Published:Updated:

அந்த முகம்..!

'வழக்கு எண்' பெண்ணின் வாக்குமூலம்பாரதி தம்பி, படங்கள் : உசேன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

நெகிழ்வான உச்சி முகர்தல்களை யும்... அழுத்தமான பாராட்டுக் களையும் குவித்துக்கொண்டு இருக்கும் 'வழக்கு எண் 18/9’ படத்தின் அந்த க்ளைமாக்ஸ் காட்சி... இன்னமும் ஜீரணிக்க முடியாத அதிர்ச்சி!

 ஆசிடால் ஒருபுறம் சிதைந்த கதாநாயகியின் முகத்தைத் தத்ரூபமாகக் கொண்டுவந்த ஒப்பனைக் கலைஞருக்கு வாழ்த்துச் சொல்லலாம் என்று விசாரித்தால்... தாக்கியது அடுத்த அதிர்ச்சி!

''அந்த ஆசிட் முகம் மேக்கப் இல்லைங்க... நிஜத்தின் பிரதிபலிப்பு. இரண்டு மணி நேர படத்தின் ஒட்டுமொத்த வீரியமும் அந்த ஒரு காட்சியில் உறைக்கணும்னு யோசிச்சுட்டே இருந்தோம். மேக்கப்லாம் நாங்க எதிர்பார்த்த தாக்கம் கொடுக்கலை. மண்டைக்குள்ள இதே நினைப்பு குறுகுறுனு ஓடிட்டு இருந்தப்பதான் அந்த டி.வி. ஷோ பார்த்தேன். அதுல அந்த முகம்... வேண்டாங்க... எனக்கு அதை எப்படிச் சொல்றதுன்னே தெரியலை. அவங்க பேரு சாந்தி. அவங்க முகத்தை மாதிரியா வெச்சுத்தான் அந்த க்ளைமாக்ஸ் காட்சியை கிராஃபிக்ஸ் பண்ணோம். சாந்தியை நேர்ல பார்க்குறீங்களா?'' - படத்தின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் காட்டிய பாதை சென்னை எம்.எம்.டி.ஏ. காலனியின் ஒண்டுக் குடித்தன வீடொன்றில் முடிந்தது.

அந்த முகம்..!

அக்னி நட்சத்திர வெக்கையில் வெந்துகொண்டு இருக்கிறார் சாந்தி. ''இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கலை... பார்த்து என்ன பண்ணப்போறேன். நெதமும் பார்க்குறதுதானே?'' என்பவரின் உதடுகளில் புன்னகை துளியும் மாறவில்லை.

''மதுரை சிம்மக்கல்லுதான் என் பூர்வீகம். எனக்கு எட்டாங்கிளாஸுக்கு மேல படிப்பு ஏறலை. வீட்ல சும்மாதான் இருந்தேன். அப்போ நான் ரொம்ப லட்சணமா இருப்பேன். அம்மா என்னை அலங்காரம் பண்ணி முன்னேயும் பின்னேயும் நடக்கவிட்டு அழகு பார்ப்பாங்க. பார்த்துப் பார்த்து வளர்த்தாங்க. எனக்கு 17, 18 வயசு இருக்கும். சென்னையில இருந்த அத்தை வீட்டுக்கு சும்மா வந்திருந்தேன். என் அத்தைப் பையன் குமார். திடீர்னு ஒரு நாள் எல்லாரும் இருக் கும்போது என் கழுத்துல தாலியைக் கட்டிட்டார். 'எனக்குப் பிடிச்சிருந்துச்சு... கட்டிட்டேன். முறைப் பொண்ணுதானே?’னு சொல்லிட்டுப் போயிட்டார். 'நம்ம மேல ஆசை இருக்கப்போயிதானே அவ்வளவு துணிச்சலா தாலி கட்டியிருக்கார்’னு நினைச்சு நானும் ஏத்துக்கிட்டேன்.

அந்த முகம்..!

ஆசைப்பட்டுக் கல்யாணம் பண்ணிக்கிட்டார்னுதான் பேர். ஆனா, ஒவ்வொரு நாளும் நரக வாழ்க்கை. சம்பந்தமே இல்லாம சந்தேகப்பட்டு குடிச்சுட்டு வந்து அடிப்பார். அடி தாங்காம அம்மா வீட்டுக்கு ஓடுவேன். மறுபடியும் அழைச்சுக்கிட்டு வந்துடுவார். தூங்கிக்கிட்டு இருக்கும்போது என் வலது கால் தொடையில ஒரு நீளமான கம்பியால குத்திட்டார். வலியில துடிச்சுப்போயி எழுந்தா, ரத்தம் வழியுற கம்பியோட நிக்குறாரு. இன்னொரு நாள் கிரைண்டர் கல்லைத் தூக்கி இடது கால்ல போட்டுட்டார். அப்போ உடைஞ்ச காலை இப்போவரைக்கும் சரி பண்ண முடியலை. ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க பொறந்தும் சித்ரவதை நிக்கலை. பிள்ளைங்களையும் போட்டு அடிப்பார். என் அம்மா அப்பாதான் சேர்ந்து வாழலை. நாமளும் அந்தப் பேர் எடுத்துரக் கூடாதுனு அத்தனை வேதனைக¬ளையும் பொறுத்துக்கிட்டு சேர்ந்து இருந்தேன்.'' ஒரு பக்க முகத்தை மூடியிருந்த துணியைச் சரிசெய்தபடியே அந்தக் கொடூர நாளைப் பற்றிச் சொல்கிறார்.

''வழக்கம்போல ஏதோ ஒரு சண்டை. பொறுக்க மாட்டாம பிள்ளைகளைஅழைச் சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துட்டேன். தேடி வந்துட்டார். நைட் ஒரு மணி இருக்கும். அவர், நான், ரெண்டு பொண்ணுங்களும் வரிசையா படுத்திருந்தோம். நல்லாத் தூங்கிட்டேன். திடீர்னு முகத்துல தீ வெச்ச மாதிரி சுர்ர்ருனு இருந்துச்சு. வலியால துடிச்சு அலறி முழிச்சுப் பாக்குறேன். என்ன நடந்துச்சுன்னே தெரியலை. அப்போலாம் ஆசிட்னா என்னன்னே எனக்குத் தெரியாது. சின்னப் பொண்ணு மேலயும் ஆசிட் ஊத்திருச்சு. அவளும் துடிக்கிறா. வீடு முழுக்க ஒரே புகை. ஆளுங்க வர்றதுக்குள்ள அவர் ஓடிப்போயிட்டார்.  

ஒருக்களிச்சுப் படுத்திருந்ததால ஒரு பக்க முகத்துல மட்டும் ஆசிட் பட்டிருக்கு. எழுந்து நின்னதும் ஆசிட் அப்படியே வடிஞ்சு கழுத்து, நெஞ்சுனு இறங்கிடுச்சு. உயிர் போற வேதனை...''

சின்ன இடைவெளி கொடுத்துத் தொடர்கிறார். ''நானும் என் பொண்ணும் ரெண்டு மாசம் ஆஸ்பத்திரியில் இருந்தோம். வலின்னா வலி... உயிர்போற வலி. ஒரு பக்க கண் பார்வை போச்சு. கன்னம், தலை, மண்டையோடு எல்லாம் கருகிப்போச்சு. ரெண்டு பக்க காதை எடுத்துட்டாங்க'' என்று தலைமுடியை விலக்கி காது இருந்த இடத்தைக் காட்டுகிறார். அங்கு... வேண்டாம் வாசகர்களே...  

''என் முகத்தைப் பார்த்துட்டு என் மூத்த பொண்ணே என்கிட்ட வரலை. குடியிருந்த வீட்டுல 'குழந்தைங்கள்லாம் இருக்காங்க’னு சொல்லி காலி பண்ணச் சொல்லிட்டாங்க. 'இதுக்கு நீ செத்தே போயிருக்கலாம்’னு நிறையப் பேர் சொன்னாங்க. ஆனா, என் குழந்தைங்க வாழ்க்கை எனக்கு முக்கியமாச்சே. முகத்தை மூடிக்கிட்டே வீட்டு வேலை பார்த்து பிள்ளைங்களைப் படிக்க வெச்சேன். ஆயுசுக்கும் அல்லாடிக்கிட்டேதான் இருந்தேன். எல்லாம் எதுக்கு? பிள்ளைங்க நல்லா இருக்கணும்னுதான். ஆனா, எங்க தலைமுறை சாபம் விட்டு ஒழியாதுபோல'' என்றபடி முகத்தை மூடிய படி விசும்பத் தொடங்கினார்.  

சாந்தியின் மூத்த மகள் தேவியின் காதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது.  இப்போது மூத்த மகள் தேவி, அவரது மகன், இளைய மகள் காயத்ரி ஆகியோரோடு சாந்தி ஒரே அறைகொண்ட வீட்டில் வசித்துவருகிறார். மகள்கள் இருவரும் ஒரு மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கின்றனர்.

''ஆசிட் பாதிப்புனால இப்பவும் தலைவலி, பல் வலினு விதவிதமா உடம்பு சரியில்லாமப் போகும். தினமும் கையளவு மாத்திரை சாப்பிடுறேன். இப்போ ரொம்ப முடியலை. எனக்கு ஏதாவது ஒண்ணுன்னா, என் பொண்ணுங்க வாழ்க்கை என்னா ஆகுமோனுதான் பக்குனு இருக்கு.''

''உங்க புருஷன் என்ன பண்றார்?''

''ஆசிட் அடிச்ச பிறகு, நான் கேஸ் கொடுத்துட்டேன். போலீஸும் வேகமா விசாரிச்சாங்க. அதுல பயந்துபோய், வார்னிஷைக் குடிச்சுட்டு தற்கொலை பண்ணிக்கிட்டார். சாகும்போது அவருக்கு 30 வயசு. ஆசிட் அடிக்கும்போது எனக்கு 25 வயசு. தானும் செத்து, என் வாழ்க்கையையும் கெடுத்து, பிள்ளைங்க வாழ்க்கையும் நாசமாக்கிட்டுப் போயிட்டார்'' - எந்த உணர்ச்சியும் இல்லாத குரலில் முடிக்கிறார் சாந்தி.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு