Published:Updated:

கொஞ்சம் தியாகம்... நிறைய சாதனை!

க.நாகப்பன்

கொஞ்சம் தியாகம்... நிறைய சாதனை!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

தீபிகா பல்லிக்கல்... 20 வயதில் சர்வதேச ஸ்குவாஷ் தர வரிசையில் 15-வது இடம். கோலிவுட் கை வலிக்க காலிங் பெல் அடித்தும் கண்டுகொள்ளாமல் விளையாடும் நம்பர் ஒன் பெண்.

 ''ஜோஸ்னாதான் எப்பவும் ஜெயிச்சுட்டே இருப்பாங்க. இப்போ எப்படி ராக்கெட் வேகத்துல முன்னாடி வந்தீங்க?''

''எகிப்தில் பிரபலப் பயிற்சியாளர் அமிர் வாவிக் எனக்குப் பயிற்சி கொடுத்தார். 'வெற்றிகளும் தோல்விகளும் கலந்ததுதான் விளையாட்டு. ஆனால், தோல்விகளால் துவண்டுபோகக் கூடாது’னு எனக்கு அழுத்தமாக் கத்துக்கொடுத்தார். அவர்கிட்ட கோச்சிங் எடுத்த பின்னாடி என் தன்னம்பிக்கை பல மடங்கு அதிகரிச்சது. இப்போ, எப்போ விழுந்தாலும் டக்குனு எழுந்துடுறேன். போட்டி இருக்கோ, இல்லையோ தினமும் அஞ்சு மணி நேரம் பிராக்டீஸ் பண்றேன். தூக்கத்தைக் குறைச்சிட் டேன். ஊர் சுத்துறது, சினிமா, சாட்டிங்னு பல விஷயங் களை இதுக்காக மிஸ் பண்ணினேன். ஹாங்காங்,

கொஞ்சம் தியாகம்... நிறைய சாதனை!

மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்காட்லாந்து, சீனா, கொரியானு நிக்க நேரம் இல்லாம உலகத்தையே சுத்தி வந்துக்கிட்டு இருக்கேன். கொஞ்சம் தியாகம் பண்ணினேன். நிறைய சாதிக்க ஆரம்பிச்சிட்டேன்!''

'' 'விளையாட்டில் ஆணாதிக்கம் அதிகமா இருக்கு’னு சானியா மிர்சா சொல்லி இருக்காங்களே?''

''அது உண்மை. டென்னிஸ்ல மட்டும் இல்லை. நிறைய விளையாட்டுகள்ல ஆணாதிக்கம் அதிகம் இருக்கு. சானியா மிர்சாவின் கருத்துக்கு நானும் ஜுவாலா கட்டாவும் குரல் கொடுத்தோம். அதுக்கு அப்புறம் ஸ்குவாஷ் ராக்கெட் ஃபெடரேஷன் அர்ஜுனா விருதுக்கு என் பேரை நாமினேட் பண்றதை நிறுத்திட்டாங்க. நிறையப் பேர் இந்த வருஷம் அர்ஜுனா விருது உனக்குத்தான்னு நம்பிக்கை தந்தாங்க. நான் ரொம்ப உற்சாகமா இருந்தேன். ஸ்குவாஷ் ஃபெடரேஷன் நடந்துக்கிட்ட விதம் என்னைக் காயப்படுத்தி இருக்கு!''

''ஒலிம்பிக்ல ஸ்குவாஷ் விளையாட்டு இடம்பெறலையே?''

''எனக்கு அது பெரிய வருத்தம். ஆனா, 2020 ஒலிம்பிக்ல ஸ்குவாஷ் இருக்கும்னு ஒலிம்பிக் இன்டர்நேஷனல் கமிட்டி அறிவிச்சு இருக்காங்க. இன்னும் எட்டு வருஷம்தானே... எழுதிவெச்சுக்குங்க... 2020 ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ்ல நான் தங்கப் பதக்கம் வாங்குவேன்!''

''நம்பர் ஒன் எப்போ?''

''விஸ்வநாதன் ஆனந்தை ஒரு நிகழ்ச்சியில் சந்திச்சேன். 'அங்கிள்... 10 வருஷத்துக்கு முன்னே நீங்க டாப் 15-ல இருந்தீங்க. இப்போ நீங்கதான் நம்பர் ஒன் செஸ் சாம்பியன். நானும் உங்களை மாதிரி நம்பர் ஒன் ஸ்குவாஷ் சாம்பியன் ஆவேன்’னு சொன்னேன். 'என்னோட தன்னம்பிக்கை என்னை உயர்த்துச்சு. அதே மாதிரி உன்னோட தன்னம்பிக்கை உன்னை உயர்த்தும்’னு வாழ்த்தினார். என் மேல், என் ராக்கெட் மேல் எனக்கு அபார நம்பிக்கை உண்டு. சீக்கிரம் வந்துடுவேன்!''

''நடிக்க வர மாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களே?''

''பாலிவுட், கோலிவுட், மல்லுவுட்னு நிறைய ஆஃபர்கள் வந்துட்டேதான் இருக்கு. ஆனா, எனக்கு விருப்பம் இல்லை. இப்போ ஸ்குவாஷ்ல நல்ல கிராஃப்ல போய்ட்டு இருக்கேன். சினிமா பக்கம் போனா, என் ஃபிட்னெஸ் போயிரும். அதே மாதிரி இந்த வயசுல படிப்பும் முக்கியம். பி.ஏ. முடிச்சிட்டேன். லண்டன்ல எம்.ஏ. படிக்கலாம்னு இருக்கேன். சினிமாவை அப்புறம் பார்க்கலாம்!''

''ஸ்குவாஷ் தவிர, உங்களுக்குப் பிடிச்ச விளையாட்டு எது?''

''டென்னிஸ். விம்பிள்டன், பிரெஞ்ச் ஓப்பன்னு எந்தப் போட்டிகளையும் மிஸ் பண்ண மாட்டேன். கிரிக்கெட்டை ரொம்ப அபூர்வமா பார்ப்பேன். ஐ.பி.எல், பார்த்துப் பார்த்து கிரிக்கெட் போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு!''

''டைம் பாஸ்?''

''நேரம் கிடைக்கும்போது ஷாப்பிங் போவேன். எனக்கு பிங்க், பிளாக் கலர்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட ஸ்குவாஷ் ராக்கெட், லேப்டாப், ஷூஸ், டிரெஸ்னு நிறைய கலெக்ஷன்ஸ் பிளாக், பிங்க் கலர்கள்லதான் இருக்கும். சமீபத்தில் வாங்கின கேமராகூட பிங்க் கலர்தான். ஃபாரின் டூர்ல பிங்க் கலருக்காகவே ஷாப்பிங் போய்ட்டு வருவேன்!''

''உங்களோட கனவுத் திட்டம்?''

''முன்னாள் நேஷனல் ஸ்குவாஷ் சாம்பியன் மிஷா கிரேவல் உலகத் தர வரிசையில் 27-வது இடத்தில் இருக்காங்க. என் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஜோஸ்னா சின்னப்பா 40-வது இடத்தில் இருக்காங்க. நாங்க மூணு பேரும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கணும். இதைத் தவிர வேற எதுவும் இல்லை!''