Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
##~##

• ஜேம்ஸ்பாண்ட் படமான 'ஸ்கைஃபால்’ குறித்து எதிர்பார்ப்புகள் எகிறிக்கொண்டு இருக்கின்றன. படத்தின் கதை இதுதான்... அதுதான் என்று யூகங்கள் உலவிக்கொண்டு இருக்கும் வேளையில், படம் தொடர்பாக ஒரே ஒரு படத்தை மட்டும் வெளியிட்டுவிட்டு அமைதியாகிவிட்டது கொலம்பியா பிக்சர்ஸ் நிறுவனம். இப்படித்தான் டெம்போ ஏத்துவாங்க!

• குஜராத் சட்டசபைத் தேர்தல் முஸ்தீபுகளில் மோடிக்கு எதிராக பிரதான காய் நகர்த்தலாக, குடும்பத் தலைவிகளுக்கு இலவச வீடு திட்டத்தை அறிவித்து இருக்கிறது மாநில காங்கிரஸ். இதற்குப் பெண் களிடம் எழும் ஆதரவு மோடியையே மிரளச் செய்துள்ளது. வீட்டைக் கொடுத்து நாட்டைப் பிடி!

• ''பூங்கா நகரமான பெங்களூரு குப்பைகளின் நகரமாகிவிட்டது. மாநகராட்சியில் இருந்து 20 பேரை எனக்கு வழங்கினால், அவர்களுடன் நானே தெருவில் இறங்கிக் குப்பை அள்ளத் தயாராக இருக்கிறேன்!'' என்று பெங்களூரு மாநகராட்சியை வாங்குவாங்கென்று வாங்கியிருப்பவர்... வேறு யாரும் அல்ல... கர்நாடக ஆளுநர் பரத்வாஜ். தட்டிக் கேளுங்க சார்!

• செவ்வாய் கிரகத்துக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்ட க்யூரியாசிட்டி விண்கலம் அனுப்பிய படங்களில் செவ்வாயின் அடிவானத்தில் ஏதோ சில பொருட்கள் அசைவதுபோலத் தெரிய, அது வேற்றுக் கிரகவாசிகள் விண்கலத்தைக் கண் காணிக்கப் பயன்படுத்தும் கப்பல் என்றெல்லாம் கொளுத்திப் போடுகிறார்கள். 'இல்லை... அது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக அசை யும் பிக்சல்கள்!’ என்று பிரச்னைக்குச் சுபம் போட்டிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். க்யூரியா சிட்டிக்குத்தான் வெளிச்சம்!

• தங்களது தயாரிப்புகளை அப்படியே காப்பி அடிக்கிறது சாம்ஸங் என்று ஆப்பிள் தொடர்ந்த வழக்கில் அதிரடியாக சாம்ஸங் நிறுவனத்துக்கு 5,500 கோடி ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளது கலிஃபோர்னியா நாட்டு நீதிமன்றம். ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களின் இயங்குபொருளைக் காப்பி அடித்ததாக இந்த வழக்கு. அதிர்ச்சியில் உறைந்துபோன சாம்ஸங் மேல் முறையீட்டுக்குச் செல்லவிருக்கிறது. சாம்ஸங் மொபைலுக்குத் தடை போட்டிர மாட்டீங்கள்ல!

• இங்கிலாந்து அரச குடும்பத்தின் கோபத்தைச் சம்பாதித்திருக்கிறது 'தி சன்’ பத்திரிகை. ஹோட்டல் அறைக்குள் தோழிகளுடன் பார்ட்டி கொண்டாடிய இளவரசர் ஹாரியின் நிர்வாணப் படங்களைத் தங்கள் வலைதளத்தில் வெளியிட்டது தி சன். அரச குடும்பத்திடம் இருந்து வந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, 'பொது நலன் கருதி அதைப் பத்திரிகையில் வெளியிடுகிறோம்’ என்ற அறிவிப் புடன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் பிரமாண்ட மாகப் பிரசுரித்தனர். இங்கிலாந்து நாடாளுமன்ற எம்.பி-க்கள் இந்த விவகாரத்தில் 'தி சன்’ பத்திரிகையை ஆதரித்து அரச குடும்பத்தை எதிர்ப் பதால், அரண்மனைக்கு இன்னும் எரிச்சல். இதையெல்லாமா அரசியல் ஆக்குவீங்க?

இன்பாக்ஸ்

• சர்வதேசப் பெருமையைத் தட்டியிருக்கிறார் குன்னூரைச் சேர்ந்த ஸ்ருதி விஜயச்சந்திரன். லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த சிறந்த ஆசிய இளம் பேச்சாளருக்கான போட்டியில் ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஒன்பது போட்டியாளர்களிடையே 'சிறந்த பேச்சாளர்’ ஆகத் தேர்வு பெற்றிருக்கிறார் ஸ்ருதி. கேம்பிரிட்ஜ் பிசினஸ் வான்டேஜ் பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பு முடித்தவருக்கு இதனால் சர்வதேச நிதி நிர்வாகப் பள்ளியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பேசிக்கிட்டே படிங்க!

• சிரியாவில் அரசுப் படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான தாக்குதலில் ஜப்பானைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டது சர்வதேச அளவில் அனல் கிளப்பியுள்ளது. மிக்கா யமட்டோ என்ற 45 வயதுப் பெண் நிருபர், தன் சக ஊழியர் ஒருவருடன் பலியாகி உள்ளார். 'பத்திரிகையாளருக்கே இந்தக் கதி என்றால், அங்குள்ள மக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க முடியும்?’ என்று சர்வதேச மீடியாக்கள் எழுப்பும் கேள்வி களுக்குச் சிரிய அரசாங்கத்திடம் எந்தப் பதிலும் இல்லை. மனசாட்சியே இல்லாதவர்களிடம் பதில் எப்படி இருக்கும்?

இன்பாக்ஸ்

• நியூசிலாந்து தொடருக்கான அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திடீர் ஓய்வு அறிவித்து அதிர்ச்சி அளித்தார் 'நான்காவது இன்னிங்ஸ் நாயகன்’ வி.வி.எஸ்.லெக்ஷ்மண். கேப்டன் டோனியுடன் அவருக்கு இருக்கும் உரசலே இதன் பின்னணி என்றார்கள். அதற்கு வலு சேர்ப்பதுபோல சச்சின், சேவாக் உள்ளிட்ட அணி நண்பர்களுக்கு வீட்டில் விருந்து அளித்த லெக்ஷ்மண் அப்போது டோனியை அழைக்கவே இல்லை. இந்நிலையில் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் ஒரு கேலரிக்கு லெக்ஷ்மண் பெயரும், அங்கு அவரது சிலையும் நிறுவப்படும். அவற்றை டோனி திறந்து வைப்பார் என அறிவித்தது இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். ஆனால், இடையில் என்ன நடந்ததோ, விழா எதுவும் இல்லாமல் கேலரி பெயரை மட்டும் மாற்றிவிட்டார்கள். எல்லாத்தையும் ஒரு புத்தகமா எழுதுங்க லெக்ஷ்மண்!

• பிரதமர் பெயரில் இருந்த ஆறு போலி ட்விட்டர் அக்கவுன்ட்களை நீக்கியிருக்கிறது பிரதமர் அலுவலகம். ட்விட்டர், ஃபேஸ்புக் மூலம்தான் வதந்தி பரவுகிறது என்பதாலேயே இந்த திடுக் நடவடிக்கையாம். போலி ட்வீட்டர்ஸ்... உஷார்!

இன்பாக்ஸ்

• 'ஸ்லம்டாக் மில்லினியர்’ புகழ் ஃப்ரீடா பின்டோ பெண் குழந்தைகளைப் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் விளம்பரத் தூதராக இருக்கிறார். இதற்காக சமீபத்தில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்ற ஃப்ரீடா, அங்கு ஏழைக் குடும்பம் ஒன்றின் பெண் குழந்தை ஒன்றைத் தத்து எடுத்து இருக்கிறார். இவ்ளோ சின்ன வயசுல அம்மாவா?

இன்பாக்ஸ்

• கரீனாவுடன் திருமண முன்னேற்பாடுகளில் சயீஃப் அலிகான் மும்முரமாக இருக்க, அவரது மகள் சாரா நெகுநெகுவென வளர்ந்து பாலிவுட் இயக்குநர்களின் கவனத்தைக் கவர்ந்துவிட்டார். ஃபேஷன் ஷோ ஒன்றில் பூனை நடை போட்ட சாராவைப் பார்த்ததும் பற்றிக்கொண்டன பாலிவுட் அழைப்புகள். ஆனால், 'இப்போ ஸ்கூல்தான் படிக்கிறேன். சட்டப் படிப்பு முடிஞ்ச பிறகுதான் சினிமா’ என்றாராம் சாரா. அட, சாரா... உங்க சித்தி கரீனா இன்னிங்ஸே இன்னும் முடியலையே!