Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

'தானே’ தாக்குதலில் கல்விக் கோயில்களும் கரைந்தன பல இடங்களில். அரசாங்கப் பள்ளிக் கட்டடங்களின் தரம் அனைவரும் அறிந்ததுதான். ஆயுதங்கள் வாங்க ஆயிரமாயிரம் கோடிகளில் பட்ஜெட்டில் பணம் ஒதுக்கும் இந்த நாட்டில்தான்... அறிவுக் கோயில்கள் இன்றும் மரத்தடிகளில் நடக்கின்றன. ஒரே கட்டடத்துக்குள் ஒன்பது வகுப்பறைகள். எப்போது இடிந்து விழுமோ என்ற நிலையில் மேற்கூரைகள். மண்ணில் எழுதிப் பழகிய குருகுல வாசம் போனாலும் அதை ஞாபகப்படுத்தும் வகையில் பெயர்ந்து தூர்ந்துபோன தரைத் தளங்கள். சுண்ணாம்பு பார்க்காத சுவர்கள்... மராமத்து பார்க்கப்படாத மர பெஞ்ச்சுகள்... இப்படி அரசுப் பள்ளிகளின் அவல நிலையை அடுக்கத் தொடங்கினால், கல்வித் துறை மானியக் கோரிக்கைப் புத்தகங்களைவிட மலை அளவு பெரிதாக இருக்கும். இத்தகைய நிலையில், இயற்கையும் பதம் பார்க்க ஆரம்பித்தால்?

 விகடன் 'தானே’ துயர் துடைப்பு அணி கிராமம் கிராமமாகச் சென்றபோது, பல கிராமத்துப் பள்ளிக்கூடங்கள் புயல் தாக்குதலில் சிதைந்துகிடந்தன. ''அண்ணே... புயல் அடிச்சப்போ, எங்க ஸ்கூல் பில்டிங் மேல மரம் விழுந்து நொறுங்கிப்போச்சு. இன்னொரு பில்டிங்குல ஓடுதான் போட்டிருந்தாங்க. காத்துக்கு அடிச்சுத் தூக்கிருச்சு. அடிக்கிற வெயில்ல உள்ள உட்கார முடியாம... வெளியேயும் போக முடியாம அவஸ்தைப்படுறோம்'' என்று கடலூர் ஒன்றியம் டி.குமாரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிப் பிள்ளைகள் சொன்னார்கள். குறிஞ்சிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பெரியகோவில்குப்பத்தில் இருக்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் நிலை அதைவிட மோசம். உடைந்திருந்த கட்டடத்தின் மேற்கூரையை ஆசிரியர்களே சேர்ந்து பணம் போட்டுச் சீரமைத்து உள்ளார்கள். கழிப்பறையின் மேற்கூரையும் கதவும் மொத்தமாகச் சேதம் அடைந்து இருந்தது. நக்கரவந்தன்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் சுற்றுச் சுவர் முழுமையாகச் சேதம் அடைந்துவிட்டது. பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியின் நிலைமை இன்னும் மோசம். பள்ளியின் பின்புறச் சுற்றுச் சுவர் மொத்தமாகச் சாய்ந்துவிட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

அந்தப் பள்ளிக்குப் பின் மிகப் பெரிய அளவில் சவுக்குத் தோப்பு உள்ளது. ''அந்தப் பக்கம் போறதுக்கே பயமா இருக்கு சார்'' என்று அந்த பள்ளிப் பிள்ளைகள் நம்மிடம் சொன்னார்கள். மாணவிகள் அதிகம் படிக்கும் பள்ளி இது. மகளிர் கழிப்பறைச் சுவர்களைத் 'தானே’ புயல் தகர்த்துவிட்டது. கழிப்பறையைப் பயன்படுத்த முடியாத அவஸ்தையைக் கடந்த டிசம்பர் முதல் மாணவிகள் அனுபவித்துவந்தார்கள்.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியரின் எதிர்கால நம்பிக்கையாக விளங்கக்கூடிய இந்தப் பள்ளிக்கூடங்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பது, விகடன் துயர் துடைப்புப் பணியின் அடுத்தகட்ட இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளி, டி.குமாரபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மருதநாடு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, கோழிப்பாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளி, பத்திரக்கோட்டை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, பெரியகோவில்குப்பம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, தட்டானோடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, நக்கரவந்தன்குடி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி ஆகிய எட்டு பள்ளிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்.

'தானே' துயர் துடைத்தோம்!

முதலாவதாக, பெரியகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கான மராமத்து வேலைகள் கடந்த 10-ம் தேதி பூஜையுடன் தொடங்கின. சுற்றுச் சுவர் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், உணவுக்கூடம் கட்டுதல், வகுப்பறை ஜன்னல் கதவுகளைப் புதிதாக அமைத்தல் ஆகிய பணிகள் அங்கு முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

''எனக்கு 80 வயசு ஆகுதுங்க. என் வயசுல இப்படி ஒரு புயலைப் பார்த்தது இல்லை. வேகக் காத்து அடிச்சதுன்னா, மரக் கிளை உடையும், ஓடு பிரியும். ஆனா, இந்த மாதிரி மரமே விழறது, கட்டடமே சாய்றதுனு இதுவரைக்கும் பார்த்தது இல்லை. சுனாமியால எங்க ஊருக்கு எந்தப் பாதிப்பும் இல்ல. ஆனா, 'தானே’ தாக்குதல் ரொம்ப மோசம். இயற்கை எங்களை ஏனோ வஞ்சிச்சிருச்சு. ஆனா, ஒரு கதவை அடைச்ச சாமி, விகடன் வாசகர்கள் மூலமா இன்னொரு கதவைத் திறந்துவெச்சிருக்கு'' என்று கண்ணீர் மல்க நெகிழ்கிறார் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் சி.சுப்பிரமணியன்.

கோடை விடுமுறை முடிந்து இந்த பள்ளிப் பிள்ளைகள் ஜூனில் வரும்போது, விகடன் வாசகர்களின் உதவியோடு நடந்த மராமத்துப் பணிகள் நிச்சயம் அவர்களைப் பத்திரமாக அடைகாத்து நிற்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism