Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

கோடானுகோடி வளங்களைக்கொண்டது கடல். ஆனால், தன் உடல், பொருள், உயிர் அத்தனையும் அடகுவைத்துக் கடலுக்குள் மூழ்கி எழும் மீனவனுக்கு மிஞ்சும் பணமோ, மீன் கழிவுகளைவிடக் குறைவானதுதான். இதிலும் சில ஆண்டுகளாகச் சிக்கல். கடல்புரத்தைக் காக்கும் சட்டங்கள் மூலம் கரையில் இருந்து மீனவர்களை வெகு தூரத்துக்கு அப்புறப்படுத்தும் அநியாயச் சட்டத்தை ஆட்சியாளர்கள் கொண்டுவர... கடல் இப்போது மீனவர்களின் வாழிடம் என்ற தகுதியை இழந்து, வேலை பார்க்கும் இடமாக மாறிவிட்டது.

தமிழகத்தின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டப் பகுதிகள் கடலைத் தொட்டு இருப்பது இயற்கையின் கொடை. வறண்ட பூமிப் பரப்புக்குள் வறுபடும் பல மாநிலங்கள் நம்மைப் பார்த்துப் பொறாமைப்படும் வகையில் கடலம்மாவின் ஒரு பக்க அரவணைப்பு தமிழகத்துக்கு உண்டு. அதே தாய், சுனாமிச் சீற்றம் காட்டினால்? துயரத் தைச் சொல்வதற்குக்கூடத் தமிழில்வார்த் தைகள் கிடையாது. ஆனால், கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், சுனாமியையும் தாண்டிய சோகத்தை 'தானே’ புயல் கடலூரின் கடலோரத்தில் விதைத்துச் சென்றிருப்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

'தானே’வால் உயிர்ச் சேதம் இல்லை. ஆனால், உடைமைகள் முழுச் சேதம் அடைந்தன. 100 ஆண்டு பலா மரங்களையே காற்று வேரோடு சாய்த்து இருக்கிறது என்றால், கடலோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமரங்கள், படகுகளின் கதி என்னவாகி இருக்கும்? ஒன்றோடு ஒன்றாக மோதவிட்டும் தூக்கி எறிந்தும் கடலுக்குள் இழுத்துச் சென்றும் எங்கே என்று தேட முடியாமலும் போன படகுகள் ஒன்றா... இரண்டா? கடலூரைச் சுற்றி அமைந்திருக்கும் கடலோரக் கிராமங் களைச் சுற்றி வந்தாலே கணக்கில்லாத சேதங்கள் கண்ணில் படும். கடலூர் கடற் சோகம் செய்திகளாகக்கூடப் பதிவாகாதது, வெந்த புண்ணில் வேல் பாய்ந்த கதை!

அந்தச் சோகத்தை 'விகடன்’ வழி உணர்ந்த லட்சக்கணக்கான வாசகர்கள் வாரி வழங் கிய நிதியின் மூலமாக தியாகவல்லி, நடுத் திட்டு, வசனாங்குப்பம், புதுநகர், அம்பலவாணன்பேட்டை, குறிஞ்சிப்பாடி, பத்திரக் கோட்டை, தாழம்பட்டு, வசனங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு அவரவர் தேவையை அறிந்தும் புரிந்தும் நிவாரண உதவிகளைத் திட்டமிட்டு அளித்து வந்த நமது துயர் துடைப்பு அணி, தாழங்குடா கிராமத்து மீனவர்களுக்குப் படகுகள் வழங்குவது என்று முடிவு எடுத்தது. ஆனால், ஒரு மீனவக் கிராமத்தில் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் முழுமையாக உதவி செய்யும் பலம் அரசாங்கத்துக்கு மட்டுமே உண்டு என்பதால், நம் திட்டமிடு தலின்படி 19 மீனவர்களுக்குப் படகுகளும் வலைகளும் வழங்கினோம்.

'தானே' துயர் துடைத்தோம்!

மரக்காணத்தைச் சேர்ந்த ஹரி-சுரேஷ் ஆகிய இருவரும் அந்த வட்டாரத்தில் படகுகள் தயாரிப்பதில் நிபுணர்கள். 'இப்படி ஒரு காரியத்துக்காக நீங்கள் படகுகள் தயாரித்து வழங்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டபோது, தங்களால் இயன்ற அளவு சகாய விலையில் படகு செய்து கொடுக்கச் சம்மதித்தார்கள். உயர்ரக தரமான வலைகள் வாங்கப்பட்டன.

படகு, வலைகளை மீனவர்களுக்கு வழங்கிய அன்று, அவர்கள் அடைந்த சந்தோஷத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. படகுகளை அவர்கள் வசம் ஒப்படைத்தவுடன் அவற்றைத் தட்டிப் பார்த்தார்கள்... அடிப் பாகத்தைக் குத்திப் பார்த்தார்கள்... இருவர் சேர்ந்து தூக்கிப் பார்த்தார்கள்... கூர்மையான பெருவிரல் நகத்தால் சுரண்டிப் பார்த்தார்கள்.

''சார்... நாங்களே பக்கத்துல உக்காந்து, 'அதப் பண்ணு... இதப் பண்ணு’னு சொல்லிச் செஞ்சிருந்தாகூட இப்படி சூப்பரா செஞ்சுருக்க மாட்டாங்க சார்!'' என்று அவர்கள் உள்ளார்ந்த மகிழ்வுடன் சொன் னார்கள். வலைகளை ஆசையோடு விரித்துப் பார்த்து மகிழ்ந்தனர்.

''நாங்க பள்ளிக்கூடத்துல ஒழுங்காப் படிச்சவங்க கிடையாது. இப்பவும் புஸ்தகம் படிக்கிறவங்க இல்லை. எங்கேயோ இருக்கிற வாசகர்கள்... ஊர் பேர் தெரியாத எங்களுக்கு இப்படி உதவி பண்ணுவாங்கனு நாங்க எதிர்பார்க்கலை. அந்த ஒவ்வொரு வாசகருக் கும் கடலம்மா நிச்சயம் அருள்புரிவா...''

- கடல் பார்த்துக் கை தொழுதவர்களின் கூற்றை ஆமோதிப்பதுபோல ஆர்ப்பரித்தன அலைகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism