Published:Updated:

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் 'தானே' துயர் துடைப்பு அணி

'தானே' துயர் துடைத்தோம்!

களத்தில் விகடன்விகடன் 'தானே' துயர் துடைப்பு அணி

Published:Updated:
##~##

தானேவால் பாதிக்கப்பட்ட சகோதரர்களின் வாழ்வில் இருளைப் போக்கி விளக்கேற்றுவதுதான் நம் அனைத்து நலத்திட்டங்களின் அடிப்படை நோக்கம். அதில் ஒன்று, வெளிச்சத்தையே கொடுப்பது!

 வறுமையின் எல்லையில் அல்லல்படும் குடும்பத்துப் பிள்ளைகள் தங்கிப் படிக்கும் விடுதிகள் கடலூர் மாவட்டத்தில்தான் ஏராளம். ''நாங்கள் சாப்பாடு துணிமணி இல்லாமக் கஷ்டப்பட்டாலும் பரவாயில்ல... எங்க பிள்ளைகளாவது அந்தத் துன்பம் தெரியாமப் படிச்சு முன்னேறட்டும்னு பள்ளிக்கூட ஹாஸ்டல்ல தங்கிப் படிக்கட்டும்னு அனுப்பிவெச்சோம். ஆனா, மின்வெட்டு எங்க பிள்ளைங்க  படிப்பையும் பாழாக்கிடுச்சு. காசு பணம்னா கடன் வாங்கியாவது கொடுக்கலாம். ஆனா, கரன்ட்டுக்கு எங்க போறது?'' என்று செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நம்மிடம் கண்ணீருடன் சொன்னார்கள். அவர்களின் ஆதங்கம் களைவதற்காக வறுமையில் வாடும் மாணவர்கள்  தங்கிப் படிக்கும் விடுதிகளில் சோலார் விளக்குகளை அமைக்க முடிவெடுத்தோம். முதல்கட்டமாக சிதம்பரம் நந்தனார் விடுதிகள் இரண்டுக்கும் சோலார் விளக்குகள் அமைத் துத்தரப்பட்டன. இவை 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரத்தில் அமைத்துத் தரப்பட்டதால், அந்தப் பிள்ளைகள் கவலை இல்லாமல் படித்து சிறப்பாகத் தேர்வு எழுதக் கூடிய சூழல் கிடைத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'தானே' துயர் துடைத்தோம்!

இரண்டாம் கட்டமாக கடலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவியர் விடுதிகள், மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவியர் விடுதிகள் அனைத்தையும் கணக்கெடுத்தோம். அதில் சில விடுதிகளைத் தேர்ந்தெடுத்து அங்கு சோலார் விளக்குகளைப் பொருத்தும் நம் ஆர்வத்துக்கு மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ உடனடியாக அனுமதி வழங்கினார்.

கடலூர், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், சேத்தியாத்தோப்பு, சிதம்பரம், புவனகிரி, விருதாச்சலம்... என்று கடலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 27 ஊர்களில் உள்ள பள்ளி விடுதிகளுக்குத் தேவையான சோலார் விளக்குகளை ஜூலை மாதம் முழுவதும் பொருத்தினோம். புதுச்சேரியைச் சேர்ந்த சரவணா எனர்ஜி சிஸ்டம் விளக்குகளைத் தயாரித்து வழங்கியது.

அரசு மாணவ - மாணவியர் விடுதி என்றாலே, அதனுடைய பராமரிப்புபற்றிச் சொல்லவே வேண்டாம். முழுமையான, தொடர்ச்சியான பராமரிப்பு இல்லாமல் எப்போதும் கேட்பாரற்று, உடைந்த ஜன்னல்களுடன் இருளில் மூழ்கிக்கிடந்தன பல விடுதிகள். சோலார் விளக்கு வெளிச்சத்தைக் கண்டதும் அந்தப் பிள்ளைகளின் கண்களில் வெட்டிய மின்னலைக் காணக் கண் கோடி வேண்டும்.

'தானே' துயர் துடைத்தோம்!

உற்சாகமாகப் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்த வடலூர் மாணவியர் விடுதியின் கயல்விழி, ''இப்ப எங்களுக்கு மிட் டெர்ம் டெஸ்ட் நடக்குது. முன்னாடி எல்லாம் மூணு மணி நேரம் கரன்ட் போய்டும். படிக்க ஆசையா இருந்தாலும் இருட்டுல சும்மாவே உக்காந்திருப்போம். எத்தனை மெழுகுவத்திதான் கொளுத்த முடியும். அதுவும் அந்த வெளிச்சத்துல படிச்சா பகலெல்லாம் கண்ணு எரிஞ்சுட்டே இருக்கும். ஆனா, இந்த சோலார் விளக்கு போட்டதும் எங்களுக்கு கரன்ட்  கவலையே இல்லை. இப்போ சந்தோஷமா ஒருமுகமாப் படிக்க முடியுது. இவ்ளோ கஷ்டத்துக்கு நடுவுல என்னைப் படிக்க வைக்கிற அப்பா அம்மாவுக்கு நான் நிறைய மார்க் வாங்குறதுதானே ஒரே சந்தோஷமா இருக்கும். அந்த சந்தோஷத்தை நான் நிச்சயம் கொடுப்பேன்'' என்று பூரிப்புடன் சொன்னாள் கயல்.

விடுதி வார்டன் தேன்மொழியின் குரலிலும் உற்சாகம். ''பதினாலு வருஷமா நான் வார்டன்  வேலை பார்க்கிறேன். வீட்ல ஒரு பொம்பளைப் பிள்ளையைப் பார்த்துக்கிறதே எவ்வளவு கஷ்டம்னு

'தானே' துயர் துடைத்தோம்!

உங்களுக்குத் தெரியும். ஆனா, இந்த விடுதியில 50 பொம்பளைப் புள்ளைங்க தங்கியிருக்காங்க. அவங்களைப் பார்த்துக்கிறது அவ்வளவு ஈசியான வேலை இல்லை. கரன்ட் போயி இருட்டு ஆயிடுச்சுன்னா விடுதிக்குள்ள பாம்பு, பூச்சி வந்துடுமோனு வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு இருப்போம். ஆனா, இப்ப அந்தக் கவலை இல்லாம, பிள்ளைக நிம்மதியா உட்கார்ந்து படிக்கிறாங்க!'' என்று மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்.

''கரன்ட் இல்லாதப்போ மெழுகுவத்தி ஏத்திப் படிக்கும்போது, அந்த வெளிச்சத்துக்கு ஈசல், வண்டுனு பூச்சிப் பொட்டுகள் படை படையாக் கிளம்பி வரும். அதுக்காகவே பல சமயம் மெழுவத்தி ஏத்தாம, இருட்டுல உக்காந்து இருப்போம். இல்லைன்னா, தூங்கிடுவோம். அதனால ஹோம் வொர்க் பண்ணாம கிளாஸ் ரூம்ல டீச்சர்கிட்ட அடி வாங்கிட்டு இருந்தோம். ஆனா, இப்ப அந்தக் கவலை இல்லை எங்களுக்கு. கரன்ட் போறதுக்குள்ள படிக்கணும் ஹோம் வொர்க் முடிக்கணும்கிற எந்தப் பயமும் பதற்றமும் இல்லாம ஒவ்வொரு நாளும் நிம்மதியா கழியுது!'' என்றார் நெல்லிக்குப்பம் விடுதியின் பத்தாம் வகுப்பு மாணவி துர்காதேவி.

கயல்விழி, துர்க்கா தேவி போன்ற மாணவிகளின் நன்றிகள் அனைத்தும் விகடன் வாசகர்களுக்கு உரித்தாகுக!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism