Published:Updated:

குவாரியின் கதை!

குள.சண்முகசுந்தரம்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

குவாரியின் கதை!

குள.சண்முகசுந்தரம்படங்கள் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Published:Updated:
##~##

த்தனை நாளும் வெடிச் சத்தங்களால் மட்டுமே அதிர்ந்துகொண்டு இருந்த மதுரையின் கிரானைட் தேசம் இப்போது அதிகாரிகளின் அதிரடிகளால் கிடுகிடுத்துக்கிடக்கிறது. எத்தனையோ அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் பந்தாடிய பி.ஆர்.பி. என்கிற பி.பழனிச் சாமியின் கிரானைட் சகாப்தம் முன்னாள் மதுரை ஆட்சியர் சகாயத்தின் 13 பக்க அறிக்கையால் மெள்ளச் சரிந்துகொண்டு இருக்கிறது!

இந்த கிரானைட் தேசம் எப்படி உருவானது? எப்படிச் சரிந்தது?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒரு காலத்தில்... மேலூர் பகுதி இரண்டு போகம் விளையும் விவசாய பூமியாக மட்டுமே இருந்தது. நாலாபக்கமும் விண்ணைத் தொட்டு வளர்ந்து நிற்கும் மலைகள், எந்த நேரமும் பச்சைப் பசேல்என கண்ணுக்குக் குளிர்ச்சி கொடுக்கும் நெல், கரும்பு, வாழை வயல்கள் என இயற்கை எழில் கொஞ்சும் ஏரியா. மேலூரை அடுத்து உள்ள ரெங்கசாமிபுரத்தில் 'டாமின்’ நிறுவனம் (தமிழ்நாடு மினரல்ஸ் லிமிடெட்)  உடைக்கல் (அஸ்திவாரக் கல்) குவாரி அமைத்தபோது, வடக்கு சருகு வலையபட்டியைச் சேர்ந்த வெள்ளை என்பவர் குத்தகை எடுத்தார். மனைவியின் தாலிச்சரடை அடகுவைத்துத்தான் குவாரியைக் குத்தகைக்கு எடுத்தார் வெள்ளை. அவ்வளவு கஷ்டப்பட்டு குவாரியை எடுத்தவர், போட்ட அசலையே புரட்ட முடியாமல் சுருண்டுபோனார். அந்த நேரத்தில் மேலூர் பகுதியில் வெட்டி எடுக்கப்படும் உடைக் கற்கள் சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல் வரை போகும். அங்கே இந்தக் கற்களின் தரத்தை யதார்த்த மாகப் பார்த்த கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கிரானைட் புள்ளி ராஜ மாணிக்கம் என்பவர், உலகத் தரம் வாய்ந்த கிரானைட் மேலூர் பகுதியில் இருப்பதைத் தெரிந்துகொண்டு மேலூருக்கு வந்தார். ராஜமாணிக்கத்துக்கு அந்த நேரத்தில் ராஜயோகம் இருந்தது. நஷ்டத்தில் தொழில் நடத்திக்கொண்டு இருந்த வெள்ளையைச் சந்தித்தார். ரெங்கசாமிபுரம் குவாரியில் பெரிய சைஸ் கிரானைட் கற்களை வெட்டி எடுக்க வெள்ளையிடம் சப்- கான்ட்ராக்ட் போட்டார் ராஜ மாணிக்கம். அங்கு வெட்டி எடுக் கப்பட்ட 'காஷ்மீர் ஒயிட்’ கிரானைட் கற்களின் தரம் ராஜமாணிக்கத்தின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியது. அவரால் வெள்ளையும் கொஞ்சம் ப்ரைட் ஆனார்.

குவாரியின் கதை!

அப்போதுதான், பெரியாறு பாசனக் கால்வாயில் துணைக் கால்வாய்களைக் கட்டுவதற்காக மேலூர் பகுதிக்கு வந்தார் பி.ஆர்.பி. என்று சொல்லப்படும் பழனிச்சாமி. கால்வாய் கட்டுவதற்காக மேலூரில் வாடகை வீட்டில் இருந்துகொண்டே கிரானைட் சொர்க்கத்தையும் மெள்ள மோப்பம் பிடித்தார். அப்போது, பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பனின் லிங்க் கிடைக்க, தமிழக அரசின் பெரிய கான்ட்ராக்ட்களில் ஈடுபடத் தொடங்கினார். கையில் தாராளமாகப் பணம் புரள ஆரம்பித்ததும் கிரானைட் பிரவேசம் எடுத்தார் பி.ஆர்.பி. இவருக்கும் இந்தத் தொழிலில் அரிச்சுவடி சொல்லிக்கொடுத்தது வெள்ளையின் 'காஷ்மீர் ஒயிட்’ குவாரிதான். ராஜ மாணிக்கத்தை வெளியேற்றிவிட்டு வெள்ளையோடு ஒப்பந்தம் செய்துகொண்டு கிரானைட் தொழிலைத் தொடங்கிய பி.ஆர்.பி. அடுத்த சில வருடங்களிலேயே 'கிரானைட் கிங்’ ஆகிவிட்டார். கிரானைட் பிசினஸில் இப்போது சர்வதேச அளவில் கொடிகட்டிப் பறக்கிறது இவருடைய பி.ஆர்.பி. நிறு வனம். அதேநேரம், இவருக்கு கிரானைட் என்ட்ரி கொடுத்த வெள்ளை, வந்த பணத்தை எல்லாம் டாம்பீகச் செலவு செய்துவிட்டு சிங்கிள் டீக்குக் கூட வழி இல்லாமல் வறுமைக் கோட்டில் வாடிவதங்கி இறந் தும்விட்டார். அவருக்குச் சொந்தமான 'காஷ்மீர் ஒயிட்’ குவாரியை பி.ஆர்.பி. வசப் படுத்திக்கொள்ள, வெள்ளை யின் வாரிசுகள் இப்போது கூலி வேலை செய்வதாகச் செய்தி!

பி.ஆர்.பி-க்குப் பிறகு பல பேர் மேலூர் பகுதிக்கு கிரானைட் தொழிலுக்கு வந்தாலும் பி.ஆர்.பி-யை மீறி அவர்களால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. கடந்த 15 வருடங்களாக பி.ஆர்.பி-தான் கிரானைட் தேசத்தின் ராஜா. தொடர்ந்து 10 வருடங்களுக்கும் மேலாக, 'அதிக அளவில் அந்நியச் செலாவணி ஈட்டித் தரும் நிறுவன’ விருதை இந்திய ஜனாதிபதியின் கையால் வாங்கி இருக்கும் பி.ஆர்.பி-க்கு இப்போது சகாயம் ரூபத்தில் சோதனை.

மேலூர் பகுதி கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடப்பதாகப் பல காலமாகப் பல பேர் குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். அதை எல்லாம் அதிகாரிகள் தங்களின் பேரத் தொகையை உயர்த்திக்கொள்ளப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, யாருமே ஊழலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை. கிரானைட் புள்ளிகளால் பாதிக்கப்பட்ட பத்திரிகை அதிபர் ஒருவர், சகாயம் கலெக்டராக இருந்தபோது மேலூர் கிரானைட் குவாரிகளில் எப்படி எல்லாம் இயற்கை வளத்தை அத்துமீறி, சுரண்டி அபேஸ் செய்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை வீடியோ மற்றும் சேட்டிலைட் பட ஆதாரங்களுடன் புகாராகப் பதிவுசெய்தார்.  அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோன சகாயம், வழக்கம்போலத் தன்னுடைய சாட்டையைச் சொடுக்கினார்.

குவாரியின் கதை!

சகாயம் வருகிறார் என்றதுமே ஜெர்க்கான கிரானைட் புள்ளிகள், அவருக்கும் ரேட் பேசினார்கள். சத்தியத்தை மீறாத சகாயத்துக்கு அவர்கள் வைத்த விலை... நம்பத்தான் வேண்டும்... சுமார் ரூ. 20 கோடி! தன்னைப் பற்றி தெரிந்தும் தனக்கு ரேட் ஃபிக்ஸ் செய்கிறார்கள் என்று தெரிந்ததும் சகாயத்தின் சாட்டை இன்னும் வேகமாகச் சுழன்றது. சென்னையில் இருந்து மதுரை வரை உள்ள அதிகாரிகள் அத்தனை பேரும் கிரானைட் பணத்தில் கிறங் கிக்கிடக்கிறார்கள் என்பதை முதல்கட்ட ஆய்விலேயே உணர்ந்துகொண்ட சகாயம், இவர்களை நம்பினால் மோசம் போய்விடுவோம் என்று தெரிந்துகொண்டு, பிற துறைகளின் நம்பகமான சில அதிகாரிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு கிரானைட் குவாரிகளுக்குள் புகுந்து ஆய்வு நடத்தினார். இன்னொரு பக்கம் சகாயத்தை மதுரையைவிட்டுத் தூக்குவதற்கு கிரானைட் புள்ளிகள் அவரைவிட அசுர வேகத்தில் இயங்கினார்கள். கடந்த மே மாதத்தில் அவர்கள்தான் ஜெயித்தார்கள். மதுரையில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார் சகாயம்.

மதுரையில் இருந்து கிளம்புவதற்கு முன்... கிரானைட் ஊழல்கள்குறித்து தான் திரட்டிய தகவல்கள் மற்றும் ஆதாரங்களைவைத்து தொழில் துறைச் செயலாளருக்கு 13 பக்க அறிக்கை ஒன்றை அனுப்பினார். அதுதான் இப்போது கிரானைட் மாஃபியாக்களைத் தலைதெறிக்க ஓடவைத்து இருக்கிறது. சகாயம் அனுப்பிய அந்த அறிக்கையில் விதிகளை மீறியதாகக் குறிப்பிடப்படும் மூன்று குவாரிகளில் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதியின் பெயரில் லைசென்ஸ் இருக்கும் 'ஒலிம்பஸ் குவாரி’யும் ஒன்று. 'இதன் இயக்குநர் பொறுப்பில் இருந்து எப்போதோ விலகிவிட்டேன்’ என்று இப்போது சொல்கிறார் தயாநிதி.  

'இந்த முறைகேடுகளைக் கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக அதிகாரிகளும் நிதி ஆதாயம் அடைந்து இருக்கிறார்கள். முறைகேடுகளை விசாரிப்பதற்காக நான் கேட்ட சில ஆவணங்களைக் கொடுப்பதற்குக்கூட சில அதிகாரிகள் சாக்குப்போக்குச் சொல்லிக் காலம் கடத்தினார் கள். எனவே, இந்த ஊழலுக்குத் துணைபோன அனைத்து அதிகாரிகளின் மீதும் நடவடிக்கை எடுப்பதுடன் தனியார்

குவாரியின் கதை!

கிரானைட் குவாரிகளில் பதுக்கிவைக்கப்பட்டு உள்ள டாமினுக்குச் சொந்தமான கிரானைட் கற்களைப் பறிமுதல் செய்து, அவற்றைப் பொது ஏலத்தில் விட வேண்டும். அத்துடன், தனியார் குவாரிகள் அனைத்தையும் ரத்துசெய்து அரசே டாமின் மூலமாகக் கிரானைட் கற்களை வெட்டி எடுத்து வருவாயைப் பெருக்கலாம்’ என்றும் அரசுக்கு யோசனை சொல்லிஇருக்கிறார் சகாயம்.

'இந்த தேசத்தின் முதுகெலும்பான விவசாயிகளின் வாழ்வாதாரம் நிர்மூலமாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கிரானைட் மாஃபியாக்களுக்கு முன்பாக அவர்களின் எதிர்ப்புக் குரல் ஒன்றுமே இல்லாமல் மௌனித்துவிட்டது சோகம்தான்!’ - அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கும் சகாயத்தின் வலி தோய்ந்த இந்த வரிகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறது அரசு?

12 கண்மாய்களைக் காணோம்!

மேலூர் பகுதியில் உள்ள கிரானைட் குவாரிகளில் பெரும்பாலும் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே வேலைக்கு வைத்து இருக்கிறார்கள். பி.ஆர்.பி. நிறுவனங்களில் மட்டுமே ஆயிரக்கணக்கானோர் வேலை செய்கிறார்கள். இவர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அசைவ உணவு உள்பட மூன்று வேளை உணவுடன் சம்பளம் கொடுக்கிறது பி.ஆர்.பி. நிறுவனம். அதிகாரிகளின் கணக்குப்படி, கால்வாய்கள், வயல்கள், வண்டிப் பாதைகள், கண்மாய்கள், குளங்கள் என அரசுக்குச் சொந்தமான அத்தனை இடங்களிலும் குவாரிகள் அமைத்துக் கற்களை சட்ட விரோதமாக வெட்டிக் கடத்தி இருக்கிறார்கள். 12 கண்மாய்கள் இருந்த இடமே தெரியாத அளவுக்கு ஆக்கிரமிப்பு நடந்து இருக்கிறது. வரத்துக்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால் பெரும்பாலான வயல்களை கிரானைட் கம்பெனிகளிடமே வந்த விலைக்கு விற்றுவிட்டு கூலி வேலைக்குப் போய்விட்டார்கள் விவசாயிகள். இப்படி இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக விவசாய நிலங்களைப் பாழாக்கி அவற்றைக் கபளீகரம் செய்திருக்கிறார்கள் கிரானைட் அசுரர்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism