Published:Updated:

ஹிட்லர் ஹீரோவா?

பாரதி தம்பி

ஹிட்லர் ஹீரோவா?

பாரதி தம்பி

Published:Updated:
##~##

டந்த இரு வாரங்களுக்கு முன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு சிறிய துணிக் கடை அகில உலகக் கவனம் ஈர்த்தது. பல ஐரோப்பிய ஊடகங்கள் அந்தக் கடையைக் கடுமையாகக் கண்டித்து எழுதின. காரணம், அந்தத் துணிக் கடையின் பெயர்... ஹிட்லர்!

 ராஜேஷ் ஷா என்பவர் திறந்த அந்தக் கடை யூதர்களின் மனதில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. '60 லட்சம் யூதர்களை ஈவு இரக்கம் இன்றிக் கொன்று ஒழித்த அரக்கன் ஹிட்லர். அந்தப் பெயரை மாற்றுங்கள்’ என்று முறையிட்டனர். அவரோ அதைப் பற்றிக் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல், 'எனக்கு ஹிட்லர் என்பவர் யார் என்றே தெரியாது. என் பங்குதாரரின் தாத்தா கண்டிப்பானவர் என்பதால், அவரை ஹிட்லர் என்று அழைப்பார்கள். கடைக்குப் பெயர் வைக்கும்போது அது ஞாபகம் வந்தது. பெயர் கவர்ச்சியாக இருந்ததால், ஹிட்லர் என்று வைத்தோம். இங்கு உள்ள இந்துக்கள், முஸ்லிம்கள் யாரும் இந்தப் பெயரை எதிர்க்கவில்லை. நீங்கள் மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்? பெயரை மாற்ற முடியாது'' என்றார். இதற்கு இடையே செய்தி பரவி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் இஸ்ரேல் நாடுகளில் வாழும் யூதர்கள் அந்தக் கடையின் பெயரை மாற்ற வேண்டும் என்று போராடும் அளவுக்கு விஸ்வரூபம் எடுத்தது விவகாரம். ஆனால், ராஜேஷ் ஷாவோ, ஓசியில் உலக அளவில் விளம்பரம் கிடைப்பதாகச் சொல்லிச் சிரித்தார். அதற்கு ஏற்ப அந்தச் சின்ன கடையைத் தினமும் மீடியாக்கள் மொய்த்தன. ஒரு கட்டத்தில், யூதர்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்பட்டதை அடுத்து, இஸ்ரேல் அரசு நேரடியாகத் தலையிட்டு இந்திய அரசிடம் அழுத்தம் கொடுக்க... உள்ளூர் போலீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கடைக் குப் படையெடுத்ததும் வேறு வழியின்றி கடையின் பெயரை மாற்ற ஒப்புக்கொண்டு இருக் கிறார் ராஜேஷ்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஹிட்லர் ஹீரோவா?

நம்மூரில், 'ராஜபக்ஷே மருத்துவ மனை’ எப்படிச் சாத்தியம்       இல்லையோ, அப்படித்தான் ஐரோப்பிய நாடுகளில் 'ஹிட்லர்’ பெயரிலான நிறுவனங்களும். ஆனால், இந்தியாவில் 'ஹிட்லர்’ என்ற வார்த்தைக்குப் பின் உருவகிக்கப்பட்டு இருக்கும் ஹீரோ பிம்பம் அவருடைய அரச பயங்கரவாதத்துக்குக் கம்பீர முகமூடி அணிவித்துவிடுகிறது. 1990-ல் மம்முட்டி, ஷோபனா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மலையாளப் படம் ஒன்றின் பெயர் ஹிட்லர். எந்த எதிர்ப்பும் எழவில்லை. 2006-ல் நாக்பூர் நகரில் திறக்கப்பட்ட ஒரு பார்லரின் பெயர் 'ஹிட்லர்’ஸ் டென்’. அப்போதைக்கு யூதர்களின் கவனம் கவரவில்லையோ என்னவோ, 2011-ம் வருடம்தான் சர்ச்சைகள் எழுந்தன. சர்வதேச எதிர்ப்புகளுக்குக்கூட மசியாமல், இன்று வரை 'பெயரை மாற்றவே முடியாது’ என்று கறாராக மறுத்துவருகிறார் அதன் உரிமையாளர் பல்ஜித் சிங் ஓசன். அதே பெயரில் இன்னொரு கிளையும் திறந்துவிட்டார். 'ஜீ டி.வி’-யில் ஒளிபரப்பான ஒரு சீரியலின் பெயர் 'ஹிட்லர் தீதி’ (ஹிட்லர் சகோதரி). எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்த சீரியலின் அமெரிக்கப் பதிப்புக்கு 'ஜெனரல் தீதி’ என்று பெயர் மாற்றப்பட்டது. மேகாலயா மாநிலத்தில் ஒரு எம்.எல்.ஏ-வின் பெயர் ஹிட்லர் மரக். ''இதை ஒரு கிறிஸ்துவப் பெயர் என நினைத்து என் பெற்றோர் வைத்திருக்கலாம். எனக்கு இந்தப் பெயரில் மகிழ்ச்சிதான்'' என்கிறார் அவர்.

இந்தியாவில் அரை நூற்றாண்டாகவே ஹிட்லருக்கு ஒரு 'வெற்றி நாயகன்’ இமேஜ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனால்தான் உலககெங்கும் 'பாசிசத்தின் பைபிள்’ என்று அழைக்கப்படும் ஹிட்லரின் சுயசரிதை நூலான 'மெயின் கேம்ப்’ புத்தகத்தை இந்தியாவில் மட்டும் ஆறு பதிப்பகங்கள் அச்சிடுகின்றன. வருடம்தோறும் அது பெஸ்ட் செல்லர் அட்டவணையில் இடம் பிடிக்கிறது. எம்.பி.ஏ. போன்ற பிசினஸ் படிப்புகளில் அந்தப் புத்தகத்துக்கு நிர்வாகவியல் கையேடு அந்தஸ்து வழங்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 'யாரை அழித்தாலும், யாரை நசுக்கினாலும் லாபம் ஒன்றே இலக்கு’ என்ற இன்றைய நிர்வாக வியல் மந்திரமும் ஹிட்லரின் பாசிசக் கொள்கையும் ஒரே புள்ளியில் பொருந்திப்போகின்றன.

ஹிட்லர் ஹீரோவா?

ஹிட்லருக்கும் இந்தியாவுக்குமான தொடர்பு, காந்தி காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. 1939-ம் வருடம் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் போரை நிறுத்தக் கோரி ஹிட்லருக்கு காந்தி ஒரு கடிதம் எழுதினார். அதில் ''ஜெர்மனிக்கும் இந்தியாவுக்குமான பொது எதிரி இங்கிலாந்து'' என்று குறிப்பிட்டு இருக்கிறார் காந்தி. ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதங்களை அடிப்படையாகக்கொண்டு 'டியர் ஃப்ரெண்ட் ஹிட்லர்’ என்ற பெயரில் 2001-ல் ஒரு படம் வெளியானது. இதன் இந்திப் பதிப்புக்கு 'காந்தி டு ஹிட்லர்’ என்று பெயர். நாஜிக்களின் ஸ்வஸ்திக் அடையாளம் உலகம் எங்கும் பல நாடுகளில் பலவிதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றபோதிலும் பொதுவாக, அது ஹிட்லரின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங் தள், சிவசேனா, விஸ்வ இந்து பரிஷத் போன்ற இந்து அமைப்புகளும் பாரதிய ஜனதா கட்சியும் ஸ்வஸ்திக் லோகோவை இந்து மத அடையாளமாக முன்னிறுத்துகின்றன. இந்தப் பின்னணியில் ஹிட்லரையும் அதிக முரண்பாடுகள் இல்லாமல் ஏற்றுக்கொள்ள இந்திய மனம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், ஹிட்லர் அன்றும் இன்றும் என்றும் அநீதியின் அடையாளம். ஒரு காலத்திலும் ஹிட்லர் ஹீரோவாக அல்ல; ஆன்ட்டி- ஹீரோவாகக்கூட ஆக முடியாது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism