என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

பாரதி தம்பிஓவியம் : ஹரன்

##~##

'நாய்க்குப் பேரு வெச்சீங்களே, சோறு வெச்சீங்களாடா?’- இது காமெடி.

'இலவசமா டி.வி. கொடுத்தீங்களே, மிக்ஸி குடுத்தீங்களே... கரன்ட் கொடுத்தீங் களா?’ - இது டிராஜெடி.

இப்போது இன்னமும் அழுத்தமாக முகத்தில் அறைகிறது, மின் கட்டணஉயர்வு. அதுவும் கொஞ்சநஞ்சம் இல்லை... 37 சதவிகித மின் கட்டண உயர்வு!

''கரன்ட் வர்றதே ரொம்பக் குறைவு. ஆனா ரேட்டைக் கூட்டி, நாம கட்டுற பணத்தை மட்டும் குறையாமப் பார்த்துக்கு றாங்க போலருக்கு!'' என்ற கடைக்கோடித் தமிழனின் வேதனை மொத்தத் தமிழ் நாட்டுக்கும் பொருந்தும்.

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

எந்த நேரத்தில் மின்சாரம் வரும், எப்போது போகும் என்பது யாருக்கும் தெரிய வில்லை. ''அது வந்தாலும் ஒண்ணுதான் வராட்டின்னாலும் ஒண்ணுதாங்க. காலை யில 8 மணிக்கு டாண்ணு போகுது. அவசர அவசரமா வேலைகளை முடிச்சுட்டு நிமிர்ந்து உட்கார்ந்தா, கொஞ்ச நேரம் வருது. அப்புறம் 11 மணிக்கு மறுபடியும் போயிருது. பகல் எல்லாம் புழுக்கத்துல வெந்து சாகணும். அப்புறம் வெயில் தாழ 4 மணிக்கு வரும். அதுக்குள்ள புருஷன், புள்ளைங்கல்லாம் வீட்டுக்கு வந்திருமேனு மறுபடியும் வீட்டு வேலைகளை ஆரம்பிக் கணும். ராத்திரி தூங்கலாம்னா, அப்பவும் நாலு மணி நேரம் நிறுத்திடுறாங்க. இந்த கரன்ட் கட்டால வீட்டுல உள்ள பொம்ப ளைங்க படுற அவஸ்தை, ரொம்பக் கொடுமை!'' என்று நீங்கள் புலம்பியிருக்கக் கூடும் அல்லது அந்தப் புலம்பலை நெருக்கத்தில் கேட்டிருக்கக் கூடும். குடும்பஸ்தர்கள், தொழில் செய்பவர்கள், மாணவர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் வேட்டுவைக்கி றது மின்வெட்டு. 'இந்தப் பிரச்னை எப்ப தான் தீரும்?’ என்ற கேள்விக்குப் பதில் அறிய, இந்தப் பிரச்னை எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

மின் வாரியத்தில் பணிபுரிந்தவரும் தமிழ்நாடு மின் துறைப் பொறியாளர்கள் அமைப்பின் தலைவருமான சா.காந்தியுடன் பேசினேன். ''தொண்ணூறுகளில் தமிழ்நாடு மின்மிகு மாநிலம். நம் தேவைக்கு அதிகமாகவே உற்பத்தி செய்தோம். அப்போது மன்மோகன் சிங்கை நிதி அமைச்சராகக்கொண்ட மத்திய அரசு, பொதுத் துறையில் புதிய மின் உற்பத்தித் திட்டங்களுக்கான அனுமதியை முடக்கியது. தனியார் மின் உற்பத்தியை ஊக்குவித்தது.

இதனால், தனியார் மின்சாரத்தை மாநில மின்சார வாரியம் விலை கொடுத்து வாங்கத் தொடங்கியது. இதற்கு இடையே திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக, நோக்கியா, செயின்ட் கோபியன், பாக்ஸான் போன்ற பிரமாண்ட நிறுவனங்கள் ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் மாநிலம் முழுக்க முளைத்தன. இவை அனைத்தும் அசுரப் பசியோடு மின்சாரத்தைக் குடிக்க ஆரம்பித்தன. மறு பக்கம் பொதுமக்களின் மின் பயன்பாடும் அதிகரித்தது. இரு தரப்புகளின் தேவையையும் நிறைவு செய்ய முடியாமல் மின்சார வாரியம் தடுமாற ஆரம்பித்தது. பன்னாட்டு நிறுவனங்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கியே ஆக வேண்டும் என்பது அரசாங்கமே ஒப்புக்கொண்ட ஒப்பந்தம்.

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

தேவையான அளவுக்கு மின்சாரம் இருக்கிறதா, தர முடியுமா என்பதை எல்லாம் யோசிக்காமல் போடப் பட்ட இந்த ஒப்பந்தங்களால் மின்சார வாரியம் தடுமாறிப் போனது. வேறு வழியே இல்லாமல், தனியாரிடம் ஒரு யூனிட்டுக்கு 14 ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கி, 3.50 ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு பொருளை 10 ரூபாய்க்கு வாங்கி 2 ரூபாய்க்கு விற்றால் நஷ்டம் வருமா, வராதா? வந்தது! தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய மொத்தக் கடன் 53,300 கோடி ரூபாய். ஆனால், பன்னாட்டு நிறுவனங்களுக்கோ ஒப்பந்தப்படி தடையில்லா மின்சாரம் கொடுத்தாக வேண்டும். ஆகவே, இருக்கும் மின்சாரத்தில் அவர்களுக்குக் கொடுத்தது போக மீதி உள்ளதை மக்களுக்கு மின் வெட்டுடன் பகிர்ந்து தருகிறார்கள். திடீரென மின்வெட்டு அதிகரித்து வருவதன் பின்னணி இதுதான்!'' என்கிறார் காந்தி.

தமிழ்நாட்டில் மொத்தம் சுமார் 2 கோடி டி.வி-க்கள் இருக்கின் றன. இவை நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 மெகா வாட் மின்சாரத்தை உறிஞ்சுகின்றன. இப்படிப் பொருளாதார வளர்ச்சியினால் மக்க ளிடம் அதிகரித்து இருக்கும் மின்னணுப் பொருட்களின் பயன்பாடு, மின் பகிர்மானத்தில் ஏற்படும் இழப்பு, மின் திருட்டு இவை எல்லாம் இதர காரணங்கள். மனிதர்கள் செய்துவந்த பல வேலைகளை இன்று இயந்திரங்கள்தான் செய்கின்றன. அவை அனைத்தும் அதிக மின்சாரத்தை உறிஞ்சுபவையே.

இந்த விவகாரம்பற்றிப் பேசிய தமிழ்நாடு ஊரகத் தொழில் மற்றும் குறுந் தொழில் முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் ஜேம்ஸ், ''வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு அரசு சொல்லும் முக்கியக் காரணம் வேலைவாய்ப்பு. ஆனால், உண்மையில் பன்னாட்டு நிறுவனங்களை விட,

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

இங்கு உள்ள சிறு, குறு தொழில்களின் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள்தான் அதிகம். இத்தனைக்கும் பெருநிறுவனங்கள் வேலைவாய்ப்புத் தருவதாக சொல்லி வாட்ச்மேன் களாகவும் கூலித் தொழிலாளிகளாகவும்தான் நம் ஆட்களைப் பயன்படுத்துகின்றன. ஆனால், எங்களுக்கு 8 மணி நேரம், 10 மணி நேரம் பவர் கட். அவர்களுக்குத் தடையில்லா மின்சாரம். கோவையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிறு, குறு தொழில்களைவிட்டு வெளியேறிவிட்டனர். நிலைமை இப்படியே தொடர்ந்தால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வேலை இழந்தவர்களின் எண்ணிக்கைதான் அதிகமாகும்!'' என்று எச்சரிக்கிறார்.

இந்த மின்வெட்டு பல்வேறு எதிர்பாராத திசைகளில் மக்களுக்குப் பிரச்னைகளைக் கொண்டுவருகிறது. கோவை மின் மயானத்தில் பிணங்கள் எரிந்துகொண்டு இருக்கும்போதே பாதியில் மின்சாரம் போய்விடுவதால், கேஸில் இயங்கும் வகையில் மயானத்தை மாற்றுவதற்கு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. குறைப் பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாப்பாக இன்குபேட்டரில் வைத்து இருக்க வேண்டும். மின் தடையால் அதிலும் சிக்கல். ''அன்னைக்கு ஒரு கல்யாணம். கரெக்ட்டா தாலி கட்டுற நேரத்துல கரன்ட் போச்சு. உடனே, ஜெனரேட்டர் போட்டாச்சுனு வைங்க. இருந்தாலும், எல்லாரும் அதை ஒருகெட்ட சகுனமா நினைச்சு முகம் சுருங்கிப்போயிட்டாங்க!'' என்றார் நண்பர் ஒருவர். இப்போதெல்லாம் பெண் பார்க்க/மாப்பிள்ளை வீடு பார்க்கச் செல்பவர்கள் மின்சாரம் இருக்கும் நேரம் பார்த்துதான் செல்கின்றனர்.

கோவை பஞ்சாலைகள் சிலவற்றில் நடப்பதாகச் சொல்லப்படும் செய்தி அதிர்ச்சியானது. ஒரு ஷிஃப்ட்டில் மின்வெட்டு ஆகும் நேரத்தின் பணியை அடுத்த ஷிஃப்ட்டில் சேர்த்துப் பார்த்துக் கழிக்க வேண்டும். இதனால் ஒரு தொழிலாளி 12 மணி நேரம், 15 மணி நேரம் தொழிற் சாலையில் இருக்க வேண்டி இருக்கிறது. இப்படி யூகிக்க முடியாத திசைகளில் இருந்தெல்லாம் மின்வெட்டு பிரச்னை களை ஏற்படுத்திவருகிறது.

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

கடந்த 10 ஆண்டுகளில் மாநிலம் முழுக்கப் பல்லாயிரம் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் ஷாப்பிங் மால்களும் முளைத்து உள்ளன. மக்களின் மின்உபயோ கமும் ஏ.சி. பயன்பாடும் அதிகரித்து உள்ளது. ஆனால், பொதுத் துறை மின் உற்பத்தி மட்டும் அப்படியே இருக்கிறது. சமீபத்திய பட்ஜெட்டில் முதல்வர் ஜெயலலிதா சில மின் உற்பத்தித் திட்டங்களை அறிவித்துஇருக்கிறார். அவை எல்லாம்செயல்பாட் டுக்கு வர மேலும் சில மாதங்களோ, வருடங்களோ பிடிக்கும். கோடை காலம் நெருங்கிவருகிறது. ஏ.சி. மெஷின்கள் முழு வீச்சில் திறக்கப்பட்டால், இந்த மின்வெட்டு இன்னும் கூடுதலாகும் சாத்தியம் அதிகம் உண்டு.

இப்படித்தான் இருண்டது தமிழகம்!

இந்திய மின்சாரச் சட்டத்தை 1948-ல் கொண்டுவந்த அம்பேத்கர், 'மின்சாரம் ஓர் அத்தியாவசியத் தேவை. அதை லாப நோக்கின்றி குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்’ என்றார். ஆனால், 2003-ல் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதா அரசு அந்த சட்டத்தை மாற்றி, 'கல்வி, மருத்துவம்போலவே மின்சாரமும் ஒரு விற்பனைப் பொருளே. அதை மக்களுக்கு மானிய விலையில் தரத் தேவை இல்லை. மின்சாரத்தின் விலை சர்வதேசச் சந்தை விலையுடன் அமைந்திருக்க வேண்டும்!’ என்று புதிய மின் சட்டத்தை இயற்றியது.

மின்சாரத்தை ஓர் இயற்கை வளமாக, அடிப்படைத் தேவையாகப் பார்க்காமல், பணம் உள்ளவன் பயன்படுத்தும் பண்ட மாகப் பார்ப்பதன் விளைவுதான், நிறுவனங் களுக்குத் தடையில்லா மின்சாரமும் மக்களுக்குத் தாள முடியாத மின் வெட்டும்!