Published:Updated:

படைப்பாளியின் உக்கிரம்!

சமஸ்

படைப்பாளியின் உக்கிரம்!

சமஸ்

Published:Updated:
##~##

து ஒரு புத்தக வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர்கள் ஜவஹர்லால் நேருவும் சர்தார் வல்லபாய் படேலும். புத்தகத்தை வெளியிடுவதற்காக அதன் மீதுள்ள உறையைக் கிழிக்கிறார் நேரு. அதில் உள்ள கேலிச்சித்திரத்தைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்துபோகிறார். நேருவின் முகத்தில் அதிர்ச்சியை உணர்ந்த படேல் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறார். அவரும் அதிர்ந்துபோகிறார். அடுத்த நிமிஷம் இருவரும் சிரிக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டைக் கட்டி அணைத்துக்கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்கள். நேருவும் படேலும் ஒருவரைஒருவர் ஆரத்தழுவி நிற்கும் நிலையில், அவர்கள் இருவரின் கைகளிலும் உள்ள கத்திகள் பரஸ்பரம் அடுத்தவர் முதுகைப் பதம் பார்க்கக் காத்திருப் பதாக வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரத்தைத் தாங்கி வந்த புத்தகம் அது!

 கார்ட்டூனிஸ்ட் ஜாம்பவான் சங்கர் தன்னுடைய 'சங்கர்ஸ் வீக்லி’ பத்திரிகையைக் கொண்டுவந்தபோது அதை நேருதான் வெளியிட்டார். ''சங்கர், என்னையும் விட்டுவைக்க வேண்டாம்'' என்று வெளிப்படையாகக் கேட்டுக்கொண்டார் நேரு. மரணத்தறுவாயில் நேரு இருந்தபோதும்கூட சங்கரின் தூரிகைகள் அவரை விட்டுவைக்கவில்லை. இந்தியாவில் பத்திரிகையாளர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் மதிப்பு கொடுத்த நாட்கள் அவை. உயரிய விழுமியங்கள் வீழ்ச்சி அடைந்து தெருவில் விழுந்தால் எப்படி இருக்கும் என்பதை இந்த நாட்களில் பார்க்கிறோம். சமீபத்திய உதாரணம் கான்பூர் கார்ட்டூனிஸ்ட் அசீம் திரிவேதியின் கைது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படைப்பாளியின் உக்கிரம்!

அசீம் திரிவேதி வரைந்த 'புதிய தேசியச் சின்னங்கள்’ கேலிச்சித்திரங்களில் ஒன்று நாடாளு மன்றத்தைக் கழிப்பறையாகச் சித்திரித்தது. இன்னொன்று அசோக ஸ்தூபி சிங்கங்களை ஓநாய்களாக்கி, 'வாய்மையே வெல்லும்’ வாசகத்தை 'ஊழலே வெல்லும்’ வாசகமாகச் சித்திரித்தது. இன்னொரு கேலிச்சித்திரம் பாரத மாதாவை ஊழல் என்ற உருவம் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்க முயற்சிப்பதாகச் சித்திரித்தது. ''தேசத்தை ஊழல்வாதிகள் கபளீகரம் செய்துவிட்டார்களே என்ற ஆதங்கத்தைத்தான் கேலிச்சித்திரங்களாக வெளிப்படுத்தினேன்'' என்கிறார் அசீம் திரிவேதி. அரசுக்குக் கேலிச்சித்திரங்கள் எல்லாம்கூடச் சங்கடமாக இருந்திருக்காது. அசீம் திரிவேதி ஊழலுக்கு எதிரான இயக் கங்களில் தீவிரமான செயல்பாட்டாளராக இருந்தார். விளைவு, ''தேசத்தை, தேசியச் சின்னங்களை, நாடாளுமன்ற ஜனநாயகத்தையே அசீம் திரிவேதி அவமதித்துவிட்டார்'' என்று சொல்லி, தேசத் துரோகம் மற்றும் தேசியச் சின்னங்கள் அவமதிப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் கைதுசெய்து அவரைச் சிறையில் தள்ளி இருக்கிறது மகாராஷ்டிர அரசு. 1922-ல் 'யங் இந்தியா’வில் எழுதிய ஒரு கட்டுரைக்காக காந்தியை இதே தேசத் துரோகச் சட்டப் பிரிவின் கீழ்தான் அன்றைய ஆங்கிலேய அரசு கைது செய்தது. அந்த காலனியாதிக்கச் சட்டத்தை இன்னமும் வைத்துக்கொண்டுதான் ஜனநாயகத்தைக் கொண்டாடு கிறோம் நாம்!

அசீம் திரிவேதியின் கேலிச்சித்திரங்கள் சட்டப்படி ஆட்சேபகரமானவையாக இருக்கலாம். ஆனால், அவை இந்தியாவின் இறையாண்மையையும் நாடாளுமன்ற மரபுகளையும் கேள்விக்குறியாக்கின; கலகத்துக்கு வழிவகுத்தன என்றெல்லாம் சொல்லி தங்கள் ஊழலில் இருந்து அரசியல்வாதிகள் தப்பிக்கொள்ள முடியாது.

இந்திய அரசும் நம்முடைய அரசியல்வாதிகளும் தங்களைப் பற்றி என்ன அபிப்பிராயத்தில் இருக்கின்றனர் என்று தெரியவில்லை. மன்மோகன் சிங் நடப்பதுபோல ஒரு படத்தை வரைந்து, அதற்குக் கீழே 'செயல்படும் பிரதமர்’ என்று தலைப்புக் கொடுத்தால், இன்றைக்கு அதுவே கேலிச்சித்திரம்தான்.

நாடாளுமன்றத்தில், ''நம்பிக்கை வாக்கெடுப்பில், அரசைக் காப்பாற்ற எங்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்சப் பணம் இது'' என்று கட்டுக்கட்டாகப் பணத்தை எதிர்க் கட்சி உறுப்பினர்கள் வாரி இறைப்பதைவிட, நாடாளுமன்றத்தைக் கேவலப்படுத்தும் ஒரு கேலிச்சித்திரத்தை யாராலும் வரைந்துவிட முடியாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் சட்டசபைக்குள் உட்கார்ந்துகொண்டு, செல்பேசியில் நீலப்படம் பார்ப்பதையும் அதன் தொடர்ச்சியாக இனி அவைக்கு செல்பேசி எடுத்து வரக் கூடாது என்று புதிய விதிகள் வகுப்பதையும்விட ஓர் அசிங்கத்தை அரசியல்வாதிகள் மீது எந்தப் பத்திரிகையாளனின் கட்டுரையும் ஏற்படுத்திவிட முடியாது.

இந்தியாவில் கேலிச்சித்திரங்கள் ரொம்பக் காலம் நக்கலாகத்தான் வரையப்பட்டன. இப்போது அவை உக்கிரமாக வரையப்படுகின்றன என்றால், அதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் கோமாளித்தனம். ஒரு கோமாளியைக் கேலிச்சித்திரமாக்கிக் கேலி செய்வது ரொம்ப சிரமம். தவிர, அரசியல் உக்கிரமாகும்போது, வாழ்க்கை உக்கிரமாகும்போது படைப்புகளும் உக்கிரமாகத்தான் செய்யும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism