பிரீமியம் ஸ்டோரி

•  '3’ படத்துக்குப் பிறகு, ட்விட்டரில்கூட அமைதியாகிவிட்ட தனுஷ், இப்போது மும்பையில் தங்கியிருக்கிறாராம். தானே பாடல்கள் எழுதி, தானே இசையமைக்கும் ஆல்பத்தின் வேலைகளில் மும்முரமாக ஈடுபடவே இந்த மும்பை வாசமாம். ஒய் திஸ் கலைவெறி? 

இன்பாக்ஸ்

•  கிறிஸ்டியானோ ரொனால்டோ, லூயிஸ் பிகோ போன்ற உலகின் முன்னணிக் கால் பந்து வீரர்களை உருவாக்கிய போர்ச்சுகல் நாட்டின் 'ஸ்போர்ட்டிங் லிஸ்பன் கிளப்’ அணியில் இணைகிறார் இந்தியக் கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி. ''இது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும் அதிர்ஷ்டம். இந்த அனுபவத்தை இந்திய அணியைப் பலப்படுத்தப் பயன்படுத்துவேன்'' என்கிறார் சேத்ரி. சமீபத்தில் முடிந்த யூரோ கோப்பையின் அரை இறுதி வரை முன்னே றிய போர்ச்சுகல் அணியில் விளையாடிய 23 வீரர்களில் 10 பேர் லிஸ்பன் கிளப் வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோல் மழை ரகசியம் தெரிஞ்சுட்டு வாங்க சுனில்!

இன்பாக்ஸ்

•  இங்கிலாந்து இளவரசி டயானாவின் இறுதி நாட்களை விவரிக்கும் 'டயானா’ படத்துக்கு எதிர்ப்பும் எதிர்பார்ப்பும் ஒரு சேர எகிறுகின்றன. நவோமி வாட்ஸ் என்ற இங்கிலாந்து நடிகை டயானாவாக நடிக்கிறார். இந்தப் படத்தின் இயக்குநர் ஜெர்மன் ஒலிவர் இயக்கிய பல படங்கள் ஆஸ்கர் பரிந்துரைக் குச் சென்று இருக்கின்றன. கமர்ஷியல் கல்லாவா... ஆஸ்கர் உலாவா?

இன்பாக்ஸ்

•  'பர்ஃபி’ படத்தில் இலியானாவுடன் ஏகப்பட்ட லிப் கிஸ் காட்சிகளில் நடித்திருக்கிறார் ரன்பீர் கபூர். அந்த முத்த அனுபவம்பற்றி பத்திரிகையாளர் சந்திப்பில் எழுந்த கேள்விக்கு, ''நடிப்புக்காக யாருக்கும் முத்தம் கொடுக்கலாம்!'' என்ற ரன்பீர் கபூர், சட்டென அருகில் அமர்ந்து இருந்த படத்தின் இயக்குநர் அனுராக் பாசுவுக்கு உம்மா கொடுத்துவிட்டார். எப்படிலாம் பத்தவைக்கிறாங்க பப்ளிகுட்டியை?

•  ஹாரி பாட்டர் நாவல்கள் மூலம் பில்லியனர் எழுத்தாளரான ஜே.கே.ரௌலிங், அடுத்து 'தி கேஷ§வல் வேகன்சி’ என்ற 512 பக்க நாவலை எழுதி முடித்துள்ளார். ஒரு நகரத்தில் கவுன்சில் தேர்தலின் முடிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள்தான் நாவலின் கதை. வளர்ந்த பாட்டர் வாசகர்களுக்காக!

இன்பாக்ஸ்

•  அமீர் கானின் 'தலாஷ்’ படம் வித்யா பாலன் நடித்த 'கஹானி’யின் சாயலில் இருப்பதால்தான் மூன்று, நான்கு முறை ரிலீஸ் தேதி தள்ளிவிட்டது என்ற செய்தியை மறுத்திருக்கிறார் படத்தின் இயக்குநர் ரீமா. படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரான அமீர் கான், 'படத்தில் சில நிமிடங்கள் வர இருக்கும் ஒரு கேரக்டரில் ரஜினிகாந்தை நடிக்கவைக்கும் முயற்சிகள் காரணமாகத் தான் இந்தத் தாமதம்!’ என்கிறார். எந்திரன் எஃபெக்ட்!

இன்பாக்ஸ்

•  கேட் வின்ஸ்லெட் முதல் சமீபத்திய நாயகி பிளாக் லைவ்லி வரை ஏகப்பட்ட பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்ட லியானார்டோ டி கேப்ரியோ ஒருவழியாகத் திருமணம் செய்துகொள்ளும் மூடுக்கு வந்திருக்கிறார். மாடல் அழகி எரின் ஹிதர்டனுடன் லிவிங் டுகெதர் தொடர் பில் இருக்கும் லியானார்டோ, ''ஹிதர்டன் என் அம்மா வைப் போல அதிக மன உறுதிகொண்டபெண்!'' எனச் சிலாகிக்கிறார். அடிச்சுக்காம வாழுங்க!

இன்பாக்ஸ்

• கேரள சினிமாவில் வாரிசு நடிகர்களின் அட்டகாசம்தான். பழம்பெரும் நடிகர் சுகுமாரன் மகன் பிருத்விராஜ், மம்மூட்டி மகன் துல்கர், பிரபல நடிகர் சீனிவாசன் மகன் வினீத் மூவரும்தான் இப்போது மல்லுவுட்டின் நம்பிக்கை நட்சத்திரங்கள். மூவர் நடித்த படங்களுமே சமீபத்தில் ஒன்றாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. இதில் மம்மூட்டி மகன் துல்கர் நடித்த 'உஸ்தாத் ஓட்டல்’ படம் சூப்பர் டூப்பர் ஹிட். நடிப்பதுடன், இயக்கவும் செய்யும் வினீத் இயக்கிய 'தட்டத்தின் மரயத்து’ படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. வெற்றிகள் குவியும் வரை சந்தோஷம்!

•  நாட்டின் பெயரை மியான்மர் என்று மாற்றிய பிறகும் பர்மா என்றே குறிப்பிட்டுவந்த ஆங் சான் சூ கிக்குக் கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது மியான்மர் அரசு. ''பர்மா என்பது நாட்டில் பெரும்பான்மையாக வசிக்கும் பர்மன் இனத்தவர்களைக் குறிக்கும் பெயராகும். சிறுபான்மை இனத்தவர்களைப் புறக்கணிக்கும் இந்தப் பெயரை எக் காரணம் கொண்டும் சொல்லக் கூடாது!'' என்று ஆங் சான் சூ கியை அதட்டி இருக்கிறது ராணுவ அரசாங்கம். திரும்பக் கைது செய்யக் காரணம் தேடுறாங்களோ?!

இன்பாக்ஸ்

•  இப்போதெல்லாம் பார்ட்டி, பஃப் என எங்கே யும் தென்படுவது இல்லை த்ரிஷா. உடலைமெலிய வைக்கும் 'ஸீரோ சைஸ்’ முயற்சியில் இருக்கிறார். கடுமையான டயட், 4 மணி நேர ஜிம் உழைப்பு என அதிவேகமாக எடையைக் குறைத்துவருகிறார். 'உன் அழகே அந்த பப்ளி கன்னங்கள்தான். அதைக் கெடுத்துராம இரு!’ என்பது நண்பர்களின் அறிவுரையாம். யாருப்பா அந்த நண்பர்கள்?

•  பாலஸ்தீனத் தலைவர் யாசர் அராஃபத் 'பொலோனியம்’ விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக வெளிவந்திருக்கும் பரிசோதனை முடிவுகள், பாலஸ்தீனியர்கள் மத்தியில் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. அராஃபத் தன்னுடைய இறுதி நாட்களில் பாரீஸில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் இயற்கை மரணம் அடைந்தார் என்றே பிரேதப் பரிசோதனை முடிவுகள் கூறின. ஆனால், 'பொலோனியம்’ கொடுத்துக் கொல்லப்பட்டார் என்பது இஸ்ரேல் மீது பலத்த சந்தேகங்களை எழுப்பி உள்ளது. 'பொலோனியம்’ என்பது கதிரியக்கத் தனிமம். இதைச் சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளில்தான் பிரித்து எடுக்க முடியும். ஆகையால், இஸ்ரேல் திட்டமிட்டு எங்கள் தலைவரைக் கொன்றுவிட்டது என்கிறார்கள் பாலஸ்தீனியர்கள்.  இஸ்ரேல் - பாலஸ்தீன உறவை இந்த விஷயம் மேலும் மோசமானதாக்கி இருக்கிறது. மூன்றாம் உலகப் போரை மூட்டிவிடாதீங்க!

இன்பாக்ஸ்

•  கடன் கழுத்தை நெரிக்கிறது விஜய் மல்லையாவுக்கு! 7,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் மல்லையா நிறுவனத்தை மீட்க வங்கிகள் மற்றும் மத்திய அரசிடம் கடன் கேட்டிருந்தார். ஆனால், முடிவு சாதகமாக இல்லை. இப்போது மல்லையாவுக்குச் சொந்தமான மும்பை கிங்ஃபிஷர் ஹவுஸ் மற்றும் கோவாவில் உள்ள சொகுசு பங்களா, 90 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு ஹெலிகாப்டர்கள் அனைத்தும் ஏலத்துக்கு வந்திருக்கின்றன. ஆனாலும், கடன் தீராது என்கிறார் மல்லையா கவலையாக. சோகத்துல கிங்ஃபிஷர் அடிப்பாரோ!

•  பி.சி.சி.ஐ. அமைப்பு ராகுல் டிராவிட் பெயரை 'ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது’ பரிந்துரைக்கு அனுப்பியிருக் கிறது. ஆயிரக்கணக்கில் குவியும் ட்விட்டர் வாழ்த்துகளுக்கு 'நன்றி’ என்று சிம்பிளாகப் பதில் சொல்லி இருக்கிறார் ராகுல். விருது கிடைச்சாலும் அதுதான் சொல்வார்!

இன்பாக்ஸ்

•  ஃபார்முலா-1 கார் ரேஸின் ஒரே பெண் வீரரான மரியா டி வில்லோட்டா பங்குபெற்ற லண்டன் பயிற்சிப் போட்டியின்போது நடந்தது இந்தப் பயங்கரம். மழை பெய்த வேளையில் மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் பறந்த மரியாவின் கார், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து டிராக்கின் வெளியே நின்ற டிரக் ஒன்றின் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மரியாவின் உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால், ஒரு கண்ணில் பார்வைத் திறன் பறிபோய்விட்டது. நலம் வாழ வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு