Published:Updated:

வல்லரசின் வல்லுறவு!

கி.கார்த்திகேயன்

வல்லரசின் வல்லுறவு!

கி.கார்த்திகேயன்

Published:Updated:
##~##

மெரிக்காவே அதிர்ந்து உறைந்து நிற்கிறது. தங்கள் நாட்டின் கௌரவம் என நினைத்துவந்த ராணுவத்தின் கோர முகம் வெட்ட வெளிச்சமானதால் ஏற்பட்ட அவமானம் இது. ராணுவத்தை வெளிப்படையாக விமர்சிக்கவும் முடியாமல், அதன் தவறை மன்னிக்கவும் முடியாமல் சங்கடத்தில் உறைந்து நிற்கிறார்கள் அமெரிக்கர்கள். வல்லரசு ராணுவத்தின் மீதான பாலியல் வல்லுறவு புகார்தான் இந்த இக்கட்டுக்குக் காரணம்.

 அமைதியை நிலைநாட்டச் சென்ற இடங்களில் அமெரிக்க ராணுவத்தினர் கட்டவிழ்த்துவிடும் வழக்கமான பாலியல் அத்துமீறல்களைப் பற்றிய புகார் அல்ல இது. ராணுவத்தில் பணிபுரியும் அமெரிக்கப் பெண்களே பதவி அதிகார கேடயத்தோடு வேட்டையாடப்பட்ட கொடுமை. இந்த அவலத்தை உலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தது 'தி இன்விசிபிள் வார்’ (the invisible war) என்ற ஆவணப்படம். ராணுவத்தில் பணிபுரிந்து பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு, பணி விலக்கப்பட்ட பெண்களின் கண்ணீர்ப் பேட்டிகள் அடங்கிய தொகுப்பே இந்தப் படம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எவ்வளவு முயன்றும் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் பேசுகிறார் கொரி.

வல்லரசின் வல்லுறவு!

''நான் அமெரிக்கக் கடற்படையில் பணிபுரிந்தபோது, என்னுடன் பணிபுரிந்தவனே என்னைச் சீரழித்தான். அவனுக்கு என் அழகின் மீது ஈர்ப்போ, என்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையோ இல்லை. என்னை அவனுக்குப் பிடிக்கவில்லையாம். என்னைப் பார்த்தாலே அவனுக்கு வெறுப்பாக இருந்ததாம். அதைச் சொல்லிச் சொல்லியே அவன் என்னை... அவனுடைய வன்முறையை எதிர்த்த என்னைச் சுவரோடுவைத்து மோதினான். என் தாடையை உடைத்தான். ரத்தம் சிதறக்கிடந்தேன் நான். ஆனால், அவன் விடவில்லை. இப்படி எல்லாம் எனக்கு நடக்கும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நான் என் மேலதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அவர்கள் சிம்பிளாகச் சொன்னார்கள், 'எந்தப் பிரச்னையும் பண்ணாமல் ஒழுங்காகச் சென்று வேலையைப் பார்!’ அதோடு, மறுநாளும் அவனுடன் பணிபுரியுமாறு எனக்கு ஷிஃப்ட் போட்டார்கள்.

வல்லரசின் வல்லுறவு!

எத்தனை பெருமித உணர்வுடன் நான் ராணுவத்தில் சேர்ந்தேன். அது இதற்காகத்தானா? போராடினேன். அவனுக்குக் கொஞ்சம் சம்பளக் குறைப்பு செய்தார்கள். ஆனால், முறையற்ற நடத்தை என்று முத்திரை குத்தி என்னை ராணுவத்தில் இருந்தே வெளியேற்றினார்கள். இப்போதும் எனக்கு நடுக்கம் குறையவில்லை. எங்கு சென்றாலும் கர்த்தர் என்கூட வருகிறார் என்று நம்பி இருந்த நான், இப்போது ஒரு கத்தியையும் கூடவே எடுத்துச் செல்கிறேன்' என்று குமுறுகிறார் கொரி.

இராக் முகாமில் பணிபுரிந்தபோது இருவர் எல்லியை வல்லுறவுக்கு ஆளாக்கி அதை வீடியோவாகவும் பதிவுசெய்து நண்பர்கள் இடையே பரப்பி இருக்கிறார்கள். அந்த வீடியோ ஆதாரத்துடன் மேலதிகாரி களிடம் எல்லி புகார் அளிக்க, வீடியோவைப் பல முறை 'அலசிய’ அதிகாரிகள், 'அந்த வீடியோவில் நீ போதுமான எதிர்ப்பைக் காட்டவில்லையே... நீயும் அதை அனுபவிப் பதுபோலத்தான் இருக்கிறது' என்று நக்கலாகச் சொல்லி அவரது புகாரைத் தள்ளுபடி செய்துவிட்டனர்.

விமானப் படைப் பொறியாளரான ஜெஸிகாவைச் சீரழித்தவன் மீது விசாரணை நடந்துகொண்டு இருக்கும்போதே அவனுக்கு 'ஏர்மேன் ஆஃப் த இயர்’ விருது அளித்திருக்கிறார்கள்.

அலாஸ்கா முகாமில் பணிபுரிந்த ட்ரினாவுக்குப் போதை மருந்து கொடுத்து மீண்டும் மீண்டும் வல்லுறவுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.

இதில் இன்னொரு கொடுமை என்னஎன்றால், பெண்கள் மட்டுமல்ல; பெரும் அளவிலான ஆண்களும் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி இருக்கிறார்கள். கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டி, மூன்று பேர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கியதாக முப்பது வருடங்கள் கழித்து உண்மையைச் சொல்லி இருக்கிறார் மைக்கேல் மேத்யூஸ். அமெரிக்காவின் தரைப் படையோ, கப்பல் படையோ, விமானப் படையோ... ஒட்டுமொத்த ராணுவமும் இந்தப் பாலியல் வன்முறைகளை மறைமுகமாக ஆதரிக்கவே செய்திருக்கிறது.

ஆவணப்படத்தின் இயக்குநர் கிர்பி டிக் 'அமெரிக்க ராணுவத்தில் ஒரு பெண் எதிரியின் குண்டுக்குப் பலியாவதைவிட, பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம்!' என்று புள்ளிவிவர ஆதாரம் தெரிவிக்கிறார்.

1950-களில் அமெரிக்க ராணுவத்தில் பெண்கள் இணைவது நாட்டுக்குச் செய்யும் சேவை, அது நாட்டுக்கும் வீட்டுக்குமான ஒரு பந்தம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி பெண்களைப் பெரும் அளவில் ராணுவத்தில் சேர்த்தது அமெரிக்கா. அதனாலேயே, இப்போது ரத்த சம்பந்த உறவுகளே வீட்டுப் பெண்களைச் சீரழித்த வேதனையில் விம்மி வெடிக்கிறார்கள் அமெரிக்கத் தாய்மார்கள். உலகின் மிக வலுவான ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அவர்களுடைய சக தோழர்களிடம் இருந்தே பாதுகாப்பு தேவைப்படும் சாதனையும் அமெரிக்காவுக்குத்தானே சொந்தமாக இருக்க முடியும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism