Published:Updated:

இருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை!

சார்லஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ண்டன் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காகத் தங்கம் தட்டுவார் என்ற நம்பிக்கையை இந்தோனேஷியா ஓப்பனை வென்றதன் மூலம் அதிகப்படுத்தியிருக்கிறார் சாய்னா நேவால். ஆனால், சாய்னாவின் இந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல், பயஸ் - பூபதி இடையிலான முட்டல், தடகள வீராங்கனை பிங்கி மீதான கற்பழிப்புப் புகார் என இந்திய விளையாட்டுத் துறையைக் களங்க மேகங்கள் சுற்றிச் சூழ்ந்து இருக்கின்றன!  

 வீரர்களுக்கு இடையிலான பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டிய விளையாட்டு அமைப்புகளும் அதன் நிர்வாகிகளுமே பிரச்னைகளுக்கு எண்ணெய் வார்ப்பவர்களாக இருப்பதுதான் இத்தனை சொதப்பல்களுக்கும் காரணம். பேட்மிட்டனில் சாய்னாவைப் போன்றே திறமையான வீராங்கனை ஜுவாலா கட்டா. லண்டன் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லும் ஜோடி என எதிர்பார்க்கப்படும் ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா இருவருமே பேட்மிட்டன் சங்க நிர்வாகிகளைப் பற்றிப் பல முறை வெளிப்படையாகவே புகார் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், அதைக் காது கொடுத்துக் கேட்க யாரும் இல்லை.

இருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை!

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற பிங்கி பிராமனய்க் ஓர் ஆண் என்று இப்போது பகீர் குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது. இந்தியா சார்பாக சர்வதேச அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்கும் ஒருவரின் பாலினத்தைக்கூட உறுதிப்படுத்திக்கொள்ளாமல் தடகள சங்க நிர்வாகிகளுக்கு வேறு என்னதான் வேலை?

தடம் புரண்டு நிற்கிறது 'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இணை. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய டென்னிஸின் முகங்களாக இருந்த லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி ஜோடி இன்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கக்கூட விரும்பாமல் குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர். லியாண்டருடன் இணைந்துதான் விளையாட வேண்டும் என்றால்,  ஒலிம்பிக்கில் இருந்து விலகவும் தயார் என்று மகேஷ் அறிவித்திருப்பது இந்திய டென்னிஸ் சங்கத்தின் மெத்தனத் தையே காட்டுகிறது.

கடந்த ஒரு வருடமாக லியாண்டர் பயஸ்... மகேஷ் பூபதி, சானியா மிர்சா இருவருடனும் பேசுவது இல்லை. ஒரு வருடமாக முகத்தைக்கூடப் பார்த்துக்கொள்ளாமல், பேசாமல் இருப்பவர்களை ஒலிம்பிக்கில் இணை சேர்ந்து விளையாடச் சொன்னால் என்ன ஆகும்? இருவருமே தனித் தனியாக மிகச் சிறப் பான ஆட்டக்காரர்கள். ஆனால், இப்போது இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி... நம்பிக்கை ஜீரோ!

இருக்கிறது திறமை... இல்லாதது அக்கறை!

பயஸும் மகேஷ் பூபதியும் லண்டன் ஒலிம்பிக்ஸில் இணைந்து விளையாடுவதற்காக, 2011 சென்னை ஓப்பனில் இணைந்து விளையாடி பட்டமும் வென்றார்கள். உலகின் நம்பர் ஒன் ரேங்க்கை மீண்டும் எட்டிப் பிடித்தார்கள். ஆனால், மீண்டும் இணையவே முடியாத படி இப்போது இருவருக்கும் இடையில் என்னதான் பிரச்னை?  

சென்னை ஓப்பனுக்காக சென்னையில் தங்கியிருந்தபோது நடந்த ஒரு சம்பவம்தான் இந்த விவகாரத்தின் பின்னணி என்கிறார், சென்னை ஓப்பன் டென்னிஸ் நிர்வாகி ஒருவர். ''சென்னையில் போட்டிகள் நடக்கும் இரண்டு வாரமும் ஃபேஷன் ஷோ, பார்ட்டி என ஹோட்டல் களைகட்டும். அப்போது நடந்த பார்ட்டியில் பயஸ், மகேஷ் பூபதி இருவருமே கலந்துகொண்டனர். அப்போது பார்ட்டியில் ஒரு பெண்ணுடன் யார் நடனம் ஆடுவது என்று இருவருக்கும் இடையிலான தகராறு சட்டையைப் பிடித்து அடித்துக்கொள்ளும் அளவுக்குச் சண்டையாக விஸ்வரூபம் எடுத்தது. அதுவரை மைதானங்களில் மட்டுமேனும் சகஜமாகப் பழகிவந்த இருவரும் அதற்குப் பிறகு, கிட்டத்தட்ட எதிரிகளாகிவிட்டனர்'' என்கிறார்.

இதனால்தானோ என்னவோ ''நான்கு முறை பயஸுடன் ஜோடி சேர்ந்தும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல முடியவில்லை. அதனால், இளம் வீரரான போபண்ணாவுடன் இணைந்து லண்டன் போட்டிக்குத் தயாராகிறேன்'' என்று ஒரு வருடத்துக்கு முன்பே அறிவித்து போபண்ணாவுடன் சர்வதேசப் போட்டிகளில் இணைந்தும் விளையாடத் தொடங்கினார் மகேஷ் பூபதி.

அப்போதே இந்திய டென்னிஸ் சங்கம் லியாண்டர் பயஸை சோம்தேவ் தேவ்வர்மன் அல்லது யுகி பாம்ப்ரி போன்ற இந்திய இளம் வீரர்களுடன் ஜோடி சேர்ந்து ஆட வலியுறுத்தியிருக்க வேண்டும். ஆனால், அப்போது எல்லாம் பயஸ் - பூபதி பிரச்னையைக் கண்டுகொள்ளா மல் ஒலிம்பிக்குக்கு ஒரு மாதமே இருக்கும் நிலையில் பிரச்னையைத் தீர்க்க முடியாமல் தடுமாறுகிறது இந்திய டென்னிஸ் சங்கம்.

இப்போது நிர்வாகிகளுக்கும் சீனியர் வீரர்களுக்கும் இடையே மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள் போபண்ணா, சோம்தேவ் தேவ்வர்மன், யுகி பாம்ப்ரி, சானியா மிர்சா போன்றவர்கள். பூபதி இந்த ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளாவிட்டால், கலப்பு இரட்டையரில் சானியா மிர்சாவும் கலந்துகொள்ள முடியாது. போபண்ணாவும் கலந்துகொள்ள முடியாது.

இந்தியாவில் திறமையான வீரர், வீராங்கனை களுக்குப் பஞ்சம் இல்லை. ஆனால், அவர்களை வளர்த்தெடுத்து, சரியான பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய நிர்வாகிகளுக்குத்தான் ஏகத் தட்டுப்பாடு!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு