Published:Updated:

தீக்குள் மகளை வைத்தால்...

இப்படியும் ஒரு 'அம்மா'!கே.கே.மகேஷ், இ.கார்த்திகேயன்படங்கள் : எல்.ராஜேந்திரன்

தீக்குள் மகளை வைத்தால்...

இப்படியும் ஒரு 'அம்மா'!கே.கே.மகேஷ், இ.கார்த்திகேயன்படங்கள் : எல்.ராஜேந்திரன்

Published:Updated:
##~##

கோவில்பட்டி அரசு மருத்துவமனையின் தீக்காயப் பிரிவு... குரலெடுத்துக் கதறக்கூடத் தெம்பு இல்லாமல் பொசுங்கிய வாழைக் குருத்தாகச் சுருண்டுகிடக்கிறாள் மாரிச்செல்வி. ஒரு மடக்கு இளநீரை உறிஞ்சி னால்கூட, வலி அவள் உயிரை உறிஞ்சுகிறது.

 மகள் மாரிச்செல்வியைத் தன் மடியில் கிடத்தி, அவளது காயங்களின் மீது விசிறிக்கொண்டு இருந்தார் அவளுடைய அப்பா கோபால். ஒரு வருடத்துக்கு முன் பூப்பெய்திய தன் மகளின் ஒவ்வொரு தேவையையும் அருகில் இருந்து அவரே கவனித்துக்கொள்கிறார். ஏன், மாரிச்செல்வியின் அம்மா எங்கே? மாரிச்செல்வி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார் அவளது அம்மா ராஜேஸ்வரி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மாரிச்செல்வியின் முகத்தில் இன்னும் மழலையின் சாயல்கூட மாறவில்லை. அம்மாவே தீ வைத்துக்கொளுத்தும் அளவுக்கு மாரிச்செல்வி செய்த குற்றம்தான் என்ன?  

தீக்குள் மகளை வைத்தால்...

முட்டும் அழுகையை அடக்கிக்கொண்டு பேசினார் கோபால். ''நான் ஹோட்டல்ல வேலை பாக்கேன் சார். எஞ் சம்சாரம் ராஜேஸ்வரி, வீட்டு வேலை பார்க்கா. மூத்தவன் முத்துப்பாண்டி, பத்தாப்பு படிக்கான். ஒத்த மக மாரிச்செல்வி, ஆறாப்பு படிக்கா. வயசுக்கேத்த வளர்ச்சி கிடையாது அவளுக்கு. ஆறு வயசுக்குப் பிறவுதான் பேசவே ஆரம்பிச்சா. ரொம்ப தாமசமாத்தான் பள்ளிக்கோடத்துல சேர்த்தோம். அவளுக்கு என்னைய ரொம்பப் பிடிக்கும். குழந்தையாவே இருந்ததால, எனக்கும் அவ மேல தனிப் பாசம்.

பதிமூணு வயசாச்சு... ஆனா, இன்னும் பேச்சு மட்டும் சரியா வரல. யாராவது ஏதாவது கேட்டா, முகத்தை முகத்தைப் பார்த்துட்டு, யோசிச்சு யோசிச்சு தாமசமாத்தான் பதில் சொல்லுவா. உடனே, பிள்ளைங்கள்லாம் அவளைத் திக்குவாய்னு கிண்டல் பண்ண ஆரம்பிச்சுட்டாவோ. பதிலுக்குப் பதில் பேசவோ, சண்டை போடவோகூட மாரிச்செல்விக்குத் தெரியாது. ரெண்டு நாளைக்கு அவங்ககூட சேர மாட்டா... அவ்வளவுதான்.

இப்படித் தெருவுல இவளை வெச்சு சிலர் கேலிக்கூத்து பண்ணு றது எஞ் சம்சாரம் ராஜேஸ்வரிக்குப் பிடிக்கலை. யாராவது மாரியை நக்கல் அடிச்சா, அவளுக்கு ஏகமாக் கோபம் வந்துடும். அவங்களைத் திட்டித் தீர்த்துட்டு, 'ஏலா! வெளியில போன... வெளக்குமாறு பிஞ்சிரும்’னு மகளையும் அதட்டுவா. அவளுக்கு மவனைத்தான் பிடிக்கும். அம்மாவுக்குப் பயந்தே மாரி வீட்டுக்குள்ளயே அடைஞ்சிகிடப்பா. அம்மா இல்லாத நேரத்துல, பிள்ளை வெளிய விளையாடப் போயிருவா. அது தெரிஞ்சா மகளோட மல்லுக்கு நிப்பா எஞ் சம்சாரம். அப்பல்லாம், 'அடியே... உன்னால என் நிம்மதியேபோச்சு. எங்கயாவது போய்த்தொலையேன். ஏன் என் ஆவியையும் ஜீவனையும் வாங்குற?’னு போட்டுத் திட்டுவா.

அவளுக்கும் நிம்மதி இல்ல. பிள்ளையப் பார்க்கவும் பாவமா இருந்துச்சி. அதனால ரெண்டு வருஷமா நூறு ரூவா பள்ளிக்கோடத்துக்குப் (மாதம் 100 ரூபாய் ஃபீஸ்) போயிட்டு இருந்தவள, இந்த வருஷம், விடுதிப் பள்ளிக்கோடத்துல சேர்த்துட்டேன். ஆனாலும், அடிக்கொருக்கா பிள்ளையப் பார்க்கப் போயிருவேன். ஒரு வாரம் போவலன்னாகூட, பரிதவிச்சுப்போயிருவா.

பத்து நாள் மிந்தி ராத்திரி 12 மணிக்கு திடீர்னு வீட்டுக்கு வந்து நிக்கிறா மாரி. திகீர்னு ஆயிடுச்சு. 'ஏலா, எப்படி வீட்டுக்கு வந்த? யாராது கொண்டாந்துவிட்டாங்களா?’னு கேட்டேன். கேக்கவே வேணாம்... எம் பொண்டாட்டிக்கு ஆங்காரம் தலைக்கு ஏறிடுச்சி. 'அய்யய்யோ! இவளோட ஒரே அச்சலாத்தியாப்போச்சே’னு கூப்பாடு போட்டவ, பிள்ளைய அடிக்கக் கை ஓங்குனா. நான் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்திவெச்சேன். ராத்திரி தூங்க மூணு மணிக்கு மேல ஆயிடுச்சு!'' என்று நிறுத்தியவர், மேற்கொண்டு பேச முடியாமல் உடைந்து அழத் தொடங்கிவிட்டார்.

தந்தை அழுவதை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டு இருந்த மாரிச்செல்வியிடம் பேச்சுக் கொடுத்தேன்.

'பாப்பா, வலி குறைஞ்சிருச்சா? பயப்படாதீங்க... சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்!'' கண்களை விரித்து எங்கள் முகத்தையே பார்த்தவள், மெதுவாகத் தலையாட்டினாள்.

''பாப்பா என்ன கிளாஸ் படிக்கிறீங்க?''

சின்ன யோசனைக்குப் பிறகு, 'ஆறாப்பு' என்றாள் மழலைக் குரலில்.

பேசிப் பேசி சகஜமாக்கி அந்த ராத்திரியில் நடந்த சம்பவத்தைக் கேட்டேன்.  

தீக்குள் மகளை வைத்தால்...

'அம்மாவுக்கு என்னைய பிடிக்கவே பிடிக்காதுண்ணே. நான் திக்கித் திக்கிப் பேசுறேனா... அதாம். பக்கத்து வீட்டுக்காரங்க எல்லாம் என்னைப் பார்த்துப் பார்த்து சிரிக்காங்கனு அம்மா என்கிட்ட சண்டை போடுவாங்க. எனக்கு ஆஸ்டல்ல இருக்கவே பிடிக்கல. அப்பாவைப் பார்க்கணும் பார்க்கணும்னுட்டே இருக்கும். ஒருநா ராத்திரி தூக்கமே வரலை. பைக்கட்டைத் தூக்கிக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன். கோவத்துல, 'இப்ப நீ உடனே ஆஸ்டலுக்குப் போவல... நான் வீட்டைவிட்டுப் போயிருவேன்’னு அம்மா சத்தம் போட்டாங்க. 'சரி விடு... காலையில பார்த்துக்குவோம்’னு சொல்லி அப்பா படுக்கவெச்சாரு.

ராத்திரிலாம் அம்மா தூங்கவே இல்லை. விடியக் காலையிலயே என்னை எழுப்பி, 'உடனே ஆஸ்டலுக்குப் போ’னு சொன்னாங்க. நான், 'மாட்டேன், வேண்டாம்மா’னு சொன்னேன். அவங்களுக்கு ரொம்பக் கோவம் வந்திருச்சி. 'சரி சனியனே... தண்ணியக் குடிச்சிட்டுப் படு’னு அடுப்பங்கரைக்குக் கூப்பிட்டாங்க. உள்ளே போனதும், என் மேல மண்ணெண்ணெயை ஊத்தித் தீவெச்சிட்டாங்க. எனக்கு ரொம்ப வலிச்சதுண்ணே. இங்கே வந்ததுல இருந்து அம்மா என்னை வந்து பார்க்கவே இல்ல... அவங்க எங்கண்ணே?'' என்று வெள்ளந்தியாகக் கேட்டாள் மாரிச்செல்வி.

''பாவி... இந்தப் புள்ளைக்குத் தீவைக்க அவளுக்கு எப்படித்தாம் மனசு வந்துச்சோ... 'அய்யோ... அம்மா’னு எம்புள்ள அலறுன சத்தம் கேட்டு எந்திரிச்சுப் பார்த்தா, உடம்பு பூரா தீயோட பிள்ளை அங்கேயும் இங்கேயும் அலைமோதிக்கிட்டு இருந்தா. அய்யய்யோனு பதறி, ஓடி அவளை உள்ளங்கையில ஏந்தித் தூக்கியாந்தேன். ராஜேஸ்வரியைக் கண்ணுலயே காங்கலை. பிள்ளை உடம்புல தீ வெச்சிட்டு, அவ ஓடிப்போயிட்டா. இவ உடம்புல இருந்த தீக்கு என் உள்ளங்கையே வெந்துபோச்சு. ரெண்டு நாள் கழிச்சி பிள்ளையப் பார்க்க அவ வந்தா. போலீஸ் பிடிச்சு இப்ப பாளையங்கோட்டை ஜெயில்ல வெச்சி ருக்கு'' என்றார் கோபால்.

''அறுபது சதவிகித தீக்காயத்தால் பாதிக் கப்பட்டு இருக்கும் மாரிச்செல்வியின் உயிருக்கு ஆபத்து இல்லை; ஆனால், மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவதற்கான காலக்கெடு எதுவும் இப்போதைக்கு நிர்ணயிக்க முடியாது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஆசைப்பட்டதுபோல இப்போது தந்தைக்கு அருகிலேயே இருக்கிறாள் மாரிச்செல்வி. ஆனால், அதற்கு அவள் கொடுத்த விலை?

ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தைதான்...

''பெற்ற மகளையே எரிக்கும் அளவுக்கு ஒரு தாயின் மனநிலை பாதிக்கப்பட என்னவெல்லாம் காரணமாக இருக்கும்?'' மனநல மருத்துவர் நம்பி யிடம் பேசினோம்...

''இந்தச் சம்பவத்தில் ராஜேஸ்வரி மனச்சிதைவு நோய்க்கு ஆளாகியிருக்கிறாரா என்பதைத் தீர்க்கமான பரிசோதனைகளின் மூலம் தீர்மானிக்க வேண்டும். தன் சொல்பேச்சை மகள் கேட்காத ஆத்திர மன நிலையில் இதைச் செய்திருந்தார் என்றால், அவரைச் சிறைக்கு அனுப்பலாம். ஆனால், மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு இப்படிச் செய்திருப்பாரே யானால், அவரை மனநலக் காப்பகத்துக்குத்தான் அனுப்ப வேண்டும். இப்படி விவரம் இல்லாமல் இருக்கும் மகள், தனக்குப் பின் எப்படி சுற்றத்தினரைச் சமாளிப்பாள் என்ற ஆதங்கம் அழுத்த ராஜேஸ்வரி தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளக் கூட முனைந்திருக்கலாம்.

பொதுவாகவே இப்போதெல்லாம் குழந்தை பிறக்கும்முன்னரே அதைப் பற்றிய எதிர்பார்ப்பு பெற்றோரிடம் அதிகமாக இருக்கிறது. 'இன்ன நிறத்தில் இருக்க வேண்டும்’, 'துறுதுறுவென்று இருக்க வேண்டும்’, என குழந்தை பிறப்பதற்கு முன்னரே அதைப் பற்றிய ஒரு பிம்பம் நம்மவர்களுக்கு உண்டாகிறது. அவர்கள் எதிர் பார்த்தாற்போல குழந்தை பிறக்காவிட்டால், அந்தக் குழந்தை மீது ஒரு உள்ளார்ந்த வெறுப்பு உண்டாகிவிடுகிறது. மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது கூடாது. முடிந்தவரை இயல்பான வாழ்க்கைக்கு மிக அருகில் அவர்களைக் கொண்டு செல்ல வேண்டும்.  குறைபாடுடைய குழந்தையைப் பெற்ற தாய் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகிறாள். எப்போதும் ஒருவித மனச்சோர்வு, மனத் தளர்ச்சி, அழுகை, தூக்கமின்மை ஆகியவையால் பாதிக்கப்படுகிறாள். அதுவே அந்தக் குழந்தை மீது காரணம் இல்லாமல் கோபத்தைத் தூண்டுகிறது. இந்த நிலையைப் பின்வரும் அறிகுறிகள் மூலம் ஆரம்பகட்டத்திலேயே கண்டுணர்ந்து மீண்டுவிடலாம்.

•  தனியாகப் பேசுவது

•  எங்கோ நாலு பேர் எதையோ பேசிக்கொண்டு இருந்தாலும் தன்னைப் பற்றிப் பேசுவதாக நினைத்துக்கொள்வது

•  யாரோ தன்னைப் பின்தொடர்வதாக நினைப்பது

•  தன்னைக் கொல்ல சதி நடப்பதான பயத்திலேயே இருப்பது!''

மாரிச்செல்வி போலச் பேச சிரமப்படும் குழந்தைகளை அதில் இருந்து மீட்டெடுப்பது குறித்த வழிகாட்டுதல் அளிக்கிறார் மனநல வளர்ச்சி மருத்துவர் பி.பி.கண்ணன்...

''இயல்பானவர்களுக்கே பதற்றமான தருணங்களில் பேச்சு தடுமாறும். அந்தப் பதற்றமே ஒரு பத்து மடங்கு அதிகமானால் வாய் திக்கும். பிறப்பிலேயே அல்லது வளர்ப்புச் சுழல் காரணமாகச் சில குழந்தைகளுக்கு திக்குவாய் ஏற்படலாம். அது மூச்சுப் பயிற்சி மூலமே முற்றிலும் தீர்க்கக்கூடிய குறைதான். வார்த்தை ஆரம்பிக்கும்போது, வார்த்தைக்கு நடுவில், வார்த்தையின் முடிவில், அல்லது ஒரு வார்த்தைக்கும் இன்னொரு வார்த்தைக்கும் நடுவில் நீண்ட இடைவெளி விடுதல் என்று திக்குவாய் பல வகைப்படும். அதில் மாரிச்செல்விக்கு எந்த வகை பாதிப்பு என்று கண்டறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும். உடனிருக்கும் நபர்களின் ஒத்துழைப்பும் இதில் மிக முக்கியம். அவர்கள் பேசும்போது வாயை உற்றுப் பார்க்கக் கூடாது, 'உனக்கு திக்குவாய் இருக்கிறது’ என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கக் கூடாது!''

- கவின் மலர், நாகப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism