Published:Updated:

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கோ!

வாண்டுமாமாவின் வேண்டுகோள்தமிழ்மகன், சமஸ்படங்கள் : உசேன், வீ.நாகமணி

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கோ!

வாண்டுமாமாவின் வேண்டுகோள்தமிழ்மகன், சமஸ்படங்கள் : உசேன், வீ.நாகமணி

Published:Updated:
##~##

வாண்டுமாமா...  இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல், ஏழு மலை தாண்டி இருக்கும் மந்திரவாதியின் உயிரும்... பேசும் கிளியும்... பலே பாலுவும்... சபாஷ்!

மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகைக் கதை களால் நிரப்பியவர் வாண்டுமாமா. கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி.கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். 87 வயதில்  இப்போது அவர் வாண்டுதாத்தா. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலமெல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரசுத்தம். சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது...

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கோ!

''கிருஷ்ணமூர்த்தி வாண்டுமாமா ஆனது எப்படி?''

''நானா வாண்டுமாமா ஆகலை... வாழ்க்கைதான் ஆக்குச்சு. என் சின்ன வயசுக் கனவெல்லாம் ஒரு ஓவியனாகணும்கிறதுதான். விகடன்லதான் மாலிக்குக் கீழ லெட்டரிங் ஆர்ட்டிஸ்ட்டா வேலைக்குச் சேர்ந்தேன். சென்னைக்கு வந்த புதுசு. தனிமை. பணக் கஷ்டம். திருச்சிக்கே திரும்பிட்டேன். அப்போ திருச்சியில் சிவஞானம்கிறவர் 'சிவாஜி’ பத்திரிகையை நடத்திக்கிட்டு இருந்தார். அதுல உதவி ஆசிரியரா சேர்ந்தேன். பத்திரிகை ஆசிரியர் திரிலோக சீதாராமன் பிரபல பேச்சாளர். அதனால, ஊர் ஊராப் பேசப் போயிடுவார். தலையங்கம், கதைகளை மட்டும் அனுப்பிடுவார். பத்திரிகையைப் பார்த்து அனுப்பும் முழுப் பொறுப்பும் என்னோடது. ஓவியம், வடிவமைப்பு தவிர எழுதும் வேலையும் சேர்ந்தது. ஏற்கெனவே, கையெழுத்துப் பத்திரிகை நடத்தின அனுபவம் உண்டு. எழுத்தாளன் ஆகிட்டேன். அப்போ திருச்சியில் எம்.ஆர்.எஸ்.மணிங்கிறவர் சரஸ்வதி அச்சகம் நடத்திக்கிட்டு இருந்தார். அவருக்கு பத்திரிகை ஆரம்பிக்க ஆசை. என்னைக் கூப்பிட்டார். போனேன். 'வானவில்’னு குழந்தைகளுக்கான மாதம் இருமுறை பத்திரிகையைத் தொடங்கினோம். வாண்டுமாமானு ஒருத்தன் உருவானது அப்போதான். சும்மா இல்லை... அந்தக் காலகட்டத்திலேயே 20 ஆயிரம் பிரதிகள் போச்சு 'வானவில்’. தமிழ்ல மொதமொதல்ல காமிக்ஸ்ங்கிற சித்திரக் கதை உத்தியைக் கொண்டுவந்தது 'வானவில்’தான். ஆனா, மணி தன்னோட தவறான நிர்வாகத்தால் ரொம்ப சீக்கிரம் அதுக்கு மூடுவிழா நடத்திட்டார்!''

''குழந்தைகள் பத்திரிகை தொடங்கினால், சம்பாதிக்கலாம் என்கிற அளவுக்கு அன்றைக்கு குழந்தைகள் வாசிப்பு இருந்ததா?''

''ஆமாம்! அந்தக் காலகட்டத்தில் 'அணில்’, 'டமாரம்’, 'குரங்கு’, 'கோமாளி’, 'பாப்பா மலர்’... இப்படி ஏராளமான புத்தகங்கள் வந்துக்கிட்டு இருந்துச்சு. உங்ககிட்ட அச்சகமும் பத்திரிகை நிர்வாகத்துக்கு ஒருத்தரும் ஆசிரியர் இலாகாவுக்கு ஒருத்தரும்னு ரெண்டு பேர் இருந்தா பத்திரிகை ஆரம்பிச்சிடலாம்கிற சூழல் இருந்த காலகட்டம் அது. உள்ளூர் பத்திரிகைகளுக்கும் அந்தந்தப் பகுதிகள்ல நல்ல செல்வாக்கு இருந்துச்சு. பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் படிக்க புஸ்தகம் வாங்கித் தர்றதை ஒரு வழக்கமா வெச்சுக்கிட்டு இருந்தாங்க. தவிர, பெரியவங்களேகூட, குறிப்பா பெண்கள்

குழந்தைகளுக்கு கதை சொல்லுங்கோ!

நிறைய குழந்தைகள் புஸ்தகங்களை வாசிச்சாங்க. ஆனா, என்னவோ தெரியலை... குழந்தைகள் பத்திரிகைகள் காலத்துக்கும் நீடிக்க முடியலை. சின்ன குழந்தைகளுக்கு அடிக்கடி நோய்கள் வர்றதை பாலாரிஷ்டம்னு சொல்வாங்க. குழந்தைகள் பத்திரிகைகளுக்கும் பாலாரிஷ்டம் வரும்!''

''கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாக எழுதிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓர் எழுத்தாளராக இந்த வாழ்க்கை திருப்தி அளிக்கிறதா?''

''பெரிய புகார் ஒண்ணும் என்கிட்டே இல்லை. எப்போ கிடைக்கும் எப்போ போகும்னு தெரியாத வேலை; கைக்கும் வாய்க்கும் பத்தாத சம்பளம்னே வாழ்க்கை கழிஞ்சுட்டாலும் குடும்பம் எனக்கு நெருக்கடியைத் தரலை. எனக்கு நாலு பெண் பிள்ளைகள். ஒரு பையன். எல்லாரும் இன்னைக்கு நல்லா இருக்காங்க. காரணம்... என் மனைவி. எழுதுறவன் வாழ்க்கையோட நெருக்கடிகளைப் புரிஞ்சு நடத்துக்கிட்ட புண்ணியவதி. இன்னைக்கும் பணக் கஷ்டங்கள் விட்டுடலை. இப்போகூட ரெண்டு புஸ்தகங்கள் எழுதிட்டு இருக்கேன். ஆனா, பணம் மட்டும் வாழ்க்கை இல்லையே!''

''குழந்தைகளுக்கு எழுதுவது - பெரியவர்களுக்கு எழுதுவது... என்ன வித்தியாசம்?''

''அடிப்படையில, எளிமைதான் வித்தியாசம். ஆனா, அது ஒரு தனி உலகம். இந்த உலகத்தோட தர்க்க நியாயங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டது. நான் மொதமொதல்ல எழுத ஆரம்பிச்சது பெரியவங்களுக்கான கதைகளைத்தான்.

விகடன்ல வேலை செஞ்சப்ப மாலி சார்கிட்ட ஒரு கதையை எழுதிக் கொடுத்தேன். கதையை வாங்கினவர் வாசிச்சுட்டு, 'பெரியவங்களுக்கு எழுத ஏராளமானவங்க இருக்காங்க. நீ குழந்தைகளுக்கு எழுது. நான் பாப்பா மலரில் போடச் சொல்றேன்’னார். எனக்கு அப்போ அதுல விருப்பம் இல்லை. அவர் கேட்டாரேனுதான் எழுதிக் கொடுத்தேன். அவரே அதுக்கு ஓவியங்கள் வரைய, மூர்த்திங்கிற பெயரில் விகடன் பாப்பா மலரில் மூணு கதைகள் எழுதினேன். ஆனா, பின்னாடிதான் உணர்ந்தேன். அவர் எனக்கு எவ்வளவு பெரிய வழியைக் காட்டி இருக்கார்னு. குழந்தைங்க எழுத்தாளன் ஒரு வகையில் அவனே குழந்தையாயிடுறான். காலம் எல்லாம் குழந்தையா இருக்குறது எவ்வளவு பெரிய பாக்கியம்!''

''இவ்வளவு கதைகளுக்குமான கரு எங்கிருந்து உருவானது?''

''என்னோட அத்தைகள்கிட்ட இருந்து வந்தது. என்னோட வறுமையான வாழ்க்கை தந்த அனுபவங்கள்லேர்ந்து வந்தது. எங்கப்பா சின்ன வயசுலயே தவறிட்டார். கிராமத்துல வாழ வழி இல்லாம திண்ணியத்தில் இருந்து எங்க சின்ன அத்தையோட கணவர் ஆதரவுல திருச்சி வந்தோம். கொஞ்ச நாள்லயே அவரும் போயிட் டார். அம்மா, பாட்டி, இரண்டு அத்தைகள்... வசதியும் இல்லாமல், படிப்பும் இல்லாமல் இப்படி வீட்டுல நாலு விதவைகள். அவங்க கையில் நான், என் அண்ணன், தங்கைனு மூணு குழந்தைகள். வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் பாருங்கோ... திருச்சியில் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு என்றே 'ஸ்டோர்கள்’ நிறைய இருக்கும். ஒரு வீடு இருக்கும் இடத்தில் பத்து வீடு இருந்தால், அது 'ஸ்டோர்’. அப்படி ஒரு 'ஸ்டோர்’ வீட்டில், காற்றோட்டமோ வெளிச் சமோ இல்லாத சின்ன அறை கள்லதான் இத்தனை ஜீவன்களும் வாழ்ந்தோம். சாப்பிட எதாவது இருந்தால் சந்தோஷம். இல்லாட் டாலும் கேள்வி கேட்பது கிடை யாது. அப்படியரு வாழ்க்கை. ஆனாலும், சின்ன பிள்ளைகளான நாங்கள் சந்தோஷமா இருந்தோம். காரணம், எங்களோட அத்தைகள். கதைகளால் எங்களை ஒரு கற்பனாலோகத்தில் வாழவெச்சாங்க. பசி, வியர்வை, கொசுக்கள்... பெரும்பாலான ராத்திரிகள் இதுங்களோடதான். ஆனா, எங்களுக்கு எதுவும் தெரியாது. நாங்கதான் வானலோகக் கதைகள்ல சஞ்சரிச்சுக்கிட்டு இருப்போமே... ஆனா, எல்லாக் கஷ்டங்களையும் பார்த்து உறவுகளோட வளர்ந்ததுதான் பின்னாடி எவ்வ ளவோ கஷ்டங்களை எதிர்கொள்ள உதவுச்சு. கஷ்டங்களே தெரியாம வளர்றதாலதான் இன்னைக்குக் குழந்தைகள் தற்கொலை பண்ணிக் கிற செய்திகளைச் சர்வசாதாரணமா படிச்சுட்டு இருக்கோம்.''

''சரி, இந்தக் காலத்துக் குழந்தைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''பாவம்னுதான் சொல்லத் தோணுது. இவங்களுக்கு யாருமே இல்லையே? கதை இல்லாத குழந்தைகளைக் கற்பனையே செய்ய முடிய லையே... நவீன சாதனங்களின் வளர்ச்சியை வரவேற்க வேண்டியதுதான். ஆனால், நவீன சாதனங்கள்தான் வாழ்க்கையேன்னா... இது என்ன வாழ்க்கை?

உங்களுக்குக் குழந்தை இருந்தா, தயவுசெஞ்சு கதை சொல்லுங்கோ... படிக்கச் சொல்லுங்கோ... கதைப் புஸ்தகம் வாங்கிக் கொடுங்கோ... முருகா!’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism