Published:Updated:

2026-ல பவர் ஸ்டார் சி.எம்!

க.ராஜீவ்காந்திபடங்கள் : என்.விவேக்

2026-ல பவர் ஸ்டார் சி.எம்!

க.ராஜீவ்காந்திபடங்கள் : என்.விவேக்

Published:Updated:
##~##

"முந்தாநாள்தாங்க கல்யாணம் முடிச்சேன். மூணே நாள்ல வாழ்க்கைச் சுமை தாங்காம நொந்துபோய் இருக்கேன். இப்போ வந்து ஜாலி பேட்டினு வம்பிழுக்கிறீங்களே..?'' என்று சீரியஸாகக் கேட்டார் புது மாப்பிள்ளை 'நண்டு’ ஜெகன். தட்டித் தேற்றி தாஜா செய்து வழிக்குக்கொண்டு வந்தேன்.

 ''சுப்பிரமணியன் சுவாமி... நித்தியானந்தா சுவாமி... ரெண்டு பேருக்கும் என்ன வித்தியாசம்?''

''சுப்பிரமணியன் சுவாமி பரபரப்பாப் பேசி பிரச்னையைக் கிளப்பிவிடுவாரு... நம்ம சாமி பிரச்னையில மாட்டி பப்பரப்பா பரபரப்பா ஆவாரு!''

''ஏ.கே. 47-க்கு எப்படி அந்தப் பேர் வந்துச்சு?''

''அதாவது, அந்தத் துப்பாக்கியைக் கண்டுபிடிச்சவருக்கு அது எப்படிச் சுடுதுனு சந்தேகம். செக் பண்ணிப் பார்த்துருக்காரு. அப்ப பட... பட... படனு சுட்டதுல 47 பேரைப் போட்டுத் தள்ளிட்டாரு. அட, ஒரே நேரத்துல 47 பேரைக் காலி பண்ணிடுச்சேனு 'ஆள் காலி 47’னு பேர் வெச்சுட்டாரு. அதுதான் சுருக்கமா ஏ.கே. 47.''

2026-ல பவர் ஸ்டார் சி.எம்!

''லட்டு ஏன் உருண்டையா இருக்கு?''

''இந்தக் கேள்விக்கெல்லாம் பதில் சொல்ல ஒரு கொடுப்பினை வேணுங்க. லட்டு உருண்டையா இருந்தாத்தான் வாய்க்குள்ள போறதுக்கு ஈஸியா இருக்கும். இதுக்கு மேலயும் சொல்லலாம்... ஆனா, வேண்டாங்க!''

''சைஸ் ஜீரோ ஃபிகர்னா என்ன?''

''எனக்குப் பரீட்சைல வாங்குற ஜீரோ மட்டும்தான் பிடிக்கும். இந்த சைஸ் ஜீரோ ஃபிகர் எல்லாம் பிடிக்காதுங்க. வாழ்க்கைலயே நெளிவு சுளிவு வளைவு வேணும்னு எதிர்பார்க்கிறோம். அதே மாதிரி ஃபிகரும் வளைவு, நெளிவு, சுளிவோட இருந்தாத்தான் நல்லா இருக்கும்!''

''எங்கெல்லாம் நண்டு பிடிச்சிருக்கீங்க?''

''நான் நண்டு பிடிச்சது கிடையாது. ஆனா, நிறைய நண்டுக என்னைப் பிடிச்சிருக்கு... கவ்வியிருக்கு... கடிச்சிருக்கு!''

2026-ல பவர் ஸ்டார் சி.எம்!

''ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்னு சொல்வாங்களே... எத்தனை பொய் சொல்லி உங்க கல்யாணம் நடந்தது?''

''கல்யாணம் ஆன ரெண்டாவது நாளே பேட்டி கொடுக்கறது தப்புனு புரியவெச்சுட்டீங்க. நான் மூணே  மூணு பொய்தான் சொல்லியிருக்கேன். அதையெல்லாம் அதுக்குள்ள சொல்லி எனக்கு நானே ஆப்புவெச்சுக்க விரும்பலை.''

''கடல்ல வீசுற புயலுக்கு ஏன் பொண்ணுங்க பேரா வைக்கிறாங்க?''

''என் மாமனாரு வான்மதினு பேர் வெச்சிருக் காரு. ஓ... நீங்க ஒரிஜினல் புயல் பேரு கேட்டீங்கள்ல. புயலுக்குப் பேர் வைக்கிற வேலை பார்க்கிறவர் வீட்டுக்காரம்மா மெகா சீரியல் பார்க்கிறப்ப காபி கேட்டுருக்காரு. உடனே, அவங்க பத்ரகாளியா மாறி தலையெல்லாம் விரிச்சுப்போட்டு எல்லாப் பாத்திரத்தையும் வீசியெறிஞ்சுருக்காங்க. ஆஹா, நாம கண்டுபிடிச்ச புயல்கூட இவ்ளோ ஸ்பீடு இல்லையேனு புயலுக்கு அந்தம்மா பேரை வெச்சிட்டாரு. அது அப்படியே வழிவழியாத் தொடருது.''

''காதல் ஒருமுறை பூக்கும்னு விக்ரமன் படத்துல எல்லாம் சொல்றாங்களே... உண்மையா?

''அதெல்லாம் நம்பாதீங்க... எனக்கு ஸ்கூல் படிச்ச காலத்துல இருந்தே காதல் வந்துக்கிட்டேதான் இருக்கு. காலைல வரும்... மத்தியானம் போகும். சாயங்காலம் திரும்பவும் வரும்... காதல்ங்கிறது கரன்ட் மாதிரி. அடிக்கடி வரும்... போகும். நண்பா, இதை மறக்காம எழுதுங்க. படத்துலதான் காமெடியன்களைத் தத்துவம் சொல்ல விட மாட்டேங்கிறாங்க. இங்கேயாச்சும் சொல்லிக்கிறேனே!''

''இனி பவர் ஸ்டார் என்ன ஆவார்?''

2026-ல பவர் ஸ்டார் சி.எம்!

''2026-ல சி.எம். ஆவார். நடிகர், அரசியல்வாதி, கைது... இதுதான் தமிழ்நாட்டுல ஆர்டர். ஆனா, பவர் ஸ்டார் அந்த வரலாற்றையும் மாத்தி எழுதியிருக்கார். நடிகர், கைது, அரசியல்வாதி. இனிமேதான் பவர் ஸ்டாரோட உண்மையான பவர் தெரியும். இனி அவருக்கு ஏறுமுகம்தான். வெளில வருவாரு... 'இது பழி வாங்கும் முயற்சி’னு பேட்டி தட்டுவாரு. அப்படியே மேல போயிடுவாரு. சீக்கிரமே தமிழ்நாட்டோட பவர் அவர் கைல வந்து நிக்கும்!''

''நீங்க ஹீரோவா ஒரு படத்துல நடிச்சா, யார் ஹீரோயின்?''

''ஹீரோவா என்னை நடிக்கவைக்கிறதே பெரிசு... ஹீரோயின் யாரா இருந்தா என்னங்க? பரவை முனியம்மாவா இருந்தாக்கூட சரி. இந்தப் பதிலுக்காக பரவை முனியம்மா என் மேல மான நஷ்ட வழக்கு போட்டா, விகடன்தான் பொறுப்பு!''