Published:Updated:

வெற்றி யாருக்கு?

பாரதி தம்பிபடம் : ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

குழந்தைகள், அப்துல் கலாமுக்கு எதிராகக் கோஷமிடுவார் களா? இடிந்தகரைக்கு வாருங்கள்... நிலம் அதிர, காற்று அதிர கலாமுக்கு எதிராக முழக்கமிடும் குழந்தைகளைப் பார்க்கலாம். கலாமை மட்டும் அல்ல... நாராயணசாமி, ஜெயலலிதா, கருணாநிதி என அணு உலைக்கு ஆதரவான அரசியல்வாதிகள் அத்தனை பேரையும் வறுத்து எடுக்கிறார்கள் இந்தக் குழந்தைகள். கூடங்குளம் அணு உலைக்கு எதிரான ஐந்தாம் கட்ட உண்ணாவிரதப் போராட்டம் அதன் ஆரம்பக் கட்ட வீச்சுடன் இப்போதும் தொடர்கிறது.

 'அதான் அணு உலை வேலை ஆரம்பிச்சுடுச்சே... அடுத்த மாசம் கரன்ட் எடுக்க ஆரம்பிச்சுடுவோம்னு பேப்பர்ல போடுறாங்க. இனிமே போராடி என்னத்த செய்ய?’ என்பது பொது மனதின் கேள்வி. ஆனால், 273 நாட்களைக் கடந்துவிட்ட பின்னரும் இந்தச் சலிப்பு அந்தப் பகுதி மக்களிடம் இல்லை. அவர்கள் இப்போது 11 கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்; பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்க வேண்டும், அணுக் கழிவு களை எப்படிக் கையாளப்போகிறோம்

வெற்றி யாருக்கு?

என்பதை அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட அந்த கோரிக்கைகளை அரசு இதுவரை கண்டுகொள்ளவே இல்லை. இதனால் உண்ணாவிரதப் பந்தல், எந்நாளும் அணையாத வடலூர் ஜோதியைப் போல நிரம்பியே இருக்கிறது. இப்போதும் அங்கு 70-க்கும் அதிகமான பெண்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

''இதுவரை கிட்டத்தட்ட 250 வழக்குகளாகிவிட்டன. ஓரிருவரின் பெயர்களை மட்டும் சேர்த்துவிட்டு, அத்துடன் 'அடையாளம் தெரியாத 2,000 பேர்’ என்று போட்டிருக்கிறார்கள். இதை வைத்து யாரையும் எப்போதும் கைதுசெய்ய முடியும். அதனால் தான் வழக்குகளை வாபஸ் வாங்கச் சொல்கிறோம். அதேபோல, அணு உலை இயங்கத் தொடங்கும் முன்பு 30 கி.மீ. வரை வசிக்கும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்பது விதி. இதுவரை அதைச் செயல்படுத்தவில்லை. இதில் இடப்பெயர்ச்சிப் பயிற்சியும் உண்டு. ஒவ்வொரு கிராம மக்களுக்கும் 25 கி.மீ. தாண்டி ஓர் இடம் நிர்ணயிக்கப்படும். சைரன் ஒலித்ததும் அதை நோக்கி ஓட வேண்டும். இப்போது வரை ஏதோ இது மீனவ மக்களின் பிரச்னைபோலப் பார்க்கப்படுகிறது. இடப்பெயர்ச்சிப் பயிற்சி கொடுத்தால்தான், இது அனைவருக்குமான அபாயம் என்பது புரியும். அப்போது போராட்டம் இன்னும் கடுமையாகும். அதனால்தான் அரசு இதைத் தவிர்க்கிறது. ஆனால், சர்வதேச விதிமுறைகளின்படி பேரிடர் மேலாண்மைப் பயிற்சி கொடுக்காமல் அணு உலையை இயக்க முடியாது. மற்றபடி இவர்கள், 'இன்னும் ஒரு மாதத்தில் உற்பத்தி தொடங்கிவிடும், 10 நாட்களில் தொடங்கிவிடும்’ என்று சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள். 2005-ல் இருந்து மாதத்துக்கு இரண்டு முறை இப்படித்தான் சொல்கின்றனர். ஆனால், அப்படிச் செய்ய முடியாது. எங்கள் போராட் டத்தின் தீவிரமும் மக்களின் நம்பிக்கையும் சிறிதளவும் தளர்ந்துபோகவில்லை'' என்கி றார்கள் போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்களான சுப.உதயகுமாரனும் புஷ்பராயனும்.

வெற்றி யாருக்கு?

போராட்டம் நடந்துவரும் கடந்த எட்டு மாதங்களில் ஒரு முறைகூட கலெக்டர், எஸ்.பி., அமைச்சர், எம்.எல்.ஏ. என யாரும் இடிந்தகரைக்கு வரவில்லை. அது தீவுப் பிரதேசம்போலத் தனித்துவிடப்பட்டுள்ளது. இதனால், பல கிராமங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் வெட்டி வீசப்பட்டுள்ளன. போராட்டத்தின் இன்னொரு பகுதியாக வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடமே திருப்பிக் கொடுக்கப்போகிறார்கள். இதுவரை 12 ஆயிரத்துக்கும் அதிகமான அட்டைகளை மக்கள் போராட்டக் குழுவினரிடம் கொடுத்துள்ளனர். ''ஓட்டுப்போடுற அன்னைக்கு மட்டும்தான் நாங்க ராஜா. மத்த நாள்லாம் நாங்க அடிமைதானே? அப்புறம் எதுக்கு இந்த அட்டை? அதான் திருப்பிக் கொடுக்கப் போறோம்'' என்கிறார் புஷ்பராயன். இவரும் சுப.உதயகுமாரனும் பல மாதங்களாக இடிந்தகரையைவிட்டு எங்கும் செல்லவில்லை. போராடுபவர்களுக்கு அங்கேயே உணவு தயாராகிறது. இதற்கான செலவு உள்பட அனைத்தையும் 'தெறிப்பு’ என்று சொல்லப்படும் மீனவக் கிராமங்களின் வரிப் பண வசூல் மூலம் சமாளிக் கின்றனர். பேச்சு, பாடல்கள், குழந்தைகளின் முழக்கங்கள் என மேடையில் ஏதோ ஒன்று தொடர்ந்து நடந்துகொண்டே இருக்கிறது. பீடி சுற்றியபடியே அவற்றைக்

வெற்றி யாருக்கு?

கேட்கின்றனர் பெண்கள். கூத்தங்குழி சிறுமி லூர்துமேரியிடம் ''எதுக்கு இப்படிப் போராடுறீங்க?'' என்றால், ''எங்களுக்குத் தெரிஞ்சது கடல் தொழில் மட்டும்தான். அணு உலைக் கழிவைக் கடல்ல கொட்டினா மீனு எல்லாம் அழிஞ்சுபோகும். அப்புறம் நாங்க எங்க போக? அதான் வேண்டாங்கோம்'' என்கிறாள் தெளிவாக. எட்டு மாதக் காலப் போராட்டத்தின் விளைவு... வயதான பாட்டிகள்கூட, 'மெகா வாட்’, 'கதிர்வீச்சு’ என அறிவியல்பூர்வமாகப் பேசுகிறார்கள். இடிந்தகரையைச் சுற்றி எங்கும் போலீஸ். அவர்கள் கொஞ்சம் நகர்ந்தாலும், சர்ச் பெல் ஒலிக்கும். அது வரை எங்கிருக்கிறார்கள் என்றே தெரியாத ஆயிரமாயிரம் மக்கள் திரண்டு வந்துவிடுவார்கள்.

ஒரு பக்கம் சமரசமற்ற மக்கள் போராட்டம்... இன்னொரு பக்கம் அதிகாரத்தின் குறியீடாக நிற்கும் அணு உலை. யாருக்கு வெற்றி என்பதைக் காலம் தீர்மானிக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு