என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

•  ஐரோப்பிய நாடுகளை நெருக்கும் பொருளாதாரச் சிக்கல், நோபல் பரிசையும் விட்டுவைக்கவில்லை. 1901 முதல் வழங்கப்பட்டுவரும் நோபல் பரிசுத் தொகை, இந்த ஆண்டு முதன்முறையாகக் குறைக்கப்படுகிறது. நோபல் வெற்றியாளர்களுக்கான வெகுமதி இனி சுமார் 20 சதவிகிதம் குறைத்தே வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது நோபல் கமிட்டி. அட, ஆண்டவா!

இன்பாக்ஸ்

•  ஆங்கிலம் தெரியாத ஒரு பெண், வெளிநாட்டுக்குத் திருமணமாகிச் செல்கிறார். அங்கு ஆங்கிலம் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம். வேறு வழி இன்றி தக்கிமுக்கி ஆங்கிலம் கற்றுக்கொள்ளத் துவங்குகிறார். அதனால் நிகழும் காமெடி கலாட்டாக்கள்தான் 'இங்லீஷ் விங்லீஷ்’ படத்தின் கதை. 14 வருட இடைவெளிக்குப் பின், ஸ்ரீதேவி நடிக்கஇருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லரில், ஆங்கிலத்தில் இருக்கும் சென்சார் போர்டு சான்றிதழை ஸ்ரீதேவி தப்பும் தவறுமாகப் படிப்பதுபோல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதற்காக சென்சார் போர்டிடம் சிறப்பு அனுமதி பெற்றனராம். வெரிகுட்னு சொல்வான் வெள்ளைக்காரன்!

•  பெர்லின் இப்போ சைக்கிள் நகரம். பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசு மற்றும்  பெட்ரோல் விலை உயர்வைக் கருத்தில்கொண்டே ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் சைக்கிள் ஏறிவிட்டார்கள் மக்கள். 'பெர்லின் சைக்கிள் யூனியன்’ என்ற அமைப்பு, சைக்கிளை மட்டுமே அன்றாடம் பயன்படுத்தச் சொல்லி பிரசாரம் செய்கிறது. இந்த முயற்சிக்கு அந்த நாட்டு அரசும் ஊக்கம் அளிக்கிறது. காப்பி அடிக்க வேண்டிய கலாசாரம் இது!

இன்பாக்ஸ்

•  ஒல்லி கில்லி இலியானா, இனி தனது குரலாலும் மயக்கவிருக்கிறார். சினிமாவில் நடிப்பதற்கு முன் கோவா மியூஸிக் பேண்டுகளில் பாடிய அனுபவத்தை இசை ஆல்ப வெளியீட்டின் மூலம் ரீ-சார்ஜ் செய்யவிருக்கிறார் இலியானா. குயில் குரல்ல பாடுமோ மயில்?!

இன்பாக்ஸ்

• சிவாஜி கணேசனை நாடக உலகில் இருந்து திரையுலகுக்கு அழைத்து வந்தவர்... 'நேரம் மட்டும் கூடி வந்திருந்தா, இவன் என்னையும் மிஞ்சி எங்கேயோ போயிருக்கக்கூடிய அசகாய நடிகன்’ என்று நாகேஷால் வியந்து புகழப்பட்டவர்... தமிழ் சினிமாவின் மூத்த தலைமுறை தூண்களுள் ஒருவரான நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன், தனது 86-வது வயதில் மரணம் அடைவதற்குச் சில வாரங்கள் முன்பு வரையிலும் நண்பர்களைத் துறுதுறு அரட்டையில் கலகலக்கவைத்திருக்கிறார். தியாகராஜ பாகவதர், நவாப் ராஜமாணிக்கம், எஸ்.வி.சகஸ்ரநாமம், என்.எஸ்.கிருஷ்ணன் போன்ற நாடக உலக பிரம்மாக்களின் குழுக்களில் 1,000-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். காக்கா நடித்திருக்கும் 800 திரைப்படங்களும் நகைச்சுவை ஆர்வம்கொண்ட நடிகர்களுக்கான பாலபாடம். இறவாப் புகழுக்கு உரியவர் இந்த அமரர்!  

இன்பாக்ஸ்

•  'ஃபோர்ப்ஸ்’ கணக்குப்படி உலகின் காஸ்ட்லி மாடல்... கஸிலி பன்சீன்! கடந்த வருடம் மட்டும் விளம்பரங்கள் மூலம் 45 மில்லியன் டாலர்கள் குவித்திருக்கிறார் இந்த பிரேசில் அழகி. ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் விழிப்பு உணர்வு அமைப்பின் சர்வதேச நல்லெண்ணத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் உலகம் முழுக்க ஒரு ரவுண்ட் அடித்துவிட்டார் கஸிலி. ஒவ்வொரு நாட்டுக்கும் தேவை இப்படி ஒரு தூதர்!  

இன்பாக்ஸ்

•  தன் இளமை ரகசியத்தை வெளியிட்டு இருக்கிறார் ஹாலிவுட் ஆக்ஷன் ஹீரோ டாம் க்ரூஸ். 'ஐஸ் சூட்’ எனப்படும் பிரத்யேக கோட் அணிவதுதான் அவரைப் புத்துணர்வோடு வைத்திருக்கிறதாம். கோட்டின் உள் பகுதி முழுக்க ஐஸ் க்யூப்களால் நிரப்பப்பட்ட அந்த ஆடை குளிர்ச்சி கலந்த புத்துணர்ச்சி தருவதோடு, ஆக்ஷன் காட்சிகளில் நடித்த உடல் வலியைப் போக்கவும் செய்கிறதாம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஆடையுடன்தான் வலம் வந்திருக்கிறார் டாம். ஆல் ஹீரோஸ்... ஆளுக்கொரு ஐஸ் சூட் ஆர்டர் பண்ணுங்க!

இன்பாக்ஸ்

•  துர்காவுக்குப் பிறகு, சுந்தரியைத் தத்தெடுத்து இருக்கிறார் ப்ரியங்கா சோப்ரா. துர்கா-பெண் புலி. சுந்தரி - பெண் சிங்கம். ராஞ்சி உயிரியல் பூங்காவில் கடந்த வருடம் துர்கா வைத் தத்தெடுத்த ப்ரியங்கா, அந்த ஒப்பந்தம் முடிந்த நிலையில், இப்போது

இன்பாக்ஸ்

2 லட்சம் கட்டி சுந்தரி யைத் தத்தெடுத்து இருக்கிறார். 'பிராணி’யக்கா சோப்ரா!

இன்பாக்ஸ்

•  தேர்தல் பிரசாரத்தில் ஒபாமா பிஸி. தேர்தல் நிதி திரட்டுவதற்காக ஹாலிவுட் பிரபலங்களையும் சேர்த்துக்கொண்டு சுற்றுகிறார் மிஸ்டர். ஒ. மான்ஹாட்டனில் ஒரு டேபிளுக்கு 40,000 ரூபாய் டிக்கெட் வைத்தும் இருக்கைகள் நிரம்பி வழிந்தனவாம். காரணம், நிகழ்ச்சி யில் பங்கேற்ற சாரா ஜெஸிகா பார்கர் எனத் தகவல் கிளம்ப, இதே பாணியைத் தொடரலாமா... வேண்டாமா எனக் குழம்பித் தவிக்கிறது ஒபாமா முகாம். ஓ... நோ ஒபாமா!  

இன்பாக்ஸ்

•  உலகின் செம ஃபாஸ்ட் பெண் கார் ரேஸர் டானிசா பேட்ரிக். 'இண்டி கார் சீரிஸ்’களில் பட்டம் வென்ற ஒரே பெண்ணான டானிசா, இந்த ஆண்டு ஆண்களையே மலைக்கவைக்கும் ஃபார்முலா ஒன் ரேஸில் பங்கேற்க உள்ளார். போட்டியில் வென்றால், உலகின் முதல் 'ஃபார்முலா ஒன் லேடி வின்னர்’ என வரலாற்றில் இடம் பிடிப்பார் டானிசா. டாப் கியர் தட்டுங்க டானி!

•  இந்தியப் பங்குச் சந்தையில் அதிரடியாகக் கோடிகளைக் குவிக்கும்  ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவை இந்தியாவின் வாரென் பஃபெட் என்றால் கோபிக்கிறார். ''நான் இந்தியாவின் ஜூன்ஜூன்வாலாவாக்கும்...'' என்றபடி பங்குச் சந்தையே கதியாகக்கிடக்கும் ஜூன், இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 41-வது இடத்தில் இருக்கிறார். சொத்து முழுசும் சந்தையில் தேற்றியதாக்கும்!