Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

டுத்திட்டுக் கிராமத்துக்குள் இப்போது போய்ப் பார்த்தாலும், நமக்குக் கண்களில் நீர்கோக்கிறது. 'தானே’ கோர தாண்டவத்தால் சாய்ந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை நாம் அந்தக் கிராமத்தில் தொடங்கி ஒன்றரை மாதங்கள் ஆகின்றன. சுமார் 100 ஏக்கர் பரப்பில் விழுந்துகிடந்த மரங்களைத் தினமும் 32-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெட்டி அப்புறப்படுத்திவருகிறார்கள். பெரிய மரங்களின் கிளைகளை வெட்டிவிட்டோம். அதன் வேர்களைப் பிடுங்கி எடுக்க ஜே.சி.பி. இயந்திரம்தான் வர வேண்டும். எனவே இலை, கிளை இல்லாமல் இடுப்பு உயரத்துக்கு வெட்டிய நிலையில், ஏராளமான மரங்கள் மொட்டையாக நடுத்திட்டு கிராமத்தில் நிலைகொண்டு இருந்தன. அதில் இருந்து வடிந்துகொண்டு இருந்த பிசின், '30, 40 ஆண்டுகள் உறவாடிய இந்த மண்ணைவிட்டுப் பிரியப்போகிறோமே’ என்ற கவலையில் கதறுவதாகத் தெரிந்தது!

 நடுத்திட்டுக் கிராமத்தில் விகடன் குழுவினரின் வேலைகள் இன்னும் ஒரு மாத காலத்துக்குத் தொடரும் நிலையில்... மரம் வெட்டும் பணிக்காக அடுத்து நாங்கள் தேர்ந்தெடுத்த கிராமம் வசனங்குப்பம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

கடலூரில் இருந்து குறிஞ்சிப்பாடி வழியாக குள்ளஞ்சாவடிக்கு அடுத்து அமைந்து இருக்கிறது வசனங்குப்பம். இங்கே மலைக்கவைக்கும் அளவுக்கு 200 ஏக்கர் பரப்பளவில் சரிந்துகிடக்கும் மரங் களை அப்புறப்படுத்த வேண்டும்.

பஜனங்குப்பம் என்பது இந்த ஊரின் ஆதி காலத்துப் பெயர். பல நூறு ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதியில் ஒரு கிருஷ்ணர் மடம் இருந்துள்ளது. அந்த மடத்தில் தினமும் மக்கள் கூடி பஜனைப் பாட்டுகள் பாடி கிருஷ்ண பக்தர்களாக வாழ்ந்துவந்திருக்கிறார்கள். அதனால், உண்டான பஜனங்குப்பம் என்ற பெயரே காலப்போக்கில் வசனங்குப்பம் என்று மருவி இருக்கிறது. முந்திரி மரங்கள்தான் இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம். சவுக்கு, மா போன்றவற்றையும் இவர்கள் வளர்த்துவருகிறார்கள். 'தானே’ இவர்களையும் நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிட்டது.

இந்தக் கிராமத்தைச் சேர்ந்த செல்வராசு என்பவர், கையில் ஒரு மனுவோடு, 'தானே’ துயர் துடைப்புப் பணிகளுக்காக நாம் கடலூரில் திறந்திருக்கும் அலுவலகத்துக்கு வந்தார். அவர் கண்களில் ஏதோ ஒரு

'தானே' துயர் துடைத்தோம்!

பதற்றம். வார்த்தைகளே வராமல் திக்கித் தடுமாறிப் பேசினார். அவரை நாற்காலியில் அமரவைத்து ஆசுவாசப்படுத்திப் பிறகு பேசவைத்தோம்.  

''எங்கள் கிராமத்தில் உள்ளவர்களுக்கு இந்த முந்திரி மரங்களும் பலா மரங்களும்தான் சொத்து. ஒவ்வொரு மரத்தையும் ஒரு பிள்ளையைப்போல் பாவித்து வளர்த்துவந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகளை இந்தப் புயல் அடித்து நொறுக்கி, பிடுங்கி எறிந்து எங்கள் வாழ்க்கையைச் சூன்யமாக மாற்றிவிட்டது. ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளையைப் பறிகொடுத்த துக்கத்தோடுதான் புலம்பிக்கிடக்கிறோம். கிளைகள் ஒடிந்த மரங்கள் எல்லாம் கை ஒடிந்த பிள்ளைகள்போல இருக்கின்றன. அதனால், நாங்கள் அந்த மரங்களின் அருகிலேயே செல்வது இல்லை. தப்பித் தவறிச் சென்றுவிட்டாலும் சருகாய்ப் போன மரங்களைப் பார்த்து அழுகைதான் வருகிறது. ஒடிந்த மரங்களை வெட்டி எடுக்கலாம் என்று அருகில் சென்றால், பெற்ற பிள்ளைகள் மேல் எப்படிக் கத்திவைப்பது என்ற நினைப்பு வந்து பதறி விலகிவிடுகிறோம். நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்துவிடும்போல் இருக்கிறது!'' என்று வெடித்து அழத் தொடங்கிவிட்டார்.

கெட்டித்துப்போன சோகம் கரையட்டும் என்று அவரது அழுகைக்கு அணை போடவில்லை நாம். சிறிது நேரத்தில் தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பேசத் தொடங்கினார். ''இந்தப் புயலால் எங்கள் வாழ்க்கையே தலைகீழாகிவிட்டது. வீட்டுப் படி ஏறி யார் வந்தாலும் படி அளக்கும் நிலையில் இருந்தவர்கள், இன்று அடுத்தவரிடம் கையேந்தும் நிலை. புயல் பிடுங்கிப்போட்ட மரங்களை வெட்டி எடுக்கக்கூட முடியாமல் வறுமையில் தவித்துவருகிறோம். நாங்கள் உங்களை எங்களில் ஒருவராக நினைத்துக் கேட்கிறோம்... எங்கள் நிலத்தைச் சுத்தப்படுத்திக்கொடுங்கள். சேதம் அடைந்த மரங்களை வெட்டிக்கொடுத்து கிராமத்தில் உள்ள ஒவ்வொரு விவசாயியின் வாழ்விலும் விளக்கேற்ற வேண்டும்!'' என்று சொல்லிக்கொண்டேபோனார். செல்வராசுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவிட்டு, அவரது கிராமத்துக்கு நம்முடைய அணி சென்றது. செல்வராசு ஊர் போய்ச் சேர்வதற்குள் நாம் அந்த ஊரின் உண்மையான நிலைமையை நேரில் சென்று பார்த்துவிட்டோம். ''வசனங்குப்பத்தை விகடன் சார்பில் செப்பனிடுகிறோம்!'' என்று வாக்குறுதி கொடுத்தபோது, கிராமத்து மக்கள் கண் கலங்கக் கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

நடுத்திட்டுக் கிராமத்துக்காக வாங்கியதுபோலவே, வசனங்குப்பத்துக்கும் மரம் வெட்டும் இயந்திரங்களைப் புதிதாக வாங்கினோம். அந்தக் கிராமத்துத் தொழிலாளர்களுக்கு அதை இயக்குவதற்கான பயிற்சி அளித்தோம். ''நாங்களே வசனங்குப்பத்துக்கு வந்து அவங்களுக்கு ஒரு வாரம் மரம் வெட்டக் கத்துக்கொடுக்குறோம்!'' என்று நடுத்திட்டுத் தொழிலாளர்கள் ஆர்வமாக முன்வந்தார்கள். கடந்த 22-ம் தேதி வசனங்குப்பத்தில் நமது பணி தொடங் கியது. அந்தக் கிராமத்து மக்களுக்கு, 'நமக்கு விகடன் துணை இருக்கே’ என்ற சந்தோஷம் ஒருபக்கம். 'கண்ணுக்கு கண்ணா வெச்சுப் பாதுகாத்த மரத்தை வெட்டுறோமே’ என்ற வருத்தம் மறுபக்கம்!

'தானே' துயர் துடைத்தோம்!

அசோகன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் இருந்துதான் பணிகளைத் தொடங்கினோம். ''எங்கள் குடும்பத்துக்கு இந்த ஆறரை ஏக்கர் நிலம்தான் சொத்து. இந்த நிலம் கொடுத்த வருமானம்தான் என் அண்ணன் மகன் சுப்ரமணியை இன்ஜினீயராகவும் மகள் சரஸ்வதியை எம்.பி.ஏ. பட்டதாரியாகவும் ஆக்குச்சு. ஆனா, இப்போ எங்க குடும்பத்தின் எதிர்காலமே கேள்விகுறியாகிடுச்சு. நாங்கள் எல்லோரும் கூட்டுக் குடும்பம்தான். காலையில் மொத்தக் குடும்பமும் வயலுக்கு முந்திரிக்கொட்டைகளைப் பொறுக்கப்போனா, சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவோம். ஆனா, இப்போ எங்க போறதுன்னே தெரியலை. எங்க குடும்பம் 30 வருஷமா ஆனந்த விகடன், ஜூனியர் விகடன்லாம் தொடர்ந்து படிச்சுட்டு வர்றோம். இப்போ அந்த விகடனே, சிதைஞ்சுபோன மரங்களை வெட்டி எங்க வாழ்க்கையில நம்பிக்கை விளக்கு ஏத்துதுனு நினைக்கிறப்போ, ரொம்ப சந்தோஷமா இருக்கு!'' என்றார்.

நடுத்திட்டு கிராமத்தை அடுத்து வசனங்குப்பம் கிராமத்து மக்களின் முகங்களிலும் மகிழ்ச்சி ரேகை பரவ ஆரம்பித்துள்ளது. இன்னும் ஏராளமான கிராமங்கள் இருக்கின்றன.

வாருங்கள் வாசகர்களே... கைகோப்போம்... 'தானே’ துயர் துடைப்போம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism