பிரீமியம் ஸ்டோரி
##~##

ந்த 'மக்கள் நல அரசை’ மக்களை நோக்கித் திரும்பிப் பார்க்கவைக்க, மக்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது?

 அவர்கள், கழுத்தளவுத் தண்ணீரில் 17 நாட்கள் இடைவிடாமல் மூழ்கி நின்றார்கள். அவர்கள் கேட்டது கோடிகளையோ, கோபுரங்களையோ அல்ல... தங்களின் வசிப்பிடத்தை மூழ்கடிக்கும் அணையின் நீர்மட்டத்தைக் குறைக்கச் சொன்னார்கள். பிடுங்கப்பட்ட நிலத்துக்குப் பதிலாக வேறு நிலம் கேட்டார்கள். அசையாத அரசு சமாதானங்களால் சமரசம் செய்ய முயன்றது. மக்களோ சளைக்காத உறுதியுடன் போராடினார்கள். விளைவு... மக்கள் வெற்றி அடைந்திருக்கிறார்கள்.  

மத்திய இந்தியாவில் பாயும் நர்மதா நதியில் அணை இல்லாத இடங்கள் இல்லை. நர்மதா நதியின் குறுக்கே 30 பிரமாண்ட அணைகளும் 135 நடுத்தர அணைகளும் கட்டப்பட்டு இருக்கின்றன. அந்த 135-ல் ஒன்றுதான் மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஓம்கரேஷ்வரர் அணை. பல வருடங்களுக்கு முன்பு திட்டமிடப்பட்டு 2004-ல் கட்டுமானம் தொடங்கி 2006-ல் முடிக்கப்பட்ட இது, உலகில் அதிவேகமாகக் கட்டி முடிக்கப்பட்ட அணைகளில் ஒன்று. ஆனால், இது அந்தப் பகுதி மக்களுக்கு எந்த மகிழ்ச்சியையும் தரவில்லை. ஏனெனில், அவர்கள் இந்த அணையினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள்.

ஜல சத்யாகிரகம்!

பசுமைக் காடுகளும் வளம் மிகுந்த மலைகளும் நிறைந்த அழகுப் பிரதேசம் அது. விவசாயத்துக்குப் பஞ்சமே இல்லை. பருத்தி, காய்கறிகள், சோயா பீன்ஸ், பழ வகைகள், நிலக்கடலை என அங்கு அனைத்தும் விளையும். வீடுகள்தோறும் மாடுகள் வளர்த்தார்கள். கடும் மழைக் காலங்களில் நர்மதையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அவர்கள் ஊரையும் வெள்ளம் சீண்டிப் பார்க்கும். ஆனால், அழித்தது இல்லை. எல்லாம் அந்த அணை வரும் வரைதான். உலக வங்கி மற்றும் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் கட்டப்பட்ட ஓம்கரேஷ்வரர் அணைக்கு ஆரம் பத்தில் இருந்தே கடும் எதிர்ப்புகள்.

ஆனால், அதெல்லாம் அரசின் முன்பு எடுபடவில்லை. மக்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். ''ஒரு நாள் திடீரென வந்து இரவுக்குள் வீடுகளைக் காலி செய்யச் சொன்னது போலீஸ். வீட்டைக் காலி செய்துகொண்டு மறுவாழ்வு முகாமுக்கு வந்து சேர்ந்தோம். இங்கு நிலம் இல்லை. மாடுகள் இல்லை. இங்கு எங்களால் என்ன செய்ய முடியும்? அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த நிலக்கடலை வெள்ளாமையில் புல்டோசரை விட்டு ஏற்றிவிட்டு, 16 ஆயிரம் பணத்தைக் கொடுத்து என்னை அனுப்பிவிட்டனர். என் வயலின் நிலக்கடலை மட்டுமே ஒரு லட்சத்துக்கு விற்கும். இனி, நான் நிலத்துக்கு என்ன செய்வேன்?'' என்ற ராம்பீரின் ஆற்றாமைக்கு அரசு இயந்திரம் செவி சாய்க்கவே இல்லை.  

ஜல சத்யாகிரகம்!

கந்த்வா மற்றும் தேவ்ஸ் மாவட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட 30 கிராமங்களில் 16 கிராமங்கள் முழுமையாக அணைக்குள் மூழ்கிவிட்டன. 5,800 ஹெக்டேர் விவசாய நிலத்தை அணை விழுங்கிவிட்டது. இப்படி விவசாய நிலத்தை, வசித்த வீட்டை, வளர்த்த மாடுகளை இழந்த மக்கள், தங்களுக்கான வாழ்வாதார வாய்ப்புகளைக் கேட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியபடியே இருந்தார்கள். போலீஸை அனுப்பி மிரட்டுவதைத் தவிர, அரசு எதையும் செய்யவில்லை. இதற்கிடையே அரசு 189 மீட்டராக இருந்த அணையின் அதிகபட்ச நீர்மட்டத்தை, 196.5 மீட்டராக உயர்த்தியது. ஏற்கெனவே 16 கிராமங்கள் முழுமையாக மூழ்கிய நிலையில் அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டதால் மேலும் பல கிராமங்களின் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின. மக்கள் பெரும் கொந்தளிப்புடன் திரண்டார்கள். 60 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் அதே நர்மதா நதியின் ஒரு பகுதியில் நீருக்குள் இறங்கி நின்று போராடத் தொடங்கினார்கள்.

'இப்படியே அணையின் நீர்மட்டத்தை அதிகரித்தால் இப்படி எங்கள் கழுத்துவரை நீர் வந்துவிடும்!’ என்ற அபாயத்தை அறிவித்த 'ஜல சத்யாகிரகம்’ அது. கழுத்தளவு தண்ணீரில் நின்றபடி உண்ணாவிரதம் இருந்தனர். ஒன்று, இரண்டு, மூன்று என 17 நாட்களைத் தொட்டது போராட்டம். அவர்களின் கால்களை நீருக்குள் மண் தின்றது. இறுதியில் மத்தியப்பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சௌகான், 189 மீட்டரிலேயே அணையின் நீர்மட்டத்தை நிலைநிறுத்த ஒப்புக்கொண்டார். அத்துடன் அணைக்காக நிலம் வழங்கியவர்களுக்கு நிலம் வழங்கவும் உறுதி அளித்திருக்கிறார்.

இது மக்களுக்கு வெற்றிதான். ஆனால், புதிதாக எதையும் பெறுவதற்காக மக்கள் போராடவில்லை. இருப்பதை இழந்துவிடாமல் இருக்கவே இத்தனை போராட்டமும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு