Published:Updated:

"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது!"

ரீ.சிவக்குமார்படம் : ச.இரா.ஸ்ரீதர்

##~##

னந்த விகடனில் தொடராக வெளிவந்து உலகம் முழுக்கத் தமிழர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற கவிப்பேரரசு வைரமுத்துவின் 'மூன்றாம் உலகப் போர்’ நூல் வெளியீட்டு விழா!

கலைஞர் கருணாநிதி, ஜெயகாந்தன், கமல்ஹாசன் - இந்த முப்பெரும் நாயகர்கள்தான் விழா நாயகர்கள். விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னரே காமராஜர் அரங்கம் நிரம்பி வழியத் தொடங்கியது. விழா நாயகர்களுக்கு இயற்கை உரத்தில் விளைந்த ரோஜாச் செடிகள் வழங்கும் நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது. 'ஒவ்வொருவருக்குப் பிரத்யேக நிறத்தில் ரோஜாச் செடி’ என்ற அறிவிப்புக்குப் பிறகு கருணாநிதிக்கு மஞ்சள் ரோஜாச் செடி வழங்கப்பட்டது. 'பல காலம் சண்டை போட்டு இப்போது சமாதானக் கொடி பிடித்து இருப்பதால் ஜெயகாந்தனுக்கு வெள்ளை ரோஜா’ என்றது அறிவிப்பு. 'கலைஞானி கமல்ஹாசனுக்கு எந்த ரோஜா செடி வழங்க வேண்டும்?’ என்ற கேள்வி

"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது!"

பார்வையாளர்களிடம் ஆரவாரத்தைத் தூண்ட, சிவப்பு ரோஜாக்கள் செடியைப் பெற்றுக்கொண்டார் கமல்.

'மூன்றாம் உலகப் போர்’பற்றி ஒரு குறும்படம் திரையிடப்பட்ட பிறகு, நூல்பற்றி பத்து வாசகர்கள் தங்கள் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். அதில் ஒருவர் 'நீயா... நானா’ கோபிநாத். ''மனிதன் இரைக்காக எதை எதையோ வேட்டையாடி, கடைசியில் சுயநினைவை இழந்து தன்னையே வேட்டையாடும் கொடூரத்தைப் பதிவுசெய்கிறது இந்தப் புத்தகம்'' என்றார்.

வாழ்த்துரை வழங்கிய கமல்ஹாசன், ''என்னை சினிமா கதாநாயகன் என்கிறார்கள். ஆனால், என் நிஜமான கதாநாயகர்கள் இங்கே இருக்கிறார்கள். ஜெயகாந்தன் புத்தகத்தை வாசிக்கத் தெரியாத வயதில், என் அம்மா வெள்ளெழுத்து காரணமாக சகோதரியை வாசிக்கச் சொல்லிக் கேட்பார். அதை ஒட்டுக்கேட்டு வளர்ந்தவன் நான். இந்தப் புத்தகத்தைப் பற்றி இங்கே நான் பேசுவது குறைவாக  இருக்கலாம். ஆனால், இதைப் பற்றிப் பல நண்பர்களிடம் நான் பேசிக்கொண்டே இருக்கிறேன்'' என்றார்.

"மனிதப் பூச்சிகள் பூமியைத் தின்றுவிடக்கூடாது!"

'எழுத்துச் சிங்கம்’ ஜெயகாந்தன் பேச எழுந்ததுமே கூட்டத்தில் ஆரவாரம். ''இந்த நாவலை நான் முழுசாப் படிக்கலை. 'நேரம் கிடைக்கும்போது புரட்டிப் பாருங்க’னு வைரமுத்து கொடுத்தார். நானும் புரட்டிப் பார்த்தேன். மூடநம்பிக்கைகள் இருக்கிற மாதிரி, விஞ்ஞானபூர்வமான மூடநம்பிக்கைகளும் வளர்ந்துவரும் காலகட்டம் இது. ஓசோனில் ஓட்டை விழுந்திருக்கிறது, உலகத்துக்கு ஆபத்து என்ற கருத்துகள் திணிக்கப்படுகின்றன. என்றோ மனிதர் சாகப்போவதற்கு இப்போது ஏன் கவலைப் பட வேண்டும்? நாளை உலகம் அழிந்துவிடும், நாளை மறுநாள் அழிந்துவிடும் என்று பலமுறை சொல்லிவிட்டார்கள். ஆனால் உலகம் அழியவில்லை, வாழ்கிறது, வாழும். மனிதர்கள் அமரத்துவம் பெற்றவர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இலக்கியம் என்பது நம்பிக்கையை விதைக்க வேண்டும். அந்த நம்பிக்கையை வைரமுத்து இந்தப் புத்தகத்தில் விதைத்திருக்கிறார்'' என்று தன் எண்ணத்தைப் பதிவுசெய்தார்.

நிறுத்தி நிதானமாக மிக விரிவாகத் தனது தலைமை உரையை வாசித்தார் கருணாநிதி. வைரமுத்துவின் 36-வது நூலான இது, கருணாநிதியால் வெளியிடப்படும் 16-வது நூல்.

''இது ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்தபோதே ஒவ்வொரு வாரமும் வைரமுத்துவைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கருத்துகளைத் தெரிவிப்பேன். ஐம்பூதங்கள்பற்றித் தமிழ் இலக்கியங்களிலேயே குறிப்பிடப்பட்டு இருக்கிறது'' என்றவர், புறநானூற்றுப் பாடலையும் சுட்டிக் காட்டி, அதுகுறித்து 'காலப் பேழையும் கவிதைச் சாவியும்’ நூலில் தான் எழுதியிருப்பதைக் குறிப்பிட்டு, '' 'மூன்றாம் உலகப் போர்’ என் நூலின் பரிணாம வளர்ச்சி'' என்றார். ''முதல் இரண்டு போர்கள் அறிவிக்கப்பட்டு நடந்த யுத்தம். தம்பி வைரமுத்து குறிப்பிடும் மூன்றாம் உலகப் போர், அறிவிக்கப்படாமலேயே ஆரம்பித்த யுத்தம். மனிதனுக்கும் இயற்கைக்குமான யுத்தம்'' என்றவர் சுற்றுச்சூழல் பிரச்னைகள்குறித்து விரிவாகவே பேசினார். 'உலக அளவில் உற்பத்தியாகும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணாகிறது’ என்ற ஐ.நா. மன்றத்தின் புள்ளிவிவரத்தை விரிவாக விளக்கினார். ''கன்னம் கிள்ளிச் சொல்லிக்கொடுப்பது வெற்றி. கன்னத்தில் அடித்துச் சொல்லிக் கொடுப்பது தோல்வி'' என்று வரிகளை வாசித்தவர், ''எனக்காகவே எழுதியிருக்கிறார்போல'' என்று முடித்தார் முத்தாய்ப்பாக!

ஏற்புரை வழங்கிய வைரமுத்து, ''நான் விழாவை ரசிக்கவில்லை. ரசிப்பது மேடையில் இருக்கும் முப்பெரும் மக்களைத்தான். கலைஞர் எமன் வந்தால்கூட அவனையும் கூட்டணி யில் சேர்த்துக்கொண்டு, 'எருமைச் சின்னத்தில் கண்ணம்மாபேட்டையில் நிற்கக் கடவது’ என்று சொல்லிவிடுவார். ஜெயகாந்தன் எழுதி 20 வருஷங்கள் ஆச்சு. ஆனால், அவர் பெயரை அறிவித்தாலே விழாவில் ஆரவாரம் எழுகிறது. 'ஒரு கைதியின் டைரி’ படப்பிடிப்பில் 16 அடி உயரத்தில் இருந்து ஒரு கூண்டு கமல் மீது விழுந்துவிட்டது. ஆனால், அவருக்கு எதுவும் ஆகவில்லை. விசாரித்தபோது சொன்னார், 'அடிபடப்போகிறது என்ற செய்தி என் மூளைக்குப் போய்விட்டது. உடனே, என் கல்லீரலைக் கல்லாக்கிக்கொண்டேன்’ என்றார்.

''நீங்களும் நானும் இந்தப் பூமிக்கு வந்துபோகும் பூச்சிகள். மனிதப் பூச்சிகள் பூமி யைத் தின்றுவிடக் கூடாது. கல்வியாளர் களுக்கு ஒரு வார்த்தை... பாடப் புத்தகங் களைத் தயாரிப்பவர்களுக்கு ஒரு வார்த்தை... அரசாங்கங்களுக்கு ஒரு வார்த்தை... ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடப் புத்தகங்களிலேயே புவி வெப்பமயமாதல் பற்றிய பாடத்தை வையுங்கள்'' என்றபோது ஆர்ப்பரித்தது அரங்கம்.

அடுத்த கட்டுரைக்கு