Election bannerElection banner
Published:Updated:

வீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க!

க.நாகப்பன்படங்கள் : சொ.பாலசுப்ரமணியன்

வீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க!
##~##

சுதா ரகுநாதன் வீட்டு அழைப்பு மணி அருகே ஒரு பிள்ளையார் அமைதியா கப் புன்னகைக்கிறார். கதவு திறந்ததும் வரவேற்பதும் ஒரு பிள்ளையாரே. வரவேற்பறையில் ஆனந்த சயனத்தில் ஒரு பிள்ளையார் கனிவாக நம்மைப் பார்க்கிறார். மாடிப் படிக்கட்டுகளில் வண்ணங்களில் ஜொலிக்கும் பிள்ளையார், உணவு மேஜையில் குடையோடு வீற்றிருக்கும் பிள்ளையார் என வீடு முழுக்கத் தரிசனம் தருகிறார்கள் பிள்ளையார்கள்!

 ''சங்கீதத்துக்கு இணையா என்னை இயக்கும் இன்னோர் அம்சம்... விநாயகர். கணபதி, கண நாயகா, கணபதி மகராசா, விக்னேஸ்வரானு எப்படி அழைச்சாலும் ஏற்றுக்கொள்ளும் விநாயகனை வணங்கினால் சங்கடங்கள் தானாக விலகும். சவால்கள் சாதனையாக மாறும். அதான் தீபாவ ளிக்கு அடுத்து இந்தியா முழுக்க உற்சாகமாகக் கொண்டாடும் பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி இருக்கு!'' - நெகிழ்வுடன் விநாயகர் பிரியம் பகிர்ந்துகொள்ளும் சுதா ரகுநாதன் வீட்டில் சுமார் 600 பிள்ளையார்கள் குடியிருக்கிறார்கள். ''எனக்குக் கல்யாணம் ஆன புதுசுல விருந்துக்காக பிரேமா அண்ணி வீட்டுக்குப் போயிருந்தேன். அவங்க வீடு முழுக்க விநாயகர் சிலைகள். அந்தச் சிலைகளையே நான் பிரமிப்பாப் பார்த்துட்டு இருக்கிறதைப் பார்த்த அண்ணி, எனக்கு ஒரு சந்தனப் பிள்ளையாரைப் பரிசாக்  கொடுத்தாங்க. அதுதான் என்கிட்ட வந்த முதல் பிள்ளையார். தொடர்ந்து நண்பர்கள், உறவினர்கள் பரிசாக் கொடுத்த வகையில் ஒரே வருஷத்துல 50 விநாயகர்கள் என் வீட்டுக்கு வந்தாங்க. 'விநாயகரே நம்ம வீட்டுக்கு விரும்பி வர்றார். அவரை உன் இஷ்ட தெய்வம் ஆக்கிக்கோ’னு அப்பதான் என் மனசுல பதிஞ்சது. அப்புறம் எங்கே போனாலும் பிள்ளையார் சிலை வாங்காம இருக்க மாட்டேன். வெள்ளி, தங்கம், சந்தனம், லேப்பிஸ், கிறிஸ்டல், சோப்னு பல பொருட்களில் செய்யப்பட்ட பிள்ளையார்கள், சிவன் வடிவ விநாயகர், வீணை ஏந்திய விநாயகர், புத்தர் போன்ற விநாயகர்னு விதவிதமா சேகரிக்க ஆரம்பிச்சேன். கிட்டத்தட்ட 28 வருடச் சேகரிப்பு இந்தப் பிள்ளையார்கள்!  

வீட்ல விநாயகர் இருந்தா விசேஷங்க!

எப்பவும் நான் விநாயகரை தெய்வம் என்ற அம்சத்தில் மட்டுமே அணுகுவேன். கிரிக்கெட் பிள்ளையார், கம்ப்யூட்டர் பிள்ளையார், சார்லி சாப்ளின் பிள்ளை யார்னு மார்க்கெட்ல ஃபேன்ஸியா இருக்கும் பிள்ளையார்களை வாங்க மாட்டேன். என் மகன், மகள்... ரெண்டு பேருமே 20 வயசைத் தாண்டிட்டாங்க. ஆனா, இப்பவும் வீட்ல ஏதோ ஒரு குழந்தை தவழ்ந்துட்டு இருக்கும் உணர்வைக் கொடுக்கிறாங்க என் பிள்ளையார்கள்.

வீட்டுக்கு புதுப் பிள்ளையார் வர்றப்போ, 'புதுப் பாப்பா வந்துடுச்சு’னு மகனுக்கும் மகளுக்கும் எஸ்.எம்.எஸ். அனுப்புவேன். உடனே அவங்களும் 'என்ன ஸ்பெஷல்? எப்படி இருக்கார்?’னு ஆர்வமாக் கேட்பாங்க.

என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச பிள்ளையார்னா, தம்புரா வாசிக்கும் பிள்ளையார். இவர் எப்பவும் நிதர்சன சந்தோஷத்துல இருப்பார். கச்சேரி மேடையில் நான் வாசிக்க உக்காந்துட்டா, யார் கைதட்டுறாங்க, யார் எந்திரிச்சுப் போறாங்கன்னுலாம் பார்க்க மாட்டேன். ஒருவிதமான மோனத்தவத்துல ஆழ்ந்துதான் பாடுவேன். அந்த உணர்வு தம்புரா பிள்ளையார்கிட்ட இருந்து எனக்கு வந்திருக்கும்கிறது என் நம்பிக்கை!

எப்பவும் விநாயகர் பாட்டுப் பாடித்தான் நான் கச்சேரியை ஆரம்பிப்பேன். இது என் குரு எம்.எல். வசந்தகுமாரி கத்துக்கொடுத்த பழக்கம். ஆனா, இத்தனை பிள்ளையார்களும் நிறைவேத்தாத ஏக்கம் ஒண்ணு இருக்கு எனக்கு. அது, என் கனவுல ஒரு தடவைகூட பிள்ளையார் வந்ததே இல்லைங்கிறது. சீக்கிரமே அவர் என் கனவுல வரணும்னு அடிக்கடி உருகி உருகிப் பாடுவேன்'' என்று தம்புராவை மீட்டியபடி திவ்யமான குரலில் பாடத் தொடங்குகிறார் சுதா ரகுநாதன்.  

''பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்
இவைநாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா...
ஸ்ரீகணேசா... சரணம்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு