Published:Updated:

"டேய்... நான் சொல்றதைக் கேளுடா!"

ஆர்.சரண்ஓவியங்கள் : கண்ணா

"டேய்... நான் சொல்றதைக் கேளுடா!"

ஆர்.சரண்ஓவியங்கள் : கண்ணா

Published:Updated:
##~##

மூடு கிளப்பும் மூலிகை சூப், கசகச காம உருண்டை, அனுமான் யந்திரம், கருக் குழாய் அடைப்பு நீக்கம், சொப்பன ஸ்கலிதம், வழுக்கைத் தலையில் முடி, ஜிம்முக்குப் போகாமல் எடை குறைப்பு,  அமேசான் காட்டு மூலிகை எண்ணெய்... பிரைம் டைமில் வெளுத்து வாங்கும் சேனல்கள், கூட்டணி வைத்துப் பின்னிரவில் பின்னும் அட்ராசிட்டிகளில் சில சாம்பிள்களே இவை...  

ஒரு விளம்பரம் இது... சோகமாகக் குத்தவைத்து உட்கார்ந்து இருக்கிறான் ஒருவன். ''உன்னோட தலையில சூரியன் தெரியுது!'' என இரண்டு முதிர்கன்னிகள் (காலேஜ் கேர்ள்ஸாம்!) அந்த முதிர்இளைஞனின் (இவரும் காலேஜ் ஸ்டூடன்ட்டாம்!) இல்லாத முன் வழுக்கையைக் கேலி செய்கிறார்கள். அதே விளம்பரத்தின் இரண்டாம் பாகமாக விரிகிறது மற்றொரு காட்சி... இரண்டு சுட்டிப் பிள்ளைகள் தங்கள் டியூஷன் மாஸ்டரின் மண்டையில் நிலா தெரிவதாகச் சிரிக்கிறார்கள். ஃப்ளாஷ்கட்... ''ஆஹா! அற்புதம். பாருங்க... தேய்ச்சேன் இந்த எண்ணெயை... இதோட பலன் எப்படி இருக்குதுனு. நம்புவீங்க நான் சொல்றதை இப்போ!'' என ஜுனூன் தமிழில் தலையை அந்த முன் வழுக்கை மண்டையர் எண்ணெயின் உபயத்தால் தலையை சீவிக்கொள்ளும்போது ஒரே சீவில் தலையையே சீவிவிடலாமா என்று நினைக்கத் தோன்றுகிறது. அதிலும் அந்த சின்னத்திரை தம்பதி அனுமான் எந்திரத்தைக் கைகளில் வைத்துக்கொண்டு 'உங்கள் வீட்டில் லட்சுமி கடாட்சம் கிடைக்கணுமா? உடனே டயல் செய்யுங்க!’ என நாள்தோறும் மன்றாடுவதைச் சகிக்க முடியலை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"டேய்... நான் சொல்றதைக் கேளுடா!"

பிரதர் அண்ட் சிஸ்டர். அட இதாச்சும் பரவாயில்லை... ஆன்மிக சர்வீஸ்... பொறுத்துக்கலாம்!

ஆனால், ஒரு காலத்தில் உலக நாயகனுக்குஎல்லாம் பிரியமாக இருந்த டெல்லி கணேஷ் ஒரு குட்டி ரூமில் ரொம்ப சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு, ''இந்த மூலிகை யைச் சாப்பிட்டா வாயுப் பிடிப்பெல்லாம் போயிடும்னு சொல்லுறீங்க... அப்படித்தானே டாக்டர்?'' என்று மொக்கை டாக்டருக்கு பில்டப் ஏற்றுவது ரொம்ப ஸாரி. அந்த நடுநிசியிலும் 'நிழல்கள்’ நடிகர் கூலிங் க்ளாஸ் போட்டுக்கொண்டு, ''புத்திசாலித்தனமான ஒரு யோசனை சொல்றேன் கேட்டுக்கங்க. உங்களுக்கு பிளாட் வாங்கணும்னா, சென்னைக்கு மிக அருகிலேயே திண்டிவனத்துக்குப் பக்கத்துல 50 கிலோமீட்டர்ல பிளாட் இருக்கு... வாங்கிப் போடுங்க!'' என ரியல் எஸ்டேட்காரர்களுக்காகப் புளுகுகிறார்.

இரவு 11 மணிக்கு டைட்டானிக் பின்னணி இசையுடன் சமையல் செய்ய வருகிறார் ஒரு ஃப்ரெஞ்சுத் தாடி மருத்துவர். அந்த சேனலை தேர்தல் சென்சேஷன் சமயம்கூடப் பார்க்காத பலர் அந்த நள்ளிரவில் தவறாமல் ட்யூன் செய்கிறார்கள். காரணம், அவ்வளவு சரச விரசம். 'இந்தத் தண்டைச் சமைச்சுச் சாப்பிட்டீங்கன்னா...  அப்புறமென்ன உங்க மனைவியைத் தூங்கவிட மாட்டீங்க!’ என்று ஏதோ காட்டு வேரைத் தூக்கிக் காட்டுகிறார். தாடிக்காரர் பேசுவதையாவது மன்னிச்சூ. ஆனால், அருகில் இருந்துகொண்டு கடிதம் வாசிக்கும் அந்த காம்பியர் பெண்ணின் கலாய்த்தல் த்ரீ மச் ரகம். 'ஹாட்’லைனில் தாம்பத்ய சந்தேகம் கேட்கும் நேயர்களைக் கலாய்த்துக் காலி செய்கிறார். ''மிஸ்டர் பாண்டி... கல்யாணம் வரைக்கும் கொஞ்சம் அடக்கிவையுங்க. இல்லைன்னா, உங்களுக் குத்தான் சேதாரம்!'' என நேரடி அட்டாக். வேறு பட்டன் தட்டினால், ''இதோட பவரைப் பார்க்குறீங்களா? ஒரே மணி நேரத்துல 20 தடவை நீங்க ஆண் மகன் அவதாரம் எடுக்கலாம்!'' என முழங்கும் ஜாக்கி ஷெராப் (அடப்பாவிகளா... அவரையும் விட்டு வைக்கலையா!?) காம லேகியத்துக்காக கேன்வாஸ் செய்கிறார். அது டப்பிங் குரலில் உட்டாலக்கடி அடிக்கும் நிகழ்ச்சி. ''நான் உங்க மருந்தை உபயோகிச்சு அடுத்த பத்தாவது மாசமே குழந்தை பெத்துக்கிட்டேன்!'' என ஓர் அம்மா பதிவுசெய்யப்பட்ட குரலில் பேச... கோட்டைச் சரி செய்தபடி செட்டில் அமர்ந்திருக்கும் வட நாட்டுக் கூட்டத்தைப் பார்த்து, ''எல்லோரும் ஜோரா கை தட்டுங்க!'' என லேகிய வியாபாரி அவதாரம் எடுக்கிறார் ஜாக்கி.

ராஜ கீத இசையமைப்பாளர் சாயலில் ஒருவர் இரவில் ஆஜராகிறார். எண்களா லேயே உங்கள் வாழ்க்கையை உச்சத்துக்குக் கொண்டுசேர்த்துவிடும் நியூமராலஜி ஸ்பெஷலிஸ்டாம். அவரைத் தாண்டிப் போனால், காற்றடைத்த சதுர பலூன் ஒன்று சோபாவாகவும் மெத்தையாகவும் எப்படி எல்லாம் உங்களுக்குப் பயன்படுகிறது என உங்களுக்கு ஒரு மொட்டைத் தலையர் விளக்குகிறார். ஒழுங்காக இருக்கும் சோபாவில் தலையணையை அப்படி இப்படிப் போட்டுச் சாய்ந்து உட்கார அவஸ்தைப்படுவதாக செம நடி நடிக்கிறார். பிறகு, சங்கு சக்கர சாமியாய் இன்னும் சில மொட்டைகளோடு சேர்ந்துகொண்டு ஜிங்கு ஜிங்கு என பலூன் மெத்தையில் குதிக்கிறார். காருக்குப் பின் அந்த மெத்தை யைக் கட்டிக்கொண்டு கரடுமுரடான காட்டுக்குள் இழுத்துச் சென்று மெத்தையின் தரத்தை உங்களுக்காகப் பரிசோதனை செய்கிறார். (நாங்க ஏண்டா கட்டிலைக் காட்டுக்கு இழுத்துட்டுப் போகப்போறோம்?)  இப்படி எல்லாம் கிழியாத பலூனைக் காட்டி, 'இதோட விலை... வெறும் ....தான். உடனே டயல் செய்யுங்க’ என அதிர்ச்சியில் ஆழ்த்துகிறார்.

ஒரு மூலிகை பார்ட்டி காட்டுக்குள் தேடிச் சென்று சித்தர்களைச் சந்திக்கிறார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களான அந்தச் சித்தர்கள் 'தேமே’ என இவர் பேசுவதைக் கேட்கிறார்கள். அந்தச் சித்தர்கள் அனைவரிடமும் 'பேட்டா காசை எப்படா கொடுப்பே?’ என்ற பாடிலாங்குவேஜ்!

பரம்பரை வைத்தியர் ஒருவர்தான் எல்லாவற்றுக்கும் உச்சம். பெரியப்பாவைப் போல உட்கார்ந்திருப்பவரை நீங்கள் சுலபமாக அடையாளம் காணலாம். தோள் மீது கை போட்டு இயல்பாகப் பேசுவது இவர் பாணி. ''வயசுல மூத்தவன் என் அனுபவத்துல சொல்லுறேன். சொன்னாக் கேளு. உன் வீரியத்தைக் கெட்ட பழக்கத்தால இழந்துட்டே நீயி...'' என சாஃப்ட்டாக ஆரம்பிப்பவர், ''டே... சோதனைக் குழாய்ல பெத்துக்கிறதுல்லாம் பிள்ளையாடா? நல்லா யோசிச்சுப் பாருடா. இதுவாடா நம்ம கலாசாரம்? நான் சொல்றதை மட்டும் கேளுடா!'' என ஏகத்துக்கும் எல்லை மீறி அதட்டுகிறார்.  

அதிகாலையில் தூக்கம் கண்களைச் சுழற்ற... சேனல் மாற்றினால்...

'ஹாட் புராடக்ட்ஸ்’ என்று சில வஸ்துக்களை இன்னொரு கூட்டம் கூவிக் கூவி விற்கிறது. 'இந்த பிராவைப் போட்டுக்கிட்டா, முன்னழகு தூக்கலாத் தெரியும்... தன்னம்பிக்கை மிக்க பெண்மணியா நீங்க மாறிடுவீங்க!’ என ரப்பர் ஜாக்கெட்டை ஃபாரின் ஃபிகர்கள் முக்கால் மைல் நீளத்துக்கு இழுத்துக் காண்பிக்கிறார்கள்.

கெட்ட கடுப்பில் ரிமோட்டைத் தூக்கிப் போட்டால், அதுவாக சேனல் மாறியது... அதில் அந்த பெரியப்பா உரக்கக் கத்திக்கொண்டு இருந்தார்...

''டேய்... நான் சொல்லுறதைக் கேளுடா...''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism