவர்களுக்கு. வீட்டில் இருந்த இரண்டு பசு மாடுகளைவைத்து பால் கறந்து விற்று காலத்தை ஓட்டிக்கொண்டு இருந்தார் உதயசந்திரா. ''காத்து அடங்கிடும்னுதான் வீட்டுக்குள்ளேயே பதுங்கி இருந்தோம். ஆனா, ராத்திரி முழுக்கக் காத்து நிக்காம அடிச்சது. ரெண்டு பசு மாடும் சத்தம் போட்டுட்டே இருந்துச்சு. காலைல வரைக்கும் காத்து நிக்காததால, ஊருக்குள்ள தெரிஞ்ச வங்க வீட்டுக்குப் போயிட்டோம். மாட்டைக் கொண்டு போக முடியலை. காலைல காத்து இன்னும் பலமா வீசுனதுல மேற்கூரை பிய்ஞ்சு அப்பிடியே அமுங்கி டுச்சு. பாத்திரம், துணிமணி எல்லாம் போச்சு. ரிப்பேர்

'தானே' துயர் துடைத்தோம்!

பண்றதுக்குப் பலரும் கொடுத்திருந்த டி.வி. பொட்டி எல்லாம் உடைஞ்சுபோச்சு. மாடு விடாமக் கத்திட்டே இருந்து அன்னைக்கு ராத்திரி செத்தேபோச்சு. விழுந்த கூரையைத் தூக்கி நிறுத்த வசதி இல்லாம, மாட்டுக் கொட்டகையிலதான் இத்தனை நாளா இருக்கோம். ரெண்டாவது பையன் பன்னெண்டாப்பு படிக்கிறான். கொட்டகையில உக்காந்துதான் பரீட்சைக்குப் படிக்கிறான். இதுல திடீர்னு எங்க வீட்டுக்காரருக்கு நெஞ்சு வலி வந்திருச்சு. கடலூர் பெரியாஸ்பத்திரியில சேர்த்திருக்கேன். 15 வருஷமா அவருக்கு ஷ§கர் இருக்கு. பொழைச்சுக்கிடந்த ஒத்தைப் பசு மாடு கொடுக்கிற பாலை வித்துத்தான் எங்க நாலு பேர் பொழப்பு ஓடுது!'' என்று உதயசந்திரா அழுகைக்கு இடையே சொல்கிறார். மருத்துவமனையில் இருந்து தேறி டி.ராமச் சந்திரனும் வந்து சேர, இருவரையும் பூஜை யில் உட்காரவைத்து, புது வீட்டுக்கான அடித்தளம் அமைத்தோம்.

காலில் கட்டுப் போட்டுப் படுத்துக்கிடக்கிறார் செல்வராஜ். கால் ஏக்கர் நிலம் இருக்கிறதாம். இவரது மனைவி லட்சுமி கூலி வேலை செய்து பிழைப்பவர். ''கொடுமையாக் காத்து அடிச்சது. எல்லாரும் பாதுகாப்பான வீடுகளுக்குப் போய் தங்கிட்டாங்க. ஆனா, நாங்க போகலை. போகணும்னு தோணல. ராத்திரி காத்துல குடிசை உறுதியா இருந்துச்சு. ஆனா, காலைல பிச்சுக்கிச்சு. இதை எடுத்துக் கட்டுற அளவுக்கு வசதி இல்லை.வேலைக் குப் போக உடம்புல தெம்பும் இல்லை. அதான் படுத்தே இருக்கேன்!'' என்று தனது இயலாமையை நொந்துபோய்ச் சொன்னார் செல்வராஜ். இவர்களுக்கான வீடும் மெள்ள எழும்பத்தொடங்கிஉள்ளது.

இப்படித்தான் மணிகண்டன் - சுதா குடும்பத்தின் கதையும் உஷாராணி குடும்பத்து நிலையும். அடுத்த நாள் சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் நிர்க்கதியாக நிறுத்தப்பட்டு இருக்கும் 20 குடும்பங்களுக்கான வாழும் இடங்கள் இன்னும் ஒரு மாதக் காலத்தில் கட்டி எழுப்பப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

இவர்களுக்கு இன்னும் ஒரு கீற்றுக் கூரை போட்டுக்கொடுப்பதால், எந்தப் பயனும் இல்லை. வாழ்க்கை நிலையும் மாறப் போவது இல்லை என்பதால், சிமென்ட் ஷீட் கொண்ட மேற்கூரை அமைக்கவும், தரமான கட்டுமானத்தில் இயற்கை இடர்களை எதிர்கொள்ளும் தகுதி படைத்ததாக இந்த வீடுகளைக் கட்டித்தரத் திட்டமிட்டோம். சிமென்ட் மூட்டைகள், செங்கல் - சிமென்ட் கற்களை ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இறக்கும் போதுதான் அந்த மக்களுக்கு நம்பிக்கை வந்தது. ''உங்க பத்திரிகைக்கும்... உங்க பத்திரிகையைப் படிக்கிறவங்களுக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலைங்க. இப்படி ஒரு ஊர் இருக்குனு கடலூருக்கு அந்தப் பக்கம் இருக்கிற யாருக்குமே தெரியாது. நாங்க இந்த அளவுக்குக் கஷ்டப்படுறோம்னும் யாருக்கும் தெரியாது. ஆனா, உங்க பத்திரிகைதான் எல்லாருக்கும் சொல்லிச்சு. அதைப் படிச்சவங்க எல்லாம் பணம் கொடுத்தாங்க. தலைமுறை தலைமுறைக்கு இதை நாங்க மறக்க மாட்டோம்!'' என்று ஒரு பெண் அழுதுவிட்டார்.

இடிந்த வீடுகளைப் பார்த்துப் பார்த்து தினமும் அவர்கள் மனமும் இடிந்துகொண்டே இருந்தது. அதை மீட்டெடுத்துக் கொடுக்கும் மிக முக்கியமான பணி தியாக வல்லி கிராமத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. புயலுக்கு முந்தைய வாழ்க்கையை அல்ல... அதைவிட நல்ல சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்கப்போகிறோம், லட்சக்கணக்கான வாசகர்களின் பேராதர வுடன்.

வாருங்கள் வாசகர்களே...

கை கொடுப்போம்... தானே துயர் துடைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism