Published:Updated:

இந்தியாவின் இதயம்!

டி.எல்.சஞ்சீவிகுமார்படம் : டால்ஸ்டாய்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ன்னியாகுமரி தொடங்கி மகாராஷ்டிர மாநிலம் நர்மதை நதி வரை 1,600 கி.மீ. நீளத்துக்கு அதிகபட்ச உயரமாக 3,900 அடி தொட்டு நிற்கும் மேற்குத் தொடர்ச்சி மலை... இனி உலகின் பாரம்பரியச் சின்னம்!

 யுனெஸ்கோ அமைப்பின் பாரம்பரியப் புராதனச் சின்னங்கள் பாதுகாப்புக் குழு கடந்த வாரம் மேற்குத் தொடர்ச்சி மலையை உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்து உள்ளது. இமயமலையைவிடப் பல லட்சம் ஆண்டுகள் முன்னரே தோன்றிய ஆதாரங்களை மண்ணியல் ஆய்வுகளில் வெளிப்படுத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையில்... நீலகிரி, அகத்தியர் மலை என்ற அரிதான உயிர்க்கோளக் காப்பகங்கள் இரண்டு இருப்பது தனிப் பெருமை.  

அமேசான் காடுகள், கிழக்கு இமயமலை உட்பட உலகில் பல்லுயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கும் 18 காடுகளுள் மேற்குத் தொடர்ச்சி மலைக்குத்தான் முதல் இடம். 1,00,080 சதுர கி.மீ. பரப்பளவுக்கு விரிந்துகிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள்,  இந்திய நிலப்பரப்பில் ஆறு சதவிகிதம். இந்தியாவின் 30 சதவிகித வன உயிரினங்கள், 14 தேசியப் பூங்காக்கள், 44 வன உயிரினச் சரணாலயங்கள்... மேற்குத் தொடர்ச்சி மலைக்குள் அடக்கம்.

இந்தியாவின் இதயம்!

மேற்குத் தொடர்ச்சி மலையைப் புராதனச் சின்னமாக்கத் தொடர்ந்து கோரிக்கைவைத்துப் போராடி யவர்களுள் ஒருவரான 'ஓசை’ அமைப்பின் தலைவர் காளிதாசன், பாரம்பரியச் சின்ன அந்தஸ்து வழங்கப்பட்டதற்கான காரணங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

''மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சோலைக் காடுகள்தான் தாவரங்களின் பரிணாம வளர்ச்சியின் உச்சத்தில் இருப்பவை. உலகின் மிக முதிர்ந்த, மிகப் பழமையான தாவரங்கள் இங்கு உள்ளன. மலை ஏற ஏற... மலையின் நிறம் மாறிக்கொண்டே இருக்கும். அதற்குக் காரணம், ஒவ்வொரு அடுக்கிலும் அமைந்து இருக்கும் தாவர வகைகளின் இயல்பு. மலை அடிவாரத்தில் அதிக அளவு வெப்பம் நிலவும். அங்கு முட்புதர்களும் நீர் அதிகம் தேவைப்படாத தாவரங்களும் அடர்ந்து இருக்கும். ஆயிரம் அடிகள் மேலே ஏறினால் இலையுதிர்க் காடுகள். இங்கு தரைப் பகுதி மண்ணை நம்மால் பார்க்கவே முடியாது. கானகத்தின் தரைப் பகுதியைப் பல அடி உயர இலைக் குப்பைகள் போர்த்தி மெத்தைபோல

இந்தியாவின் இதயம்!

நிறைத்திருக்கும். பெரும்பாலும் பெரிய, அகன்ற மரங்கள் தங்களின் மிகப் பெரிய கிளைகளை விரித்து, இலைகளை உதிர்த்து இருக்கும் நிலையில், இங்கு சூரியக் கதிர்கள் ஊடுருவி வர்ணஜாலம் காட்டும்.

இன்னும் ஆயிரம் அடிகள் மேலே சென்றால் பசுமை மாறாக் காடுகளின் செழிப்பு பசேலென வரவேற்கும். மரங்கள், செடி கொடிகள், சிற்றாறுகள், ஓடைகள் எனத் திரும்பிய திசை எல்லாம் பச்சைக் கம்பள விரிப்புதான். அதற்கு மேலான உயரத்தில் அமைந்து இருப்பவைதான் சோலைக் காடுகள். சூரியக் கதிர் கள்கூட ஊடுருவ முடியாத அடர்த்தியும் பசுமையும் நிறைந்தவை இந்தச் சோலைக் காடுகள். மலை உச்சியில் அதிக அளவு பெய்யும் மழை நீரை ஒரு சொட்டுகூட வீணாகாமல் சோலைக் காட்டின் வேர்கள் பஞ்சுபோலத் தனக்குள் உறிஞ்சி சேகரித்துக்கொள்ளும். இதனால், மழை நீர் மலையில் வழிந்தோடி வீணாகாமல், மலையின் அடிமடியில் சேகரிக்கப்பட்டு ஊற்று நீராக ஆங்காங்கே வெளியேறும். அப்படியான ஊற்றுகள்தான் பிரமாண்ட ஆறுகளின் பிறப்பிடமாக அமைந்து இருக்கும். தென் இந்தியாவின் அனைத்து ஆறுகளின் உற்பத்திமடி இந்த சோலைக் காடுகள்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் கேரளத் தில் இருக்கும் அமைதிப் பள்ளத்தாக்குக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது என்று பலருக் குத் தெரியாது. மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்கவே வசிக்கும்  உயிரினம் சிக்காடா. அதாவது, சில்வண்டு. மலைத் தொடர் எங்கும் இதன் ரீங்காரம் எதிரொலிக்கும். ஆனால், ஒரு சிக்காடாகூட நம் கண்ணுக் குப் புலப்படாது. ஆனால், அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் இந்த சிக்காடாக்கள் கிடையாது. காரணம், அங்கு இருக்கும் தாவர வகைகள் சிக்காடாவை விரட்டி அடிக்கும் என்பதால், ரீங்காரச் சத்தம் ஏதும் இல்லாமல் 'அமைதிப் பள்ளத்தாக்கு’ என்ற பெயர் உருவானது.

அங்கேதான் குந்திப்புழா என்ற ஆறு ஓடுகிறது. 1970-ல் இங்கு கேரள அரசு மின் தேவைக்காக அணை கட்ட முயன்றபோது, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலையிட்டு அந்தத் திட்டத்தை நிறுத்தினார். இந்த குந்திப்புழா ஆற்றின் சிறப்பு என்ன தெரியுமா? பனிமலைப் பகுதிகளைத் தவிர்த்து, இந்தியாவின் அத்தனை ஆறுகளிலும் மழைப் பொழிவுக் காலங்களில் சேறு கலந்த செம்புலப்பெயல் நீர் கரைபுரண்டு ஓடும். அப்படி மழைக் காலத்தில் ஆற்றில் சேறு கலந்த நீர் ஓடினால், அங்கு மனிதனால் சேதாரம் ஏற்பட்டு இருக்கிறது என்று அர்த்தம். மணல் அள்ளி இருப்பார்கள், அணைக்கட்டுக்காக ஆற்றைத் தோண்டி இருப்பார்கள். இதனால் ஏற்பட்ட மாற்றங்கள் ஆற்று நீரோட்டத்தில் எதிரொலிக்கும். ஆனால், எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் குந்திப்புழாவில் செம்புலப்பெயலைப் பார்க்க முடியாது. காரணம், அங்கு இன்னும் மனிதன் தன் ஆக்கிரமிப் புக் கரங்களை நீட்டாமல் இருப்பதுதான். இப்படிப் பல லட்சம் ஆண்டுகளாக இயற்கையின் நியதி மாறாமல் தெள்ளத்தெளிவாக பன்னீர்போலத் தண்ணீர் ஓடுவது குந்திப்புழாவில் மட்டும்தான்!  

ஓரிட வாழ்விகள் என்று சில உயிரினங்களைச் சொல்வார்கள். அதாவது, குறிப்பிட்ட பகுதியைத் தவிர, உலகில் வேறு எங்கும் இவை வசிக்காது. வசிக்க இயலாது. மரணித்துவிடும். உலகின் மிகப் பெரிய காடான அமேசானைவிட அதிகமான ஓரிட வாழ்விகள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கின்றன. மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கும் 508 பறவை இனங்களில் மலபார் இருவாச்சி, நீலகிரி சிரிப்பான், வெள்ளை வயிறு வால் காக்கை உட்பட 10 பறவைகள் ஓரிட வாழ்விகள். மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்து இருக்கும் 210 மீன் வகைகளில் 114 வகை மீன்கள் ஓரிட வாழ்விகள். 650 தாவர வகைகளில் 353 ஓரிட வாழ்விகள். 4,000 வகை தாவரங்களில் 1,500 ஓரிட வாழ்விகள்.

இந்தியாவின் இதயம்!

மேற்குத் தொடர்ச்சி மலையைப் பற்றி இன்னும் பல பெருமைகளை அடுக்கலாம். ஆனால், அந்த மலைத் தொடரில் இப்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே அடர்ந்த காடு கள் உள்ளன. இரண்டு பங்கு காட்டுக்குள் மனிதனின் கொடிய கரங்கள் அழுத்தமாகப் பதிந்துவிட்டன.

இன்னமும் தன் ரகசியத்தைப் பொதிந்து வைத்திருக்கும் அந்த ஒரு பங்கு வனத்தில் இருந்துதான் தென் இந்தியாவின் முக்கிய நதிகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி மற்றும் சிறு நதிகள் அனைத்தும் உற்பத்தி ஆகின்றன. மேற்குத் தொடர்ச்சி மலை மட்டும் இல்லையென்றால், தென் இந்தியா என்பது ஒரு வறண்ட பாலைவனமாகத்தான் இருக்கும். இந்தியாவின் 40 சதவிகித நீர் தேவை யைப் பூர்த்திசெய்வது மேற்குத் தொடர்ச்சி மலைதான்.

மேற்குத் தொடர்ச்சி மலையை வெறுமனே ஒரு சுற்றுலா தலமாகத் தான் நாம் பார்க்கிறோம். 'வளர்ச்சிப் பணி கள்’ என்ற போர்வையில் காடுகளைச் சகட்டுமேனிக்கு அழித்துவருகிறோம். கர்நாடகம், கோவா மாநில எல்லைகளில் படர்ந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை யில் சுரங்கங்கள் தோண்டப்படுகின்றன. ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்கள் இந்த மலைத் தொடரின் வளங்களை அதீத வேகத்தில் சூறையாடிக் கொண்டு இருக்கின்றன. இந்த நிலையில், நிச்சயம் யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு மேற்கு மலைத் தொடரின் பசுமையைப் பாதுகாக்கும்.''  

உலகம் உணர்ந்துகொண்ட உண்மையை உள்ளூர்வாசிகளும் நமது அரசாங்கமும் உணர்வதுதான் இப்போது மிக முக்கியம்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு