Published:Updated:

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா
##~##

'படி அளக்கும் பரமசிவம்’ என்று திருவண்ணாமலை தி.மு.க-வினர் சொல்வது வேலுவின் முகத்தைப் பார்த்துத்தான். இது கருணாநிதிக்கும் நன்கு தெரியும். 'இலக்கியத் தென்றல் எ.வ.வேலு’ என்று முரசொலியில் ஒரு கட்டுரை வெளியானது. அதைப் பார்த்த கருணாநிதி, 'இவரையுமாய்யா வேலு வாங்கிட்டாரு?’ என்று கமென்ட் அடித்தாராம். அந்த அளவுக்குப் படி அளப்புகள் பாதாளம் வரை பாய்ச்சுவது இவரது இயற்கைக் குணம் என்பதால்தான், இந்த அளவு உயரத்தை எட்ட முடிந்தது. ''எல்லோரும் ஏவினால்தான் வேலை பார்ப்பார்கள். ஆனால், இவர் யாரும் ஏவாமலேயே எனக்காக வேலை பார்ப்பதால்தான் எ.வ.வேலு என்று பொருத்தமான பெயருடன் இருக்கிறார்'' என்று கருணாநிதியால் பாராட்டப்பட, இவரது பண பலமும் சுறுசுறுப்புமே காரணம் என்பார்கள். 'திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளராகவும் மந்திரியாகவும் இருந்த பிச்சாண்டி, பவுடர் போட்டு, பச்சை பெல்ட்டைக் கட்டி சென்னைக்குக் கிளம்புவதற்குள்... வேலு, தாம்பரத்தைத் தொட்டு இருப்பார்’ என்று கட்சிக்காரர்கள் சான்றிதழ் வழங்குவது சும்மா இல்லை!

கே.கே.எஸ்.எஸ்.ஆரைப்போலத்தான் வேலுவும் 'பை பெர்த் ஏ.டி.எம்.கே.’ சென்னையிலும் திருவண்ணாமலையிலும் கருணாநிதி, ஸ்டாலினுக்காக வேலு எத்தனை லட்சம் செலவு செய்து கூட்டம் கூட்டினாலும், கையில் உள்ள எம்.ஜி.ஆர். பச்சையை அழிக்க முடியாது. அப்படிப்பட்ட வேலுவின் வாழ்க்கை திருவண்ணாமலையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள சே.கூடலூரில் தொடங்குகிறது. ஆரம்பத்தில் பம்ப்செட் மோட்டாரின் ஆயில் இன்ஜின் ரிப்பேர் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். பிறகு அந்த வட்டாரத்தில் பிரசித்தமான தாமோதரன் பஸ் சர்வீஸில் கண்டக்டராகச் சேர்ந்தார். பொதுவாகவே, லோக்கல் பஸ்களில் நிரந்தரமாகப் பணி செய்யும் டிரைவர், கண்டக்டர்கள் அந்த வட்டாரத்தில் பிரபலமாவார்கள். இவரும் பிரபலமானார்.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

எம்.ஜி.ஆரின் ரசிகராக இருந்ததால், 1972-ல் அ.தி.மு.க. தொடங்கப்பட்டபோது, தன்னை அதனுள் ஐக்கியப்படுத்திக்கொண்டார். தண்டராம்பட்டு ஒன்றியத் தொகுதி துணை அமைப்பாளர் பதவியையும் பிடித்தார். பார்த்த வேலையை விட்டுவிட்டு, 77-ம் ஆண்டு தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதியைக் கேட்டு அலைந்தார். ஆனால், கிடைக்கவில்லை. ஆவூர் ராமலிங்கம் என்பவருக்கு ஸீட் கிடைத்தது. எம்.ஜி.ஆர். அலை வீசிய இந்தத் தேர்தலில் ஆவூர் ராமலிங்கம் தோற்றுப்போனார். 'தனக்குத் தொகுதி கிடைக்காத கோபத்தில் ராமலிங்கத்தை வேலுதான் தோற்கடித்தார். சொந்தக் கட்சி வேட்பாளரைத் தோற்கடிக்கும் பலம் வேலுவுக்கு இருப்பதே பெரிய விஷயம்’ என்று அந்தக் காலத்தில் பேச்சுக்கள் பரவ, இவரது செல்வாக்கு உயர்ந்ததாம்.

உள்ளூரில் செல்வாக்கு கிடைத்தால் போதாது, தலைமைக் கழக ஆட்களை வளைத்தால்தான் வளர முடியும்என்ற சூத்திரத்தைப் பிடித்தார் வேலு. ப.உ.சண்முகத்துக்குப் பணிவிடைகள் செய்யத் தொடங்கினார். 84 தேர்தலில் தண்டராம்பட்டு தொகுதிக்கு யார் வேட்பாளர் என்று பரிசீலனை வந்தபோது, இவரை ப.உ.ச. சொல்ல... 'கண்டக்டருன்னு சொல்றீங்க. ஜெயிக்க முடியுமாய்யா?’ என்று ஆர்.எம்.வீ. சந்தேகம் கிளப்ப, 'கெட்டிக்காரப் பையன்’ என்று ப.உ.ச. வலியுறுத்த... தொகுதி கிடைத்தது. எம்.எல்.ஏ. ஆனார். அன்றைய மந்திரிகளாக இருந்த ஆர்.எம்.வீ, பொன்னையன், முத்துசாமி ஆகியோரைத் தினமும் சந்தித்து, தனது தொகுதிக்குத் தேவையான காரியங்களைச் செய்வதில் தீவிரம் காட்டினார். சைதை துரைசாமியின் நட்பு கிடைத்து, அவர் ஜெகத்ரட்சகனை அறிமுகம் செய்துவைக்கிறார். அ.தி.மு.க. வட்டாரத்தில் முதன்முதலாக கல்லூரியைக் கரன்சியாகப்பார்க்க ஆரம்பித்தவர் ஜெகத்தான். அவருக்காக டெல்லி சென்று சில அனுமதிகளை வாங்கி வந்திருக்கிறார். ஜேப்பியார் கல்லூரிக்கும் உதவி செய்திருக்கிறார். இந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். இறக்க... அவர் உடல் தாங்கிய ராணுவ வண்டியில் ஜெயலலிதா ஏறியபோது இறக்கிவிட்ட பெருமையை கே.பி.ராமலிங்கமும் வேலுவும் அடைகிறார்கள். 89 தேர்தலில் ஜானகி ஆதரவாளராக புறாவில் நின்றவருக்கு வெற்றி பறந்துபோனது. 72 முதல் 89 வரை எந்த தி.மு.க-வை எதிர்த்தாரோ அந்தக் கட்சியின் ஆட்சி மலர்ந்து, தன்னுடைய தலைவியான ஜானகியும் எதிரியான ஜெயலலிதாவுடன் ஐக்கியமான நிலையில், அரசியல் கசப்பாக ஆன நேரத்தில், சினிமா ஆசை துளிர்க்கிறது.

இயக்குநர் வி.சேகர் திருவண்ணாமலைக்காரர். சொந்த ஊர்ப் பாசத்தால் அவருடன் ஐக்கியமாகி, இவர் எடுத்த படங்கள்தான் 'நான் புடிச்ச மாப்பிள்ளை’, 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்’. சம்பாதித்த பணத்தை வைத்து கல்லூரி தொடங்கினார். 'எனது பூஜை அறையில் ஜெகத்ரட்சகன், ஜேப்பியார், இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன் ஆகிய மூவர் படத்தைத்தான் வைக்க வேண்டும்’ என்று ஒரு கூட்டத்தில் சொன்னார். கல்லூரி ஒரு பக்கம் போய்க்கொண்டு இருக்க... அரசியல் ஆசையும் போகவில்லை. நடிகர் பாக்யராஜ் கட்சி ஆரம்பித்தபோது, அதன் கொ.ப.செ பொறுப்புக்கு வந்தார். அது தேறாது என்று தெரிந்ததும், 'புரட்சித் தலைவி திராவிடத் தாய்தான்’ என்ற புத்தகத்தைத் தயாரித்து, கவிஞர் வாலியிடம் அணிந்துரையும் வாங்கி, அச்சடித்து வைத்து இருந்த நேரத்தில், அதிகப்படியான கெட்ட பெயரை ஜெயலலிதா சம்பாதித்து ஆட்சிக்கு எதிரான அலை வீசத் தொடங்கி இருந்தது. அதைத் தூண்டிவிட்ட 'பாட்ஷா’ ரஜினியின் பேச்சு வேலுவையும் மயக்க... புத்தகத்தைப் பரணில் தூக்கிப் போட்டுவிட்டு, சூப்பர் பக்கமாக ஒதுங்கினார். திருவண்ணாமலை புறவழிச் சாலையில், பட்டுச் சேலைகளைத் தாரை வார்த்து நடத்தப்பட்ட ரஜினி பிறந்த நாள் யாகத்துக்கு முழுச் செலவும் இவர்தான். ரஜினி வழக்கம்போல் ஏமாற்றிவிட்டார் என்பதால், தி.மு.க. பக்கமாகத் தன்னுடைய ஜாகையை மாற்றினார் வேலு.

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

96-ல் தி.மு.க. ஆட்சியைப் பிடித்ததால் ஆளுங் கட்சியின் பிரபலம் ஆனார் வேலு. கழகத்தை வளைக்க கரன்ஸியே சரியான வழி என்று தீர்மானித்தார். அறிவாலயத்துக்குள் நீங்கள் நுழைந்தால், உங்களுக்கு முதலில் தொண்டர் படை ஆட்கள் சல்யூட் வைக்க வேண்டும். அது கிடைத்தால்தான் நீங்கள் கட்சியில் செல்வாக்கான ஆசாமி என்று அர்த்தம். '500 ரூபாய் தாளை அறிவாலயத்தில் காட்டியவர்’ என்று தொண்டர் படைக்காரர் ஒருவரே சொல்கிறார். மந்திரிகளைவிட, வேலுவுக்கே இவர்கள் பெரிய சல்யூட் வைத்தார்கள். மா.செ-வாகவும் மந்திரியாகவும் இருந்த பிச்சாண்டிக்கு பிறந்த நாளா... 40 வேட்டி, 40 சட்டை என்று எடுத்துக் கொடுத்து மகிழ்வித்தார். பழைய ஆட்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க வேண்டிய வழியில் ஆசீர்வதித்தார். இதற்கான பலன் சில மாதங்களிலேயே கிடைத்தது. 'மந்திரியாக இருப்பவர் மாவட்டச் செயலாளராக இருக்கக் கூடாது’ என்று தீர்மானம் போட்டு, பிச்சாண்டியிடம் இருந்த மா.செ. பதவி பறிக்கப்பட்டபோது... கருணாநிதி, ஸ்டாலினுக்குத் தெரிந்த தலையாக வேலுவின் முகமே க்ளார் அடித்தது. மா.செ. ஆனார். 2001 தேர்தலில் எம்.எல்.ஏ-வாக ஆனார்.

கருணாநிதியின் பின் ஸீட் மனிதர்களான ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி ஆகிய மூவரோடு சேர்ந்து நால்வரானார்.

ஆ.ராசா இவர்களுடன் சேர, ஐவரானார்கள். சட்டசபை முடித்து மாரீஸ் ஹோட்டல் மதியச் சாப்பாடு... துரைமுருகன், பொன்முடி ஆகியோருடன் இவரைப் பிணைத்தது. அவர்கள் இருவரையும் கல்வித் தந்தையாக ஆக்கும் ஐடியாவும் வேலு கொடுத்ததுதான். கருணாநிதி வீட்டுக்குள் எப்போது வேண்டுமானாலும் சென்று வரும் செல்லப் பிள்ளைஆனார். அதைவிட முக்கியமாக, திருவண்ணாமலை வருபவர்கள் அண்ணாமலையாரைப் பார்க்கிறார்களோ இல்லையோ, இவரது கல்லூரி வளாகத்துக்கு வந்து தங்கிச் செல்வது, பொதுக்குழு போடாத தீர்மானமாகவே ஆகிப் போனது. சமீபத்திய புள்ளிவிவரப்படி, மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் நீங்கலாக அனைத்து வி.ஐ.பி-க்களும் அங்கு வந்து போனார்கள். இந்த பந்தத்தை வைத்துதான் பிச்சாண்டி, வ.அன்பழகன், நன்னன், ஏ.ராஜேந்திரன், பெ.சு.திருவேங்கடம் உள்ளிட்ட சீனியர்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டார்கள். சாவல்பூண்டி சுந்தரேசன், ஸ்ரீதர் போன்றவர்களை மட்டும் தனக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டாராம் வேலு. இவர்கள் இருவரைத் தவிர, சீனியர்கள் யாரும் திருவண்ணாமலை தி.மு.க-வில் வலம் வராமல் பார்த்துக்கொண்டார் வேலு. 'எனக்கு இந்த சீனியாரிட்டி பேசுறவங்களையே பிடிக்காது’ என்று அவர் சொன்னதைக் கேட்டு, பழைய ஆட்கள் வெம்பினார்கள். தலைமைக் கழகம் கொடுத்த விளம்பரத்திலேயே பின்னால் இருந்த தனது பெயரை முன்னால் கொண்டுபோய் போடவைத்தார். ஆயிரம் வேலுவைத் தனது வாழ்க்கையில் பார்த்தவராச்சே கருணாநிதி. இந்தத் தப்பைக் கண்டுபிடித்து பெயரைப் பின்னால் தள்ளினாராம்.

சமீபத்தில் திருவண்ணாமலைக்கு ஸ்டாலினு டன் வந்திருந்தார் முன்னாள் அமைச்சர் ஈரோடு முத்துசாமி. தி.மு.க. வரலாறுகளை மேடையில் சொன்ன வேலு, 'இதெல்லாம் தளபதிக்குத் தெரியும். முத்துசாமி தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்’ என்று பேசியதைக் கேட்டு, முத்துசாமி முகம் இருண்டதாம். வேலு எம்.எல்.ஏ-வாக இருந்த காலத்தில், அவர் புரட்சித் தலைவர் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் என்பதை யாராவது வேலுவுக்கு ஞாபகப் படுத்தியாக வேண்டும்.  'எல்லாத் தொகுதியிலும் எப்படித் தேர்தல் வேலை பார்க்கிறதுன்னு என்னைத்தான் க்ளாஸ் எடுக்கச் சொல்லிஇருக்காங்க’... என்பது மாதிரியான துடுக்குப் பேச்சுக்கள் பலரையும் எரிச்சல்படுத்தி வருகின்றன.  

பொதுவாகவே, உணவுத் துறை சிக்கலானது. இந்தத் துறைக்கு மந்திரியாக வருபவர்கள் திடீர் சர்ச்சையில் சிக்குவார்கள். உதாரணம், ஆற்காடு வீராசாமி. அடுத்ததாக வேலூர் விஸ்வநாதன். ஆனால், வேலு நீடிக்கிறார். அதற்காகச் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. ரேஷன் பொருள் கடத்தலைத் தடுக்க சீஸன்தோறும் ரெய்டு போகிறார் மந்திரி. ஆனால், கடத்தல் நின்றபாடு இல்லை. போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்போம் என்று ஒவ்வொரு பேட்டியிலும் சபதம் எடுப்பார் மந்திரி. போலி கார்டுகள் 'கொடுத்தால்’ கிடைக்கின்றன. வெறும் செய்திக் குறிப்புகளுக்காகவே இந்த ஆக்ஷன்கள் செய்யப்படுகின்றனவோ என்ற சந்தேகம் பிறக்கிறது. தூத்துக்குடி மரணமும்

மந்திரி தந்திரி கேபினெட் கேமரா

திருவண்ணாமலை லாரி எரிந்ததும் முழுமையாக வெளியே வராத உண்மைகள். ரகசியமாக நடப்பவை நிறையவே!

தி.மு.க ஆட்சிக்கு வருவதற்கு முன்னதாகவே வேலு, கல்லூரி நடத்தியவர் என்பது கருணாநிதியே கேபினெட்டில் சொன்ன உண்மை. ஆனால், இன்று திருவண்ணாமலையில் அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை அறிவியல் கல்லூரி, ஜீவா வேலு - உண்டு உறைவிடப் பள்ளி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ மற்றும் நர்ஸிங் கல்லூரி போன்றவை உள்ளன. பெரம்பலூரில் பனிமலர் கல்லூரியும் பள்ளியும் இவரது கட்டுபாட்டில் உள்ளனவாம். திருப்பூரில் ஸ்பின்னிங் மில், திருவண்ணாலை அருகே காம்பட்டுவில் கிரானைட், நாச்சார்நேந்தலில் ஜல்லி அடிக்கும் கிரஷர், திருவண்ணாமலை மற்றும் கோவையில் இடங்கள், சினிமா தயாரிப்பு, ஃபைனான்ஸ் மற்றும் விநியோகம், சின்னத் திரை மெகா சீரியல் தயாரிப்பு... என எல்லாப் பக்கமும் வசதியாகிவிட்ட வேலுவாகவே தெரிகிறார். கட்சியின் அடுத்த பொருளாளர் என்று அவரது ஆதரவாளர்கள் சொல்வது இதனால்கூட இருக்கலாம்.

தி.மு.க-வை சாமான்யர்களுக்கான கட்சி என்று சொன்ன அண்ணா, இதைக் கேள்விப்பட்டால் என்ன நினைப்பார்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு