Published:Updated:

கெளரவக் கொலைகள்!

கவின் மலர்படங்கள் : கே.குணசீலன், ஆ.வின்செண்ட் பால்

கெளரவக் கொலைகள்!

கவின் மலர்படங்கள் : கே.குணசீலன், ஆ.வின்செண்ட் பால்

Published:Updated:
##~##

ண்ணகி - முருகேசனைத் தெரியுமா உங்களுக்கு? இருவரும் கணவன் மனைவி. ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கண்ணகியை தலித் முருகேசன் காதலித்து மணந்துகொண்டார். தங்கள் வீட்டுப் பெண், ஒரு தலித்தைத் திருமணம் செய்துகொண்டதை ஆதிக்கச் சாதி ஏற்கவில்லை. ஊரார் கூடி நிற்க, ஊர் மந்தையில் கட்டிவைக்கப்பட்டு, காது வழியாக விஷம் ஊற்றப்பட்டு, கண்ணகியும் முருகேசனும் கொல்லப்பட்டார்கள். இது நடந்தது 2003-ல். கௌரவக் கொலை என்றாலே நினைவில் நிழலாடும் பெயர்களாக கண்ணகி - முருகேசன் பெயர்கள் ஆகின. ஆனால், இன்றும் தமிழகத்தில் 'கண்ணகி - முருகேசன்’கள் கொல்லப்படுகிறார்கள்!

 அண்மையில் வெளியான 'எவிடென்ஸ்’ அமைப்பின் அறிக்கை தமிழகக் கௌரவக் கொலைகளின் பகீர் பின்னணியை விவரிக்கிறது. கௌரவக் கொலைகளுக்கு மதம், பொருளாதாரம் போன்ற பல காரணங்கள் இருந்தாலும் சாதிதான் அதில் பிரதானம். வேறு சாதி ஆணை விரும்பிய பெண்ணின் வயிற்றில் தன் சாதி அல்லாத குழந்தை பிறப்பதைப் பெண்ணின் குடும்பத்தாரால் ஏற்றுக்கொள்ள முடிவது இல்லை. இதனாலேயே தங்கள் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு கௌரவக் கொலைக்குத் திட்டமிடுகிறார்கள் பெரும்பாலான பெண்களின் உறவினர்கள். கௌரவக் கொலைகளில், பெண்ணின் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோராலேயே திட்டங் கள் செயல்படுத்தப்படுவதால், புகார் கொடுப்போர் பெரும்பாலும் இருக்க மாட்டார்கள். இப்போது பரிணாம வளர்ச்சியாகத் தங்கள் பெண்ணைக் காதலித்த அல்லது மணந்த ஆணையும் பலியிடுவதால், நிகழ்ந்த விபரீதம் வெளி உலகுக்குத் தெரியவருகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கெளரவக் கொலைகள்!

மற்றுமொரு காதல் செய்தியாகக் கடந்துவிட முடியாதபடிக்கு ஒவ்வொரு சம்பவத் துக்குப் பின்னணியிலும் எவ்வளவு காதல், வேதனை, துரோகம், இழப்பு ஒளிந்துஇருக்கிறது தெரியுமா?

ஞ்சை மாவட்டம், வடசேரியைச் சேர்ந்த சதுராவின் கதை சினிமாவையும் மிஞ்சும் கொடூரம். ஊரில் இருந்து சென்னைக்கு வந்து தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்த சதுராவுக்கு உடன் பணிபுரிந்த டேனியல் செல்வகுமாருடன் காதல். அதன் பிறகான நிகழ்வுகளை டேனியல் சொல்லக் கேட்போம்...

''எங்க வீட்ல எதிர்ப்பு இல்லை. சதுரா வீட்ல விஷயத்தைச் சொன்னப்போ, பயங்கர எதிர்ப்பு. உடனே நான், சதுராவின் சித்தப்பாவை நேர்ல பார்த்தப்போ 'என்ன சாதி’னு கேட்டார். 'நான் தலித் கிறிஸ்டியன்’

கெளரவக் கொலைகள்!

என்பது உட்பட எல்லாத்தையும் சொன்னேன். அவளை ஊருக்குக்கூட்டிட்டுப் போக பிளான் பண்ணினாங்க. 'ஹாஸ்டலைக் காலி பண்ணிட்டு வர்றேன்’னு சொல்லிட்டு சதுரா தப்பிச்சு வந்துட்டா. ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டோம். 'உன்னை இதோட தலை முழுகிட்டோம்’னு சொல்லி அவங்க வீட்டுக்காரங்க வெறுப்போட போயிட்டாங்க. எல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்துச்சு. அப்போ திடீர்னு சதுரா வீட்ல இருந்து போன் பண்ணி, 'ஊர்ல எல்லாரும் சதுராவைப் பத்தித் தப்பா பேசுறாங்க. அதனால, ஊர்ல வெச்சு ஒரு கல்யாணம் பண்ணிடுவோம்’னு ரொம்ப சாந்தமாப் பேசுனாங்க. ஒரு மாசம் கழிச்சு கல்யாணத்துக்குத் தேதியும் ஃபிக்ஸ் பண்ணாங்க.  

'கொஞ்ச நாள் ஊர்ல இருக்கட்டுமே... எங்க பொண்ணைக் கொஞ்ச நாள் நாங்க வெச்சுப் பாத்துக்கணும் மாதிரி இருக்கு’னு ரொம்ப உருக்கமாக் கேட்டாங்க. எனக்கோ சதுராவுக்கோ கொஞ்சமும் சந்தேகம் வரலை. அவ ஊருக்குப் போனா.

கல்யாணத் தேதிக்கு ரெண்டு, மூணு நாள் முன்னாடி, 'எனக்குச் சந்தேகமா இருக்குடா... இங்கே கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்குற மாதிரியே தெரியலை’னு சொன்னா சதுரா. எனக்கு லேசா சந்தேகம் வந்துச்சு.

நான் ஊருக்குக் கிளம்புற ராத்திரி சதுராகிட்ட இருந்து ஒரு மெசேஜ் வந்தது... 'டேனியல், நாம ஏமாந்துட்டோம்டா... என்னைக் கொலை செய்யத்தான் கூட்டிட்டு வந்திருக்காங்கனு நினைக்கிறேன்’னு மெசேஜ். அப்படியே திக்பிரமை பிடிச்சு நின்னுட்டேன்!'' அந்த நேரத்தின் நினைவுகள் அழுத்த... மௌனமாகிப் பின் தொடர்கிறார் டேனியல்.

''நான் உடனே அவளுக்கு போன் பண்ணேன். அவ போனை எடுக்கலை. கொஞ்ச நேரம் கழிச்சு அவ நம்பர்ல இருந்து கால் வந்தது. அட்டெண்ட் பண்ணா... அவங்க சித்தப்பா, 'ஒண்ணும் பிரச்னை இல்லை. அண்ண னுக்கும் அவளுக்கும் சின்ன சண்டை. நான் பார்த்துக்குறேன்’னு சொல்லி, பட்டுனு கட் பண்ணிட்டார். நான் என் மொத்தக் குடும்பத்தையும் கூட்டிக்கிட்டு பஸ் ஏறிட்டேன்.

கெளரவக் கொலைகள்!

கொஞ்ச நேரம் கழிச்சு சதுராகிட்ட இருந்து மெசேஜ் மட்டும் வந்துட்டே இருந்தது. 'பயமா இருக்கு’, 'சீக்கிரம் வந்துரு’னு இப்படியே மெசேஜ் மட்டும் பண்ணிட்டே இருந்தா. அதிகாலை 4.32 மணிக்கு அவகிட்டேர்ந்து வந்த எஸ்.எம்.எஸ்தான் கடைசி. அதுல... 'ஐ வான்ட் டு லிவ் வித் யு ஃபார் ஹண்ட்ரட் இயர்ஸ்’னு இருந்தது. அப்புறம் நான் அனுப்பின எந்த மெசேஜுக்கும் அவகிட்ட இருந்து பதில் இல்லை. கூப்பிட்டாலும் பதிலே இல்லை. 'என்னமோ சரியில்லை’னு பதறிக்கிட்டே இருந்தேன். காலைல அவ ஊரை நெருங்கும்போது, 'சதுரா தற்கொலை பண்ணிக்கிட்டா’னு சொன்னாங்க. நான் உடைஞ்சுட்டேன். என் சதுரா நிச்சயம் தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்க மாட்டானு எனக்கு நல்லாத் தெரியும்.

அலறியடிச்சுட்டு ஓடுனா, சதுரா உடம்பைக் கூட என் கண்ணுல காட்டலை. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்படி, அவ காதுல திரவ விஷத்தை ஊத்தியும், வாய்ல திட விஷம் சாப்பிட்டும் செத்துப்போயிருக்காளாம். இப்போ கேஸ் நடக்குது. இப்போ என் சதுரா என்கிட்ட இல்லை. சத்தமாப் பாட்டு கேட்டாக்கூட அவளுக்கு ஆகாது. அவ காதுலயே விஷத்தை ஊத்திக் கொன்னுருக்காங்களே பாவிங்க'' என்பவருக்கு அதற்கு மேல் பகிர்ந்துகொள்ள வார்த்தைகள் இல்லை.  

வாழத் தொடங்குவதற்கு முன்னரே வாழ்க்கைத் துணையை இழந்தது டேனியலின் சோகம் என்றால், வாழ்க்கையையே இழந்த வேதனை லட்சுமியுடையது. அரித்துவார மங்கலத்தைச் சேர்ந்த லட்சுமி, ஆட்டோ ஓட்டுநரான சிவாஜியைக் காதலித்து மணந்திருக்கிறார். திருமண சமயமே எழுந்த கொலை மிரட்டலை நண்பர்கள் துணையோடு எதிர்கொண்டு மணம் புரிந்தார்கள். ஆனால், விதி விடாமல் துரத்தியதை லட்சுமி சொல்லக் கேட்போம்... ''நான் வேற சாதிக்காரரைக் காதலிக்கிறேன்னு தெரிஞ்சதுமே என்னை அடிச்சு சித்ரவதை செஞ்சாங்க. அவரு ஒரு கட்சியில இருந்தார். அதனால், கட்சி ஆளுங்க துணையோட கல்யாணம் கட்டிக்கிட்டோம். அந்தக் கட்சிக்காரர் ஒருத்தர் தந்த அடைக்கலத்தோட திண்டுக்கல்ல தங்கியிருந்தோம். எங்ககிட்ட காசு பணம் அதிகம் இல்லாட்டாலும், ரொம்பச் சந்தோ ஷமா இருந்தோம். எங்களைத் தேடிக்கிட்டே இருந்த எங்க வீட்டு ஆளுங்களுக்கு எங்களுக்கு அடைக்கலம் கொடுத்த கட்சிக்காரரே காசு வாங்கிட்டு நாங்க இருக்கிற இடத்தைக் காட்டிக்கொடுத் துட்டாரு. விடியக்காலையில யாரோ கதவைத் தட்டுனாங்க. அப்போ நான் மாசமா இருந்தேன். அவரு போய்க் கதவைத் திறந்தார். திமுதிமுனு ஏகப்பட்ட ஆளுங்க உள்ளே நுழைஞ்சாங்க. அதுல எங்க சித்தப்பாவும் ஒருத்தர். என்ன ஏதுன்னு சுதாரிக்கிறதுக் குள்ள அவரை அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் கெஞ்சினேன்; கதறினேன்; ஆனா, விடாம அவரை அடிச்சு வண்டியில ஏத்திக்கிட்டுப் போயிட் டாங்க. அப்புறம் அவரைப் பொணமாத்தான் பார்த்தேன். கல்லணையில ஆத்துப் பக்கம் ஒதுங்கிக்கிடந்தாரு. சித்ரவதை செஞ்சுக் கொன்னுட்டாங்கனு அவரு உடம்பைப் பார்த்தாலே தெரிஞ்சுது'' - சேலை முந்தானையால் கண்களைத் துடைத்துக்கொண்டு தொடர்கிறார் லட்சுமி.

கெளரவக் கொலைகள்!

''என்கூடப் பிறந்த அண்ணனுங்க இப்பவும் என்னை மிரட்டுறாங்க. என் குடும்பமே என் வாழ்க்கையைச் சீரழிச்சுருச்சு. எப்பவும் எதுவும் நடக்கலாம்னு உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். கோர்ட்டுல கேஸு நடக்குது. ஆச்சு... நாலு வருஷம். என் புள்ளை இப்போ எல்.கே.ஜி. படிக்கிறான். அவனுக்கும் எனக்கும் என்னதான் இனி இருக்கு வாழ்க்கையில?''- விட்டத்தில் நிலைகுத்திக்கொள்கிறது லட்சுமியின் பார்வை.

காதல் தப்பு என்று தன் வீட்டுப் பெண்களையே இவ்வளவு இம்சிப்பவர்களுக்கு, சாதி மேல் மட்டும் அப்படி என்ன வெறி பிடித்த காதல்?

இப்படியான கௌரவக் கொலைகளில் ஈடுபடுகிறவர்கள் குடும்ப உறுப்பினர்களாக இருப்பதால், வழக்கை நடத்துவதில் பல் வேறு சிரமங்கள் உள்ளன. சாட்சிகள் மறைக்கப்படுவது, சாட்சியங்கள் அழிக்கப்படுவது எனப் பல்வேறு வகைகளில் சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்பிவிடுகிறார்கள். எனவே, இவற்றை எல்லாம் கவனத்தில்கொண்டுதான் கௌரவக் கொலைகளுக்குத் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.

'தனிச் சட்டம் இயற்றுவது எந்த அளவுக் குப் பலன் அளிக்கும்?’ என்று வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் கேட்டபோது, ''வரதட்சணையைத் தடுப்பதற்கு என்று தனிச் சட்டம் இருக்கிறது. ஆனால், யார் வரதட்சணை வாங்காமல் இருக்கிறார்கள்? எஸ்.சி - எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இருக்கின்றது. ஆனால், தலித்துகள் மீது வன்கொடுமைகள் தீர்ந்துவிட்டனவா? வெறும் சட்டங்கள் மாத்திரம்தான் தீர்வு என்று நாம் சொல்ல முடியாது. மக்களின் மனதில் மாற்றம் வர வேண்டும். சாதி குறித்தான நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். சாதி-மதம் தாண்டிய திருமணங் களை அரசாங்கமும் சமூகமும் ஆதரிக்க வேண்டும். சாதியும் மதமும் அந்தஸ்தும்தான் திருமணத் தகுதிகள் என்ற நினைப்பை மக்கள் முதலில் கைவிட வேண்டும். சாதி மறுப்புத் திருமணங்களுக்கு அரசு கூடுதல் சலுகைகள் அளிக்க வேண்டும். அவர்களு டைய வாரிசுகளுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். சிறு வயது முதலே சாதியை விமர்சிக்கும் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும்'' என்று ஒரு பட்டியல் நீட்டுகிறார் சுதா ராமலிங்கம்.

'தீண்டாமை ஒரு பாவச் செயல்... தீண்டாமை ஒரு பெருங்குற்றம்... தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்று ஏட்டளவில் மட்டும் சொல்லிக்கொடுக்கும் நம் கல்வி முறை சாதி ஒழிப்பு குறித்து எப்போது பேசப்போகிறது?

அரசாங்கத்தின் நிலை என்ன?

''கௌரவக் கொலைகளுக்கு என்று தனிச் சட்டம் இயற்றப்படுவதற்கான வாய்ப்புகள் என்ன?''

கிறிஸ்துதாஸ் காந்தி, கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் வளர் ஆணையர்.

''கௌரவக் கொலை என்று அதற்கு எப்படித்தான் பெயர் வந்ததோ தெரியவில்லை. அவற்றுக்குப் படுபாதகக் கொலை என்றுதான் நியாயமாகப் பெயர் வைத்திருக்க வேண்டும். கௌரவக் கொலைகளை ஒழிக்க என்று இங்கே தனிச் சட்டங்கள் இல்லை. வரதட்சணை ஒழிப்பு, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு போன்றவற்றுக்குத் தனிச் சட்டங்கள் உள்ளன. ஏனெனில், அவை சமூகக் குற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன. கௌரவக் கொலைகள் ஒரு சமூகக் குற்றமாகப் பார்க்கப்படுவது இல்லை. மற்ற கொலைகளைப் போலவே அவையும் கிரிமினல் குற்றமாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இந்தப் பின்னணியிலேயே அதற்கெனத் தனிச் சட்டங்கள் இயற்றப்படவில்லை; சரியான புள்ளிவிவரங்களும் கிடைக்கவில்லை!''

கொலைக்கள தமிழகம்!

தேசத்தையே உலுக்கிய டெல்லி டாக்டர் தம்பதிகளின் மகளான ஆருஷியின் கொலை, கௌரவக் கொலையாக இருக் கக்கூடும் என்று சி.பி.ஐ. சொல்கிறது. தமிழகத்திலோ பழ.கருப்பையா ''நகரத்தாருக்குரிய அடையாளங்கள் என்றும் தொடர வேண்டுமென்றால், நாம் கலப்புத் திருமணத்தை முற்றிலுமாக எதிர்க்க வேண்டும். சமூகத்தை மீறிக் கலப்புத் திருமணம் செய்துகொள்வோரை நம் சமூகத்தில் இருந்து தள்ளி வைத்துவிட வேண்டும்!'' என்று தனது கட்டுரையில் எழுதுகிறார். 'கலப்புத் திருமணம் செய்தால் கையை வெட்டுவேன்’ என்கிறார் பா.ம.க-வின் காடுவெட்டி குரு. ''கலப்புத் திருமணம் செய்துகொள்வதால் கொங்கு வேளாளர் மக்களின் கலாசாரம் கெட்டுப்போகிறது. பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதால், கொங்கு வேளாளர்களின் நிலவுடைமை பாதிக்கப்படுகிறது'' என்று கூறி இவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று சங்கப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவற்றின் நீட்சியாகவே பின்வரும் சம்பவங்களை அணுக வேண்டியிருக்கிறது....  

• தஞ்சைக்கு அருகில், சூரக்கோட்டை யைச் சேர்ந்த மாரிமுத்து, ஆதிக்க சாதியைச் சேர்ந்த அபிராமியைக் காதல் மணம் புரிந்தார். ஒரு குழந்தையும் பிறந்தது.  ''குழந்தைக்கு செயின் வாங்கி வைத்துள்ளேன். வாங்கிட்டுப் போயிரு!''  என்று அபிராமியின் சகோதரர் அருண்குமார் கூற, அவரது வீட்டுக்குச் சென்ற மாரிமுத்து வீடு திரும்பவில்லை. மறுநாள் காலையில் சூரக்கோட்டை அருகே மாரிமுத்துவின் சடலம்தான் கண்டெடுக்கப்பட்டது. அவருடைய குரல்வளையை அறுத்து, இடது கையை வெட்டி, ஆண் குறியையும் அறுத்து எறிந்துள்ளனர்.

• திருவண்ணாமலை மாவட்டம், துறிஞ்சிக் குட்டைமேடு பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த துரையும் சாதி இந்துவான தேன்மொழியும் காதலித்ததால் ஆத்திரமடைந்த தேன்மொழியின் குடும்பத்தினர், துரையை அரிவாளால் வெட்டி உயிரைப் பறித்திருக்கிறார்கள்.

•   பழநி அருகில் க.கலையமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த தலித்தான பத்ரகாளி, ஸ்ரீபிரியா என்கிற சாதி இந்துப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் உறவினர்களுடன் சென்று தன் மகளைப் படுகொலை செய்துள்ளார்.

•  சென்னையைச் சேர்ந்த பார்த்தசாரதி, சரண்யாவைக் காதலித்து மணந்தார். சரண் யாவின் பெற்றோர் கூலிப்படை வைத்து பார்த்தசாரதியைக் கொலை செய்தனர்.

• தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த தலித் இளைஞர் வெற்றிவேல், சாதி இந்துவான சுகன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சுகன்யாவின் தந்தையே மகளைப் படுகொலை செய்தார்.

• நான்கு ஆண்டுகளுக்கு முன் பரமக் குடி திருச்செல்வி, தலித் இளைஞரான டேனியல்ராஜைக் காதலித்ததால் கொல்லப் பட்டார். அந்தப் பெண்ணின் தாயையும்  பாட்டியையும் தற்போது காவல் துறை கைதுசெய்திருக்கிறது.

• ஈரோடு மாவட்டம், பெரியார் நகரைச் சேர்ந்த தலித் இளைஞர் இளங்கோ, திருப்பூரில் செல்வலட்சுமியைக் காதலித்ததால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு இருக்கிறார்.