Published:Updated:

தமிழர்களுக்கு நன்றி!

கே.ராஜாதிருவேங்கடம், ஆர்.ஷஃபி முன்னாபடம் : எஸ்.சபா

தமிழர்களுக்கு நன்றி!

கே.ராஜாதிருவேங்கடம், ஆர்.ஷஃபி முன்னாபடம் : எஸ்.சபா

Published:Updated:
##~##

2000ம் ஆண்டு மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வானவர் அலெக்ஸ் பால் மேனன். ''நல்லா ஞாபகம் இருக்கு.  தி.நகர் மீனாட்சி கல்யாண மண்டபத்துலதான் டிரெய்னிங் கேம்ப்.  அந்தப் பயிற்சி முகாம்லதான் எனக்கு அலெக்ஸ் அறிமுகமானான். நிறையப் பேசிட்டே இருந்தான். 'நம்ம சமுதாயத்துக்கு என்னால முடிஞ்ச ஏதாவது செய்யணும்னுதான் நான் விகடனுக்கு வந்தேன்’னு அவன் சொன்னது இப்பவும் என் நினைவில் இருக்கு. கேம்ப்ல முதல் நாள் சாயந்திரம் ஆர்கெஸ்ட்ராவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்தாங்க. அந்த சமயம் 'ஏழையின் சிரிப்பில்’ படத்தின், 'கரு... கரு கருப்பாயி...’ பாட்டு ஹிட். ஆர்கெஸ்ட்ராவுல அந்தப் பாட்டுக்கு அலெக்ஸ் போட்ட டான்ஸ் இருக்கு பாருங்க.. அத்தனை பேரும் மிரண்டுட்டோம். அவ்வளவு பிரமாதமா டான்ஸ் ஆடினான். நல்லாப் படிக்கிற பையன் அமைதியா இருப்பான். ஆட்டம் போடுற பையன் படிக்க மாட்டான்கிற எல்லை அலெக்ஸுக்குக் கிடையாது!'' என்கிறார் அலெக்ஸ் பேட்ச்சில் மாணவப் பத்திரிகையாளராக இருந்த, இப்போது ஊட்டியில் வழக்கறிஞராக இருக்கும் விஜயன்.

 ''விகடன்...'' என்றதும்  அட்டகாசமாகச் சிரித்தார் அலெக்ஸ். 13 நாள் வன வாசத்துக்குப் பிறகு மாவோயிஸ்ட்டுகள் பிடியில் இருந்து மீண்டு வந்திருக்கும் சுக்மா மாவட்ட ஆட்சியர். பேட்டியும் விகடன் நினைவுகளில் இருந்தே தொடங்கியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழர்களுக்கு நன்றி!

''என் ஐ.ஏ.எஸ். பயணத்தின் முதல் மைல் கல் விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்தான். சாமான்யர்களில் இருந்து பிரபலங்கள் வரை ஒவ்வொருவரையும் சந்தித்துப் பேசும் வாய்ப்பை விகடன்தான்  கொடுத்தது. எங்களுக்கான பயிற்சி தொடங்கினப்ப, 'இங்கே நாங்க எதுவும் உங்களுக்குக் கத்துக்கொடுக்கப்போறது இல்லை. உங்ககிட்ட இருந்து நாங்கதான் கத்துக்கப் போறோம்’னு அப்போ ஆசிரியரா இருந்த எஸ்.பாலசுப்ரமணியன் சார் சொன்னது இன்னமும் எனக்குள் ஒலிச்சுக்கிட்டே இருக்கு.  நான் விகடன் நிருபராக இருந்தப்ப, எத்தனையோ அதிகாரிகளைப் பேட்டி எடுத்திருக்கேன். அப்போ எனக்குக் கிடைச்ச அனுபவங்கள்தான் நான் ஆட்சியரான பிறகு மீடியா நண்பர்களின் மனப்போக்கை அறிஞ்சுக்க உதவுச்சு.  

நான் விகடனில் மாணவ நிருபராகச் சேர்ந்த சில வாரங்களில் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரைக் கடத்திப் போயிட் டான். அப்போ என் பேட்சைச் சேர்ந்த மாணவர்கள் பலரும் வீரப்பனைப் பற்றி பரபரப்பா செய்திகள் எழுத ஆரம்பிச்சிட் டாங்க. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. அப்போ திண்டுக்கல் பக்கத்துல பாறைமேடுன்னு ஒரு ஊரில் ஆளையே தூக்கிச் செல்லும் அளவுக்கு கொசுக்கள் இருக்கும். அந்த விஷயத்தை நான் ஒரு செய்தியாக எழுதி அனுப்பி னேன். அப்போ அது 'கொசுநிலை அறிக்கை’ன்னு  ஜூ.வி-யில் வெளியாச்சு. செய்தி வெளியானதும் அதிகாரிகள் அந்தக் கிராமத்துக்குப் போய் கொசுக்களை ஒழிக்கப் பல முயற்சிகளை எடுத்தாங்க. அப்போதான் ஒரு நிருபரின் பேனாவுக்கு இருக்கும் வலிமையை நான் உணர்ந்தேன். அதே சமயம் 'நல்லது பண்ணுங்க’ன்னு சொல்ற கட்டத்தைத் தாண்டி, நல்லது பண்ணும் இடத்துக்கே போகணும்னு அப்போ விழுந்த விதைதான் என் ஐ.ஏ.எஸ். கனவு, இருந்தாலும், ஒரு பத்திரிகையாளரா என் வாழ்க்கையைத் தொடர முடியாத வருத்தம் இன்னைக்கும் உண்டு!''

''கடத்தப்பட்ட நாட்களில் நீங்கள் மிகவும் இழந்தது என்ன?''

''நான் கடத்தப்பட்ட நொடியில் இருந்து, என் ஆஷா தனியா என்ன பண்ணுவாளோ... தவிச்சுப்போயிருவாளேன்னுதான் கவலையில் இருந்தேன். அந்தப் பிரிவின் ஒவ்வொரு நொடியும்தான் ஆஷா மேல் நான் எந்த அளவுக்கு காதல் வெச்சி ருக்கேன்னு எனக்கு உணர்த்தியது. அப்போ நான் ஆஷாவுக்கு சில கடிதங்கள் எழுதினேன். அதை ஆஷாவிடம் கண்டிப்பாக் கொண்டுசேர்க்கணும்னு அவர்களைக் கட்டாயப்படுத்தினேன். கொடுத்துடுறதாச் சொல்லி வாங்கிட்டுப் போனாங்க. ஆனா, அந்தக் கடிதங்கள் எதுவும் ஆஷாவுக்கு வந்து சேரலைன்னு இப்போதான் புரியுது! 'என்ன எழுதினீங்க?’ன்னு இப்போ ஆஷா கேட்டுக் கிட்டே இருக்காங்க. என் காதலை எழுதினேன்னு சொல்லி சமாளிச்சுட்டு இருக்கேன்!

தமிழர்களுக்கு நன்றி!

எனக்காகவே வாழ்ந்துட்டு இருக்கும் என்னோட அப்பாகிட்ட நான் தினமும் ஒரு முறையாவது பேசிடுவேன். இந்த 13 நாட்களில் ஒருமுறைகூட அவர்கிட்ட பேசாதது மனசுக்கு ரொம்பப் பாரமா இருந்துச்சு. எல்லாத்தையும்விட மிகப்பெரிய சோகம், என் பாதுகாப்பு அதிகாரிகளான அம்ஜத்தையும் கிஷனையும் மாவோ யிஸ்ட்டுகள் கொன்றது. அவங்க ரெண்டு பேரும் என் மேல அவ்வளவு பாசம் வெச்சிருந்தாங்க. அவங்க மரணத்தை நினைச்சு இப்பவும் என்னால் நிம்மதி யாத் தூங்க முடியலை. அவங்களை இழந்து தவிக்கும்  அவங்க குடும்பங்களுக்குத் தேவையான எல்லா  உதவிகளையும் செய்யப்போறேன்!''

''உங்களை விடுவிக்கச் சொல்லி சத்தீஸ்கர் மாநில மக்கள் பெருமளவில் குரல் எழுப்பினார்கள். அந்த அளவுக்கு அவர்களை நீங்கள் கவர்ந்தது எப்படி?''

''கிட்டத்தட்ட ஆறு வருஷங்களா நான் இந்த மாநிலத்தில் வேலை பார்த்துட்டு இருக்கேன். இங்கே எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கான நலத் திட்டங்கள் அதிகம். இங்கே நீங்க எதையும் புதுசா செய்ய ணும்கிற அவசியமே இல்லை. ஏற்கெனவே உள்ள திட்டங்களை முறையாக அமல்படுத்தி, கண்காணிச்சுட்டு வந்தாலே போதும். அந்த வகையில் நான் பயனாளிகள் திருப்திய அடையும் அளவுக்கு வேலை செஞ்சிட்டு இருக்கேன். குறிப்பா, தம்தரியில் நான் இருந்தபோது, அங்குள்ள மக்களுக்காக நான் செஞ்ச வேலை சின்னதுதான். ஆனா, அதுக்கே அந்த மக்கள் என்னோட போட்டோவைத் தங்கள் வீட்டில் மாட்டிவைக்கணும்னு கேட்டு என்னை நெகிழவெச்சுட்டாங்க.''  

''இந்த நாட்களில் தமிழகத்தில் உங்களுக்கு எழுந்த ஆதரவுக் குரல்பற்றி அறிவீர்களா?''

''நிச்சயமா..!  நம்மாளுங்க என் மேல காட்டின பாசத்துக்கு நான் என்ன  செய்யப்போறேன்னு தெரியலை. 'காமராஜர் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தலைன்னா, நான் பள்ளிக்கூடத்துக்கே போய் இருக்க மாட்டேன். இன்னைக்கு நீயும் இந்தப் பதவியில் இருந்திருக்க மாட்டே!’னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார். அதுதான் உண்மை. காமராஜர் கொண்டுவந்த நல்ல திட்டங்களைப் பற்றியும் அந்தத் திட்டங்கள் எல்லாம் இன்னைக்குத்  தமிழகத்துக்கு எந்த அளவுக்கு முன்னேற்றி இருக்கும்னும், இங்குள்ள கிராம மக்களுக்கு நான் எடுத்து சொல்லிட்டு இருக்கேன். இப்போ என் விடுதலைக்காகக் குரல் கொடுத்த தமிழக மக்கள்,

தமிழர்களுக்கு நன்றி!

தமிழக முதல்வர், முன்னாள் முதல்வர், அனைத்துக் கட்சித்தலைவர்கள் தமிழக எம்.பி-க்கள் எல்லோ ருக்கும் விகடன் மூலமா என் நன்றிகள்!''

''மீண்டும் சுக்மாவிலேயே பணிபுரிவீர்களா?''

''மாநில முதல்வர் ராமன் சிங்கும் இதே கேள்வியைக் கேட்டார். நான் உறுதியா 'ஆமாம்’னு சொல்லிட்டு வந்திருக்கேன். அதில் முதல்வருக்கு ரொம்பவே சந்தோஷம். 'நீங்க விரும்பும் வரை இங்கேயே பணி யாற்றுங்கள்’னு சொல்லி இருக்கார்.

மாஞ்சிபாடா கிராமத்தை ஒரு முன் மாதிரிக் கிராமமாக மாற்ற வளர்ச்சிப் பணிகளைத் தொடக்கிவைக்கப் போனப்ப தான் என்னைக் கடத்திட்டுப் போனாங்க. அதனால், மாஞ்சிபாடாவில் இருந்தே என் வேலையை மீண்டும் தொடங்குவேன்!'' -

அழுத்தமாகக் கை குலுக்கிச் சிரிக்கிறார் அலெக்ஸ் பால் மேனன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism