Published:Updated:

என் மகளைக் கொன்றுவிடுங்கள்!

கவின் மலர், எஸ்.ராஜாசெல்லம்படங்கள் : க.ரமேஷ்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ங்கள் குழந்தை கருவில் இருக்கும்போது அடிவயிற்றில் உதைப்பதை  அணுஅணுவாக ரசிக்காத தாய் இருக்க முடியாது. ஆனால், ஒரு தாயே தன் குழந்தையைக் 'கருணைக் கொலை செய்துவிடுங்கள்’ என்று மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கைவைப்பது எத்தனை துரதிர்ஷ்டவசமானது?

 ஈரோடு, சூரம்பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி - ஜெயா தம்பதி தான் இப்படி ஒரு இதயம் உறையும் கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். இந்தத் தம்பதிக்கு மதுமிதா, மித்ரா என இரு பெண் குழந்தைகள். இதில் கடைக்குட்டி மித்ரா எல்.கே.ஜி. படிக்கிறார். ஆனால், மூத்த மகள் மதுமிதாவுக்கு 14 வயதானபோதும் இன்னும் அவர் பச்சைக் குழந்தைதான்.

மதுமிதாவின் தாய் ஜெயாவிடம் பேசினேன்.

என் மகளைக் கொன்றுவிடுங்கள்!

''எங்களுக்குச் சொந்த ஊர் கும்பகோணம். பிறந்தப்பவே மதுமிதாவுக்கு மன வளர்ச்சி சரியில்லைனு தெரிஞ்சுடுச்சு. போகாத இடம் இல்லை; பார்க்காத வைத்தியம் இல்லை. எங்க வீட்டுக்காரர் தச்சுத் தொழிலாளி. எங்க வருமானத்தை வெச்சுக்கிட்டு முடிஞ்ச வரைக்கும் போராடிப் பார்த்துட்டோம். ஒருகட்டத்துக்கு அப்புறம் மதுமிதாவைப் பராமரிக்குறது எங்களுக்குப் பெரிய கஷ்டமாகிடுச்சு. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஈரோட்டில் இருக்குற ஒரு காப்பகத்துல அவளைச் சேர்த்துடலாம்னு தெரிஞ்சவங்க சொன்னாங்க. அங்கே போனோம். ஆனா, ஓரளவு எழுந்து நடக்குற, சொந்த வேலைகளைத் தானாவே செஞ்சுக்கிற நிலையில் இருக்கிறவங்களைத்தான் காப்பகங்கள்ல சேர்த்துக்கிடறாங்கனு அப்புறம்தான் தெரிஞ்சுச்சு. எங்க பொண்ணு இருந்த நிலையைப் பார்த்து எல்லாருமே தயங்கினாங்க. அதுக்காக குறைபட்டுக்க முடியாதுனு ஈரோட்டுலயே வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கிட்டோம்.

மதுமிதா படுற கஷ்டங்களைப் பார்த்துட்டு ரெண்டாவது குழந்தையைப் பத்தி ரொம்ப வருஷம் எங்களால யோசிக்கக்கூட முடியலை. ஒன்பது வருஷ இடைவெளிக்கு அப்புறம்தான் சின்னவ மித்ரா பிறந்தாள். இப்போ மித்ரா ஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருக்கா. மதுமிதாவை யூனிஃபார்ம் போட்டு ஸ்கூலுக்கு அனுப்புற பாக்கியம்தான் எங்களுக்குக் கிடைக்காமப்போச்சு. அவ வளர வளரத்தான் பராமரிக்குறது பெரிய துயரமாயிடுச்சு. தூக்கம் வராம ராத்திரி, பகலா கத்திக்கிட்டே இருக்கா. இதனால, எங்கே போனாலும் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்ககூட பிரச்னை ஆயிடுது. புதுசா வீடு தேடிப் போறதும், அடுத்த சில மாசங்கள்லேயே வீட்டு ஓனர் காலி பண்ணச் சொல்லிடறதும் புது வீடு தேடறதும்னு கொஞ்சம்கூட நிம்மதி இல்லாத வாழ்க்கை.

இந்தச் சூழ்நிலையில மதுமிதா பெரிய பொண்ணு ஆகிட்டா. குளிக்கிறது, சுத்தமா இருக்குறதுனு எதையுமே அவளுக்குப் புரியவைக்க முடியலை. எந்நேரமும் நான் கூடவே படுத்திருந்தாத்தான் அமைதியா இருக்கா. எங்க வருமானத்துல மதுமிதாவுக்கு நவீன ஆஸ்பத்திரிகளில் வெச்சுப் பார்க்க முடியலை. அவளை மட்டுமே கவனிச்சுக்கிட்டு இருந்தா, சின்ன பொண்ணோட எதிர்காலமும் வீணாகிடும்னு கவலையா இருக்கு.

என் மகளைக் கொன்றுவிடுங்கள்!

இதுக்கு இடையில, மாசா மாசம் அவளுக்குக் கொடுத்துக்கிட்டு இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயிரம் ரூபாய் உதவித்தொகையையும் அரசாங்கம் திடீர்னு மூணு மாசமா நிறுத்திடுச்சு. அது எங்களுக்கு இன்னும் நெருக்கடியை அதிகமாக்கிட்டதாலதான் இப்படியரு கோரிக்கையோடு கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். பத்து மாசம் சுமந்து பெத்த நானே 'என் மகளைக் கருணைக் கொலை பண்ணிடுங்க’னு மனுவை எடுத்துக் கிட்டு கலெக்டர் ஆபீஸ் போய் நின்னப்ப, நான் அடைஞ்ச வேதனை எந்தத் தாய்க்கும் வரக் கூடாதுங்க'' என்கிறார் ஜெயா கண்ணீருடன்.

கருணைக் கொலை செய்யும்படி கொடுக்கப்பட்ட மனுகுறித்து மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் கேட்டபோது, ''இது ரொம்ப வேதனையான விஷயம். கருணைக் கொலை செய்ய நம்ம சட்டத்துல இடம் கிடையாது. அந்தப் பெண்ணுக்குக் கிடைக்க வேண்டிய உதவித்தொகை சரிவரக் கிடைக்க இப்போ ஏற்பாடு பண்ணி இருக்கோம். காப்பகத்தில் அந்தக் குழந்தையைச் சேர்க்கவும் நடவடிக்கை எடுத்திருக்கோம். ஆனால், கடைசியில் அந்தப் பெற்றோர் மனம் மாறி குழந்தையை அனுப்ப மறுத்துட் டாங்க. இப்போ மருத்துவ உதவிக்கு மட்டும் அரசு மற்றும் தனியார்கள் மூலம் முயற்சி நடந்துக்கிட்டு இருக்கு. இதுபோக இலவச வீட்டுமனை வழங்கவும் அரசுக்குப் பரிந்துரை செஞ்சிருக்கோம்'' என்றார்.

சென்னை தாம்பரத்தை அடுத்த லட்சுமிபுரத்தில் உள்ள குழந்தைகளுக்கான இல்லமான 'உதவும் உள்ளம்’ மதுமிதாவை வரவேற்கத் தயாராக இருக்கிறது. அதன் நிறுவனர் லட்சுமி அம்மாள் ''மதுமிதாவை நாங்கள் வைத்துக்கொள்கிறோம். அவளுக்குஎன்றே தனியாக ஒருவரை ஏற்பாடு செய்து அவளைப் பார்த்துக்கொள்கிறோம். அவள் எங்கள் பராமரிப்பில் இருக்கட்டும்'' என்று முன்வந்திருக்கிறார்.

மதுமிதாவின் பெற்றோர் மனம் மாறி தாங்களே வைத்துக்கொள்வதாகக் கூறியுள்ள சூழலில், ''அவர்களுக்கு எப்போது சிரமம் என்றாலும் குழந்தையை இங்கே வந்து சேர்க்கலாம். மதுமிதாவை வரவேற்க 'உதவும் உள்ளம்’ காத்திருக்கிறது'' என்கிறார் லட்சுமி அம்மாள்.

மதுமிதாவுக்கு உதவ இன்னும் இந்த உலகத்தில் பல நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்கின்றன!    

''நாம் அப்படித்தான்!''

டாக்டர் செந்தில்வேலன்

என் மகளைக் கொன்றுவிடுங்கள்!

''கருணைக் கொலைக்கு ஆங்கிலத்தில்  euthanasia  என்பார்கள். அதில் Active eutha-nasia என்பது நேரடியாக நோயாளியை விஷ ஊசி மூலம் உயிரை எடுப்பது. Passive euthanasia என்பது நோயாளியின் உயிர் ஆதாரங்களை எடுத்தல். அதாவது, ஒரு சில நோயாளிகளுக்கு மூளை மரணம் அடைந்து உடலில் உயிர் மட்டும் ஒட்டியிருக்கும். வென்டிலேட்டர் மூலம் அவர்கள் மூச்சுவிட்டுக் கொண்டு இருப்பார்கள். குளுகோஸ் ஏறிக்கொண்டு இருக்கும். இந்த உபகரணங்களை அவர் உடலில் இருந்து எடுத்துவிட்டால், மூன்று மணி நேரம் வரை உயிர் இருக்கும். அதன்பின் மூச்சு நின்று விடும்.

ப்ளாடர் கேன்சர், கிட்னி கேன்சர் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் வலியைத் தாங்கிக்கொள்ள முடியாது. அந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குப் பதில் இறந்துவிடலாம் என்று நோயாளி நினைக்கும் அளவுக்கு வலி இருக்கும்.

சில நாடுகளில் இதுபோன்ற கொடிய நோய்களுக்கு கருணைக் கொலை செய்ய லாம் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், நம் நாட்டில் அப்படி இல்லை. அதேசமயம், நம்முடைய கிராமங்களில் கருணைக் கொலைகள் வெவ்வேறு வடிவங்களில் இன்றைக்கும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

நம் மக்களுக்கு உள்ள சில நம்பிக்கைகளே பெரும்பாலான குழந்தைகள் பெற்றோரிடம் வளரக் காரணமாக இருக்கிறது. 'இத்தகைய குழந்தைகளை வளர்க்கும் தகுதியும் திறமை யும் இருப்பதால்தான் இந்தக் குழந்தை நமக்குப் பிறந்திருக்கிறது’ என்று அவர்கள் எண்ணும் அளவுக்கு அவர்களுக்கு நாங்களே சில சமயம் 'ஈகோ ஸ்ட்ரெங்க்தெனிங்’ செய்வோம். ஆனால், வெள்ளைக் காரர்கள் அப்படி இல்லை. அவர் களுக்கு ஒரு மன வளர்ச்சியற்ற குழந்தையைப் பராமரிக்க முடிய வில்லை என்றால், 'சரி... இந்தக் குழந்தை இப்படித்தான் என்பதை ஏற்றுக்கொண்டு, அதைப் பார்த்துக் கொண்டு தங்கள் வேலையையும் செய்துகொண்டு இருப்பார்கள். ஆனால், நம்மவர்கள் அந்தக் குழந் தைக்காகவே தாங்கள் வாழ்வதாக எண்ணி வாழ்வார்கள். அவர்களுடைய வாழ்க்கையே அந்தக் குழந்தையைச் சுற்றித்தான் இருக்கும். அப்படி இருப்பதால்தான், இதுபோன்ற விரக்தி பிறக்கிறது. ஒருவேளை இந்தத் தாய் விரக்தியில், ஓர் உச்சகட்ட உணர்வில் மகளை கருணைக் கொலை செய்யச் சொல்லி இருக்கலாம். ஆனால், அப்படி நடந்துவிட்டால் அந்தக் குற்ற உணர்வை அவரால் தாங்க முடியாது. ஏனெனில் நம் சமூகம் அப்படித்தான்!''

''எந்தக்  கொலையானாலும் குற்றம்தான்!''

வழக்கறிஞர் சுதா

என் மகளைக் கொன்றுவிடுங்கள்!

''இந்தியச் சட்டப்படி, கருணைக் கொலைக்கு நம் நாட்டில் இடம் இல்லை. அப்படிப்பட்ட கொலைகளை கிரிமினல் குற்றமாகவே சட்டம் பார்க்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒரு குடிமகன்(ள்) வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும் இருக்கின்றன. ஒவ்வொரு தனி மனிதரின் சுதந்திரமும் இங்கே முக்கியம். யாருடைய உயிரையும் யாரும் எடுக்க உரிமை இல்லை. எவ்வளவு கடினமான நிலையில் நோயாளி இருந்தாலும், பராமரிக்க அடுத்தவர்கள் சிரமப்பட்டாலும், உயிரைப் போக்கிவிட்டால் அது கொலைதான். மும்பையில் அருணா ஷான்பாக்  என்ற பெண் 37 ஆண்டுகளாகக் கோமாவில் இருக்கிறார். மூச்சு விடுவதைத் தவிர, அவரது உடலில் வேறு எந்த அசைவும் இல்லை. அவரைக் கருணைக் கொலை செய்துவிடக் கேட்டு சமூக ஆர்வலர் பிங்கி விரானி தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் 'கருணைக் கொலை செய்யக் கூடாது’ என்று கூறி அனுமதி மறுத்து தீர்ப்பு அளித்தது. அந்தப் பெண் தனது மருத்துவமனையில் பணியில் இருக்கும் போது, அவரைப் பாலியல் பலாத்காரம் செய்ததால் இந்த நிலைக்கு ஆளானார். அதனால், அந்தப் பெண் பணி ஆற்றிய மருத்துவமனையின் நிர்வாகம்தான் அவரை மருத்துவமனையிலேயே ஓர் அறையில் வைத்துப் பராமரித்துவருகிறது. 37 ஆண்டுகள் கோமாவில் இருக்கும் ஒருவருக்கே நம் சட்டம் கருணைக் கொலையை அனுமதிக்க வில்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு