Published:Updated:

இதழியலின் மூத்த மலர்!

ப.திருமாவேலன்

இதழியலின் மூத்த மலர்!

ப.திருமாவேலன்

Published:Updated:
##~##

சென்னையில் படிக்கும் பேத்தியைப் பார்க்க கிராமத்தில் இருந்து வந்த தாத்தா மாதிரி இருப்பார் சோலை. ஆனால், 'நானும் காமராஜரும்’, 'நானும் ஜீவாவும்’, 'நானும் எம்.ஜி.ஆரும்’, 'நானும் ஜெயலலிதாவும்’, 'நானும் கலைஞரும்’ என்று தலா 200 பக்கங்களுக்கு எழுதத் தகுதியான மனிதர் அவர். 'கடந்த 50 ஆண்டு காலத் தமிழக அரசியலைத் தீர்மானித்த, தீர்மானிக்கும் தலைவர்களுடன் பழகியவர்’ என்ற பெருமிதம் அவருடைய பேச்சில் எப்போதுமே இருக்காது. எழுத்திலும் வராது. குணத்திலும் தெறிக்காது. மே 29-ம் தேதி இரவு 8.22 மணிக்கு தமிழக இதழிய லின் மூத்த மலர் உதிர்ந்தது. கா.சோமசுந்தரம் என்கிற சோலை தனது புனைபெயரைப் போலவே இனிமையான மனிதராக வாழ்ந்து தன் வாழ்வை முடித்துக்கொண்டார்.

சோலையின் முதல் அடையாளம், அவரது கதர் உடை. பொதுவுடமைத் தலைவர் ஜீவாவின் நிழலில் வளர்ந்து, தேசிய இயக்கத் தலைவர் காமராஜரால் ஆசீர்வதிக்கப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களாக வலம் வந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவுடனும்... இறுதிக் காலத்தில் கருணாநிதி யுடனும் தன்னை ஐக்கியப்படுத்தி நின்றாலும் நிறம் மாறாததாக இருந்தது அவருடைய கதர் வேட்டியும்

இதழியலின் மூத்த மலர்!

சட்டையும். 'எந்தக் கட்சியுடன், எந்தத் தலைவருடன் நான் சேர்ந்து நின்றாலும் அதன் நிறங்கள் என்னை ஒட்டாது. நான் எப்போதும் சர்வோதயா இயக்கத்தவன்’ என்பதைக் கடைசி வரைக்கும் சொல்லிக்கொண்டே இருந்தார். ஆச்சார்யா விநோபா பாவேவை மட்டுமே இதயத்தில் எப்போதும் தாங்கினார். காரணம், அவர் பூமிதான இயக்கத்தில் இருந்து பூத்தவர்.

திண்டுக்கல் மாவட்டம், அய்யன்பாளையத்தில் பிறந்தவர் சோலை. சீனாவில் ஒரு கிராமம் எப்படி நிலவுடைமையை ஒழித்து, சமதர்மப் பூங்காவாக ஆனது என்பதைச் சொல்லும் ஆங்கிலப் புத்தகத்தை வைத்து 'செஞ்சீனாவில் ஒரு கிராம ராஜ்யம்’ என்ற கட்டுரையை எழுதினார். அதுவே அவரை தோழர் ஜீவாவுடன் சேர்த்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 'ஜனசக்தி’, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்’ இரண்டிலும் ஆசிரியர் குழுவில் அங்கம் வகித்த சோலை  பத்திரிகையாளர்களே சேர்ந்து  ஆரம்பித்த 'நவமணி’ நாளிதழில் தொடர்ந்து பணியாற்றினார்.

இதழியலின் மூத்த மலர்!

பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிடலாமா என்று மக்கள் மனசை அறிவதற்காகச் சென்ற எம்.ஜி.ஆர்., தன்னுடன் சோலையையும் புகைப்படக்காரர் சுபா சுந்தரத்தையும்தான் அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆருக்கு கோலி சோடா கொண்டுவந்து கொடுத்த ஒரு மூதாட்டியை அவர் கட்டிப் பிடிக்கும் பிரசித்தி பெற்ற போட்டோ அப்போது எடுக்கப்பட்டதுதான். மூவரும் ராமாவரம் தோட்டத்துக்குத் திரும்பி வந்த பிறகு, சோலையிடம்தான் எம்.ஜி.ஆர். கருத்து கேட்டார். ''அந்த மூதாட்டிதான் அளவுகோல். பல மலை உச்சிகளை அடைய இந்தப் பரங்கிமலைதான் ஆரம்பம்!'' என்று சொன்னார் சோலை. அந்தத் தொகுதியில் நிற்கலாம் என்று எம்.ஜி.ஆர். முடிவெடுத்தார். 'பரங்கிமலை... எம்.ஜி.ஆர். தொகுதி’ என்று 'நவமணி’யில் ஸ்கூப் அடித்தார் சோலை. ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள். அதன் பிறகு 'அலை ஓசை’க்கு மாறினார். அப்போது நடந்த சிம்சன் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆதரித்து எழுதியதற்காக, 'யாரடா சோலை?’ என்று அந்த அலுவலகத்துக்குள் குண்டர்கள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இந்த நேரத்தில்தான் தி.மு.க-வுடன் பிணக்குகொண்டு எம்.ஜி.ஆர். வெளியேறினார். 'அலை ஓசை’ அவரை ஆதரித்தது. சோலைக்கும் எம்.ஜி.ஆருக்கு மான நட்பு அப்போது துளிர்த்தது. அ.தி.மு.க-வுக்கு என ஒரு நாளிதழை உருவாக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். நினைத்து, 'அண்ணா’ பத்திரிகையைத் தொடங்கினார். அதில் இணை ஆசிரியர் ஆனார் சோலை. எம்.ஜி.ஆர். முதல்வராக வர அடித்தளம் அமைத்தது அந்தப் பத்திரிகை. ஜெயலலிதா வின் அரசியல் பிரவேசத் தொடக்கத்தில் சோலையை உடன் இருக்க எம்.ஜி.ஆர். கட்டளையிட, சோலை அவரோடு கார்ட னில் வலம் வந்தது பெரிய கதை. 'சசிகலா’ வருகைக்குப் பிறகு விலக்கப்பட்டவர்களில் சோலையும் முக்கியமானவர். அதன் பிறகே அவரது அரசியல் கட்சிகள், தலைவர் களுடனான ஈடுபாடு குறைந்தது. பத்திரிகை களில் எழுதுவதையும் குறைத்துக்கொண்டார்.

யார் கட்சி தொடங்கினாலும் பத்திரிகை ஆரம்பித்தாலும், சோலையிடம் போய் ஆசீர்வாதம் வாங்குவது வழக்கம். வேண்டியவர், வேண்டாதவர், பெரியவர், சிறியவர் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஆலோசனைகளை அள்ளி வழங்கிவந்தார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் திடீரென, 'ஜூனியர் விகடன்’ இதழில் தொடர் கட்டுரை எழுத ஆரம்பித்தார் சோலை. வாரத்துக்கு இரண்டு கட்டுரைகளை சளைக்காமல் எழுதினார். மற்ற அரசியல் பத்திரிகைகளுக்கும் எழுத ஆரம்பித்தார். சரியாகச் சொன்னால், 75 வயதுக்குப் பிறகுதான் சோலை நிறைய எழுதினார். தினமும் எழுதினார்.

கடைசி நேரக் காட்சி இது... நோய் வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருக் கிறார். இரண்டு நாள் கழித்து டாக்டர்கள் கையை விரிக்கப்போகும் சூழல். அந்த நிலையிலும்கூட ஒருவரைப் பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு சோலை டிக்டேட் செய்ய ஆரம்பித்தார். மருத்துவ மனையில் இருந்த துண்டுச் சீட்டில், 'காங்கிரஸ், பா.ஜ.க-வை எதிர்கொள்ளும் பலம் இடதுசாரிகளுக்கு இல்லையே’ என்ற வருத்தத்தை எழுதச் சொன்னார். முதல் பத்தியை எழுதுவதற்குள் நினைவு தவறுகிறது.கோமா நிலையை அடைகிறார். எழுத்தைத் தொழிலாகவோ, கடமை யாகவோ கருதாமல் அதனைத் தன்னுடைய ரத்த ஓட்டமாக நினைத்தால் மட்டுமே மரணப் படுக்கையிலும் ஒருவரால் இப்படிச் செயல்பட முடியும்.

எழுத்தே சோலையின் ரத்த ஓட்டமாக இருந்தது. எழுத்தே அவருக்கு எல்லாமுமாக இருந்தது!