Published:Updated:

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

தமிழர்களின் சாதனைக் கதைஆர்.சரண்படங்கள் : எஸ்.தேவராஜன், த.வசந்தகுமார், இ.ராஜவிபீஷிகா

பிரீமியம் ஸ்டோரி

இந்த ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வு  முடிவுகளில் முத்திரை பதித்து இருக்கிறார்கள் தமிழர்கள். பளிச் சாதனைக்குப் பின்னிருக்கும் உழைப்பு மற்றும் களைப்பை இங்கே பகிர்ந்துகொள்கிறார்கள் சிலர்...

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

ராஜராஜேஸ்வரி: சீர்காழி அருகே உள்ள மங்கைமடம் கிராமத்தின் பள்ளிக்கூடத்தில் படித்து முதல்முயற்சியிலேயே இலக்கு தொட்டிருக்கிறார் ராஜராஜேஸ்வரி.

''கோவை வேளாண் கல்லூரியில் ரெண்டு வருஷம் முன்னாடி தான் பட்டப் படிப்பு முடிச்சேன். பேப்பர் படிச்சுட்டு பொது அறிவு மற்றும் நாட்டு நடப்பு சம்பந்தமான விஷயங்களை அப்பா - அம்மாவோட விவாதிப்பேன். அந்த விவாதங்கள் எந்தவொரு விஷயத்தையும் ஆதரிக்க அல்லது எதிர்ப்பதற் கான காரணங்களை அலசும் பழக்கத்தைக் கொடுத்துச்சு. பிரமாதமான ஆங்கிலப் புலமை இல்லாவிட்டாலும் தன்னம்பிக்கையோட சொல்ல வேண்டிய விஷயத்தைப் பளிச்சுனு சொல்ற அளவுக்கு ஆங்கிலத்தைக் கத்துக்கிட் டேன். முதல்முயற்சியிலேயே 556-வது ரேங்க். இப்போ எனக்கு 23 வயசுதான் ஆகுது. அதனால, இன்னொரு முறை இந்தத் தேர்வை எழுதி இன்னும் உயரம் தொடணும். ஆங்கிலப் புலமை இருந்தாதான் இந்தத் தேர்வில் பாஸ் ஆக முடியும்னு யாருக்கும் நினைப்பிருந்தா, அதை என்னைப் பார்த்து மாத்திக்கோங்க... பளீஸ்!''

பிரசன்ன வெங்கடேஷ்

123-வது ரேங்க் பிடித்து 23 வயதில் ஐ.ஏ.எஸ். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இவருடைய கதை நிச்சயம் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கான எனர்ஜி டானிக்.

'

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

'சின்ன வயசுலயே அப்பாவை இழந்துட்டேன். இதயக் கோளாறு காரணமா, அம்மாவும் உடல்நிலை சரியில்லாம சிரமப்பட்டுட்டே இருந்தாங்க. அண்ணன் சிவாதான் அப்பா ஸ்தானத்துல என்னை வளர்த்தார். சின்ன வயசுல இருந்தே ஐ.ஏ.எஸ்-தான் என் கனவு. அம்மாவும் எப்பவும், 'எம்மவன் கலெக்டராகிடுவான்’னு சொல்லிட்டே இருப்பாங்க. என்னை கலெக்டராவே கற்பனை பண்ணி வாழ்ந்துட்டு இருந்தாங்க.

ஆனா, முதல்முயற்சியில் வெற்றி சாத்தியப்படலை. அப்போ அம்மாவோட ஆறுதல்தான் என்னைத் தாங்கிப் பிடிச்சு தேத்துச்சு. தூத்துக்குடி துறைமுகத்துல கிடைச்ச வேலையைப் பார்த்துக்கிட்டே இன்னும் தீவிரமான முயற்சியில் இறங்கினேன். கடுமையான உழைப்பு. முதற்கட்டத் தேர்வில் வெற்றி. சரியான பாதையில் போய்க்கிட்டு இருக்கோம்னு நம்பிக்கையோட இருந்தப்ப, மெயின் தேர்வுகள் நெருங்கிருச்சு. தேர்வுக்கு மூணு நாள் முன்னாடி திடீர்னு அம்மா தவறிட்டாங்க. வாழ்க்கையே நிலைகுலைஞ்ச மாதிரி இருந்துச்சு.

ரெண்டு நாளா ஒழுங்கா சாப்பிடாம அழுதுக்கிட்டே இருந்த என்னை அண்ணன்தான் தேத்தி பஸ் ஏத்தி விட்டார். 'நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆவாய்’னு விவேகானந்தர் பொன்மொழிதான் மனசுல ஓடிட்டு இருந்துச்சு. இல்லைன்னா, அழுது அழுது பயங்கர தலைவலியோட தேர்வுக்கு முதல் நாள் சென்னைக்கு வந்து சேர்ந்தவனால, தொடர்ந்து பத்து தேர்வுகள் எழுதி தேறியிருக்க முடியுமா? என் பதிவு எண் '293 293’னு கவனம் ஈர்க்கும். என் ரேங்க் 123. எதையோ குறிப்பால் உணர்த்துற மாதிரி வித்தியாசமா அமைஞ்சிருக்கு பாருங்க... அம்மாவோட ஆசீர்வாதம் எனக்குக் கிடைச்ச மாதிரி இருக்கு. இப்போதான் என் வாழ்க்கை ஆரம்பிச்சிருக்கு. அம்மாவுக்கு நல்ல பேர் கிடைக்கிற மாதிரி செயல்படணும். அவங்க என்கூடவே இருக்காங்க.''

விக்ரம்

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

303-வது ரேங்க் பெற்ற இவருக்கு ஐ.பி.எஸ். பதவிதான் ஆதர்சம். காங்கேயம் அருகில் நாகரசுநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர். லயோலாவில் பி.காம்., டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தவர்.  

''படிச்ச சட்டமெல்லாம் மறந்துடக் கூடாதுனு டெல்லி நீதிமன்றங்களில் மூன்று வருஷம் பிராக்டீஸ் பண்ணேன். ஆனா, எப்பவுமே எனக்கு யூனிஃபார்ம் சர்வீஸ் மேலதான் காதல். என் ரெண்டு பாட்டிகளும்கூட என்னை 'போலீஸ் காரா’னுதான் கூப்பிடுவாங்க. உலக நாடுகளின் காவல் துறைகளைப் பத்தி நெட்ல தகவல் தேடிப் படிக்கிறதுதான் என் பொழுதுபோக்கே. என் யூனிஃபார்ம் காதலுக்குக் காரணம் ரெண்டு பேர். ரிட்டயர்டு டி.ஜி.பி. கே.நடராஜன்  ஐ.பி.எஸ்., சி.ஆர்.பி.எஃப் டைரக்டர் விஜயகுமார் ஐ.பி.எஸ்.! நடராஜன் சார் என் தூரத்துச் சொந்தம்.

நேர்முகத் தேர்வில் மாவோயிஸ்ட் பிரச்னையைப் பத்தி தான் நிறையக் கேள்விகள் கேட்டாங்க. அழுத்தமான வாதங்களோட தீர்க்கமா பதில் சொன்னேன். 303-வது ரேங்குக்கு தமிழ்நாடு கேடரே கிடைக்க நிறைய வாய்ப்பு இருக்கு. ரௌடியிஸம் இல்லாம ஜனங்க நிம்மதியா நடமாட இந்த விக்ரம் சர்வீஸுக்கு வந்துட்டான்னு தலைப்பு போட்டுக்கங்க'' - அதிர்வேட்டாகச் சிரிக்கிறார் விக்ரம் ஐ.பி.எஸ்.!

கோபால சுந்தரராஜ்: அகில இந்திய அளவில் ஐந்தாவது ரேங்க். ராமநாதபுரம் மாவட்ட மாவிலைத்தோப்பு குக்கிராமத்தைச் சேர்ந்த இவர், இப்போது மொபைல் போன் தொடர்புகூட இல்லாமல் ஜோத்பூர் இந்தியன் கவுன்சில் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் சென்டரின் ஆராய்ச்சியில் மும்முரமாக

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

இருக்கிறார்.

''நான் ஒரு மாசக் குழந்தையா இருந்தப்போதிருந்து வறுமை மட்டுமே எங்க குடும்பச் சொத்து. ப்ளஸ் டூ வரைக்கும் தமிழ் மீடியத்தில்தான் படிச்சேன். டாக்டராகணும்னு எனக்குக் கனவு. ப்ளஸ் டூ-வுல 1,137 மார்க் எடுத்தாலும், மருத்துவ நுழைவுத்தேர்வில் ஒரு மார்க்ல எம்.பி.பி.எஸ். சீட் போயிடுச்சு. கோவை வேளாண் பல்கலைக்கழகத்துல பி.எஸ்சி. அக்ரி, டெல்லியில் எம்.எஸ்சி. அக்ரி முடிச்சேன். கனரா வங்கி மேலாளர் பதவி கிடைச்சது. ஆனா, ஐ.ஏ.எஸ். கனவுல இருந்த என்னால அதை ஏத்துக்க முடியலை. எங்க அப்பாவின் ஆசையும் அதுதான்.

முதல் முயற்சியில் மெயின் தேர்வுகள் எழுதிட்டு இருந்தப்போ அப்பா இறந்துட்டார். பாதியிலயே பரீட்சை எழுதாம ஊருக்குப் புறப்பட்டு வந்துட்டேன். அப்பாவோட ஏக்கத்தை அவர் இறந்த பிறகாவது நிறைவேத்தணும்னு அப்புறம் முழுக் கவனத்தையும் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பதிச்சேன். இப்போ மூணாவது முயற்சியில் இந்தியாவிலேயே ஐந்தாவது ரேங்க். அப்பாவின் ஆசீர்வாதம்தான் காரணம். கஷ்டப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன்கிறதால என் பொறுப்புகள் எனக்குத் தெரியும். நிச்சயம் வறுமை ஒழிப்புதான் என் முதல் நோக்கமா இருக்கும்.''

ஸ்ரீஜித்

படிப்பு, சினிமா, பிசினஸ் என ஓர் உலக உலா முடித்துவிட்டு வந்த இந்த நாகர்கோவில்காரருக்கு இப்போது ஐ.பி.எஸ். பதவி கை கூடி இருக்கிறது.

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

''சென்னை கிறித்துவக் கல்லூரியில் பி.எஸ்சி. மேத்ஸ் முடிச்சுட்டு வந்தப்போ என்னோட கனவு... சினிமா டைரக்ஷன்! கேமரால இருந்து கேரியரை ஆரம்பிப்போம்னு ஒளிப்பதிவாளர்கள் கோபிநாத் மற்றும் ஓம்பிரகாஷிடம் வேலை பார்த்தேன். ஓம்பிரகாஷ் சார்கூட பரபரப்பா 25

விளம்பரப் படங்கள், ரெண்டு தெலுங்கு படங்களுக்கு வேலை பார்த்தேன். அப்போ ஊர்ல அப்பாவுக்கு பை-பாஸ் சர்ஜரி பண்ணியிருந்தாங்க. அவர் சின்ன அளவில் பபிள்கம் பிசினஸ் பண்ணிட்டு இருந்தார். அந்த ஆபரேஷனுக்கு அப்புறம் ஊர்ல பிசினஸைப் பார்த்துக்குற வேலை என்கிட்ட வந்தது. அப்பவே எனக்குக் கல்யாணமும் பண்ணிவெச்சுட்டாங்க. ஆனா, எவ்வளவு உழைச்சாலும் வியாபாரத்துல பெரிய லாபம் இல்லை. ரொம்ப சிரமம். அப்போதான் என் மனைவி என்னை அரசாங்க வேலையில் சேரச் சொல்லி உற்சாகப்படுத்தினாங்க. நான் படிப்புல ரொம்ப சுமார்தான். 29 வயசுக்கு மேல படிச்சு எக்ஸாம் தேற முடியுமானு தயக்கமா இருந்தது. ஆனா, மனசை ஒருமுகப்படுத்தி படிச்சேன். எனக்கு ஐ.ஏ.எஸ்-தான் ஆசை. ஆனா, ஐ.பி.எஸ்-தான் எனக்குக் கிடைக்குமாம். அதனால ஒன்ஸ்மோர் எக்ஸாம் எழுதப்போறேன்.''  

மெர்சி

விடாமுயற்சிக்கு உதாரணம் தஞ்சாவூர் மெர்சி!

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

''டெல்லி இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் தங்கி அஞ்சு வருஷமா போராடிக்கிட்டு இருந்தேன். ஆனா, ஐ.ஏ.எஸ். படிப்பின் முதல்நிலைத் தேர்வைக்கூட என்னால் தாண்ட முடியலை. எனக்கு நம்பிக்கையே போயிருச்சு. விவசாயத் துறை அதிகாரியா கும்பகோணத்துல வேலைக்கும் சேர்ந்துட்டேன். ஆனா, அஞ்சு வருஷப் போராட்டத்தை வீணாக்குறதானு கடைசியா ஒரு தடவை முயற்சி பண்ணிப் பார்ப்போம்னு முடிவெடுத்துத் தேர்வு எழுதினேன். இத்தனைக்கும் முதல்நிலைத் தேர்வில் நெகட்டிவ் மதிப்பெண்கள் உள்பட தலைகீழ் மாற்றம் நடந்திருந்தது. அதைச் சொல்லியே எல்லாரும் பயமுறுத்தினாங்க. ஆனா, அதை மனசுல ஏத்திக்காம முயற்சி பண்ணதுக்கு 465-வது ரேங்க் கிடைச்சிருக்கு. இந்த ரேங்குக்கு ஐ.பி.எஸ். நிச்சயமாம். இந்த வெற்றியில் என் பங்கைவிட என் அண்ணன் ஜான் ஸ்டாலினின் பங்கு அதிகம். அவர் என் மேல வெச்சிருந்த அசைக்க முடியாத நம்பிக்கைதான் ஒவ்வொரு சமயமும் என்னைத் தாங்கிப் பிடிச்சது. ஒவ்வொரு தோல்வியின்போதும்,  'உன்னால முடியும் மெர்சி... நீ விடாமப் படி. அண்ணன் இருக்கேன்மா’னு உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பார். 'பிரிலிமினரி தேர்வுகூட பாஸ் ஆகாம நீ டெல்லியில் இவ்வளவு நாள் என்ன செஞ்சுக்கிட்டு இருந்தே?’னு ஏதோ ஒரு சமயம் அவர் கேட்டிருந்தாக்கூட இப்போ நான் உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்க மாட்டேன். தேங்க்ஸ் அண்ணா!''

சுந்தரேஷ்பாபு: (ஐ.ஏ.எஸ்)

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

போடிநாயக்கனூரைச் சேர்ந்த சுந்தரேஷ்பாபு மிடில் கிளாஸ் குடும்பத்தைச் சேர்தவர். 2008-ல் மதுரை விவசாயக் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு  கனரா வங்கியில் ஒரு வருடங்களாக வேலை பார்த்திருக்கிறார். அண்ணன் ஆனந்த் பிரகாஷ் சில வருடங்களுக்கு முன் ஐ.எஃப்.எஸ் அதிகாரியாகி இவருக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட தம்பியும் களத்தில் குதித்து இந்திய அள்வில் 38-வது இடத்தை எட்டிப் பிடித்து ஆச்சர்யம் காட்டுகிறார்.

''அண்ணனுடையான் படைக்கு அஞ்சான்னு புதுமொழி என் கதைக்குப் பொருந்தும் சார். போடியில ஸ்கூல் படிச்சுக்கிட்டு இருந்தப்பவே ஃப்ரெண்ட்ஸ்கள்கிட்ட நானும் என் அண்ணனும் கலெக்டராவோம்னு பெருமையா பேசிக்குவோம். அண்ணன் படு சின்ஸியர். நான் பயங்கர கிரிக்கெட் அடிக்ட் சார். அண்ணன் இந்தத் தேர்வில் பாஸ் செஞ்சு ஃபாரின் சர்வீஸ் (ஐ.எஃப்.எஸ்) கிடைச்சது. அதனால அவரோட நம்பிக்கையா நான் ஆனேன். படிப்புல நான் அசகாய சூரன்லாம் கிடையாது. எப்பவும் இளையராஜா பாட்டுக் கேட்டுக்கிட்டு சினிமா பார்த்துக்கிட்டு ரொம்ப ஜாலியா இருப்பேன். ஆனா அண்ணனோட வழிகாட்டுதல் இருந்துச்சு... முதல்முயற்சியில கிடைக்காதபோது பேசாம பேங்க் வேலைக்கு போயிரலாம்...நமக்கு இது சரிப்பட்டு வருமானு யோசிச்சேன். சரி இன்னொரு முறை முயற்சி செஞ்சு பார்த்திடலாம்னு களத்துல இறங்கினேன். ஆனா இந்த முறை படு சின்ஸியரா! அதுக்கு பலனா இந்த ரேங்க் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. கடின உழைப்பு எப்பவும் வீண்போகாதுனு இப்பொ புரியுது. என் நண்பர்கள் எல்லோரும் என்ஜினீயரிங் படிக்கப் போனப்போ நான் விவசாயம் படிக்கப் போனேன். அப்போ சின்னதா இருந்த தயக்கம் இருந்துச்சு. ஆனா இப்போ தூள்தூளா உடைஞ்சிடுச்சு. இப்போ 26 வயசுல ஐ.ஏ.எஸ் பாஸ் பண்ணி இருக்கேன்னா என்னோட ஓய்வுக்காலத்துக்குள்ள அரசின் திட்டங்களைத் தீர்மானிக்கும் பெரிய பதவிகளுக்கு வந்துவிடுவேன். நிச்சயம் பல மாறுதல்களை சமூகத்துக்குக் கொடுக்கப் பாடுபடுவேன்!'' என்கிறார் குரலில் நம்பிக்கை மிளிர!

ஆர்.வி.கர்ணன்: (ஐ.ஏ.எஸ்)

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

ஆர்.வி.கர்ணன் ஐ.ஏ.ஏஸ் 158-வது ரேங்க் பெற்றிருக்கும் மதுரைப் பையன்! இந்தியாவிலேயே முதன்முறையாக பி.எஸ்.சி ஃபாரஸ்ட்ரி (வன இயல்) படிப்பைப் பட்டப் படிப்பாக படித்து சிவில் சர்வீஸ் தேர்வான பெருமையைப் பெற்றிருக்கிறார். 2007-ல் இந்திய அளவில் ஐ.எஃப்.எஸ் தேர்வில் முதலிடத்தைப் பிடித்து சாதித்தவர் இவர். மகாராஷ்டிராவின் மாவோயிஸ்ட் தாக்கம் அதிகம் உள்ள கட்சிரோலி மாவட்ட வன அலுவலராக பணியில் இருக்கும் இவர் தற்போது டேஹ்ராடூனில் இருக்கும் இஸ்ரோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்ஸிங் மையத்தில் பயிற்சியில் இருக்கிறார். ஆனந்த விகடனின் தீவிர வாசகர் என தன்னை அறிமுகப்படுத்துகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணமும் வேடிக்கையாக இருக்கிறது.

''என் அப்பா வீரராகவன் பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர். 'ஜனநேசன்’ங்கிற பேர்ல நாவல்கள் கதைகள்னு நிறைய எழுதி இருக்கார். அதனால என் ரத்தத்துலேயே எழுத்தார்வம் ஊறி இருந்தது. ஆனந்த விகடனோட பரம ரசிகன் நான். ஜனரஞ்சகமான செய்திகளுடன் மனசுக்குள்ள போய் உட்கார்ற அழகழகான முத்திரைக் கதைகள்னு கலவையா இருக்குற ஆனந்த விகடனை வரிவிடாம படிப்பேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே மக்களோடு பழக வாய்ப்புக் கிடைக்கும் வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆசை. மாவட்ட ஆட்சியராக பணியாற்றுவது அல்லது பத்திரிகைத்துறைக்குப் போவது என இரண்டு கனவுகள் எனக்குள் இருந்தது. எப்போதுமே என் சாய்ஸில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாவது முதலிடத்திலே இருந்தது. நல்லவேளை இரண்டாவது இடத்தில் உள்ளது நடந்திருந்தா உங்களுக்குப் போட்டியா நிருபரா விகடனுக்கே வந்திருப்பேன்..!'' என்று நம்மையே கலாய்க்கிற கர்ணன் எந்த பயிற்சி நிறுவனத்திலும் சேராமல் இந்த உயரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அருண்சக்திகுமார்: (ஐ.ஏ.எஸ்)

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளியில் படித்த துடிப்பான இந்த 25 வயது இளைஞர் தற்போது ஒரு டாக்டரும்கூட... அதனால்தானோ என்னவோ மருத்துவம் படித்த மாணவர்கள்கூட எடுக்கத் தயங்கும் 'மெடிக்கல் சயின்ஸ்’ பாடத்தை ஐ.ஏ.எஸ் தேர்வில் விருப்பப் பாடமாக எடுத்து சாதித்து இருக்கிறார். இவர் சாதித்த கதையும் அலாதியானது.

''2010-ல சென்னை மருத்துவக் கல்லூரியில எம்.பி.பி.எஸ் முடிச்சதும்தான் இந்தத் தேர்வு எழுதலாம் என்ற முடிவுக்கு நான் வந்தேன். அதற்குக் காரணம் கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்தான். படிப்பறிவுல மாநிலத்துலேயே பின்தங்கி இருந்த மாவட்டத்தை அப்படியே தலைகீழா மாற்றிக் காட்டினார். அவரைப்போல நாம கலெக்டராகணும் கனவு எனக்கு. ஒரு டாக்டரா மக்களுக்கு நோய்களைத் தீர்க்க முடிஞ்சாலும் காலத்துக்கும் அவங்களுக்கு நிரந்தரத் தீர்வை ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியாலதான் செய்ய முடியும்னு நம்புறேன். என்னதான் அரசியல்வாதிகள் குறுக்கீடுகளால் அதெல்லாம் பண்ண முடியாதுன்னு சொன்னாலும் நல்லது செய்ய நினைக்கிற ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியால நிச்சயம் பல மாற்றங்க¬ளைக் கொண்டு வர முடியும். நான் போடுற ஒரு கையெழுத்து பலரோட தலையெழுத்தை மாத்தி அமைக்கும்னு நம்புறேன். அப்புறம் முக்கியமா நான் மெடிக்கல் சயின்ஸ் பாடத்தை விருப்பப் பாடமா தேர்வு செஞ்சப்போ நிறைய பேர் பயமுறுத்தினாங்க. இதுவரைக்கும் அதுல யாரும் பாஸ் பண்ணினதில்லை. ஒருத்தர் ரெண்டு பேர் பத்து வருஷத்துக்கு முன் பாஸாகி இருக்காங்கன்னு ஹிஸ்டரி-மிஸ்டரிலாம் சொன்னாங்க. பாடத்திட்டம் பெருசுங்கிறதைத்தவிர நான் அதற்காக பயபடலை. சாதாரண அரசுப் பள்ளியில் இருந்து சென்னை மருத்துவக் கல்லூரிக்கு என்னை உயர்த்தியதே படிப்பின் மீது உள்ள பிடிப்புதான். டாக்டர் படிப்பை ரொம்பவே நேசித்து படிச்சதால அது சம்மந்தமான விருப்பப் பாடத்தையே எடுத்து இந்தத் தேர்வை எழுதினேன். சின்னவயசுல இருந்தே எனக்கு பெர்ஷனலா நிறைய பிரச்னைகள் இருந்தது. ஆனால் அவை எதையும் என் படிப்பைப் பாதிக்க விட்டதில்லை நான். என்னோட ஒரே வருத்தம் என்னன்னா நான் பாஸ் ஆனதைப் பார்த்து பூரிச்சு மகிழ என் அம்மா இன்னிக்கு உயிரோடு இல்லை என்பதுதான்!'' என்கிற அருண்சக்திகுமாரின் குரலில் லேசான வருத்தம் தொனிக்கிறது.

மகேந்திரவர்மன்: (ஐ.ஆர்.எஸ்)

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் மகேந்திரவர்மன். கோவையில் சட்டம் பயின்ற இவர் சரியான விளையாட்டுப்பிள்ளை! கிரிக்கெட் என்றால் உயிர். கிரிக்கெட்டில் மாநில அணிக்காக விளையாடிய அணுபவம் உண்டு. கல்லூரி காலத்தில் இருந்து ஆல்ரவுண்டர். விளையாட்டோடு விளையாட்டாய் வருடாவருடம் ஐ.ஏ.எஸ் தேர்வும் எழுத... 5-வது முயற்சியில் பாஸ் செய்திருக்கிறார்.

''எங்களுக்கு கரும்பு விவசாயம்தான் தொழில். சட்டம் படிச்சாலும் அப்பாவோட சேர்ந்து விவசாயம் பண்ணுறதுல ஆர்வம் அதிகம். பெரும்பாலும் கிராமத்துலதான் இருப்பேன். வயக்காட்டுல நண்பர்களோட கிரிக்கெட் விளையாடுவேன். அப்படி விளையாடி விளையாடியே மாவட்ட அணியிலும் 19 வயசுக்குட்பட்டோருக்கான மாநில அணியிலும் இடம் பிடிக்க முடிஞ்சது. விளையாட்டுத் தவிர புத்தகங்கள் படிக்குறதுல ஆர்வம் உண்டு. அதனால இந்தத் தேர்வுக்காக சமூகவியலையும் தமிழ் இலக்கியத்தையும் விருப்பப் பாடங்களா எடுத்துப் படிச்சேன். நண்பர்களோட வழிகாட்டுதலோடு முதல்முறையா எனக்கு சர்வீஸ் கிடைச்சிருக்கு. 623-வது ரேங்குக்கு ஐ.ஆர்.எஸ் பணியிடம் கிடைக்கும். தோல்விகளைக் கண்டு அட்டைபோல சுருங்காம தொடர்ந்து முயற்சி செஞ்சா வெற்றி கிடைக்கும்கிறதுக்கு நானே உதாரணம்!'' என்று சிரிக்கிறார் மகேந்திரவர்மன்.

ஹரி பிரசாத் ராவ்: (ஐ.பி.எஸ்)

இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம்!

க்ரீன் கார்டு, சொகுசு வாழ்க்கை என இன்றைய இந்திய இளைஞர்கள் பலர் அமெரிக்க கனவுகளோடு இருக்கும் நேரத்தில் அமெரிக்க வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி சாதித்து இருக்கிறார் ஒருவர். அவர் பெயர் ஹரி பிரசாத் ராவ். முதல் முயற்சியிலேயே ஐ.பி.எஸ் உயரம் தொட்ட இவர், இந்த ஆண்டும் ஐ.ஏ.எஸ்-க்காக சிவில் சர்வீஸ் தேர்வை சந்திக்கிறார்.

''எங்களுக்கு சென்னைதான் பூர்வீகம். அப்பா அரக்கோணத்தில் பள்ளி தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். பள்ளிப் படிப்புவரை தமிழ்நாட்டில் படித்தாலும் எம்.எஸ் படிப்பை அமெரிக்காவின் டெக்ஸாஸ் யுனிவர்சிட்டியில ஸ்காலர்ஷிப்போட படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இதனால் சிகாகோ நகரில் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் நம்மூர் மதிப்புக்கு மாதம் 2 லட்ச ரூபாய் அளவுக்கு சம்பளம் எனக்குக் கிடைத்து வந்தது. வாழ்க்கை இனிமையாக நகர்த்திப் போனாலும் எனக்கு வாழ்க்கையில் எதையோ இழந்தது போல் ஒரு உணர்வு எப்போதும் இருந்தது. காரணம் இந்தியாவுக்கு வரும்போது நம் ஊரின் அழகும் இங்கிருக்கும் அவலங்களும் ஒருசேர என் முகத்தில் அறையும். நம்மால் இந்த நாட்டு மக்களுக்கு எதாவது பிரயோஜனமாக செய்ய முடிந்தால் அது என்னவாக இருக்கும் என யோசிப்பேன். இந்த நேரத்தில் என் அக்கா சுப்ரியா ராவ் ஐ.ஆர்.எஸ் பாஸ் செய்திருந்தார். அவரது வழிகாட்டுதலில் இந்தத் தேர்வை எழுதினேன். முதல் முயற்சியிலேயே பாஸ் ஆகிவிட்டேன்.'' என்கிறா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு