Published:Updated:

அத்தான் நிச்சயம் திரும்பி வருவார்!

ஒரு மனைவியின் நம்பிக்கைஆர்.சரண்படம் : வீ.நாகமணி

பிரீமியம் ஸ்டோரி
##~##

லெக்ஸ் பால் மேனன் ஐ.ஏ.எஸ்... நாட்டையே படபடப்பில் ஆழ்த்தி உள்ள தமிழன். சட்டீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்ட ஆட்சியரான அலெக்ஸ், மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்டு, சட்டீஸ்கரின் அடர்ந்த காட்டுக்குள் பிணைக் கைதியாக வைக்கப்பட்டு இருக் கிறார்.

 ''2000-ம் வருஷம்  விகடன் மாணவப் பத்திரிகையாளரா அலெக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டு அவன் போட்டோ விகடன்ல வந்தப்போ ஊரே சந்தோஷப்பட்டுச்சு. அப்ப எல்லாரும் அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு 'ஊருக்கு எதுன்னா நல்லது செய்யுப்பா!’னு சொன்னாங்க. 'நான் அடுத்து கலெக்ட ருக்குப் படிக்கப்போறேன்ப்பா’னு சொன்னான் என் மகன். அப்ப பூரிச்சு நின்னேன்... இப்ப உடைஞ்சு நிக்கிறேன்!'' - விகடன் நிருபர் என்றதும் என் கைகளைப் பிடித்துக்கொண்டு கதறத் தொடங்கிவிட்டார் அலெக்ஸின் தந்தை வரதாஸ். பள்ளிப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்த அலெக்ஸ் மீது பாசத்தைக் கொட்டி, பொறுப்பான ஓர் இளைஞனாக உருவாக்கியவர்.

அத்தான் நிச்சயம் திரும்பி வருவார்!

''மாவீரன் அலெக்ஸாண்டர் நினைவா, அலெக்ஸ்... போப் ஜான்பால் மீது கொண்ட அன்பால, பால்... நேரு அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சரா இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் நினைவா, மேனன்... இப்படித்தான் அவனுக்கு நான் அலெக்ஸ் பால் மேனன்னு பேர்வெச்சேன். அவனைக் கடத்திட்டாங்கனு செய்தி கேள்விப்பட்டதுல இருந்து, என்னால் ஒருவேளைகூடச் சாப்பிட முடியலை தம்பி.

அத்தான் நிச்சயம் திரும்பி வருவார்!

2005-ல் ஐ.ஆர்.எஸ். கிடைச்சது. திரும்ப எழுதி அடுத்த வருஷமே ஐ.ஏ.எஸ். ஆனான். சட்டீஸ்கர் கேடர் கிடைச்சதும் அவன்கூடப் படிச்சவங்க, 'அது தீவிரவாதிகள் நிறைஞ்ச மாநிலம்’னு சொல்லிப் பயமுறுத்தினாங்க. ஆனா அவன், 'பிரச்னையான ஒரு இடத்துல மக்களுக்குப் பணி செய்யறதுதான் இந்தப் பதவிக்கு அழகு. ஹோம் கேடரைவிட சட்டீஸ்கர்லதான் மக்களுக்கு நிறைய செய்ய முடியும்’னு சந்தோஷமா சொல்லிட்டுப் போனான். எப்பவும் பரபரப்பா இருப்பான். அடிஷனல் கலெக்டரா தம்தாரிங்கிற ஊர்ல இருந்தப்போ, அவன் சேவைகளைப் பாராட்டி மத்திய அரசாங்கத்திடம் இருந்து மூணு விருதுகளை வாங்கி இருக்கான். சுக்மா மாவட்டம் உருவானப்போ, இவனைத்தான் முதல் கலெக்டரா அங்கே போஸ்டிங் போட்டாங்க. சுக்மா மாவட்டத்துல நாலே மாசத்துல கலெக்டர் அலுவலகத்தைப் புதுசாக் கட்டி முடிச்சான். 80 கி.மீ. தூரத்தைக் கடக்க அஞ்சு மணி நேரம் ஆகும் அளவு மோசமான சாலைகள் உள்ள மாவட்டம் அது. அங்கே 200 கி.மீ. சாலைகள் போட முதல்வர்கிட்ட ஒப்புதல் வாங்கி இருக்கிறதா போன வாரம்தான் போன்ல சந்தோஷமா சொன்னான்.

பாதுகாப்புக்கு போலீஸை நம்பினதைவிட, அந்த மாவட்ட மக்களை அவன் ரொம்ப நம்பினான். அவனைக் கடத்திட்டுப் போனதுல இருந்து உடைஞ்சு போய் கிடக்கிற என் மருமகளையும் அவ வயிற்றில் வளர்ற குழந்தையையும் நினைச்சா மனசு துடிக்குது. மக்களுக்கு நல்லது பண்ணணும்னு நினைக்கிறது தப்பா தம்பி? எனக்கு எதுவுமே புரியலையே...'' - குரல் உடைந்து கண்களில் நீர் உருளப் பேசுகிறார் அந்தத் தந்தை.

அத்தான் நிச்சயம் திரும்பி வருவார்!

சுக்மாவில் இருக்கும் அலெக்ஸ் பால் மேனனின் மனைவி ஆஷா, சென்னையைச் சேர்ந்தவர். பொறியியல் பட்டதாரியான அவர் 'யூத்ப்ளிஸ் சாரிட்டபிள் டிரஸ்ட்’ என்ற சிறார்களுக்கான தொண்டு நிறுவனத்தை நடத்திவருகிறார். அவரைத் தொடர்புகொண்டபோது ஆச்சர்யமாக நம்பிக்கை மிளிரப் பேசி நமக்கு ஆறுதல் சொன்னார் ஆஷா.

''கலெக்டர் கேம்ப் ஆபீஸின் ஐந்தாவது கி.மீட்டரில் இருந்தே காடுதான். அதனால அத்தான் எப்ப வெளியே கிளம்பினாலும், எனக்குப் பயமா இருக்கும். இப்போ நான் கர்ப்பமா இருக்கிறதால, அடிக்கடி போன் பண்ணி விசாரிச்சுட்டே இருப்பார். அன்னிக்கு ரொம்ப நேரமா போனே வரலை. ஏதாவது மீட்டிங்ல இருப்பார்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஆகும்னு நான் எதிர்பார்க்கவே இல்லை.

சமீபத்துலதான் அவரை எச்சரிக்கையா இருக்கச் சொல்லி ஐ.பி. ரிப்போர்ட் வந்தது. அன்னிக்கும் குறிப்பிட்ட தூரம் வரை கார்ல போயிட்டு, அப்புறம் பைக்லதான் போயிருக்கார். மக்களுக்கு நல்லது பண்ற நம்மளை எதுவும் பண்ண மாட்டாங்கங்கிற தைரியத்துலதான் அவர் சுதந்திரமா நடமாடிட்டு இருந்தார்.

அத்தான் நிச்சயம் திரும்பி வருவார்!

எனக்கு அவர் ஒரு குழந்தை மாதிரி. அவரை மாவோயிஸ்ட் நண்பர்கள் எதும் செய்ய மாட்டாங்கனு உறுதியா நம்புறேன். எந்த விஷயத்துக்காகவும் கோபப்படமாட்டார். எப்பவும் கூலா இருப்பார். நானும் ஐ.ஏ.எஸ். தேர்வுகளுக்குத் தயாராகிட்டு இருக்கேன். அந்தத் தேர்வுகளுக்குத் தேவையான பக்குவத்தை அவர்கிட்ட இருந்துதான் கத்துக்கிட்டு வர்றேன். மாவோயிஸ்ட்டுகளுக்கு நல்ல மனசு இருக் குனு எனக்குத் தெரியும். அத்தானைப் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்ட பிறகு, அவங்களே அவரைப் பத்திரமாத் திருப்பி அனுப்பிவெச்சுருவாங்கனு நான் உறுதியா நம்பு றேன். உங்களால முடிஞ்ச சின்ன உதவியா, அவர் பத்திரமாத் திரும்பி வரணும்னு பிரார்த்தனை மட்டுமே பண்ணிக்கோங்க... ப்ளீஸ்!''

இந்தப் புத்தகம் உங்கள் கைகளில் தவழும் நேரம், அலெக்ஸ் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டு இருக்க வேண்டும் என்பதே நம் அனைவரின் பிரார்த்தனையும்!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு