Published:Updated:

ஸ்டூடன்ட் போலீஸ்!

இது கேரளாவின் புரட்சிப் படைஇரா.வினோத்படங்கள் : ரா.ராம்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

ஸ்டூடன்ட் போலீஸ்... வாவ்!

 போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது, வனப் பாதுகாப்பு, விழாக் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு என அத்தனை பணிகளையும் காக்கி உடுப்பு அணிந்து பள்ளி மாணவர்களே மேற்கொள்கிறார்கள். அதுவும் ஒரு ரூபாய்கூடச் சம்பளம் பெற்றுக்கொள்ளாமல்.  இந்தியாவைப் புருவம் உயர்த்தவைத்திருக்கும் இந்தக் காவல் படை... 'ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் ஆஃப் கேரளா’. பள்ளி மாணவர்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்பட்ட காவல் படை அணி... சுருக்கமாக எஸ்.பி.சி. இந்தத் திட்டத்துக்கு இது மூன்றாவது ஆண்டு. அந்தச் 'சுட்டி குட்டி’ போலீஸாரின் நடவடிக்கைகளை நேரில் கண்டு வந்தேன்.  

கொச்சின் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் மைதானத்தில் காலை 7 மணிக்கு மஃப்டியில் வந்து இறங்குகிறார்கள் இந்த ஜூனியர் போலீஸார். 10-வது நிமிடத்தில் விசில் சத்தம்... காக்கிச் சீருடை, பெல்ட், தொப்பி, தோள்பட்டைகளில் எஸ்.பி.சி. பேட்ஜ் அணிந்து மைதானத்தில் கம்பீரமாக அணிவகுக்கிறார்கள். 'நேராக நில்... நிமிர்ந்து நில்’ என‌ உரக்கச் சொல்லி அவர்களுக்கு டிரில் பயிற்சி கொடுக்கிறார் போலீஸ் அதிகாரி. 'லெஃப்ட் ரைட்... லெஃப்ட் ரைட்’ என உச்ச டெசிபல்களில் அதிரும் கட்டளைக்குத் தூசி கிளப்பியபடி நடைப் பயிற்சி தொடர்கிறது.

ஸ்டூடன்ட் போலீஸ்!

தொடர்ந்து ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், உடற்பயிற்சி, கராத்தே, குங்ஃபூ, வாள் சண்டை, களரி, வர்மக் கலை, யோகா என நாள் முழுக்க உடல் மற்றும் மன ஆளுமை வளர்க்கும் பயிற்சிகள்.  

எஸ்.பி.சி. திட்டத்தின் மாநில நோடல் அதிகாரி விஜயன் முகத்தில் பெருமிதம். '' 'பொதுமக்கள், மாணவர்கள், காவல் துறை மூன்றும் இணைந்து செயல்பட்டால்தான் உண்மையிலே சமூக முன்னேற்றம் சாத்தியம்’ என்ற கருத்தின் செயல்வடிவமே 'ஸ்டூட‌ன்ட் போலீஸ் கேடட்’. முதலில் மூன்று பள்ளிகளின் 120 மாணவர்களோடு உருவாக்கப்பட்டு, அதன் வெற்றியால் இப்போது 234 பள்ளிகளில் இருந்து 16 ஆயிரம் மாணவர்களை எஸ்.பி.சி. அணியில் இணைத்திருக்கிறோம்.

என்.சி.சி. மூலம் மாணவர்களுக்கு சுயக் கட்டுப்பாட்டையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுப்போம். என்.எஸ்.எஸ். மாணவர்களை சமூக சேவையில் ஈடுபடுத்துகிறது. ஆனால், எஸ்.பி.சி. ஒழுக்கம், சுயமரியாதை, சமூக சேவை ஆகியவற்றோடு சமூகப் பொறுப்பையும் சேர்த்து மாணவர்களிடையே ஊட்டுகிறது. அதனால், எங்கள் மாணவர்களை 'சமூகக் காவல் துறை’ என்றே சொல்லலாம். எஸ்.பி.சி. அணி மாணவர்களுக்கு, போலீஸுக்கு உரிய எந்த அதிகாரமும் இல்லை. இவர்கள் அனைவரையும் போலீஸ் ஆக்குவதும் எங்கள் நோக்கமும் அல்ல. 'ரைட் டு சர்வ்... வி லேர்ன் டு சர்வ்’ (Right To Serve... We learn To Serve). இதுதான் எங்கள் தாரக மந்திரம்!'' என்று சிரிக்கிறார் விஜயன்.

ஸ்டூடன்ட் போலீஸ்!

போக்குவரத்து நெரிசல் மிக்க இடங்களில் சாலை விதிகளை மதிக்கச் சொல்லி போக்குவரத்தைச் சீரமைப்பது, மார்க்கெட்டில் சாலைஓரக் கடைகளை ஒழுங்குசெய்வது, பேருந்து - ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழிகாட்டுவது, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது என ஒவ்வொரு நாளும் பற்பல பணிகளில் ஈடுபடுகிறார்கள்.

''இவ்வளவு பொறுப்பாக வேலை செய்பவர்களுக்குச் சம்பளம்தான் இல்லை. ஊக்கத்தொகையேனும் கொடுக்கக் கூடாதா?'' என்று திருவனந்தபுரம் மாவட்ட எஸ்.பி.சி. அதிகாரி கே.ஜி.பாபுவிடம் கேட்டேன். ''பயிற்சிக்குத் தேவையான பணம், சீருடை மற்ற செலவுகளை அரசாங்கமே ஏற்றுக்கொள்கிறது. பயிற்சி பெறும் மாண‌வர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 10 சதவிகித கூடுதல் மதிப் பெண்களும் நான்கு சான்றிதழ்களும் அளிக் கிறோம்.

முதல் ஆண்டு முடிவில் 'ஏ’ கிரேடில் தேர்வாகும் மாணவர்களுக்குத் தற்காப்புக் கலை, துப்பாக்கி சுடும் பயிற்சி, வாக்கி டாக்கி, கேமரா கண்காணிப்பு, துப்பறியும் பயிற்சி, மோப்ப நாய்களைக் கையாள்வது என ஒரு காவலர் கற்றுக்கொள்ள வேண்டிய அனைத்துப் பயிற்சிகளையும் அளிப்போம். இப்போது கேரளத்தில் ஸ்டூடன்ட் போலீஸ் கேடட் அணியினரைச் 'சமூகப் புரட்சிப் படை’ என்றே குறிப்பிடுகிறோம்'' என நம்பிக்கை வார்த்தைகள் உதிர்த்தார் பாபு.

முகாமின் தீவிரங்கள் முடிந்து ஊருக்குப் புறப்பட்ட மாணவர்கள் சிலரிடம் பேசினேன்.

''எனக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகம். சரியாப் படிக்க மாட்டேன். அப்பா எப்பவும் குடிச்சிட்டு வந்து கெட்ட வார்த்தையால திட்டிட்டே இருப்பார். 'ஏன்டா இந்த வீட்ல பிறந்தோம்... பேசாம செத்துப்போயிடலாமா’னு தோணிட்டே இருக்கும். அப்போதான் என் தோழி சேர்ந்தா ளேனு நானும் எஸ்.பி.சி-யில் சேர்ந்தேன். இங்கே நான் கத்துக்கிட்ட யோகா, மனவளர்ச்சிப் பயிற்சிகளை அப்பாவுக்கும் சொல்லிக்கொடுத்தேன். இப்போ அப்பா குடிக்கிறதை நிறுத்திட்டார்!'' என்ற ஷமீலாவின் வார்த்தைகளில் அவ்வளவு பூரிப்பு!

ஸ்டூடன்ட் போலீஸ்!

திருவனந்தபுரம் அருகில் புள்ளிவிலா என்ற மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஜான் ஃப்ரட் என்ற மாணவர் மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ''முன்னாடி எல்லாம் ஊர்ல யாருமே எங்க  குடும்பத்தை மதிக்க மாட்டாங்க. ஆனா, இப்போ 'பையனை நல்லா வளர்த்துருக்காங்க’னு எங்க அப்பா - அம்மாவை மரியாதையாப் பார்க்கிறாங்க. நானும் முன்னைவிட நல்லாப் படிக்க ஆரம்பிச்சிருக்கேன். ஐ.ஏ.எஸ். ஆகணும்... அதுதான் இனி என் லட்சியம்!'' எனக் கனவுகளுடன் சிரித்தார்.

ஒரு மீனவக் குடும்ப மாணவரின் மனதில் இந்த லட்சியத்தை விதைத்திருக்கும் இந்தத் திட்டத்தைத் தமிழகத்திலும் தத்தெடுக்கலாமே!  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு