Published:Updated:

வணக்கம் வலியறிந்தவர்களே!

வணக்கம் வலியறிந்தவர்களே!

யிர்த் துடிப்பு மிக்க வாசகர்களே!

'மூன்றாம் உலகப் போர்’ நெடுந்தொடரில் என்னோடும் என் பாத்திரங்களோடும், கண்ணீரோடும் புன்னகையோடும் 40 வாரங்களாக உற்சாகம் நுரைக்க ஓடிவந்தவர்களே!

நன்றி.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'கருத்தமாயியைக் கொன்றுவிடாதீர்கள்’ என்று மன்றாடியவர்களையும், 'சின்னப்பாண்டி - எமிலியைச் சேர்த்துவிடுங்கள்’ என்று கெஞ்சியவர்களையும், 'இஷிமுரா இந்தியாவிலேயே இருக்கட்டும்’ என்று கட்டளையிட்டவர்களையும், 'முத்துமணி திருந்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் தர மாட்டீர்களா’ என்று கடிந்தவர்களையும், 'கருத்தமாயி - சிட்டம்மாவைப் பேச வைக்கவில்லையென்றால், நடப்பதே வேறு’ என்று மிரட்டியவர்களையும், 'உங்கள் படைப்பின் உச்சம் இது’ என்று உச்சி முகர்ந்த சிலரையும், கடிதம் - மின்னஞ்சல் - தொலைபேசி மூலம் படைப்புக்குள் நேர்ந்த சில தகவல் பிழைகளை அன்போடு சுட்டிக்காட்டிய சில ஆய்வாளர்களையும், ஒரு படைப்புக்குள் இத்தனை உலகங்களா என்று வியந்தவர்களையும், ஒவ்வொரு வியாழக்கிழமை அதிகாலையிலும் தொடர்ச்சியாக அழைத்து அழைத்து என் சிம் கார்டு நசுக்கியவர்களையும் கைகள்பற்றிக் கண்களில் ஒற்றி நன்றி சொல்கிறேன்.

வணக்கம் வலியறிந்தவர்களே!

என் செல்லப் பத்திரிகையான ஆனந்த விகடனில் நான் எழுதி முடித்த நான்காம் படைப்பு இது. தண்ணீரும் தண்ணீர் சார்ந்ததுமாக 'தண்ணீர் தேசம்’. மண்ணும் மண் சார்ந்ததுமாக 'கள்ளிக்காட்டு இதிகாசம்’. பெண்ணும் பெண் சார்ந்ததுமாக 'கருவாச்சி காவியம்’. மண்ணும் விண்ணும் சார்ந்ததுமாக 'மூன்றாம் உலகப் போர்’. மூன்று ஆண்டுகள் ஆராய்ச்சி செய்து, பத்து மாதங்கள் எழுதப்பட்டது இந்த மூன்றாம் உலகப் போர்.

ஒவ்வோர் அத்தியாயமும் ஒரு நாவலுக்கான உழைப்பை வாங்கித் தன்னை வடிவமைத்துக்கொண்டது. எழுதி முடிக்கப்பட்ட ஓர் அத்தியாயத்தின் பிரதி ஆறு முதல் ஏழு முறை செப்பனிடப்பட்டது.

இந்த 40 அத்தியாயங்களும் வாய்மொழியாகச் சொல்லப்பட்டவை. வரிக்கு வரி எழுதியவர் வசனகர்த்தா தம்பி ஆர்.வேலுமணி.

இந்த படைப்பைக் கலைத் தேவை என்று சொல்ல மாட்டேன். காலத்தின் தேவை என்று சொல்லுவேன்.

2050-ல் இந்த பூமிப் பரப்பின் மேல் 900 கோடி மக்கள் வாழப்போகிறார்கள். ஆனால், உயரப்போகும் மக்கள்தொகைக்கு எதிராக உலக உணவு உற்பத்தி சரிந்துகொண்டிருக்கிறது.

புவி வெப்பமாதல் என்ற பூதமும், உலகமயமாதல் என்ற ராட்சசப் பசியும் 10,000 ஆண்டுகளுக்கு முன்னால் பிறந்த விவசாயத்தை விழுங்கிக்கொண்டிருக்கின்றன.

இந்த இரட்டை இடர்களுக்கு மத்தியில் பசித்த வயிற்றோடு மண்ணைக் கிண்டும் மனிதர்களை ஆவணப்படுத்த நினைத்தேன். ஏனென்றால், மண்வெட்டி பிடித்துக் காய்த்த கரங்களோடு கல்லூரிக்கு வந்தவன் நான். எனக்குத் தெரியும் இந்த நிமிடத்திலும் ஒரு விவசாயி படுகிற துயரம். இந்த விவசாயத்தின் வழி உலகமும் புவிவெப்பமாதலின் வழி எதிர்வரும் நூற்றாண்டும் இந்தப் படைப்பில் கவலை யோடு கையாளப்பட்டிருக்கின்றன.

வாசிப்பு - ரசிப்பு என்ற எல்லைகளைக் கடந்து தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது எனது படைப்பு.

எப்போதும் என் மீது நம்பிக்கைகொண்ட ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் - 'தானே' புயலின் துயர் துடைக்கும் செயல் வீரர் திரு. பா.சீனிவாசன் அவர்களுக்கும், என் தலைமை ரசிகர் ஆசிரியர் ரா.கண்ணன் அவர்களுக்கும், வடிவமைப்பாளர் பாண்டியன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும் நன்றி.

என் பாராட்டுக்குரியவர் ஓவியர் ஸ்யாம். ஓவியங்களை விரைவாகத் தருவதிலும் நிறைவாகத் தருவதிலும் வல்லவர். நான் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஓடி வந்தவர். அவருக்கு என் நன்றியும் வாழ்த்தும்!

மூன்றாம் உலகப் போரைத் தொடராக வாசித்ததைப் போலவே நூலாக வாசிக்க ஆசைப்படும் கூட்டமும் பெரிது. எப்போது நூலாக வரும் என்பதே என் அலுவலகத்தில் அதிகம் கேட்கப்படும் கேள்வி.

ஜூலை 13-ல் 'மூன்றாம் உலகப் போர்’ நூலாக வெளிவரும்.

சென்னையில் வெளியீட்டு விழா.

காமராசர் அரங்கத்தில் கலைஞர் வெளியிடுகிறார்.

மீண்டும் நன்றி - வாசித்து முடித்தவர்களுக்கும், வாசிக்கத் துடிப்பவர்களுக்கும்.

              அன்புள்ள

வணக்கம் வலியறிந்தவர்களே!