Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

நொச்சிக்காடு... நொந்து நொறுங்கிக்கிடக்கும் கிராமங்களில் ஒன்று.

 கிராமம் என்று சொல்வதைவிடத் தீவு எனலாம். ஒரு பக்கத்தில் உப்பனாறு. இன்னொரு பக்கத்தில் கடலூர் கடல். இரண்டுக்கும் மத்தியில் தண்ணீரிலும் கண்ணீரிலும் மிதக்கும் பகுதி இது. கடலோரத்தில் இருப்பவர்கள் மீன்பிடித் தொழிலைச் செய்கிறார்கள். மற்றவர்கள் தினக் கூலிகள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் என வைத்திருப்பவர்கள்கூட சவுக்கு போட்டு, வெட்டி விற்பனை செய்வதைத் தவிர, வேறு விவசாயம் எதுவும் செய்ய முடியாத நிலைமை. கடலூரில் இருந்து எப்போதாவது பேருந்து வந்துபோகிறது. மற்றபடி, அவசரத்துக்கு உப்பனாறு பகுதியை சிறு படகுகள் மூலம் கடந்துதான் கடலூரை அடைய வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுனாமி நேரத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட ஊர்களில் இதுவும் ஒன்று. கடலில் இருந்து இரண்டு கி.மீ. தூரத்தில் இருந்ததால், ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. பலரும் வீடுகளை இழந்தார்கள். ஊரையே காலி செய்துவிட்டு எங்கெங்கோ இந்தப் பகுதி மக்கள் சென்றுவிட்டார்கள். இந்தப் பகுதி மக்களில் சிலருக்கு வீடுகளை அரசாங்கமும் தொண்டு நிறுவனங்களும் கட்டிக்கொடுத்தன. 'பட்ட காலிலேயே படும்’ என்பதைப் போல இப்போது 'தானே’ தாக்குதலும் இந்த நொச்சிக்காடு கிராமத்தை மையப்படுத்தியே இருந்தது. பெரும்பாலும் கூரை வீடுகள் என்பதால், மேற்கூரையைப் புயலுக்குத் தாரை வார்த்தாக வேண்டிய நெருக்கடிக்கு அந்த மக்கள் தள்ளப்பட் டார்கள். உடனடி நிவாரணமாக அரசாங்கம் கொடுத்த பணத்தில் மேற்கூரைகளைச் செப்பனிட்டுக்கொண்டார்கள்.

'தானே' துயர் துடைத்தோம்!

நம்முடைய 'தானே’ துயர் துடைப்பு அணி இந்தக் கிராமத்தை வலம் வந்தபோது, அந்தப் பகுதி பெண்கள் கேட்டது, ''எங்க ளோட வாழ்க்கைக்கு உத்தரவாதம் பண்றது மாதிரி உதவிசெஞ்சு கொடுங்க. ஆம்பளைங்க எங்கயாவது கூலி வேலைக்குப் போறாங்க. எங்க போனாலும் ஒரு நாளைக்கு 100 ரூபா தான் சம்பளம் கிடைக்குது. மாசம் முழுக்க வேலைக்குப் போனாலும் மூவாயிரம்கூட முழுசாப் பார்க்க முடியாது. இதைவெச்சுக் கிட்டு எங்களால எப்படி வாழ முடியும்? பெண்களும் உழைக்கத் தயாரா இருக்கோம். ஆனா, என்ன தொழில் பண்றதுனுதான் தெரியல. ஏதாவது தொழிலை எங்களுக்குக் கத்துக்கொடுங்க. நாங்க அதை முறையா செய்வோம்'' என்று வாக்குறுதி கொடுத்தார் கள்.

நொச்சிக்காடு - நந்தன் நகர் பகுதித் தலைவரான சுதாகர், ஒரு கட்டடத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார். மிகத் தரமான கான்கிரீட் கட்டடம். உள்ளே திறந்து சென்றால், உடைந்த பெஞ்ச், சேர், கோயில் திருவிழாவுக்குத் தேவையான பொருட்கள் என உதவாத பொருட்களைப் போட்டு வைத்திருக்கும் குடோன்போல அது இருந்தது.

''தனியார் தொண்டு நிறுவனம் நாலைந்து வருஷத்துக்கு முன்னாடி கட்டிக் கொடுத்தது இது. ஆனா, இந்த பில்டிங்கை வெச்சு என்ன பண்றதுனு தெரியாம சும்மா பூட்டிவெச்சிருக்கோம் சார். இதைப் பயன் படுத்தி எங்கள் பெண்களுக்கு தொழிற் பயிற்சி ஏதாவது கொடுங்க'' என்று கேட்டார். இப்படி உதயமானதுதான், தையல் பயிற்சி மையம்.

துரித வேகத்தில் நம்முடைய பணிகள் தொடங்கின. அந்தக் கட்டடத்தில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப் படுத்தி, சுத்தமாக வெள்ளை அடித்துப் புதுப்பித்தோம். மின் வசதிகள் செய்யப் பட்டன. 'உஷா’ நிறுவனத்தில் இருந்து 20 புதிய தையல் இயந்திரங்கள் வரவழைக்கப் பட்டன. மூன்று நாட்களில் புதிய மையம் ஒன்று நொச்சிக்காட்டில் முளைத்தது. அந்தப் பகுதி பெண்களால் அதனை நம்பவே முடியவில்லை.

'தானே' துயர் துடைத்தோம்!

இந்தப் பெண்களுக்குத் தையல் பயிற்சி கொடுப்பதற்காக கடலூரில் இருந்து விமலா, மீனா என்ற இரண்டு தையல் பயிற்சியாளர்களையும் அங்கே அனுப்பி வைத்தோம். தையல் பயிற்சி தொடங்கப் பட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு நொச்சிக் காட்டுக்குப் போனோம்.

''தினமும் காலையில் வருகைப் பதிவு எடுக்கிறோம். யாரும் இங்கே லீவு எடுக் கிறதே இல்லை. சரியா பத்து மணிக்கு  கிளாஸுக்கு வந்துடுறாங்க. சாயந்திரம் அஞ்சு மணி வரைக்கும் ஆர்வமாக் கத்துக்கிறாங்க. இந்தப் பயிற்சியில், ஜாக்கெட், சுடிதார், ஸ்கர்ட், சட்டை தைக்கக் கத்துக்கொடுக்கிறோம். ஒரு வாரத்தில் எல்லோர்கிட்டயும் நல்ல இம்ப்ரூவ்மென்ட் தெரியுது'' என்றார் தையல் பயிற்சி ஆசிரியரான விமலா.

கடலூரில் பி.எஸ்ஸி. படித்துவரும் நித்யாவுக்கு இப்போது செமஸ்டர் லீவு. ''இதுவரைக்கும் நான் தையல் மெஷின்ல உட்கார்ந்ததுகூடக் கிடையாதுங்க. விகடன்ல இருந்து தையல் பயிற்சி கொடுக்குறாங்கனு சொன்னதும் கிளம்பி வந்துட்டேன். செமஸ்டர் லீவு முடியறதுக்குள்ள நல்லா தைக்கக் கத்துக்குவேன். காலேஜ் முடிச்ச பிறகுகூட வேலை இல்லைனு கவலைப்பட வேண்டியது இல்ல. இன்னைக்கு நானே ஒரு ஜாக்கெட் தைச்சிட்டேன். கொஞ்சம் கோணல்மாணலாத்தான் வந்திருக்கு. ஆனாலும் நிறைய நம்பிக்கை இருக்கு'' என்கிறார் நித்யா.

உஷாதேவி என்பவரோ, ''புயல் அடிச் சதுல இருந்து எந்த வேலைக்கும் போகாம வெட்டியாதான் இருந்தோம். ஏதாவது வேலைன்னாக்கூட, இங்கிருந்து கடலூர் தான் போகணும். அவ்வளவு தூரம் எல்லாம் தினமும் போயிட்டு வர்றதுக்குக் கையில காசும் இல்ல. எங்க ஊருலயே வந்து நீங்க தையல் கத்துக்கொடுக்குறதால தைரியமா அனுப்பிட்டாங்க. இனிமேல் ராத்திரி, பகலா மெஷினை மிதிச்சாவது என் குடும்பத்தைக் காப்பாத்திடுவேன்''- நம்பிக்கையோடு பேசுகிறார்.

அஞ்சலைதேவியின் கணவர் கொத்த னார் வேலைக்குப் போகிறார். மூன்று குழந்தைகள். குடும்ப பாரத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைத்தாலும், அஞ்சலை தேவிக்கு எந்த வேலைவாய்ப்பும் அந்தக் கிராமத்தில் இல்லை.

''ஒரு வாரம்தான் கிளாஸுக்கு வந்தேன். இப்போ பாருங்க... நானே சட்டை தைச்சிட் டேன். நேத்து வீட்டுல என் புள்ளைங்களும் எங்க வூட்டுக்காரரும் நான் தைச்ச சட்டை யைப்  பார்த்துட்டு நல்லா இருக்குனுசொன் னாங்க. நல்லாத் தைக்கக் கத்துக்கிட்டதும் கடனை வாங்கியாவது ஒரு மெஷின் வாங்கிடுவேன். எங்க ஊருக்கே வந்து எங்களுக்கு இப்படி ஒரு நல்ல வாய்ப்பை உண்டாக்கித் தருவீங்கனு நாங்க நினைச்சுக் கூடப் பார்க்கல. எங்க உசிரு உள்ள வரைக் கும் உங்களை மறக்க மாட்டோம்'' - கண் கலங்கினார் அஞ்சலைதேவி.

''பிளஸ் டூ முடிச்ச பிறகு மேல படிக்க வைக்க வீட்ல வசதி இல்ல. முந்திரிக் காட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன். புயல் அடிச்சதுல வேலை இல்லாமப் போச்சு. என்ன பண்றதுனு தவிச்சிட்டு இருந்தோம். அந்த நேரத்துலதான் கடவுள் மாதிரி நீங்க வந்தீங்க. பத்தாயிரம் ரூபாய் பணமா கொடுத்து இருந்தீங்கன்னாக்கூட அது ஒரே மாசத்துல செலவாகி இருக்கும். இப்போ நீங்க செஞ்சிருக்கிறது எங்கவாழ்க்கைக்கே வழிகாட்டி. எங்க எதிர்காலத்தையே மாத்தி அமைச்ச விகடனுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல'' என்று நெகிழ்ந் தார் சக்திபிரியா.

இந்த 20 தையல் மெஷின்களும் அங்கேயே நிரந்தரமாக இருக்கப்போகின்றன. அந்த ஊர்ப் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை இதன் மூலமாகத் தேடிக்கொள்ளட்டும்.

ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும் என்ற நம்பிக்கை அந்தப் பெண் கள் முகத்தில் தெரிகிறது பிரகாசமாக.

நன்றிகள் அனைத்தும் நம் வாசகர் களுக்கே!