Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் தானே துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

தானே தாண்டவமாடிய தியாகவல்லியில் முதல் தவணையாக 22 வீடுகளைக் கட்டிக் கொடுத்தோம். இதோ அடுத்த 22 வீடுகளை அந்தப் பகுதியில் கட்டி முடித்து உரியவர் களிடம் ஒப்படைத்து இருக்கிறோம்.  

 'தானே’ தாக்கி ஆறு மாதங்கள் முழுமையாக உருண்டோடிவிட்டன. ஆனால், அந்தப் பகுதி மக்களின் துயரங்களுக்கு இன்னும் முழு நிவாரணம் கிடைக்கவில்லை. வீடு இழந்த சொந்தங்கள்... மரங்களைப் பறிகொடுத்த மக்கள்... எதிர்காலம் எது என்று தெரியாமல் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். லட்சக்கணக்கான விகடன் வாசகர்கள் அள்ளிக் கொடுத்த நிதியை வைத்து 'விகடன் துயர் துடைப்பு அணி’ பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் கட்டித்தரும் திட்டத்தின்படி முதல்கட்டமாக தியாகவல்லி கிராமத்தில் 22 குடும்பங்களுக்கான வீடுகளைக் கட்டி அதற்கான திறப்பு விழா கடந்த ஏப்ரல் 20 அன்று நடந்தது. அந்தப் பணிகள் முடிந்ததும் அடுத்தகட்டமாக 22 வீடுகளைக் கட்டித் தரத் திட்டமிட்டோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தியாகவல்லி கிராமத்தில் 7 வீடுகளும் லெனின் நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர் ஆகிய மூன்று பகுதிகளில் தலா 5 வீடுகளுமாகக் கட்டித்தருவதற்காகப் பயனாளிகளைத் தேர்வுசெய்தோம். புயல் வேகத்தில் பணிகளை முடுக்கிவிட்டோம். 'அடுத்த மழைக்குள் அவர்களுக்கு நல்ல கட்டடம் அமைத்துக் கொடுத்தால்தான் நிம்மதியாக அவர்கள் வாழ முடியும்!’ என்பதை நாம் தீர்மானமாகக் கொண்டோம்.  

'தானே' துயர் துடைத்தோம்!

''நீங்க கட்டித்தரலைன்னா, நாங்க இப்படியேதான் இருந்திருப்போம். எங்களால மறுபடியும் வீடு கட்டி வாழ முடியாது. கூலி வேலைக்குப் போய் கிடைக்கிற பணத்தைவெச்சு எங்களால தினமும் சாப்பிடத்தான் முடியும். இதுல எங்க போயி வீடு கட்டுறது?'' என்ற விரக்தி மனநிலையில்தான் அதில் பெரும்பாலான குடும்பங்கள் இருந்தன.

முன்பு தியாகவல்லியில் நாம் வீடு கட்டித்தரும்போதே, இந்த மக்கள் கண்ணீரோடு நம்முன் வந்து, இத்தகைய கோரிக்கையை வைத்து நின்ற காட்சி மனதைத் தைத்தது.

''எல்லாருக்குக்கும் உங்களால கட்டித் தர முடியலேன்னாலும் பரவாயில்லை. கொஞ்ச பேருக்காவது செஞ்சு கொடுங்க. அதுக்காக நாங்க வம்பு வளர்க்க மாட்டோம்'' என்று இம்மக்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை விதித்துக்கொண்டும் விட்டுக்கொடுத்தும் செயல்பட்டத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

வேலையைத் தொடங்கிய இரண்டு மாதத்தில் 22 வீடுகளும் நான்கு பகுதிகளில் மஞ்சளாகப் பூக்க ஆரம்பித்தன. இவற்றை முறைப்படி பயனாளிகளுக்கு ஒப்படைக்கும் விழா கடந்த 14-ம் தேதி சனிக்கிழமை அம்பேத்கர் நகர் பகுதியில் நடந்தது. ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்களுக்கும் வேட்டி, சேலை, பழங்கள், இனிப்பு வகைகளைத் தாம்பாளத்தில் வைத்து அவர்களது இல்லத்துக்கான சாவியை வழங்கினோம்.

பலரும் கண் கலங்கிய நிலையில் அந்தப் பொருட்களைப் பெற்றுக்கொண்டு, தங்களது வீடுகளை நோக்கிக் குதூகலமாகக் கிளம்பிச் சென்றார்கள்.

''நாலு பக்கமும் கீத்து வெச்சுதான் முன்ன வீடு கட்டி இருந்தோம். புயல்ல பெரிய புளிய மரமே விழுந்துருச்சு... அதுல எங்க வீடெல்லாம் எந்த மூலைக்கு? அப்ப பெய்ஞ்ச மழையில வீட்டு சுத்து வாட்டத்துல இருந்த கீத்தெல்லாம் மழையில நனைஞ்சி மேற்கூரை பாரம் தாங்காம தரையோட தரையா விழுந்துடுச்சு. ஒவ்வொரு முறையும் வீட்டுக்கு உள்ளேயும் வெளியேயும் தவழ்ந்துதான் போனோம்.

'தானே' துயர் துடைத்தோம்!

எங்களுக்கு மொத்தம் நாலு குழந்தைங்க. எல்லாருமே படிக்கிறாங்க. வீட்டுக்காரருக்கு எப்பவாவதுதான் வேலை இருக்கும். நிரந்தரச் சம்பளம்னு எதுவும் கிடையாது. இந்த நிலைமையில எப்படி நிம்மதி கிடைக்கும்னு கிடந்தோம். அதுனால சொந்த வீடு கட்டுற கனவெல்லாம் எங்களுக்கு இல்லை. ஆனா, அதை நீங்க நிறைவேத்திக் கொடுத்திட்டீங்க. உங்க மூலமா நாங்க தெய்வத்தை நேர்ல பார்க்குறோம்'' என்று கண்கலங்கச் சொன்னார் லெனின் நகரைச் சேர்ந்த மல்லிகா.  

தியாகவல்லியைச் சேர்ந்த சேட்டு - வள்ளி தம்பதியினரது வாழ்க்கையும் இப்படிப்பட்டதுதான். ''ரெண்டு ஏக்கர் முந்திரி குத்தகை எடுத்தா வருஷத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் லாபம் வரும். தானே புயலுக்கு முன்னாடி நிலைமை இது. இப்ப 2 ஏக்கர் நிலம் அப்படியே முழுசா காலி. ஒரு ரூபாகூட எடுக்க முடியாது. இதுதான் இப்போ நிலைமை'' என்ற சேட்டு, ''புயலப்ப விடியக்காலை நாலு மணி இருக்கும். அப்ப அடிச்ச சூறைக்காத்துல வீட்டு மேற்கூரை பாதி சேதமாயிடுச்சு. பேஞ்ச மழையில மனைவியோட சேலையைக் கொண்டு பிள்ளைகளோட பாடப் புஸ்தகங்களை மட்டுமே மறைக்க முடிஞ்சது. மூத்த பொண்ணு காலேஜ் படிக்குறா, பையன் ஸ்கூல் படிக்குறான். இவங்க ரெண்டு பேர் வாழ்க்கையும் என்ன ஆகுமோனு ரொம்ப கவலையில் இருந்தேன். இப்போ விகடன் வாசகர்கள் கட்டிக் கொடுத்த வீடு என் பாதி சுமையை இறக்கிவெச்சிருச்சு. இந்தப் பிள்ளைங்கள்லாம் நல்லாப் படிச்சு நல்ல உத்தியோகத்துக்குப் போயி நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாங்கன்னா, அதுக்கு முழுக் காரணமும் விகடன் வாசகர்கள்தான். அந்த நன்றியை எங்க தலைமுறையே மறக்காது'' என்று நெகிழ்ச்சியுடன் முடித்தார் சேட்டு.

''வீட்டுக்காரர் கேரளத்துக்கு சிலிண்டர் ட்ரிப் அடிக்கிறப்போ, விபத்துல கால் முறிஞ்சு போயிடுச்சு சார். எங்களுக்கு மூணு பொண்ணு, ஒரு பையன். ரெண்டு பொண்ணுங்களோட சம்பாத்தியத்துல தான் குடும்பமே ஓடிட்டு இருக்கு. ஆத்தோரமா வீடு இருக்கிறதால, மழைக் காலத்துல தண்ணிலாம் வீட்டுக்குள்ள வந்துடும். சாதாரண நாள்லயே உயிருக்கு உத்தரவாதம் இல்லாமதான் வாழ்ந்துட்டு இருந்தோம். தானே புயல் அடிச்சப்போ பக்கத்து மாடி வீட்ல தஞ்சம் அடைஞ்சதால தப்பிச்சோம். வீடெல்லாம் காத்தோட போச்சு. வீட்டைச் சரி பண்ணக்கூட காசில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். ஆனா, இப்ப எங்க சந்தோஷத்தைச் சொல்ல வார்த்தை இல்லை. சொந்த வீட்ல குடியிருப்போம்னு நாங்க நினைச்சுக்கூடப் பார்த்தது இல்லை. ஆனா, இப்போ மழைத் தண்ணிகூட உள்ளே வராத அளவுக்கு உசத்திக் கட்டுன வீட்டை கட்டிக் கொடுத்திருக்கீங்க. மழைக் காலத்துலகூட யார் வீட்டுக்கும் ஓடிப் போகணும்னு அவசியம் இல்லனு நினைச்சாலே உடம்பெல்லாம் சிலிர்த்துக்குது!'' என்றார் பெரியார் நகரைச் சேர்ந்த காசியம்மா.

அம்பேத்கார் நகரைச் சேர்ந்த குப்புசாமி - அவரஞ்சி தம்பதி, ''நாங்க சவுக்கு வெட்டுறது, முந்திரி பொறுக்குறதுனு சின்னச் சின்ன கூலி வேலை செய்வோமுங்க. பல இடங்கள்ல விகடன் சார்புல உதவுறாங்கனு கேள்விப்பட்டு, 'நம்ம ஏரியாவுக்குலாம் அவங்க வர மாட்டாங்களா’னு ரொம்ப ஏக்கத்தோட இருந்தோமுங்க. ஆனா, சரியான நேரத்துல வந்து எனக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கீங்க. ஏற்கெனவே நாங்க இருந்த வீடு ரொம்பச் சின்னது. எல்லாரும் ஒரே சமயத்துல வீட்டுக்குள்ள வர முடியாது. சாப்பாடு சமைக்குறதுகூட வெளியேதான். ஆனா, இப்ப நீங்க கட்டிக் கொடுத்த வீடு சாப்பிட, தூங்க, சமைக்க ஏத்த மாதிரி எல்லா வசதியோடவும் இருக்கு. அதைவிட முக்கியமா கழிப்பறை கட்டித் தந்திருக்கீங்க. கிராமத்துப் பொண்ணுங்க ஆயுசுக்கும் அனுபவிக்கிற வேதனைல இருந்து பெரிய விடிவுக்காலம் கிடைச்சிருக்கு'' என்றார்கள் நன்றிப் பெருக்கோடு.  

கட்டிக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டுக்குப் பின்னாலும் லட்சக்கணக்கான விகடன் வாசகர்களின் வியர்வைத் துளி இருக்கின்றது. காலத்தோடும் நேரத்தோடும் விரைந்து செய்யப்பட்ட உதவி நிச்சயம் அவர்களின் வாழ்வில் பிரகாசமான நம்பிக்கை ஒளியை ஏற்றிவைக்கும்.

கை கொடுத்தோம்.... தானே துயர் துடைத்தோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism