பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• வீடியோ கேம்ஸில் விளையாட மட்டும்தான் வேண்டுமா என்ன? ஆடவும் செய்யலாமே! டிஸ்னி நிறுவனம் டான்ஸ் வீடியோ கேம்ஸ் என்ற நிகழ்ச்சியை அமெரிக்காவில் நடத்துகிறது. பொது இடங்களில் இருக்கும் சென்சார் திரைகள் முன் ஆடுபவர்களின் அசைவுகளைத் திரையில் இருக்கும் கார்ட்டூன் கேரக்டர்கள் பிரதிபலிக்கும். இதில் சிறந்த நடனத்தைப் பதிவு செய்பவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் குவியும் என்பதால், ஆங்காங்கே ஆடிக்கொண்டு இருக்கிறது அமெரிக்கா. உங்களில் யார் மைக்கேல் ஜாக்சன்?

இன்பாக்ஸ்

• மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கிரிஷா நகரச கவுடா பதக்க மேடையில் 'தங்கம் வெல்லாததற்கு என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்!’ என்று கூறி நெகிழவைத்திருக்கிறார். '100 கோடி மக்கள்தொகைகொண்ட இந்தியாவில் இருந்து 10 பேர் மட்டுமே போட்டிகளில் பங்கெடுத்துக்கொண்டது பிற நாட்டினரை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இதற்கு நாம் அனைவருமே வெட்கப்பட வேண்டும்!’ என்று நாட்டுக்கு முக்கியமான செய்தி ஒன்றும் சொல்லியிருக்கிறார். அலர்ட் ஆபீஸர்ஸ்!

இன்பாக்ஸ்
##~##

• 'பிரியங்கா சோப்ரா பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார்’ - இந்த வார பாலிவுட் பட்டாசு இது. இதற்கெனவே பிரத்யேக பிரஸ் மீட் வைத்து, ''சினிமாவுக்கு வந்த புதிதில் எனக்கு மேக்கப் போடக்கூடத் தெரியாது. நான் பெரிய அழகில்லை என்கிறார்கள். ஆனாலும் எனக்குப் பட வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இது எல்லா நடிகைகளுக்கும் ஏற்படும் அனுபவம்தான். இப்போது எப்படி இருக்கிறேனோ, அப்படியே எப்போதும் இருக்க விரும்புகிறேன்!'' என்று கலகலப்பாகப் பேசி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக் கிறார். நீ அழகிடி செல்லம்!

• நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர், 71 மணி நேரம் செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால், செயல்பட்டதோ 24 மணி நேரம் மட்டுமே. வீணான மக்களின் வரிப் பணமோ 20 கோடி ரூபாய். விழலுக்கு இறைத்த நீர்!

• 1966 ஜனவரி 24-ம் தேதி 117 பயணிகளுடன் பறந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளானது. அதில் பலியானவர் களில் ஒருவர் இந்திய அணுசக்தித் துறையின் தலைவரான விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கிர் பாபா. அந்த விபத்தில் சிதறிய பொருட்களில் இருந்து ஒரு பையைச் சென்ற வாரம் கண்டு பிடித்திருக்கிறார்கள். 'மிகவும் ரகசியம் - வெளியுறவுத் துறை’ என்று எழுதப்பட்டு இருந்த அந்தக் கடிதப் பையை அப்படியே பிரான்ஸில் உள்ள இந்தியத் தூதரகத்தில் ஒப்படைத்திருக் கிறார்கள். என்ன ரகசியம்னு சீக்கிரம் சொல்லுங்கப்பா!

• 'செம்மீன்’ ஷீலா... இனி அரசியல்வாதி. எம்.ஜி.ஆரால் சினிமாவுக்கு அழைத்து வரப்பட்டு மலையாளத் திரையில் உலா வந்தவர், தனது 70-வது வயதில் காங்கிரஸில் இணைந்திருக்கிறார். சீனியர் சிட்டிசன்கள் ஆதரவை அள்ளுங்க.

• இந்தியாவுக்குச் சுற்றுப் பயணமாக வந்த சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜென் லியாங் குவாங் லீ தாஜ்மஹால், குதுப்மினார் எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு நாடு திரும்புகையில், தங்களை அழைத்துச் சென்ற இரு இந்திய விமானிகளுக்கும் தலா ஒரு கவரைக் கையில் திணித்துவிட்டுச் சென்றிருக்கிறார். கவரைத் திறந்து பார்த்தால் தலா 50,000 ரூபாய். உடனே அமைச்சரவை அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துவிட்டு, அந்த ஒரு லட்ச ரூபாயை அரசு கஜானாவில் சேர்த்துவிட்டார்கள் அந்த இரு விமானிகளும். பலே பைலட்ஸ்!

இன்பாக்ஸ்

• சர்ச்சைகள் கிளம்பியபோதும் தன் மகள் ரோசைன்ஸை மீடியா முன் நிறுத்தாத வெனிசுலா அதிபர் ஹுயூகோ சாவேஸ், கடந்த வாரம் ஒட்டுமொத்த மீடியா மக்கள் முன்னிலையிலும் தன் மகளை அறிமுகப்படுத்தி, கட்டியணைத்து முத்தமிட்டுப் பாச அத்தியாயம் படைத்திருக்கிறார். 14 வயதாகும் ரோசைன்ஸ் அப்பா மீது சாய்ந்து கண்ணீர்விட... பதிலுக்குப் பாசத்துடன் ஹுயூகோ முத்தமிட.... பரபரப்பாகத் துவங்கிய பிரஸ்மீட் சென்ட்டிமென்டாக முடிந்திருக்கிறது. ரோசைன்ஸ் ஹுயூகோவின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவர் என்பதும், அந்த இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு இப்போது மகளுடன் மட்டுமே ஹுயூகோ வசித்துவருகிறார் என்பதும் மேலதிகத் தகவல். ஒரு வாரிசு உருவாகிறாள்?

இன்பாக்ஸ்

• உலகின் புயல் வேக மனிதர் உசேன் போல்டுக்கு ஒரு போட்டியாளர் உருவாகி இருக்கிறார். போல்டின் மணிக்கு 27.8 கி.மீ. தூர சாதனை வேகத்தைத் தாண்டி 28.3 கி.மீ. தூரத்தைத் தொட்டிருக்கிறார் இந்தச் சாதனையாளர். ஆனால், இந்த அசுர சாதனையின்போது அவருக்கு ஒரு சொட்டுகூட வியர்க்கவில்லை. காரணம், அவர் ஒரு ரோபோ! அமெரிக்க ராணுவம் வடிவமைத்து இருக்கும் அந்த ரோபோவின் பெயர் சீட்டா. 'எதிர்க் காற்று உரசல் இல்லா மல் டிரெட் மில் இயந்திரத்தில்தான் சீட்டா இந்த வேகம் ஓடியிருக்கிறது. அதற்குச் சக்தி கொடுக்கும் பேட்டரி யின் எடையையும் அது சுமக்க வில்லை. அதனால், இப்போதைக்கு போல்ட்தான் உலகின் வேகமான மனிதன்!’ என்கிறார்கள் சீட்டாவின் பொறியாளர்கள். சீட்டாவுக்கும் சிட்டி ரோபோவுக்கும் ரேஸ் விடலாமா?

இன்பாக்ஸ்

• சந்தானம் - பவர் ஸ்டார் இணைந்து கலாய்க்கவிருக்கும் படத்தில் 'நண்பன்’ சந்தானத்துக்காக கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துக்கொடுத்திருக்கிறார் சிம்பு. தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய சிம்புவுக்கு சந்தானத்தின் 'தேங்க்ஸ் கிவ்விங்’ நடவடிக்கையாம் இது. நண்பேன்டா!

இன்பாக்ஸ்

• சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்று இதுவரை தனக்குப் பரிசாக வந்த கார்கள் அனைத்தையும் சேவை அமைப்புகளுக்குத் தானமாகக் கொடுத்துவிடுவது போப் பெனடிக்ட்டின் பழக்கம். ஆனால், கடந்த வாரம் அவருக்குப் பரிசளிக்கப்பட்ட எலெக்ட்ரிக் காரை மட்டும் பயன்படுத்த முதல்முறை யாக விருப்பம் தெரிவித்திருக்கிறார். 'சுற்றுச்சூழல் பாதிக்காமல் வாடிகன் தோட்டத்தைச் சுற்றிப் பார்க்க இந்த காரைப் பயன்படுத்துவேன்!’ எனத் தெரிவித்துள்ளார். 'க்ரீன் போப்’!

• மத்திய அமைச்சர்களின் சொத்து மதிப்பு விவரங்களில் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி இருப்பது அமைச்சர் பிரபுல் படேலின் 52 கோடி மதிப்பிலான சொத்துகள்! பட்டியலில் கடைசி இடம் பிடித்திருக்கும் ஏ.கே.அந்தோணிக்கு 55 லட்சமே சொத்து. பிரதமர் மன்மோகன் சிங்குக்கு? 10.37 கோடிகள். தமிழகத்தைச் சேர்ந்த மு.க.அழகிரி, ப.சிதம்பரத்தின் சொத்து மதிப்புகள் முறையே 9.50 மற்றும் 11.96 கோடிகளாகக் கணக்கு காட்டப்பட்டுள்ளன. நடக்கட்டும்... நடக்கட்டும்!

• பாலிவுட்டின் ஹிட் ஹீரோ அக்ஷய் குமார் நடித்து சமீபத்தில் வெளியான 'ஜோக்கர்’ படம்... செம பிளாஃப். அக்ஷயின் சினிமா கேரியரிலேயே மிக மோசமான தோல்வியாக அமைந்ததில் மனிதர் ரொம்பவே அப்செட்டாம். படத்தின் ரஷ் பார்த்தபோதே அதன் முடிவு தெரிந்ததாலோ என்னவோ, படத்தின் பப்ளிசிட்டிகளில்கூடக் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிவிட்டாராம். அடுத்த படத்துல அசத்திடலாம் அக்ஷய்!

இன்பாக்ஸ்

• சினிமா நட்சத்திரங்கள் சின்னத் திரைக்கு வருவது செய்தி அல்லதான். ஆனால், இந்த நட்சத்திரம்? 'ஜார்ஜ் ஆஃப் த ஜங்கிள்’, 'நைட் அட் த மியூஸியம்’, 'ஹேங் ஓவர்-2’ என 20 படங்களுக்கு மேல் கலக்கிய கிரிஸ்டல் இப்போது என்.பி.சி. சேனலின் 'அனிமல் பிராக்டீஸ்’ நிகழ்ச்சிக்குத் தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். மருத்துவர் கோட் அணிந்த மனிதர் அல்ல... அவர் தோளில் ஜம்மென்று அமர்ந்திருக்கும் மிஸ்டர் குரங்கார்தான் கிரிஸ்டல். டி.ஆர்.பி. தாவித் தாவி எகிறுமோ?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு