Published:Updated:

உலை கொதிக்கும் கூடங்குளம்!

ஆண்டனிராஜ்படங்கள் : எல்.ராஜேந்திரன், ஏ.சிதம்பரம்

பிரீமியம் ஸ்டோரி
##~##

"இது எங்க மண்ணு, இது எங்க கடல். உங்களுக்கு அணு உலை வேணும்னா, உன் இடத்துல தூக்கிட்டுப்போயி வெச்சுக்க...'' - அவர்கள் பேசும் வார்த்தை ஒவ்வொன்றிலும் அனல் அடிக்கிறது. தடியடி, கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு என்ற போலீஸின் நெருக்கடி கூடக்கூட இன்னும் உறுதியாகிறார்கள் கூடங்குளம் மக்கள்.

 ஒரு வருடத்துக்கு முன்பு ஜப்பான் நாட்டின் ஃபுகுஷிமா அணு உலை சுனாமி தாக்குதலுக்கு உள்ளானது. அணு உலை வெடித்து ஏராளமான மனித உயிர்களும் விலங்குகளும் தாவரங்களும் செத்து மடிந்தன. அந்த அணுக் கதிர்வீச்சின் பாதிப்பு பக்கத்து நாடுகளையும் பதம் பார்த்தது. இன்னமும் ஜப்பானில் அதன் பாதிப்பு தொடர்கிறது. சரியாக அந்தச் சமயத்தில்தான் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்களின் போராட்டங்கள் சூடுபிடிக்கத் தொடங்கின. ஃபுகுஷிமா அணு உலை வெடிப்பு, கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. முன் எப்போதும் இல்லாத வகையில் ஆக்ரோஷ மான போராட்டங்களைத் தொடங்கினார்கள். தலைமை என்று யாரும் இல்லாத தன்னெழுச்சியான போராட்டங்கள் அவை.

உலை கொதிக்கும் கூடங்குளம்!

சுமார் 15 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கூடங்குளம் அணு உலைக்கு அருகிலேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒவ்வொரு நாளும் குறைந்தது 50 ஆயிரம் பேர் கூடுவார்கள். போலீஸால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் போராட்டக் குழுவினர் இடிந்தகரை லூர்து மாதா ஆலய வளாகத்துக்குப் போராட்டத்தை மாற்றினர். அங்கு பந்தல் அமைக்கப்பட்டு, தொடர் உண்ணாவிரதம் ஆரம்பித்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தனர். மாதக்கணக்கில் இந்த உண்ணாவிரதம் நீடித்தது.

பந்தல் அமைக்கப்பட்டு, போரட்டக் கள வளாகத்திலேயே சமையல் நடக்க... அங்கேயே தூங்கி எழுந்தனர் மக்கள். பீடி சுற்றுபவர்கள் போராட்டப் பந்தலில் அமர்ந்து பீடி சுற்றினார்கள். கடலுக்குப் போன நேரம் போக மீதி நேரம் மீனவர்கள் வேறு எங்கும் செல்வது இல்லை. உண்ணாவிரதப் பந்தலில் குவியும் பள்ளிக் குழந்தைகளுக்கு உதயகுமாரன் ஆங்கிலம் பேசுவதற்கும் எழுதுவதற்கும் வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார். அத்துடன் அணு உலை, கதிர்வீச்சு, யுரேனியத்தின் தன்மை என அனைத்தையும்பற்றி அறிவியல்பூர்வமாக மாணவர்களுக் கும் மற்றவர்களுக்கும் விளக்கம் அளிக்கப்பட்டது. உண்ணாவிரதப் பந்தலில் இருந்த சாதாரண பாமரர் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் அணு உலைபற்றிய விழிப்பு உணர் வைப் பெற்றனர். வெவ்வேறு வகை களில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

உலை கொதிக்கும் கூடங்குளம்!

இந்த நிலையில்தான் உயர் நீதிமன்றம் அணு உலைக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது. அணு உலை நிர்வாகம், எரிபொருள் நிரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தது. ஏற்கெனவே பல மாதங்களாக கூடங்குளத்தைச் சுற்றி 7 கி.மீ. தூரத்துக்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில்... 9-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். ஒரு வருடத்துக்கும் மேலாக அந்த வனாந்திரத்தில் தங்களைக் காக்கவைத்த போராட்டக் குழுவினர் மீது காவல் துறை கடும் கோபத்தில் இருந்தது. ஆகவே, இதை ஓர் இறுதிப் போராட்டமாக முடித்துவைக்க நினைத்தது போலீஸ்.

போராடும் மக்கள் தங்கள் பாதையை மாற்றி, கடற்கரை வழியாக அணு உலையை நோக்கி நகரத் தொடங்கினார்கள். இதைச் சற்று தாமதமாகவே உணர்ந்த போலீஸார் அங்கு வருவ தற்குள் மக்கள் அணு உலைக்கு மிக அருகில் வந்துவிட்டனர். முன் வரிசை யில் வந்தவர்கள் குழந்தைகள்.

மொத்தக் கூட்டமும் அப்படியே கடற்கரையிலேயே உட்கார்ந்துவிட்டது. உச்சி வெயிலில் வெறும் மணலில் அவர்கள் அமர்ந்துவிட... பக்கத்துக் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் படகுகள் மூலமாகத் தண்ணீர் கொண்டுவந்தனர். பாதுகாப்புக்கு நின்ற பெண் காவலர்களை அழைத்த குழந்தைகள், 'அக்கா... தண்ணி குடிச்சுட்டுப் போய் நில்லுங்க’ என்றதும், தாகத்தில் தவித்து நின்றவர்கள் உடனே வாங்கிக் குடித்து விட்டு, அதே வேகத்தில் பொசிஷனில் போய் நின்றார்கள். மக்கள் அன்று இரவு கடற்கரையிலேயே தங்கிவிட்டார்கள்.  

அடுத்த நாள் காட்சிகள் மாறின. காலையிலேயே போலீஸ் படை குவிந்தது. மக்களை வெளியேற்றுவதில் போலீஸ் குறியாக இருக்க... மக்களோ, 'எரிபொருள் நிரப்ப மாட்டோம் என்று அரசாங்கம் உறுதிமொழி தந்தால் ஒழிய, நகர மாட்டோம்’ என்று சொல்லிவிட்டார்கள். கலவரத்துக்கான சூழல் தென்பட ஆரம்பித்தது. மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் போலீஸ் போக... அதை மக்கள் தடுக்க... மோதல் வெடித்தது. போலீஸ் தடியடி நடத்த ஆரம்பித்தது. மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் கடலுக்குள் குதித்து நீந்தினார்கள். உடனே மீனவர்கள் சிலர் கட்டுமரங்களில் சென்று அவர்களைக் காப்பாற்றி வந்தனர். குழந்தைகள் அழுதுகொண்டே அந்த இடத்தைச் சுற்றிவந்தனர். போலீஸ் கண்ணீர் புகைகுண்டுகளைத் துப்பாக்கியில் போட்டு சுட்டதால் சிறுவர்களின் அலறல் சத்தம் எங்கும் கேட்டது. அந்தப் பகுதி யுத்தம் நடப்பதைப் போலவே இருந்தது.

அதன் பிறகும் ஓயாத போலீஸ், இடிந்தகரை கிராமத்துக்குள் நுழைந்தது. போராட்டம் தொடங்கிய கடந்த ஒரு வருடத்தில் போலீஸ் இடிந்தகரைக்குள் நுழைவது இதுவே முதல் முறை. இதற்குள் தாக்குதல் செய்தி சுற்று வட்டாரத்தில் பரவியது. ஆங்காங்கே மக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டங்களில் குதித்தார்கள்.

உலை கொதிக்கும் கூடங்குளம்!

இறுதியாகக் கிடைத்த தகவல்களின்படி இடிந்தகரைப் பகுதியில் உள்ள மீனவர்களின் படகுகளையும் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி இருக்கிறது போலீஸ். முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற பந்தலையும் சுக்குநூறாக்கிய போலீஸ், உணவுக்காக வைத்திருந்த அரிசி மூட்டைகளில் மண்ணை அள்ளிக் கொட்டிவிட்டுச் சென்றிருக்கிறது.

இந்த ஒரு வருடப் போராட்டம் கூடங்குளம் மக்களுக்கு எத்தனையோ படிப்பினைகளைக் கற்றுக்கொடுத்திருக்கிறது. அதில் முக்கியமானது, தி.மு.க., அ.தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம்., காங்கிரஸ், பா.ஜ.க., தே.மு.தி.க. என அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பெயர்களில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது என்பதையும் அணு உலைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இவர்கள் அத்தனை பேரும் ஒரே அணியாக ஒற்றுமையுடன் கைகோத்து நிற்பதையும் அந்த மக்கள் ஆற்றாமை யுடன் பார்க்கிறார்கள். ''ஓட்டு கேட்டு வர்ற யாரும், எங்களைவெச்சு அரசியல் பண்ணக்கூட கிட்ட வரலையே'' என்பது கூடங்குளத்தின் குரல் மட்டுமா?!

உலை கொதிக்கும் கூடங்குளம்!

கூடங்குளமே உச்சபட்சக் கொந்தளிப்பில் இருந்தபோது, போலீஸின் இலக்காக அமைந்தவர் சுப. உதயகுமாரன் மட்டுமே.

'பொது மக்களை நிர்க்கதியில் விட்டுவிட்டு, முதல் ஆளாகத் தப்பி ஓடிவிட்டார்’ என்று போலீஸாரே தகவல்களைப் பரப்பிவிட்டனர். தன் அலைபேசி பேச்சுகள் கண்காணிக்கப்படுவதால், செல்லும் இடங்களில் கிடைக்கும் தரைவழித் தொலைத்தொடர்புகள் மூலம் நிலவரத்தை அறிந்துகொண்டும், அவற்றைச் செய்தி நிறுவனங்களுக்குத் தெரிவித்துக்கொண்டும் இருந்தார் சுப.உதயகுமாரன். ஓர் இடத்தில் தங்காமல் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருந்தவரிடம் பேசினேன்...  

''கூடங்குளத்தில் நடந்திருப்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை. ஏறத்தாழ 400 நாட்களாக தனியார் சொத்துகளுக்கோ, பொதுச் சொத்துகளுக்கோ சேதம் விளைவிக் காமல் அறவழியில் போராட்டம் நடத்தி வந்தவர்கள் எம் மக்கள். அறவழியில் இருந்து இம்மியளவும் மாறாமல், நாங்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்தினோம். எந்த வன்முறையிலும் இறங்கவில்லை. அப்படி இருக்கை யில் போராடிய எங்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது காவல் துறை. எந்தப் பக்கமும் எந்தச் சேதமும் இல்லாமல்தான் போராட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். ஆனால், அந்த நோக்கம் காவல் துறைக்கு இல்லை. பல்லாயிரக்கணக்கான மக்களை எந்த முன்னறிவிப் பும் இன்றி கண்ணீர்ப் புகைக்குண்டை வீசியும் தடியடி நடத்தியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் கலைத்திருக்கிறது காவல் துறை. என்னை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. நானும் என் அருகில் இருந்தவர்களும் தரையில் படுத்துத் தப்பித்தோம். இந்த அரசாங்கம் என்னைக் கொல்லப் பார்க்கிறது. ஆனால், மக்கள் என்னையும் மற்ற சிலரையும் உடனடியாக அங்கே இருந்து வேறு இடத்துக்குப் பாதுகாப்பாக அழைத்து வந்துவிட்டார்கள். வானத்தில் முதலில் சுடும் நடைமுறை எல்லாம் கடைப்பிடிக்கப்படவில்லை. நேரடியாக எங்களை நோக்கித்தான் பாய்ந்தது துப்பாக்கிக் குண்டு.

போராட்டக்காரர்களை வலுவாகப் பிடித்து கடலுக்குள் தள்ளிவிட்டது காவல் துறை. பெண்கள், குழந்தைகள் கடலுக்குள் தள்ளப்பட்டனர். தமிழக முதல்வர் தன் குடிமக்களின் மீது அக்கறைகொண்டு ஒரு நல்ல பதில் சொல்வார் என்று எங்கள் மக்கள் நம்பினார்கள். எதையும் எதிர்பார்த்தே சாப்பாடு, தண்ணீர் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளுடன் நாங்கள் முற்றுகைப் போராட்டத்துக்கு அணிதிரண்டோம். அணு உலைக்கு அருகில் நாங்கள் செல்லவில்லை. எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அங்கு பணிபுரிந்தவர்களைத் தடுக்கவில்லை. நாங்கள் அமைதி வழியில் நின்றோம். ஆனால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ கமுக்கமாக இருந்துகொண்டு ஒரு ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறார். இலங்கையில் இருந்து கால்பந்து விளையாட வந்தவர்களைத் திருப்பி அனுப்பி, தமிழர்கள் மத்தியில் தன் செல்வாக்கை உயர்த்தத் திட்டமிடுகிறார். எந்த ஆபத்தையும் விளைவிக்காத சிங்களக் கால்பந்தாட்ட வீரர்களைத் தமிழகத்தில் அனுமதிக்க மறுத்துவிட்டு, தலைமுறை தாண்டியும் படுபயங்கர ஆபத்தை விளைவிக்கக்கூடிய கூடங்குளம் அணு உலையை அனுமதிக்கிறார். ஒரு கால்பந்து மைதானம் அளவுக்கே இருக்கக்கூடிய கச்சத் தீவை மீட்கப்போவதாகக் கர்ஜித்துவிட்டு, தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைக்கக்கூடிய கூடங்குளம் அணு மின் நிலையத்தை அனுமதிக்கிறார். ஜெயலலிதா, கருணாநிதி இருவருக்குமே மக்களைப் பற்றி அக்கறை இல்லை. நாம் நம் இயற்கை வளங்களை இவர்களிடம் இருந்து மீட்டெடுக்க வேண்டி இருக்கிறது. நம் மண், நிலம், நீர், கடல் என்று இயற்கைச் செல்வங்கள் அனைத்தும் நமக்கே சொந்தம் என்று உரக்கச் சொல்ல வேண்டி இருக்கிறது.

இந்தச் சம்பவங்களைப் பார்க்கும்போது எனக்கு முள்ளிவாய்க்கால்தான் நினைவுக்கு வருகிறது. இதை மூன்றாம் முள்ளிவாய்க்கால் என்று சொல்வேன். முதல் முள்ளி வாய்க்கால் ஈழத்தில். இரண்டாவது முள்ளிவாய்க்கால் மார்ச் 19 அன்று இடிந்தகரையில். மூன்றாவது முள்ளிவாய்க்கால் கூடங்குளத்தில். இப்போதும் உறுதியாகக் கூறுகிறேன்... இடிந்தகரை மீனவர்கள் இனி ஆயுதம் தாங்கிப் போராடுவார்கள் என்று எழுந்திருக்கும் வதந்தியில் துளியும் உண்மை இல்லை. அப்படியான காரியங்களில் எம் மீனவர்கள் இறங்க மாட்டார்கள். சம்பவ இடத்தில் இருந்த நான் சொல்கிறேன். அத்தனை ஒழுக்கத்துடனும் கட்டுக் கோப்புடனும் இந்தப் போராட்டத்தை நடத்தினார்கள் எம் மக்கள். குழந்தைகளை யும் பெண்களையும் கேடயங்களாக நாங்கள் பயன்படுத்தினோம் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். இந்திய அரசியல் சட்டத்தில் பெண்களும் குழந்தைகளும் போராடக் கூடாது என்று இருக்கிறதா என்ன? சொல்லப்போனால், இந்தப் போராட்டத்தையே பெண்கள்தான் முன்னெடுத்துச் சென்றார்கள். பேச்சுவார்த்தையில் பெண்கள் ஈடுபட்டார்கள். அப்படி முன்னணியில் இருந்த சேவியரம்மா, மெல்பிரெட், சுந்தரி போன்ற பெண்களைக் காவல் துறை முடியைப் பிடித்து அடித்து இழுத்துச் சென்றதாகத் தோழர்கள் கூறினார்கள். இப்படி எங்கள் மக்களை அடித்துத் துன்புறுத்தும் காவல் துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்குத் துணைபோகும் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் அராஜகங்களுக்குத் துணைபோகின்றன.

நான் சம்பவம் நடந்தவுடனேயே எங்கள் நலனில் அக்கறையுள்ள, தமிழர்களின் வாழ்வாதாரம் சிதைந்துவிடக் கூடாது என்று விரும்புகிற தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்கள் அனைவருக்கும் தகவல் கொடுத்துவிட்டேன். அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இனி அந்தத் தலைவர்கள் கையில். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ.க., சி.பி.ஐ., சி.பி.எம். ஆகிய ஆபத்தான ஆறு கட்சிகளைத் தவிர்த்து, ஆதரவான நல்ல இயக்கங்களும் கட்சிகளும்தான் இனி எங்கள் அடுத்த கட்டப் போராட்டம்குறித்துத் தீர்மானிக்க வேண்டும்!''

- கவின் மலர் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு