Published:Updated:

தமிழேன்டா!

சார்லஸ்படங்கள் : கே.ராஜசேகரன்

தமிழேன்டா!

சார்லஸ்படங்கள் : கே.ராஜசேகரன்

Published:Updated:
##~##

'ஹிப் ஹாப் தமிழா’... சர்வதேச முத்திரை பதித்திருக்கும் தமிழ் 'இசை’ஞர்கள் குழு. கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஆதி விளையாட்டாகப் பாடிய 'கிளப்புல மப்புல திரியிற பொம்பள’ பாடல் இணையதளங்களில் ஹிட் அடிக்க, 'பாய்ஸ்’ படத்தின் கதைபோலப் பரபர... சரசர திருப்பங்கள். இப்போது சர்வதேச அளவில் ஹிப் ஹாப் இசைக் குழுக்களின் முயற்சிகளை ஊக்குவிக்கும் ரெமி மார்ட்டின் நிறுவனத்தின் ஆதரவைப் பெற்றிருக்கிறது ஆதியின் ஹிப் ஹாப் குழு! ஜெனிஃபர் லோபஸ், ஷான், கெல்லி போன்ற  சர்வதேச ஹிப் ஹாப் பாடகர்களுக்கு ஆதரவளிக்கும் இந்த நிறுவனத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் முதல் இந்திய இசைக் குழு... ஹிப் ஹாப் தமிழா! இப்போது ரெமி மார்ட்டின் மற்றும் பர்பிள் நோட் ஆகிய நிறுவனங்களின் உதவியோடு இவர்கள் கொண்டுவந்திருக்கும் 'ஹிப் ஹாப் தமிழன்’ ஆல்பத்தில்... தமிழ் மொழி யின் சிறப்பை உரக்கப் பேசுகிறது ஒரு பாடல். 'உலகின் முதல் மனிதன்... அநேகமாகத் தமிழன்!, தமிழில் பேசுங்கள்... தமிழன் என்று சொல்ல பெருமைப்படுங்கள்... தமிழன் என்று சொல்லடா... தலை நிமிர்ந்து நில்லடா... தமிழேன்டா!’ என்று தமிழ் புகழ் பாடும் பாடல்... நச்! ஆதி, பரத்வாஜ், ஜீவா, நீல், சிராஜ் ஆகிய ஐவரணிதான் ஹிப் ஹாப் தமிழாவின் குழு.    

தமிழேன்டா!

 'ஹிப் ஹாப் தமிழா’ கதை சொல்லத் தொடங்கினார் ஆதி. ''அமெரிக்காவில் இன வெறிக்கு எதிராகப் போராடிய கறுப்பின மக்கள், தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த எந்தக் கருவிகளும் இல்லாமல் குரல் மூலமாகவே பலவிதமான சத்தங்களை ஏற்படுத்திப் பாடுவார்கள். அதுதான் 'ஹிப் ஹாப்’. எனக்கு மைக்கேல் ஜாக்சனின் ராப் இசை பிடிக்கும். அந்தச் சாயல்ல 10 வருஷங்களுக்கு முன்னாடியே சில வரிகள் எழுதி டியூன் போட்டுப் பாடிட்டு இருப்பேன். 'பொல்லாதவன்’ படம் வெளியானப்போ, ராப் பாடகர் யோகி பி-யைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைச்சது. அவர்தான் தமிழ் ராப் பாடல்களுக்கு உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்காங்க. நிறைய ஆல்பம் பண்ணுங்கன்னு ஏகத்துக்கும் உற்சாகம் கொடுத்தார். அந்த உத்வேகத்தோட நான் எழுதிய பாட்டுதான் 'கிளப்புல மப்புல...’ அது யூ டியூப்ல பயங்கர அப்ளாஸ் அள்ளுச்சு. அந்த ஆதரவுதான் 'ஹிப் ஹாப் தமிழா’ பேண்ட் உருவாகக் காரணம்.

கல்லூரி விழாக்கள்ல பாடிட்டு இருந்த எங்களை அடுத்த உயரத்துக்குக் கை தூக்கிவிட்டவர் தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார். 'இளைஞர்கள் அதிக அளவில் ஓட்டு போட்டா தேர்தல் முடிவுகள் வேற மாதிரி இருக்கும். இளைஞர்களை ஈர்க்கிற மாதிரி ஒரு பாட்டு தயார் பண்ணுங்க’னு சொல்லி, 2011 தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான அதிகாரபூர்வப் பாடலைத் தயார் செய்யும் பொறுப்பை எங்களிடம் கொடுத்தார். 'எழுவோம் வா’னு அந்தப் பாடலுக்கு ரொம்ப கண்ணியமான வரவேற்பு!'' என்று ஆதி நிறுத்த, தொடர்கிறார் ஜீவா.

''இப்போ ரெமி மார்ட்டின் நிறுவன உதவியோட எங்க முதல் ஆல்பம் 'ஹிப் ஹாப் தமிழன்’ தயார். ஆனா, பொதுவா இங்கே சினிமா பாடல்களைத் தவிர, மத்த இசை முயற்சிகளுக்குப் பெரிய வரவேற்பு இல்லை. புதுப் புது முயற்சிகளுக்கு ஆதரவு கிடைச்சா, இங்கேயும் ஜஸ்ட்டின் ஃபைபர், ஜெனிஃபர் லோபஸ் போல பளிச் திறமைசாலிகள் கிளம்பி வருவாங்க!''

''தமிழ்பத்திப் பெருமையா பேசுறீங்க.. ஓ.கே... இருந்தாலும் அதே ஆல்பத்துல 'கிளப்புல மப்புல திரியுற பொம்பள’னு பெண்களைக் கிண்டல் அடிக்கிற பாட்டு தேவையா?'' என்று ஆதியிடம் கேட்டேன்.

''அதுதான் எங்க ஹிட் அடையாளம். ஆனா, நிறையத் திட்டும் விழுந்துச்சு. அதனாலதான் பெண்களைப் புகழ்ற மாதிரி 'ஐ லவ் செந்தமிழ் கேர்ள்ஸ்’னு அதே ஆல்பத்துல ஒரு பாட்டு வெச்சிருக்கோம். இந்தப் பாடல் அனைத்து செந்தமிழ்ப் பெண்களுக்கும் சமர்ப்பணம். என் அப்பா கோவை பாரதியார் பல்கலைக்கழக இயக்குநர். அம்மா பேராசிரியர். அவங்கள்லாம் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கம்லாம் போக மாட்டாங்க. அவங்களைப் பொறுத்தவரை நான் இப்போ சென்னையில் எம்.பி.ஏ. படிக்கிறேன். அவ்வளவுதான். இதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது சார்!'' என ஜெர்க் அடிக்கிறார்.

நாங்க சொல்ல மாட்டோம்!